Pa Ilankumaran: World Forests day – City Gardens & Wild woods
Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007
நகர வனம் நன்மை தரும் வனப்பு
ப. இளங்குமரன்
இயற்கையின் எதிர்விளைவால் பூமியின் பயன்பாட்டு அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது.
இதனால் எரிமலைகள் உமிழ்தல், கடல் நீர் உட்புகுந்து பூமி பரப்பு குறைதல், ஏரிகள் அளவு குறைதல், நில நீர் மட்டம் தாழ்ந்து பாலைவனமாக மாறுதல், வளி மண்டலத்தில் பழுப்பு மேகம் மூலம் அமில நீர் பொழிவு, பருவ நிலையில் கோளாறு, உயிரின மண்டலம் பரிதவிப்பு, உயிரினங்கள் அழிவு என பல்வேறு பாதக விளைவுகள்.
மனிதன் நாகரிக காலத்தில் என்று அடி எடுத்து வைத்தது முதல் இயற்கைக்கும் உயிரினச் சுற்றுச்சூழல் மூலாதாரங்களுக்கும் சீர்கேடுகளை உருவாக்கத் தொடங்கினான். இதன் பலன் புவி வெப்பமுறல், காலச்சூழ்நிலையின் மாற்றம், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்றவையுடன் மண்ணில் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், நீர்நிலைகள், அவற்றின் தனித்தன்மையை இழந்து ஆறுகள் நீர் அற்றனவாகவும், பனிமலைகள் வறண்டும் காடுகள் அழிந்தும் காணப்படுகின்றன.
காடுகள் சுரண்டப்பட்டதன் விளைவு மண்ணின் மகத்துவ குணம் மாறி வருகிறது.
உலக நாடுகளில் நகரங்களினால் உருவாக்கப்பட்ட இயந்திரத் தொழிற்சாலைகளில் இயற்கைச் சூழல் கட்டமைப்பு சிதைந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாகச் சமன் செய்யக்கூடிய வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என்றும் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.
தற்போது நகரங்களின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெப்பம் அதிகரிப்பு, மன உளைச்சல், வெப்ப நோய்கள் இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. உலகத்தில் சராசரி வெப்ப நிலை 1950 ஆம் ஆண்டு 13.83 செல்சியஸ் அளவு இருந்தது. இன்று 14.36 செல்சியஸ் அளவுக்கு மேற்பட்டு வருகின்றது.
நகர வனம் என்பது நகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் “மாதிரிக் காடுகளை’ குறைந்த பரப்பளவில் ஏற்படுத்துவதும் ஆகும்.
நகரை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் வனங்களை உருவாக்குவது ஆகும். இந்த வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இப்பகுதிகளில் கசிவு நீர் குட்டைகளையும் உருவாக்க வேண்டும்.
இம்மாதிரி வனப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். தற்போது அரசு கட்டடம், சாலைகள், பேருந்து நிலையம், அரசு தொழிற்சாலைகள் அமைக்க எவ்வாறு நிலங்களை கையகப்படுத்துகிறோமோ அதைப்போன்றே நகரவனம் உருவாக்க நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.
“நகர வனத்தில்’ நீண்ட நாள்கள் மற்றும் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் வனம் ஏற்படும்போது நகரின் வெப்பம் குறையும். நகரின் காற்றுமாசு சமன் செய்யப்படும்.
நிலைத்து நீடிக்கும் சுற்றுச்சூழலை உருவாக்க இதுபோன்ற வனம் பல வழிகளில் உதவி செய்யும். உயிரின மாற்றம் ஏற்பட்டு மனித சுகாதாரம் மேம்பாடு அடையும். நகரின் காற்று சீர்பட்டு தரமான காற்றை சுவாசிக்க முடியும். நகரின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
நீர்வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணின் உயிரின சூழல் பாதுகாக்கப்படும். மரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.
