Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மார்ச் 20th, 2007

Nuclear Power – India’s Right

Posted by Snapjudge மேல் மார்ச் 20, 2007

அணுசக்தி: இந்தியாவின் உரிமை

அணு உலைகளில் எரிபொருள்கள் எரிந்து தீர்ந்த பின்னர் அவற்றை எடுத்துச் சுத்தப்படுத்தி உபயோகமான கதிரியக்கப் பொருள்களைத் தனியே பிரித்து எடுப்பதற்கான உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை அணுசக்தி கமிஷனின் தலைவர் அனில் ககோட்கர் எடுத்துக் கூறியுள்ளார்.

ஆக்கப்பணிகளுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுடன் அமெரிக்கா ஒத்துழைப்பது தொடர்பாகக் கடந்த ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தில் இந்தியா குறித்த சில நிபந்தனைகள் உள்ளன. இது அமெரிக்கச் சட்டம் என்பதால் அவை இந்தியாவைக் கட்டுப்படுத்தாது. இந்தியாவுக்கு அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்திக்கான அணு உலைகளை விற்கலாம் என அனுமதி வழங்குவதே அச் சட்டத்தின் பிரதான நோக்கமாகும். மற்றபடி அணுசக்தி ஒத்துழைப்பு பற்றி “123′ ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டாக வேண்டும்.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகுதான் அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் இந்தியாவுக்கு மின் உற்பத்திக்கான அணு உலைகளை விற்க ஆரம்பிக்கும். நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு இவ்வித அணுமின் நிலையங்கள் நிறையத் தேவைப்படுகின்றன. இந்த அணு உலைகள் மட்டுமன்றி இவற்றில் பயன்படுத்துவதற்கான யுரேனிய எரிபொருளும் வெளிநாடுகளிடமிருந்து பெறப்படும்.

எந்த ஓர் அணுஉலையானாலும் அதில் யுரேனிய எரிபொருள் எரிந்து தீர்ந்த பின்னர் மிஞ்சும் யுரேனியத்திலிருந்து புளுட்டோனியம் என்ற பொருளை மிக நுட்பமான முறையில் தனியே பிரித்தெடுக்க முடியும். அந்தப் புளுட்டோனியத்தைப் பயன்படுத்தி அணுகுண்டு தயாரிக்க முடியும். ஆகவேதான் மின்உற்பத்திக்கான அணுஉலைகளை விற்கும்போது இவ்விதம் பிரித்தெடுக்கிற முறையைக் கைக்கொள்ளக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்படும். அதற்கான கண்காணிப்பு முறைகளும் அமல்படுத்தப்படும். அணு ஆயுதங்களைப் பெற்றிராத நாடுகள் மீது இத்தகைய நிபந்தனைகளை விதிப்பதில் அர்த்தமிருக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் சில தரப்பினர் இந்தியா மீதும் அவ்வித நிபந்தனைகளை விதிக்க விரும்புகின்றனர். ஏற்கெனவே அணுகுண்டுகளைத் தயாரித்து வெற்றிகரமாக அவற்றை வெடித்துச் சோதித்துள்ள இந்தியா மீது இவ்வித நிபந்தனைகளை விதிக்க முற்படுவது வீண் எரிச்சலை உண்டாக்குவதாகவே இருக்கும். தவிர ஏற்கெனவே அணுஆயுத வல்லரசு நாடாகிவிட்ட இந்தியா மீது இவ்வித நிபந்தனைகளை விதிப்பது பாரபட்சமான செயலாக இருக்கும். ஏனெனில் இப்போது அணுகுண்டுகளைப் பெற்றுள்ள வல்லரசு நாடுகள் மீது இவ்விதத் தடை கிடையாது.

