Maoists in south Nepal gun battle
Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007
நேபாள மோதலில் 5 பேர் பலி
![]() |
![]() |
மாதேசிக்களின் ஆர்ப்பாட்டம் |
நேபாளத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும், பிராந்தியக் குழு ஒன்றின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பொலிஸார் கூறுகிறார்கள்.
காவுர் நகரில் இடம்பெற்ற இந்த மோதல்களில் குறைந்தது 15 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
தனித்தனியான பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான ஒரு இடத்தைக் கைப்பற்றுவதற்காக, முன்னாள் கிளர்ச்சிக்காரர்களும், மாதேசி ஜனதிகார் அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
கிழக்குப் பகுதி நகரான லகானின், மாதேசி அமைப்பைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக்கொன்றதை அடுத்து, அண்மைய மாதங்களில் அங்கு பதற்றம் அதிகரித்தது.
=======================================================
நேபாளத்தில் வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவம் 2 நிர்வாகிகளை மாவோயிஸ்ட் சஸ்பெண்ட் செய்ததால் கடையடைப்பு, போராட்டங்கள் விலக்கப்பட்டன
காத்மாண்டு, மார்ச் 22: நேபாளத்தில் வர்த்தகர் ஒருவரை தாக்கியதில் தொடர்புடையதாக 2 நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் அங்கு வணிகர்கள் நடத்தி வந்த பல்வேறு போராட்டங்கள் புதன்கிழமை முதல் விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன.
காத்மாண்டுவில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ஹரி ஷிரேதா. இவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை சில மாவோயிஸ்டுகள் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவத்தையடுத்து, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேபாள வணிகர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
வருத்தம் தெரிவிப்பு: வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மாவோயிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகள் இருவர் தொடர்புடையதாக அறிந்தவுடன் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் பிரசண்டா அறிவித்தார்.
இதற்கிடையில், தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸôருக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதில் சந்மந்தப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளான தீபக் ராய் மற்றும் முகுந்த நிபான் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் இணைப்பு தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
=======================================================
நேபாளம்: பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் வெடிகுண்டு
காத்மாண்டு, மார்ச் 28: நேபாளத்தில் பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் குண்டு வைக்கப்பட்டன. இவை வெடிக்கும் முன் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.
கிழக்கு நேபாளப் பகுதியான பைரத்நகரில் உள்ளது கந்திப்பூர் என்ற பத்திரிகையின் அலுவலகம். இங்கு திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டது. ஆனால் இது வெடிப்பதற்கு முன் கண்டறியப்பட்டது.
தக்ஷினிவாரி என்ற இடத்தில் அமைந்துள்ள மெக்டவல் என்ற நிறுவனத்துக்குள்ளும் திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டிருந்தது. இதுவும் வெடிப்பதற்குள் கண்டறியப்பட்டு பத்திரமாக அகற்றப்பட்டது.
இந்த இரு இடத்திலும் குண்டுகள் வெடிப்பதற்குள் அகற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குண்டுகளை வைத்தவர்கள் நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராடும் நேபாள பாதுகாப்பு ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இது அவர்கள் விட்டுச் சென்ற துண்டு சீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக நேபாள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
bsubra said
நேபாளத்தில் மீண்டும் பிரச்சினை
ஜனநாயகம் உதயமாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நேபாளத்தில் மீண்டும் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. மன்னராட்சிக்கு எதிரான கலவரத்தை ஒடுக்குவதாகக் கூறி 2005 பிப்ரவரியில் அரசைக் கலைத்து அதிகாரத்தைத் தன் வசம் எடுத்துக் கொண்டார் மன்னர் ஞானேந்திரர். ஆனால் பின்னர் நடைபெற்ற பெரும் போராட்டத்தை அடுத்து நாடாளுமன்றத்தை மீண்டும் ஏற்படுத்த 2006 ஏப். 24ல் ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து இடைக்கால அரசு அமைந்தது.
ஆயிரக்கணக்கானோர் நேபாள தெருக்களில் 3 வாரம் கடும் போராட்டம் நடத்தி மீண்டும் ஜனநாயகம் தழைக்க வழிவகுத்தனர்.
நேபாளத்தில் நடந்த இந்த மாற்றம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கள் இயக்கத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்த இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா. மக்களின் அசாத்திய தைரியம், தியாகம் ஆகியவையே இதற்கு முக்கிய காரணம் என்று அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
நேபாளத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக மன்னராட்சிக்கு எதிராகப் பெரும் போராட்டம் நடத்தி வந்தனர் மாவோயிஸ்டுகள். இந்தக் கலவரத்தின்போது பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய பிறகும் நேபாளத்தில் இன்னும் சில பிரச்சினைகள் தொடரத்தான் செய்கின்றன.
முன்னாள் மாவோயிஸ்ட் போராளிகள் இப்போது நாடாளுமன்றத்திலும் அரசிலும் உள்ளனர்.
இருந்தும் இன்னமும் பழைய பாணியில் மிரட்டிப் பணம் பறிப்பது, வன்முறையில் ஈடுபடப்போவதாக மக்களை அச்சுறுத்துவது போன்றவற்றில் இளம் கம்யூனிஸ்ட் அமைப்பினர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாகத் தெற்கு நேபாளத்தில் சுயாட்சி வேண்டும் என்று கோரும் ஒரு குழு, வன்முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் 50-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
அடுத்து, போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப ஒப்புக்கொண்டதும் காலவரம்புடன் தேர்தல் நடத்தத் திட்டமிடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தேர்தல்கள் தொடர்ந்து தள்ளிப்போவது தொடர்பாக பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. எனினும், ஜூனில் நிச்சயம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னர் ஞானேந்திரரைப் பொருத்தவரை அவரது அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன. அடுத்து நாட்டில் தேர்தல் நடந்து புதிய அரசு ஏற்பட்டதும் மன்னராட்சிக்கு முறைப்படி முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 3 கோடி மக்களைக் கொண்ட நேபாளத்தில் 238 ஆண்டுகால மன்னராட்சி முறையை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது மாவோயிஸ்டுகளின் முக்கிய கோரிக்கை.
இது தொடர்பான முடிவை விரைவில் எடுக்காவிட்டால் அரசில் இருந்துகொண்டே போராட்டம் நடத்தப்போவதாக மாவோயிஸ்ட் தலைவர் எச்சரித்துள்ளார். வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அவ்வளவு எளிதில் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பமாட்டார்கள் என்ற கூற்றைப் பொய்யாக்கிய நேபாள மார்க்சிஸ்டுகள் சிறு சிறு சம்பவங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஜனநாயக வித்து துளிர்த்து தழைத்தோங்க தொடர்ந்து உதவ வேண்டும். நாட்டில் அமைதி நிலவி மக்கள் மதிப்பைப் பெற்றுவிட்டால் அது வளர்ச்சிப் பாதைக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் போராட்டமே உருவானது. அது கிடைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதில் அனைவருக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது.
போர் மூள்வதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. ஆனால் அமைதியை ஏற்படுத்த சில வழிகள்தான் கிடைக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.