செழிப்பான பூமி என்பது இயற்கை சீர்கேடு விளைவிக்கும் காரணிகளை வேரறுத்து வனப்புமிக்க மரங்களை நடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
நாம் இன்றைய தினம் இயந்திரத் தொழில் நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இயற்கை பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பின்னடைந்து வருகிறோம்.
எனவே இயற்கை மூலாதாரங்களைப் பெருக்கும் வகையில் இயற்கை மறுசீரமைப்பு பணிகளில் பயணிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
(இன்று உலக காடுகள் தினம்).
குடிநீர் வள நெருக்கடி அதிகரிக்கிறது, ஐ.நா மன்றம் எச்சரிக்கை
![]() |
![]() |
தண்ணீரைத் தேடி…. |
உலக குடிநீர் தினமான இன்று ஐ.நா மன்றம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கையில், முக்கியமான இந்த குடிநீர்வளம் வழங்கப்படுவது எல்லாக் கண்டங்களிலும் கடும் அழுத்தத்தில் வருவதாக கூறியுள்ளது.
உலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மிகச்சமீபத்திய ஐ.நா மன்ற புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
சீதோஷ்ண மாற்றம் வறட்சியை அதிகரித்து, மழை பெய்யும் பருவங்களை மாற்றி, மலைகளின் பனிமுகடுகளிலிருந்து பனி உருகி தண்ணீர் கிடைப்பதைக் குறைக்கும் நிலையில் , இந்த நிலைமை அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் மோசமடையக்கூடும் என்று ஐ.நா மன்றம் கூறுகிறது.
2025ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள மக்களில் மூன்றில் இரு பங்கினர் குடிநீர் பற்றாக்குறையில் வாழக்கூடும் என்று அது கூறுகிறது.
இந்த ஆண்டின் நீர் தினத்தன்று தண்ணீரை சேமிப்பதன் அவசியம் மற்றும் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொள்வதன் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.
துருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும்
இரா. நல்லசாமி
ஆண்டுதோறும் மார்ச் 23-ஆம் நாளை உலக வானிலை ஆய்வுக் கழகமும் அதன் 187 உறுப்பு நாடுகளும் “உலக வானிலை ஆய்வு நாளாக’ கொண்டாடுகின்றன.
1950-ல் உலக வானிலை ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1951 முதல் ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு முனையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நாள் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். இவ்வாண்டின் மையக்கருத்து “துருவப் பகுதி வானிலையும் அதன் உலகளாவிய தாக்கமும்’ என்பதாகும்.
2007 – 08 உலக துருவப் பகுதி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துருவப் பகுதி ஆண்டு அனுசரிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். துருவப் பகுதிகளின் வானிலை ஏனைய உலகப் பகுதிகளின் வானிலையோடு நுணுக்கமான தொடர்புடையது.
1882 – 83ஐ முதல் துருவப்பகுதி ஆண்டாகவும், 1932 – 33ஐ இரண்டாம் துருவப்பகுதி ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் 1957 – 58இல் “உலக மண்ணியற்பியல் ஆண்டு’ கொண்டாடப்பட்டது.
துருவப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாகையால் வானிலை ஆய்வு நிலையங்களும் குறைவு. எனவே இப்பகுதிகளின் வானிலையைப் பற்றி அறிய “துருவசுற்று செயற்கைக்கோள்களையே’ பெரிதும் நம்பியிருந்தனர். துருவப்பகுதிகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.
தற்போது செயற்கைக்கோள்களில் சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகளின் மூலம் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரையிலான துருவப் பகுதிகளின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசைவேகம், உறைபனிப் பாறைகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற வழியேற்பட்டுள்ளது.
மேலும் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.