இந்தியா இனிமேல் அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்கலாகாது என்றும் இந்தியா மீது தடை விதிக்க ஒரு முயற்சி உள்ளது. இதுவும் பாரபட்சமானதே. ஏனெனில் வல்லரசு நாடுகள் மீது இவ்விதத் தடை கிடையாது. 1998-ல் நிலத்துக்கடியில் ஒரேசமயத்தில் பல அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்த இந்தியா இப்படிப்பட்ட சோதனையை மேற்கொண்டு நடத்த உத்தேசம் கிடையாது என்று தெரிவித்தது. இந்தியா தானாக இப்படி சுயகட்டுப்பாட்டை விதித்துக் கொள்வது என்பது வேறு; வல்லரசு நாடுகள் இந்தியா மீது இவ்விதத் தடையை விதிப்பது என்பது வேறு.

இவையெல்லாம் ஒன்றைக் காட்டுகின்றன. இந்தியா முழு அளவில் அணு ஆயுத வல்லரசு ஆகிவிட்டது என்பது உறுதியாக்கப்பட்டுவிட்டது. அப்படியும்கூட வல்லரசு நாடுகளுக்கு இந்தியா பெற்றுவிட்ட அந்த அந்தஸ்தை ஏற்க மனம் இல்லை.

===================================================

தெரியுமா..?: அச்சுறுத்தும் உண்மை

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மூன்றாவது தூண் எனக் குறிப்பிடப்படும் அம்சம், “ஆக்கப் பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தும் உரிமை’. அணு ஆயுதத்தைப் பெற்றிராத உறுப்பு நாடுகள், நடைமுறையில் இந்த உரிமையைக் கூட அனுபவிக்க முடியாத நிலையில்தான் உள்ளன.

இந்த அம்சத்தைப் பொருத்தவரையில், அணு உலைகளில் பயன்படுத்துவதற்கு யுரேனியத்தைச் செறிவூட்ட உரிமை உண்டு என பொருள் கொள்ளப்படுகிறது. ஆக்கப் பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவது இறையாண்மை பெற்ற அரசுகளின் பிரிக்க முடியாத உரிமை என ஒப்பந்தம் வரையறுக்கும் அதே சமயம், உறுப்பு நாடுகள் செறிவூட்டல் நடவடிக்கையில் ஈடுபடுவது, ஒப்பந்தத்தின் முதலிரண்டு அம்சங்களோடு முரண்படுகிறது. அணு உலையில் எரிபொருளாக பயன்படுத்துவதற்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் அரசுகளின் திறனும், அணு ஆயுதத் திட்டங்களுக்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனும் ஒப்பந்தத்தில் தெளிவாக வேறுபடுத்தப்படவில்லை. இது ஒப்பந்தத்தின் பலவீனமான அம்சம்.

ஆக்கப் பணிகளுக்கு பயன்படுத்த, ஒன்று, யுரேனியத்தை உறுப்பு நாடுகள் தாமே செறிவூட்ட வேண்டும் அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேசச் சந்தையில் வாங்கியாக வேண்டும். ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்த யுரேனியத்தைச் செறிவூட்டுவதாக வடகொரியா முன்னர் கூறியது. ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கான அணு உலை அதனிடம் இல்லை என்பதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இப்போது ஈரானின் முறை. இடையில் லிபியா ரகசிய அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டத்தைத் தொடங்கி பின்னர் டிசம்பர் 2003-ல் கைவிட்டது.

இதுவரை வெளியாகி உள்ள விவரங்களின்படி 13 நாடுகள் யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைப் பெற்றுள்ளன. அணு ஆயுதங்களைப் பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நாடுகள் 8. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளது. எனினும் அதை உறுதிப்படுத்த மறுத்து வருகிறது. இந்த தகவல்கள் ஒருபுறமிருக்க, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி தலைவர் முகமது எல்பரேடி கூற்றுப்படி விருப்பப்பட்டால் 40 நாடுகள் அணுகுண்டுகளைத் தயாரிக்க முடியும். உண்மையிலேயே உலகை அச்சுறுத்தும் உண்மை இது.

