Wheat vs Rice – TN farmers seek sweet sugar price
Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007
கோதுமைக்கு அதிக விலை; நெல்லுக்கு குறைவா?: விவசாயிகள் விரக்தி
சென்னை, மார்ச் 21: பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கோதுமைக்கு அரசின் கொள்முதல் விலை அதிகமாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் நெல்லுக்கு அரசின் கொள்முதல் விலை மிகக் குறைவாக உள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதுபோன்ற 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதுகுறித்த விவரம்:
காவிரி டெல்டா பகுதிகளில் உள்ளது போன்று, தமிழகத்தின் பிறபகுதிகளிலும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களை அரசு அமைக்க வேண்டும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் செயலாளர்கள் மூன்று ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றக் கூடாது. வேளாண் மின் இணைப்பு கேட்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனடி மின் இணைப்பு வழங்க வேண்டும்.
பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து விவசாயக் கடன்களுக்கும் 4 சதவீதம் வட்டியில் கடன் வழங்க பொதுத் துறை வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளும் முன்வர வேண்டும்.
மேலும், ஒவ்வொரு வங்கிக் கிளையும் தனது எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் 10,000 மூட்டைகளை சேமிக்கக் கூடிய கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும்.
பிற மாநிலங்களில் சர்க்கரைக்கு டன்னுக்கு ரூ. 1,500 வரை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ரூ. 1,025 மட்டுமே அளிக்கப்படுகிறது. மேலும், எரிசாராய ஆலைகளுக்குப் பயன்படும் கரும்புச் சக்கை, பிற மாநிலங்களில் டன்னுக்கு ரூ. 2,500 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் மிகக் குறைந்த அளவு தொகைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு, உரிய விலை நிர்ணயத்தை அரசு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கை மனு, தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் வழங்கப்பட்டது.
==========================================
தமிழகத்தில் அதிக உணவு உற்பத்தி: அமைச்சர் தகவல்
சென்னை, ஏப். 5: தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகபட்சமாக 95.4 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.
பேரவையில் வேளாண் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்து அமைச்சர் பேசியது:
நல்ல இடுபொருள், சீரிய ஆலோசனைகள் போன்றவற்றின் காரணமாக திமுக ஆட்சியில் அதிக அளவு உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும் நமது தேவை 115.2 லட்சம் மெட்ரிக் டன்னாகும். உற்பத்தி 95 லட்சத்தை எட்டினாலும் பற்றாக்குறை 19 லட்சம் டன்னாக உள்ளது.
நெல் சாகுபடி குறைந்துவிட்டது. புதிய வீரிய ரக விதைகள் மூலமும் புதிய தொழில்நுட்ப மூலம் அதிக அளவு உற்பத்தியை பெருக்க வேண்டியுள்ளது. சாகுபடி நிலப்பரப்பு குறைந்தபோதிலும் உணவு உற்பத்தி குறையவில்லை.
விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 73 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
நிலமுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மஞ்சள் வணிக வளாகம்: ஈரோடுக்கு அருகில் நசியனூர், வில்லரசம்பட்டி ஆகிய கிராமங்களில் ரூ. 36.32 கோடியில் மஞ்சள் வணிக வளாகம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொங்கலூரில் வெங்காயத்துக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் மாங்கனிக்கும் குளிர்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகம் தலா ரூ. 2 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் வீரபாண்டி ஆறுமுகம்.
==========================================
bsubra said
10 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யுமாறு எஸ்.டி.சி.க்கு ஆணை
புது தில்லி, மே 1: கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், விலை உயராமல் தடுக்கவும் 10 லட்சம் டன் கோதுமையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யுமாறு “”அரசு வர்த்தகக் கார்ப்பரேஷன்” (எஸ்.டி.சி.) என்ற பொதுத்துறை நிறுவனத்துக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது.
வேளாண்துறை இணை அமைச்சர் அகிலேஷ் பிரதாப் சிங் இதை மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.
2007-08-ம் ஆண்டில், ரபி பருவத்தில் மட்டும் 73.8 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய தொகுப்பில், மார்ச் 31 வரையிலான புள்ளிவிவரங்களின்படி 45.63 லட்சம் டன் கோதுமை கையிருப்பில் உள்ளது.
2004 ஜனவரி முதல் 2007 ஜனவரி வரை மத்திய வர்த்தக கார்ப்பரேஷன், மத்திய தொகுப்புக்காக இறக்குமதி செய்த கோதுமையின் அளவு 49.1 லட்சம் டன்களாகும்.
2007-08 ஆண்டு ரபி பருவத்தில் 50 ஆயிரம் டன் அல்லது அதற்கு மேல் கோதுமை கொள்முதல் செய்த நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் அதற்கான கணக்கை முறையாகப் பராமரிக்க வேண்டும். கொள்முதல் செய்தது எவ்வளவு, விற்றது எவ்வளவு, கையிருப்பு எவ்வளவு என்ற கணக்கை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அரிசி கொள்முதல்: கரீஃப் பருவத்தில் இந்திய உணவு கார்ப்பரேஷன் 206.01 லட்சம் டன் அரிசியைக் கொள்முதல் செய்திருக்கிறது. அடுத்த கரீஃப் பருவம் வரை மேலும் 49.60 லட்சம் டன் கோதுமையைக் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது என்றார் அகிலேஷ் பிரதாப் சிங்.