துருவப் பகுதி வானிலை ஆய்வுகளுடன் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தொடர்பு 1981-ல் தொடங்கியது. இந்தியாவின் முதல் “அண்டார்டிகா அறிவியல் பயணம்’ அந்த ஆண்டு தொடங்கியது. அண்டார்டிகாவில் “தக்ஷிண்கங்கோத்ரி’ என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஒரு தாற்காலிக வானிலைக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
தரைநிலை வானிலைத் தகவல்கள், பனிப்படலத்தின் இயற்பியற் தன்மைகள், பெறப்படும் சூரிய வெப்பம், பனிப்படலங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை அந்நிலையத்தில் அளந்தறியப்பட்டது.
1984-ம் ஆண்டு முதல் “ஆண்டு முழுவதும் துறை அதிகாரிகளால் பராமரிக்கப்படும் நிலையமாக’ இது செயல்படத் தொடங்கியது. இரண்டாவது வானிலை கண்காணிப்பு நிலையம் அண்டார்டிகாவின் கிர்மேகர் மலைப்பகுதியில் “மைத்ரி’ என்ற இடத்தில் 1988 – 89-ல் அமைக்கப்பட்டது.
ஒன்பதாவது அண்டார்டிகா அறிவியல் பயணத்தின்போது தொடங்கப்பட்ட இந்நிலையம் ஒரு நிரந்தர வானிலை நிலையமாகும். 1990 முதல் “மைத்ரி’யில் மட்டும் நமது வானிலைக் கண்காணிப்பு நிலையம் செயல்படுகிறது “தக்ஷிண்கங்கோத்ரி’ நிலையம் மூடப்பட்டுவிட்டது.
உலக வானிலையோடு தொடர்புடைய பல தகவல்கள் “மைத்ரி’ வானிலைக் கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகின்றன. “மைத்ரி’ நிலையத்தின் முக்கியமான பணிகள் வருமாறு:
தரைநிலை வானிலைத் தகவல்களைச் சேகரித்தல், சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் உலக வானிலை மையங்களுக்கு அனுப்புதல். தரைநிலை ஓசோன் மற்றும் வளிமண்டல ஓசோன் பற்றிய கணிப்புகளைச் சேகரித்தல். இதற்கென வளிமண்டலத்தில் பலூன் அனுப்பித் தகவல் சேகரிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.
கதிரவனின் பல்வேறு கதிர்வீச்சுகளால் வளிமண்டலத்தில் ஏற்படும் “வெப்பக் கலப்பு’ எவ்வளவு என்பதை “சன் – போட்டோமீட்டர்’ கொண்டு அளக்கப்படுகிறது.
துருவசுற்று செயற்கைக்கோள் மூலமாக மேகங்கள் பற்றிய தகவல்களும் வளிமண்டல வெப்பம், காற்று பற்றிய தகவல்களும் சேகரித்தல், பனிப்புயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல். 1981-ல் தொடங்கி 2000 முடிய இருபது “அண்டார்டிகா அறிவியல் பயணங்கள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன.
துருவப் பகுதி வானிலையை அறிய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.
துருவப் பகுதிகள் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் கணிசமான அளவில் கிடைக்கும் இடங்களாகும். இது சம்பந்தமான பணிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தேவைப்படுகின்றன. அங்கு வாழும் “எஸ்கிமோக்கள்’ போன்ற பழங்குடியின மக்களையும் “பனிக்கரடி’, “பென்குயின்’ ஆகிய துருவப் பகுதி விலங்குகளையும் பாதுகாக்க வானிலை ஆய்வுகள் பயன்படுகின்றன.
மேலும் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் குழுக்கள் துருவப் பகுதிகளில் பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பான பயணம், வாழ்க்கை ஆகியவற்றுக்கும் துருவப் பகுதி வானிலை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.
மேலும் துருவப் பகுதிகளின் வானிலை உலகின் ஏனைய பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பூமத்தியரேகைப் பகுதி, துருவப் பகுதிகளைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிக சூரிய வெப்பசக்தியைப் பெறுகிறது.
இதன் தொடர்வினையாக பெருங்கடல்களும் வளிமண்டலமும் இவ்வெப்பச் சக்தியை துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் துருவப் பகுதியின் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் உருகும்போது, கடல் நீரோட்டங்களின் தன்மை மாறிவிடும் அபாயம் உள்ளது. கடல் நீரோட்டங்களின் தன்மை மாறும்போது உலக வானிலையில் பெருமாற்றங்கள் தோன்றலாம். சுருங்கிவரும் பனிப்படலத்தின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயரக்கூடும்; உப்புத்தன்மை குறையக்கூடும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும்; உறைபனி, துருவப்பகுதி வானிலை மாற்றத்தால் உருகத்தொடங்கும்போது பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான “மீத்தேன்’ வெளியிடப்படும். இது ஓசோன் படலத்தில் மாறுதல்களையும் அதன் தொடர்ச்சியாக உலகளாவிய வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
வரையறுக்கப்படாத எல்லைகளை உடைய அறிவியல் துறைக்கு “வானிலையியல்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். “துருவப்பகுதி வானிலை’ இவ்வாண்டில் இயற்பியல், உயிரியல், வானிலையியல் மற்றும் சமூகவியல் அறிஞர்களால் மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்பதே இதனை நன்கு புலப்படுத்தும்.
உலகம் வளர்ச்சி பெற, துருவப்பகுதி வானிலையைக் கண்காணித்தலும், சரிவரப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகும். அதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.
(கட்டுரையாளர்: உதவி வானிலை விஞ்ஞானி, மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை).
bsubra said
பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா குழுவின் புதிய அறிக்கை
பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் படுவநிலை மாற்றம் குறித்த குழு தனது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் புவிக்கு ஆபத்தை விளைவிக்குமா என்பது குறித்த விவாதம் தற்போது முடிவுக்கு வந்து, அதற்குப் பதிலாக புவி வெப்பமடைதலைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விடயமே இப்போது விவாதிக்கப்படுகிறது என்பதை இந்த குழுவின் மாநாட்டில் கலந்துகொண்ட சகல நாடுகளின் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
நடவடிக்கைகள் பொருளாதார ரீதியாகவும், ஏனைய வகைகளிலும் இயலுமானவையே என்று இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
ஆயினும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள் வெகு விரைவாக எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த மாநாட்டின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
bsubra said
பருவ நிலை மாற்றத்தினை எதிர்கொள்ள அரசியல் நடவடிக்கை அவசியம் – சர்வதேச மாநாட்டில் கருத்து
உலகில் ஏற்பட்டு வரும் பருவ நிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள உலகில் போதுமான நிதி மற்றும் இதற்கான அறிவுத் திறன் இருப்பதாகவும், ஆனால் இதை உடனடி அரசியல் நடவடிக்கையின் மூலமே செயல்படுத்த முடியும் எனவும் சர்வதேச விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் கொள்கை ஆலோசகர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச மாநாடு ஒன்று முடிவு கூறியுள்ளது.
உலகில் எரிபொருளின் உபயோகத்தை கட்டுப்படுத்துவதன் மூலமும், மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும், அணு மின்சக்தி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், உலக வெப்பம் அதிகமாவதை இரண்டு பாகை செல்சியஸ் அளவிற்கு கட்டுப்படுத்தி வைக்கலாம் என ஐ நாவின் பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையேயான உயர்மட்டக் குழுவின் மாநாடு கூறியுள்ளது.
மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போன்ற நுகர்வோர் வாழ்க்கை முறையினை வளர்ந்து வரும் நாடுகளும் பின்பற்ற முனைந்தால், அதை பூமி சமாளிக்க இயலாது எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்கா எரிசக்தியைப் பயன்படுத்துவதைப் பின்பற்றி தாங்களும் அதேபோல செய்ய விரும்பவில்லை என மாநாட்டில் பங்குபெறும் சீனப் பிரதிநிதி ஒருவர் பி பி சியிடம் கூறினார்.
bsubra said
மடிவின் விளிம்பில் துடிக்கும் உயிர்கள்
பி. கனகராஜ்
நவீன நாகரிக வளர்ச்சியால் மனிதனுக்கு வியத்தகு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இவ்வுலகில் உள்ள பல உயிரினங்களுக்கு நெஞ்சைப் பதற வைக்கும் பேராபத்துகள் தோன்றியுள்ளன.
நாகரிகத்தால் இயற்கை சீரழிக்கப்படுவதால் இம்மண்ணில் பல உயிர்கள் மரணத்தின் மடியில் துடிக்கின்றன. முன்பு பூமியை ஆண்ட டைனோசர்கள், சைபீரியாவில் வாழ்ந்த யானை வடிவ உயிரினங்கள் போன்றவைகள் வரலாற்றிலும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலும் மறைந்துவிட்டன. மனித நாகரிகம் உருவாக்கிய செயற்கை சீர்கேடுகளால் இவை மடிவது கவலை தரும் உண்மையாகும்.
சீனாவில் உள்ள பாண்டா கரடிகள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. தற்போது மூங்கில் காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு வருகின்றன. மூங்கில் தவிர எதையும் உண்ணாத பாண்டாக்கள் இதனால் மறையத் தொடங்கியுள்ளன.
கடல்வாழ் உயிரினங்களும் மடிவின் ஆபத்தைச் சந்திக்கின்றன. உலகிலேயே மிகப்பெரிய உயிரினம் நீலத் திமிங்கலம் ஆகும். இறைச்சிக்காகவும், மருந்திற்காகவும் இவை வேட்டையாடப்பட்டு வருகின்றன.
நமது நாட்டிலும் பல உயிரினங்கள் மடிவின் மடியில் சிக்கியுள்ளன. நிலவாழ் விலங்குகளில் மிகப்பெரிய விலங்கான யானைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. முன்பு இந்தியா முழுவதும் யானைகள் காணப்பட்டன. ஆனால் தற்போது ஆந்திரம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் யானைகள் முற்றிலும் அழிந்துவிட்டன. தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் காணப்படும் யானைகளின் வருங்கால வாழ்வே பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் கோயமுத்தூர், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மீது யானைகள் அடிக்கடி படையெடுத்து வருகின்றன. தெய்வமாக நாம் வணங்கும் யானைகள் அழிவின் அருகாமையில் உள்ளது விந்தையான உண்மையாகும்.
நமது நாட்டில் பேராபத்தில் சிக்கியுள்ள உயிரினங்களில் ஆசிய சிங்கம் மிக முக்கியமானதாகும். சிங்கங்கள் முன்பு ஆசியா முழுவதிலும் காணப்பட்டன. தற்போது ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. நமது நாட்டில் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகளில் மட்டுமே சிங்கங்கள் காணப்படுகின்றன. கிர் காடுகளில் மல்தாரி இன மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் சிங்கங்களுக்கு எமனாக உள்ளனர். கால்நடைகளை வளர்க்கும் இவர்கள் தங்கள் மாடுகளைக் காப்பாற்ற சிங்கங்களை கொல்கின்றனர்.
நமது தேசிய சின்னத்தில் அசோக மன்னன் வடிவமைத்த சிங்கங்கள் உள்ளன. நமது நாட்டில் எஞ்சியிருக்கும் சிங்கங்களைக் காப்பாற்ற நாம் முன்வர வேண்டும். நமது தேசிய விலங்கான புலியும் அழிவின் பிடியில் சிக்கியுள்ளது. சிங்கமும் புலியும் வசிக்கும் ஒரே நாடு என்ற பெருமையை நமது நாடு பெற்றுள்ளது. ஒற்றை கொம்பையுடைய காண்டாமிருகம் ஆபத்தைச் சந்திக்கும் இந்திய உயிரினங்களில் ஒன்றாகும். இவைகள் முன்பு கங்கை சமவெளி முழுவதும் காணப்பட்டன. ஆனால் தற்போது அசாமிலும் மேற்கு வங்கத்திலும் மட்டுமே காணப்படுகின்றன. வேட்டைக்காரர்களாலும் காடுகள் அழிவதாலும் காண்டாமிருகங்கள் அழிவைச் சந்திக்கின்றன.
பறவைகளில் பிணம் தின்னி கழுகுகளுக்கு ஏற்பட்ட துயரம் அனைவரையும் மீளா துக்கத்தில் ஆழ்த்தும். இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் கழுகுகள் மாண்டு போன விலங்குகளை உணவாக உட்கொண்டு அகற்றி விடுகின்றன. இதனால் இவைகள் இயற்கை துப்புரவாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்திய வானில் சிறகடித்துப் பறந்த இக்கழுகுகள் மளமளவென மடிந்து அழிவின் வாயிலில் தற்போது துடிக்கின்றன.
ஆய்வறிக்கையின்படி நமது நாட்டில் மட்டும் 459 வகையான உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன. 86 பாலூட்டிகள், 70 பறவைகள், 25 வகையான ஊர்வன, 3 இருவாழ்விகள், 8 வகை மீன்கள், 244 தாவரங்கள் 23 முதுகெலும்பற்ற உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. உலகில் உள்ள பல்வகை உயிரினங்களையும் காப்பாற்ற பல சட்டங்களும் திட்டங்களும் உள்ளன. நமது நாட்டில் 441 வனவிலங்கு புகலிடங்கள், 80 தேசிய பூங்காக்கள், 14 உயிரின பாதுகாப்பு மண்டலங்கள், 23 புலி புகலிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவைகள் வன உயிரினங்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளன.
வன உயிரின பாதுகாப்புச் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், தேசிய வனக்கொள்கை போன்றவைகளை சிரத்தையுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். வன உயிர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்தல் மிக அவசியமாகும்.
(கட்டுரையாளர்: விரிவுரையாளர், அரசு கலை கல்லூரி, கோவை.)
bsubra said
பச்சை நிறமே! பச்சை நிறமே!
ந. ராமசுப்ரமணியன்
சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய தொழில் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை உணர்ந்து வருகிற அமெரிக்க நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முனைப்பு காட்டத் தொடங்கிவிட்டன.
உலக அளவில் பிரசித்தி பெற்ற நிதி நிறுவனங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கொண்ட நிறுவனங்களுக்கே உதவுவது நன்மை பயக்கும் என உணர்ந்துவிட்டன.
உலகின் மிகப்பெரிய நிறுவனமான எக்ஸôன் மொபில் எனும் எரி எண்ணெய் நிறுவனம் கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்துவது தனது வளர்ச்சிக்குப் பாதகமாகும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அந்த நிலையை மாற்றி, கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது.
சில முக்கிய மாறுதல்களை இந்த விஷயத்தில் பார்ப்போம்.
சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் கார்பன் வெளியீட்டுக்கு உலக அளவில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
ஐ.நா. சபையும், பல்வேறு அரசு சாரா பொது நல அமைப்புகளும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
அமெரிக்க அரசு எதிர்த்தாலும், அமெரிக்க நிறுவனங்களே தங்கள் எதிர்கால நன்மையைக் கணக்கிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை செலுத்தத் தொடங்கிவிட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகச் செய்யும் செலவு தண்டமில்லை, மாறாக லாபத்தை அதிகரிக்கச் செய்யும் என்று தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கி, நிதி நிறுவனங்கள் நன்றாக உணர்ந்துவிட்டன.
இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தொழில் மேம்பாடு அடைய தொழில், வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என்ன செய்கின்றது என்பதைப் பார்ப்போம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்காக உலக அளவில் செய்யப்பட்ட மூலதனம் சுமார் 40 டிரில்லியன் டாலர்கள் (1 டிரில்லியன் டாலர் சுமார் ரூ. 45 லட்சம் கோடிகள்) என்பது சுமார் ரூ. 1800 லட்சம் கோடிகள் ஆகும்.
உலகின் மிகச்சிறந்த நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் நிறுவனங்களிலேயே இனி முதலீடு செய்வது என முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவில் நியூயார்க்கின் பிரபல சுவர் தெருவில் அமெரிக்க பங்குச் சந்தைகள் அமைந்திருக்கின்றன. இந்த பங்குச் சந்தைகள் பசுமைச் சந்தைகளாக மாறி வருகின்றன என்று பிரபல நியூஸ்வீக் பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.
“”பசுமையைப் பாதுகாக்கும் பங்குகளில் முதலீடு செய்யுங்கள்” என்ற ஐ.நா. சபையின் தீர்மானத்தில் ஏராள முதலீட்டாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் முதலீட்டின் மதிப்பு 4 டிரில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 180 லட்சம் கோடிகள்). சுற்றுச்சூழல் பாதுகாப்பினைத் தரும் சூரிய மின்சக்தி தயாரிக்கும் நார்வே நிறுவனமான ரெனீவபிள் எனர்ஜி நிறுவனப் பங்குகளை வாங்க ஏராளமான வரவேற்பு கிடைத்தது. இதற்கு அந்நிறுவனத் தலைவர் எரிக் தோர்சன் கூறினார், “”எங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தரும்”.
2005ம் ஆண்டு அமெரிக்க பயங்கர சூறாவளி “”கத்ரீனா”, தெற்கு ஐரோப்பாவின் பெருவெள்ளம், சீன பெய்ஜிங்கில் ஏற்பட்ட பாலைவனச் சூறாவளி ஆகியவைகளை கண்ட உலகம் இத்தகைய இயற்கை பாதகங்கள் உலகவெம்மையால்தான் உண்டாயிற்று என நம்புகிறது. இந்த மன நிலையிலுள்ள அமெரிக்க கலிபோர்னிய மாநில ஆளுநர் பிரபல நடிகர் ஆர்னால்ட் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேருடன் கலிபோர்னிய மாகாணத்தில் 2050-ம் ஆண்டிற்கும் 50 சதவீதம் கார்பன் வெளியீட்டைக் குறைக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
ஐரோப்பாவில் சென்ற ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு “கார்பன்’ வியாபாரத்தில் கிடைத்த தொகை ரூ. 1.45 லட்சம் கோடிகள். பிரிட்டனைச் சேர்ந்த மிகப்பெரிய ஹெச்.எஸ்.பி.சி. வங்கி 76 நாடுகளிலுள்ள தனது 11 ஆயிரம் கிளைகளில் மின்சக்தி சிக்கனத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கிறது.
அமெரிக்க ஜெனரல் எலக்டிரிக் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனங்கள் இணைந்து ரூ. 45 ஆயிரம் கோடி முதலீட்டில் ஹைட்ரஜன் மின் நிலையங்களை ஏற்படுத்தி, உலகவெம்மையைக் கட்டுப்படுத்த கார்பன் வெளியீட்டை மண்ணில் புதைக்க வழிசெய்துள்ளன.
பவர் லைட், ஜெனரல் எலக்டிரிக் போன்ற பெரிய நிறுவனங்கள் சூரிய மின்சக்தி நிலையங்களை போர்ச்சுகல் நாட்டில் ஏற்படுத்தி வருகின்றன. ஜப்பானின் சோனி நிறுவனம் 2010ம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீட்டை 7 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
உலகின் 5-வது மிகப்பெரிய காற்று மின் சக்தி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்திய சுஸ்லான் பங்கு விற்பனை ஏராளமான வரவேற்பைப் பெற்றது.
சீன நாட்டு சூரிய மின்சக்தி நிறுவனமான சன்டெக் பவர் நிறுவனப் பங்குகள் விலை குறுகிய காலத்திலேயே 50 சதவீதம் அதிகரித்துவிட்டது.
பிரிட்டனைச் சேர்ந்த ஷெல், வோடோ போன் போன்ற 14 மிகப்பெரிய நிறுவனங்கள் அந்நாட்டுப் பிரதமரிடம் கார்பன் வெளியீட்டை வெகுவாகக் குறைக்க நடவடிக்கை எடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.
உலகின் மிகப்பெரிய சிற்றுண்டி நிறுவனமான அமெரிக்க மாக்டொனால்ட், பசுமைப் பாதுகாப்பில் தனது பங்கை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்து வருகிறது.
இதேபோல் காலணி வணிகத்தில் தலைசிறந்த நைகி நிறுவனமும் தனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு யுக்திகளை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்து வருகிறது.
மிகப்பெரிய ஹில்டன் ஹோட்டல் பசுமைப் பாதுகாப்பில் சிறந்த செயலாக்கம் செய்யும் மேலாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குகின்றது.
உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளான சிடி, ஜே.பி. மார்கன், மெரில்லின்ச் போன்றவைகளும் “”இனி பசுமைப் பாதுகாப்பு தரும் நிறுவனங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருவோம். அப்படிப்பட்ட நிறுவனப் பங்குகளே விலைஏற்றம் பெற்று லாபத்தை அதிகம் தரும்” என முடிவெடுத்துள்ளன. எதார்த்த நிலையை உணர்ந்த அமெரிக்கா, பிரேசிலுடன் வணிகப்பகைமை கொள்ளாமல் எத்தனால் போன்ற தாவர எண்ணெய் அதிக இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தாவர எண்ணெய் உபயோகத்தை அதிகரிக்க இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய கமிஷன் இணைந்து “”உலக தாவர எண்ணெய் அமைப்பை” ஏற்படுத்தியுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இல்லாத எக்ஸôன், வெல்ஸ் பார்கோ மற்றும் இதர நிறுவனங்களில் இனி முதலீடு செய்வதில்லை என ரூ. 9 லட்சம் கோடிகளைக் கொண்ட அமெரிக்க ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.
2005ம் ஆண்டில் பன்னாட்டு நிறுவனங்களான பேயர், பிடி, டூபாண்ட் போன்ற 43 நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பினால் சுமார் ரூ. 52 ஆயிரம் கோடி செலவைக் குறைத்துள்ளன என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்க ஜெனரல் எலக்டிரிக் நிறுவனத்தின் கார்பன் வெளியீட்டுக் குறைப்பு செயல்பாடுகளால் 2005-ம் ஆண்டில் அதிக லாபமாக ரூ. 18 ஆயிரம் கோடிகளை ஈட்டியுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களுக்குப் பசுமைப் பாதுகாப்பில் அதிக நாட்டம் ஏற்பட்டுள்ளது. பசுமைப் பாதுகாப்பு, பச்சை நிறங்கொண்ட அமெரிக்க நாணய டாலரை அதிகம் ஈட்ட உதவுகிறது. லாபத்தை அதிகரிக்க உதவுகிறது என இவை நன்றாக உணர்ந்துவிட்டன.
பசுமை இயக்கம் அதிகலாபம் தருவதை உணர்ந்து “பச்சை நிறமே! பச்சை நிறமே!’ என்று அர்த்த புஷ்டியுடன் இசைக்கத் தொடங்கிவிட்டன!
(கட்டுரையாளர்: நிறுவனர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, சென்னை.)
Arunagiri: Quotable quotes - Alternates on Global Warming « Snap Judgment said
[…] Pa Ilankumaran: World Forests day – City Gardens & Wild woods :: துருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும் – இரா. நல்லசாமி […]