Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Rich vs Poor – Forbes Wealthiest Indians list: Analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

உலகச் செல்வமும், ஏழ்மையும்

ந. ராமசுப்ரமணியன்

உலகமயமாதல், திறந்துவிடப்பட்ட உலகச் சந்தை என்று வந்தபிறகு, உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.

“”உலகமயமாதலால், ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது; ஆகவே உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்” என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியது குறிப்பிடத்தக்கது.

வருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை “போர்ப்ஸ்’ எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

அமெரிக்க “மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலர் (ரூ. 2.52 லட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 லட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5-வது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.

ஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று, முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.

இந்திய பில்லியனர்கள் யார் யார், உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.

  • லட்சுமி மிட்டல் 5-வது இடம் 32 பில்ல்லியன்.
  • முகேஷ் அம்பானி 14-வது இடம் 20.1 பில்லியன்.
  • அனில் அம்பானி 18-வது இடம் 18.2 பில்லியன்.
  • அஸிம் பிரேம்ஜி 21-வது இடம் 17.1 பில்லியன்.
  • குஷல்பால் சிங் 62-வது இடம் 10 பில்லியன்.
  • சுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69-வது இடம் 9.5 பில்லியன்.
  • குமார் பிர்லா 86-வது இடம் 8 பில்லியன்.
  • சசி ரூயா & ரவி ரூயா 86-வது இடம் 8 பில்லியன்.
  • ரமேஷ் சந்திரா 114-வது இடம் 6.4 பில்லியன்.
  • பலோன்ஜி மிஸ்த்ரி 137-வது இடம் 5.6 பில்லியன்.
  • ஆதி கோத்ரஜ் குடும்பம் 210-வது இடம் 4.1 பில்லியன்.
  • சிவநாடார் 214-வது இடம் 4 பில்லியன்.
  • திலிப்சாங்வீ 279-வது இடம் 3.1 பில்லியன்.
  • சைரஸ்பூனாவாலா 287-வது இடம் 3 பில்லியன்.
  • இந்து ஜெயின் 287-வது இடம் 3 பில்லியன்.
  • கலாநிதிமாறன் 349-வது இடம் 2.6 பில்லியன்.
  • கிராந்தி ராவ் 349-வது இடம் 2.6 பில்லியன்.
  • சாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390-வது இடம் 2.4 பில்லியன்.
  • துளசி தந்தி 390-வது இடம் 2.4 பில்லியன்.
  • சுபாஷ் சந்திரா 407-வது இடம் 2.3 பில்லியன்.
  • உதய் கோடக் 432-வது இடம் 2.2. பில்லியன்.
  • பாபா கல்யாணி 458-வது இடம் 2.1 பில்லியன்.
  • மல்வீந்தர் சிங் & ஷிவிந்தர்சிங் 488-வது இடம் 2 பில்லியன்.
  • நாராணமூர்த்தி 557-வது இடம் 1.8 பில்லியன்.
  • அனுராக் தீக்ஷித் 618-வது இடம் 1.6 பில்லியன்.
  • வேணுகோபால் தூத் 618-வது இடம் 1.6 பில்லியன்.
  • விஜய் மல்லையா 664-வது இடம் 1.5 பில்லியன்.
  • ஜெயப்பிரகாஷ் கவுர் 664-வது இடம் 1.5 பில்லியன்.
  • விகாஸ் ஓபராய் 717-வது இடம் 1.4 பில்லியன்.
  • நந்தன் நிலகனி 754-வது இடம் 1.3 பில்லியன்.
  • எஸ். கோபாலகிருஷ்ணன் 799-வது இடம் 1.2 பில்லியன்.
  • பிரதீப் ஜெயின் 840-வது இடம் 1.1 பில்லியன்.
  • கேசுப் மகிந்தரா 840-வது இடம் 1.1 பில்லியன்.
  • ராகுல் பஜாஜ் 840-வது இடம் 1.1 பில்லியன்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வந்தர் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப் பட்டியலில் இடம் பெறவில்லை.

பரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.

உலகத்தின் சொத்துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 5625 லட்சம் கோடிகள்) (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 லட்சம் கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1400 லட்சம் கோடிகள்).