=========================================================================
அணுமின் நிலைய பாதுகாப்பை கண்டிப்புடன் கடைப்பிடித்தால் இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை: ஆஸ்திரேலியா அறிவிப்பு

மெல்போர்ன், ஏப். 3: தன் நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை சர்வதேச அணுவிசை ஏஜென்சியின் கண்காணிப்புக்கு உள்படுத்த இந்தியா அனுமதிக்க வேண்டும்; அணுசக்தி நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால், இந்திய அணுமின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனிய எரிபொருளை ஆஸ்திரேலியா சப்ளை செய்யத் தயாராக இருக்கிறது என்று அந் நாட்டுப் பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறியுள்ளார்.

இந்தியா ~ அமெரிக்கா இடையிலான, ஆக்கபூர்வ அணுசக்தித் திட்ட ஒத்துழைப்பு உடன்பாட்டை அங்கீகரிக்கவும் ஆஸ்திரேலியா தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத் தகவலை “தி ஏஜ்’ என்னும் ஆஸ்திரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது.

அணுசக்தித் தொழில்நுட்பம் மற்றும் அணுமின் நிலைய எரிபொருள் சப்ளை செய்யும் நாடுகள் அமைப்பில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றுள்ளது.

இந்தியா ~ அமெரிக்கா இடையிலான உடன்பாட்டை அந்த அமைப்பு ஏற்றுக்கொண்டால், அதில் இடம்பெற்றுள்ள நாடுகள், அணுமின் நிலையத்துக்குத் தேவையான சாதனங்கள், யுரேனிய எரிபொருள் ஆகியவற்றை இந்தியாவுக்கு சப்ளை செய்ய முன்வரும்.

எனினும், சர்வதேச அளவிலான, அணுசக்தித் தொழில்நுட்ப பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்பிடி) கையெழுத்திடும் நாடுகளுக்குத்தான் அணுமின் நிலைய எரிபொருளை ஆஸ்திரேலியா சப்ளை செய்யலாம் என்று அந்த நாட்டுச் சட்டம் கூறுகிறது. ஆனால், என்பிடி-யில் இந்தியா கையெழுத்திடவில்லை.

இந்தியா ~ அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில், இந்திய அரசின் சிறப்புத் தூதராக சியாம் சரண், ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவர், கான்பெர்ரா நகரில் பிரதமர் ஜான் ஹோவர்டை சந்திக்கவுள்ளார். இந்திய அணுமின் நிலையத்துக்கு யுரேனிய எரிபொருளை ஆஸ்திரேலியா வழங்க வேண்டும் என்றும் அவர் ஹோவர்டிடம் கோரிக்கை விடுப்பார்.

இந் நிலையில், மேற்கண்ட நிபந்தனையை முன்வைத்துள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர்.

அதே நேரத்தில், “”இந்தியாவைப் பொறுப்புணர்வுள்ள நாடாக நாங்கள் கருதுகிறோம். அதனுடனான எங்களது உறவு வளர்ந்துவருகிறது. இந்தியா விஷயத்தில் வேறுபல அம்சங்களையும் நாங்கள் கருத்தில் கொள்வோம்” என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே, இந்தியாவைப் பொருத்தவரை, “என்பிடி’ உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்னும் நிபந்தனையை ஆஸ்திரேலியா தளர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
=========================================================================
இந்தியாவும், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தமும்

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, நேட்டோ நாடுகளுக்கிடையே ரகசிய அணு ஆயுதப் பகிர்வு ஒப்பந்தம் இருந்தது. இதன்படி, அமெரிக்கா பிற நேட்டோ நாடுகளில் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. போர் தொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் ஒழிய, அணு ஆயுதங்களின் மீதான கட்டுப்பாடு நேட்டோ நாடுகளுக்கு மாற்றித் தரப்படாது என அமெரிக்கா கூறி வருகிறது என்றாலும், இது ஒப்பந்தத்தை மீறுகிற செயலாகும்.

அமெரிக்காவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையிலான இந்த ரகசிய ஒப்பந்தம் பற்றி சோவியத் யூனியன் போன்ற சில நாடுகளுக்கு தெரியும் என்றாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல நாடுகளுக்கு இந்த விவரம் தெரியாது.

2005-ம் ஆண்டு கணக்குப்படி, பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அணுகுண்டுகளை வழங்கியுள்ளது. இதுவும் ஒப்பந்தத்தை மீறுகிற செயலாகும்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் பற்றி மறுபரிசீலனை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அமெரிக்கா தனது நோக்கங்களைச் சாதித்துக் கொள்ளத்தான் பயன்படுத்துகிறது. சான்றாக, மே 2005-ல் நடைபெற்ற 7-வது பரிசீலனை மாநாட்டில் அமெரிக்காவுக்கும், பிற நாடுகளுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிற நாடுகள், அதிகாரபூர்வ அணு ஆயுத நாடுகள் ஆயுதக் குறைப்பு செய்வதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. ஆனால் அமெரிக்காவோ ஈரானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கவனப்படுத்துவதில் முனைப்பு காட்டியது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளின் முக்கியமான வாதம் இதுதான்: ஒப்பந்தமானது அணு ஆயுதங்களைப் பெற்றுள்ள மிகச்சில நாடுகள், அணு ஆயுதங்கள் இல்லாத பல நாடுகள் என இருபிரிவாக உலகைப் பிரிக்கிறது. அதாவது 1967-க்கு முன்னர் அணு ஆயுதச் சோதனை நடத்திய நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது. எந்த அறநெறிகளின் அடிப்படையிலும் இது சரி அல்ல. இந்த அடிப்படையில்தான் இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.

இந்தியா அணு ஆயுதங்களைப் பெற்றுள்ளபோதும், எக்காரணம் கொண்டும் முதலில் அதைப் பயன்படுத்துவதில்லை என தானே முன்வந்து உறுதி வழங்கியுள்ளது.

=========================================================================
இந்தியாவுக்கு யுரேனியம்

இந்தியாவுக்கு யுரேனியம் அளிக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவார்டு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இந்தியாவில் அணுமின் நிலையங்கள் மூலம் மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கு இந்த யுரேனியம் உதவியாக இருக்கும்.

இந்தியா 1998-ல் நிலத்துக்கடியில் அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தபோது இந்தியாவை மிகக் கடுமையாகக் கண்டித்த ஒருசில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். அப்போதிலிருந்து இந்தியாவுடன் அணுசக்தி விஷயத்தில் எந்த ஒத்துழைப்பும் கூடாது என்று ஆஸ்திரேலியா சில ஆண்டுகாலம் கூறி வந்தது. எனினும் அண்மைக்காலமாக ஆஸ்திரேலியாவின் போக்கில் பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே கடந்த சில ஆண்டுகளாக உறவுகள் நெருக்கமாகியுள்ளது ஒரு காரணமாகும். இதல்லாமல் இந்தியா – அமெரிக்கா இடையில் ஏற்பட்ட அணுசக்தி உடன்பாடு அதைவிட முக்கியக் காரணமாகும்.

உலகில் மொத்த யுரேனிய உற்பத்தியில் பாதி கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் உற்பத்தியாகிறது. உலகிலேயே மிகப்பெரிய யுரேனிய சுரங்கம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது. அங்கு யுரேனிய உற்பத்தியை இரட்டிப்பாக்குவது பற்றி ஆஸ்திரேலிய அரசு ஆராய்ந்து வருகிறது. மேலைநாடுகளில் புதிதாக அணுமின் நிலையங்களை அமைப்பது நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் இந்தியா, சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில்தான் புதிதுபுதிதாக அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக உலகில் யுரேனியத்தின் விலை ஏறுமுகமாக உள்ள நிலையில் யுரேனிய ஏற்றுமதி மூலம் கூடுதல் வருமானம் பெற ஆஸ்திரேலியா விரும்புகிறது. இப் பின்னணியில்தான் ஆஸ்திரேலியாவிடமிருந்து யுரேனியம் பெறுவது தொடர்பாக இந்தியாவின் சிறப்புத் தூதர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பேச்சு நடத்தியுள்ளார்.

வருகிற ஆண்டுகளில் நாட்டில் பெருகி வரும் மின்சாரத் தேவையை அணுமின் நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்ய முடியும் என இந்திய அரசு முடிவு செய்து, அதற்கான வழியில் ஈடுபட்டுள்ளது. அணுசக்தி தொடர்பான இந்திய – அமெரிக்க உடன்பாடு அதற்கான முதல்கட்டமாகும். அமெரிக்காவுடன் மேலும் விரிவான உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. இதுதான் பச்சைக்கொடி காட்டுகிற உடன்பாடாக இருக்கும். அதாவது உலகில் யுரேனியத்தை உற்பத்தி செய்கின்ற நாடுகளும் அணு உலைகளை உற்பத்தி செய்கின்ற முன்னேறிய நாடுகளும் தங்களுக்குள்ளாக கூட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. பரஸ்பரம் விவாதித்து முடிவு எடுத்தாலொழிய எந்த நாட்டுக்கும் இவற்றை விற்கலாகாது என்பது இவற்றின் இடையிலான உடன்பாடாகும்.

அணுமின் நிலையங்களில் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற அதேநேரத்தில் சிறப்பு முறைகள் மூலம் அணுகுண்டுகளையும் செய்ய முடியும் என்பதே இதற்குக் காரணம். ஆகவேதான் இதுவிஷயத்தில் பல கட்டுப்பாடுகள்.

இந்தியாவுக்குத் தேவையான அணுஉலைகளையும் அத்துடன் யுரேனியத்தையும் தங்கு தடையின்றி பெறுவதற்கு இன்னும் பல நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டியாக வேண்டும். ஆனால் இச் சிக்கல்கள் பெரிய தடையாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஏனெனில் இந்தியாவுக்கு யுரேனியத்தை அல்லது அணு உலைகளை விற்பதில் நாடுகளிடையே போட்டாபோட்டி மூளும்போது இவை இயல்பாக அகன்றுவிட வாய்ப்பு உள்ளது.

இந்தியாவுக்கு அணுஉலைகளை விற்க பிரான்ஸ் ஏற்கெனவே தயாராக உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பல பெரிய நிறுவனங்களும் தீவிர அக்கறை காட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையங்களை அமைத்துக் கொடுக்கும் ரஷியாவும் மேலும் பல அணு உலைகளை விற்கத் தயாராக உள்ளது. ரஷியாவில் ஓரளவுக்கு யுரேனியம் கிடைக்கிறது.

இந்தியாவில் நமது தேவையைப் பூர்த்தி செய்கின்ற அளவுக்கு யுரேனியம் கிடைப்பதில்லை என்பதால்தான் இவ்வளவு பாடு.

=========================================================================

Posted in America, Atomic, Australia, Bombs, defence, Electricity, Enrichment, Generation, Industry, infrastructure, Lignite, Melbourne, Military, NPT, Nuclear, Op-Ed, Plants, Power, Proliferation, Security, Superpower, Treaty, UN, Uranium, USA | 1 Comment »

Needy artistes to get Rs. 1000 per month – CM Karunanidhi

Posted by Snapjudge மேல் மார்ச் 20, 2007

நலிந்த கலைஞர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 20: நலிவடைந்த கிராமியக் கலைஞர்கள் 500 பேருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட கலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்த கிராமியக் கலைஞர்கள் வறுமையில் வாடக் கூடாது என்பதற்காக மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி 8,063 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மாதந்தோறும் ரூ. 500 பெற்று வந்த கலைஞர்களின் உதவித் தொகை ரூ.1,000-மாக உயர்த்தப்பட்டது. நடப்பு ஆண்டில் மேலும் 500 பேருக்கு உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 60 லட்சம் கூடுதல் செலவாகும்.

உதவித் தொகை ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும். இதற்கான உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Artistes, Arts, CM, Culture, Funds, Karunanidhi | Leave a Comment »