இந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டாலர் மொத்த உற்பத்தி 2050-ம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டாலர் என உயர்ந்து உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் “கோல்ட்மேன் சாச்’ கணித்துள்ளது.

இப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.

உலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான

  • அமெரிக்காவில்கூட 13 சதவீத மக்கள் ஏழைகள்,
  • ஜப்பானில் 15.3 சதவீதம்,
  • இங்கிலாந்து 15 சதவீதம்,
  • பிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.
  • பிரேசிலில் 23 சதவீதம்,
  • ரஷியாவில் 20 சதவீதம்,
  • இந்தியாவில் 22 சதவீதம்,
  • சீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல்லாதவர்கள்.

உலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.

உலகில் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீதம் மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.

21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.

25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700க்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீத பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.

பணக்கார நாடுகள் வருடாவருடம் கூடி, தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம்தான் இல்லை.

அதேசமயம் நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1.94 லட்சம் கோடியை) தனது குடும்பத்திற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.

“”ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்” என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே! தற்போதைய உலகில் இதைச் சரிசெய்ய உலகம் என்ன செய்யப் போகிறது?

(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை).


மும்பையில் பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுகிறார் முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரத்தில் தனது குடும்பத்தினரும், தனது அறுநூறு வேலையாட்களும் தங்குவதற்காக பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

சுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் பல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதி போன்றவை உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த கட்டிடத்தில் இருந்து அரபிக் கடலின் பரந்து விரிந்த காட்சி தெரியும்.

ஐம்பது வயதான முகேஷ் அம்பானி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸின் தலைவராக இருக்கின்றார்.

இந்த வீடு கட்டும் திட்டம், தங்களிடம் இருக்கும் செல்வத்தை அப்பட்டமாக காட்டும் ஒரு செயல் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

மும்பாய் நகரத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.

———————————————————————————————

வக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்: அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு

மும்பை, ஜ×லை.5-

இந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார்.

மும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது.

கடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார்.

மொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.

மொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும்.

8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும்.

மற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

மராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர்.

அரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

——————————————————————————————————————

இந்தியாவின் 2-வது பணக்காரர்: அனில் அம்பானி

பல்வேறு நிறுவனங்களின் செய்துள்ள முதலீடை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற சிறப்பை அனில் அம்பானி பெற்றுள்ளார். முதல் இடத்தில் அவரின் சகோதரர் முகேஷ் அம்பானி உள்ளார்.

வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பையின் பங்கு வணிகத்தின் அடிப்படையில் அனில் அம்பானியின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடியே 334 ரூபாய் ஆகும்.

முகேஷ் அம்பானியின் பங்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் தொலைதொடர்பு வர்த்தகத்தில், அனில் அம்பானியின் பங்கு 53 சதவீதமாகும்.

ஒரு பதில் -க்கு “Rich vs Poor – Forbes Wealthiest Indians list: Analysis”

  1. bsubra said

    பிரிட்டிஷ் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்ட லட்சுமி மிட்டல்

    லண்டன், ஏப்.30: பிரிட்டிஷ் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை லண்டன் வாழ் இந்தியரான உருக்குத் தொழிலதிபர் லட்சுமி மிட்டல் மீண்டும் தக்கவைத்துக் கொண்டார்.

    இத்துடன் அவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பிரிட்டிஷ் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை வகித்து வருகிறார். அவரது மொத்தச் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 53 ஆயிரத்து 900 கோடி ஆகும்.

    லட்சுமி மிட்டலைத் தொடர்ந்து, ஹிந்துஜா சகோதரர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு ரூ. 48 ஆயிரத்து 601 கோடி. மூன்றாவது இடத்தை தொழில் அதிபர் சிவராஜ் பால்(76) பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 901 கோடி ஆகும்.

    சிவராஜ் பாலின் சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பைவிட ஐந்து மடங்கு அதிகமாகும்.

    மற்றொரு வகையில், பிரிட்டிஷ் பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ள மூவருமே ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: