Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Pakistan judge sacking sparks rows – Political Changes

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

பாகிஸ்தானில் அரசியல் மாற்றம்?

பொ. லாசரஸ் சாம்ராஜ்

பாகிஸ்தானின் வரலாற்றில் முதன்முதலாக அந்நாட்டின் தலைமை நீதிபதியான இப்திகார் முகமது சௌத்ரி அதிபர் முஷாரபின் அதிரடி உத்தரவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாகிஸ்தான் அரசியலில் இந்த நடவடிக்கை பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை நீதிபதியின் தவறான நடவடிக்கைகளும், அதிகாரத் துஷ்பிரயோகமும்தான் அவரின் பதவியைப் பறிக்க முக்கிய காரணங்கள் என்கிறார் அதிபர் முஷாரப்.

தலைமை நீதிபதியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழுக்களை அதிபர் நியமித்துள்ளார். இதில் மூவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. இதில் நீதிபதி அப்துல் ஹமீது டோகர் மீது நில மோசடி ஊழல் குறித்தும்; ஹுசைன் சௌத்ரி மீது அவர் மகளுக்கு மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பிற்கு சிபாரிசின் பேரில் இடம் வாங்கியது குறித்தும்; ஷாலத்தி மீது பல்கலைக்கழக நிதி மோசடி குறித்தும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்கள் தவிர லாகூர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹுசைன் சௌத்ரிக்கு, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதியிடம் பல மனக்கசப்புகள் உள்ளன என்பது வெளிப்படை.

இப்படிப்பட்ட நீதிபதிகள் கொண்ட உயர்நிலைக் குழு விசாரணை செய்து கொடுக்கும் தீர்ப்பை தான் ஏற்பதாக முஷாரப் மார்தட்டி அறிவித்துள்ளது வேடிக்கையிலும் வேடிக்கை.

உண்மையில் தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் வேறு பல உள்ளன. நேர்மைக்கும், துணிச்சலுக்கும் பெயர்போன நீதிபதி இப்திகார் 2005 ஜூன் 30-ல் பணி மூப்பு அடிப்படையில் பாகிஸ்தானின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் அளித்த சில தீர்ப்புகள் மக்களின் பேராதரவைப் பெற்றன. இதனால் இவர் “மக்கள் நீதிபதி’ என்று புகழப்பட்டார்.

பொதுவாக, சர்வாதிகாரிகளும், புகழுக்கு அடிமையான அரசியல் தலைவர்களும், அதிகாரத்தையும், புகழையும் தான் விரும்புகிறவர்களுக்கு மட்டும் பிச்சையிட்டுத்தான் பழக்கப்பட்டவர்களேதவிர, பகிர்ந்தளிப்பவர்களல்ல. இத்துடன் தங்களை எவரும் கேள்வி கேட்பதையோ விமர்சிப்பதையோ இவர்கள் பொறுப்பவர்களல்ல. இதற்கு முஷாரபும் விதிவிலக்கல்ல.

நீதிபதி இப்திகார் மீது முஷாரபுக்கு தீராத வெறுப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சில முக்கிய வழக்குகள் இன்னும் சில நாள்களில் இப்திகார் முன்பு விசாரணைக்கு வரவிருந்தன.

முதலாவது, இரட்டை குடியுரிமை பெற்றவரான பிரதமர் செüகத் அஜீஸ் பதவியில் நீடிக்கலாமா என்பது குறித்த வழக்காகும். இரண்டாவது வழக்கு அதிபர் முஷாரப் இன்னொரு முறை தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்த வழக்கு.

இவ்விரண்டு வழக்குகளையும் நேர்மையான நீதிபதி விசாரித்து சட்டப்படி தீர்ப்பளித்தால் அதிபர் மற்றும் பிரதமரின் பதவிகளுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த முஷாரப் முந்திக் கொண்டார் என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினை முதன்முறையாக பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளையும், பெரும்பாலான வழக்கறிஞர்களையும், பொது மக்களையும், மக்கள் தொடர்பு சாதனங்களையும், மாணவர்களையும், ஓரணியில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், இந்தப் போராட்டம் வெற்றி பெற பல தடைகள் உள்ளன. முதலாவது, பாகிஸ்தான் வரலாற்றில் அமைதியாக எந்த பெரிய அரசியல் மாற்றமும் ஏற்பட்டதில்லை. இரண்டாவது, மக்கள் ஜனநாயக உணர்வுள்ளவர்களாக இருந்தாலும், ராணுவ ஆட்சிக்குப் பழக்கப்பட்டு போனவர்கள். மூன்றாவதாக, அங்குள்ள அரசியல் கட்சிகள் கொள்கை அடிப்படையிலும், தனிநபர், பிராந்தியம், மதத்தை மையமாகக் கொண்டும் பிரிந்து கிடக்கின்றன.

புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆர்னால்டு டாயன்பி ஓர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு இரண்டு முக்கிய காரணங்களைக் குறிப்பிட்டார். அதில் பிரதானமானது நீதித்துறையில் வளரும் ஊழல்.

இரண்டாவது, கல்வித்துறையில் உள்ள ஊழல். இவை இரண்டும் பாகிஸ்தானில் மட்டுமல்ல; இந்தியாவிலும் நச்சு விதைகளைப் பரப்பும் பெரும் மரங்களாய் பல்கிப் பெருகி வருகிறது.

பிறர் தவறிலிருந்து பாடம் படிப்பவன்தான் சிறந்த மாணவன். அதுபோல, பிற நாடுகளின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். இல்லையென்றால், எதிர்கால இந்தியா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவை சுயபரிசோதனை.

(கட்டுரையாளர்: பேராசிரியர், அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் துறை, புதுவை பல்கலைக்கழகம்).


பாகிஸ்தானில் 7 நீதிபதிகள் பதவி விலகல்

இடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி
இடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி

பாகிஸ்தான் நாட்டின் தலைமை நீதிபதி இஃப்திகர் முகமது சௌத்திரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அங்கு ஏழு நீதிபதிகள் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளார்கள்.

கடந்த வாரம் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாக் கூறி தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இது வரை எட்டு நீதிபதிகள் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளார்கள்.

பாகிஸ்தானின் பல வழக்குரைஞர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் பதிவி நீக்கம் நீதித் துறையின் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு தாக்குதல் என அவர்கள் கூறியுள்ளார்கள்.

தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கை தாம் நீதிமன்றத்தில் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.


தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு கடுமையானது: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் விளக்கம்இஸ்லாமாபாத், மார்ச் 20: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள இஃப்திகார் செüத்ரி மீதான குற்றச்சாட்டு கடுமையானது என்று அதிபர் பர்வீஸ் முஷாரப் தெரிவித்தார்.”தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எந்தவித மோதலும் கிடையாது. பெஷாவர் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இஃப்திகார் மீது சில குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் மார்ச் 5-ம் தேதி எனக்கு அனுப்பியிருந்தார். நாட்டின் மிக உயரிய பதவியில் இருப்பவர் என்பதால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முதலில் இது குறித்து தெரிவித்து கருத்து கேட்கப்பட்டது. அவர் அதற்கு அளித்த பதில் திருப்தியைத் தரவில்லை.இந் நிலையில் தலைமை நீதிபதியே என்னைச் சந்தித்து நேரில் விளக்கம் அளித்தார். அப்போது நான் குற்றச்சாட்டையும், அதற்கு தரப்பட்ட ஆதாரத்தையும் அவரிடம் தெரிவித்தேன். அவரால் சரியான பதிலைத் தர முடியவில்லை.இந் நிலையில்தான் அவரைத் தாற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. அதற்குள் இந்த விஷயம் அரசியல் எதிரிகளால் திரித்து பிரசாரம் செய்யப்பட்டது. “”ராணுவ ஆட்சியாளர் நாடாளுமன்றத்தையும் நீதித்துறையையும் காலில்போட்டு மிதிக்கப் பார்க்கிறார்” என்று ஆதாரம் இல்லாமல் என்மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த தவறான பிரசாரம் பாகிஸ்தானில் மட்டும் இல்லாமல் சர்வதேச அரங்கிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த மூத்த நீதிபதி பகவன்தாஸ் இப்போது இந்தியாவில் யாத்திரை சென்றிருக்கிறார். அவர் வரும் வியாழக்கிழமை நாடு திரும்புகிறார். இஃப்திகார் மீதான குற்றச்சாட்டும் அதற்கான ஆதாரங்களும் அவர் தலைமையிலான பெஞ்சிடம் அளிக்கப்படும். அதன் பிறகு அவர் முடிவெடுக்கட்டும். அதுவரை காத்திருக்கத் தயார்.

தன் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படுவதைத் தடுக்கவும், தன்னைத் தியாகியாகச் சித்திரித்துக் கொள்ளவும் நீதிபதி இஃப்திகார் செüத்ரி முற்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனால் நீதித்துறைக்கு நன்மை ஏதும் விளையாது’ என்றார் அதிபர் பர்வீஸ் முஷாரப். குவெட்டாவிலிருந்து வந்திருந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்களிடம் இந்த விளக்கத்தை அவர் அளித்தார்.

அந்த குற்றச்சாட்டுகள்தான் என்ன என்று கேட்டபோது, விஷயம் நீதிமன்றத்தில் இருக்கும்போது அதை வெளியே தெரிவிப்பது முறையாகாது என்றார் முஷாரப்.

6 நீதிபதிகள் ராஜிநாமா முடிவு: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இப்திகார் செüத்ரிக்கு ஆதரவாக, தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்ய கீழ் நீதிமன்றங்களைச் சேர்ந்த 6 நீதிபதிகள் முன்வந்துள்ளனர். இவர்களில் ரமேஷ் சந்திர என்பவர், தாற்காலிகத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள நீதிபதி பகவன்தாஸின் மாப்பிள்ளை ஆவார். மற்ற நீதிபதிகளின் பெயர்கள் வருமாறு:

 • அஷ்ரஃப் யார் கான்,
 • முஸ்தஃபா சஃபி,
 • ஈஷான் மாலிக்,
 • அல்லா பச்சாயோ கபூல்,
 • பிர் அசதுல்லா ஷா ரஷ்டி.

================================================================================
தலைமை நீதிபதி நீக்கப்பட்ட விவகாரம் நீதிமன்ற தீர்ப்புக்கு தலை வணங்குவோம்: பாக். அரசு உறுதிமொழி

இஸ்லாமாபாத், மார்ச் 27: பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது செüத்ரி பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்புக்கு தலை வணங்குவோம் என பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.

இஃப்திகார் முகமது மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறும் எண்ணமில்லை எனவும் அரசு மறுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இஃப்திகார் முகமது, அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், எதிர்ப்பின் வேகத்தைத் தணிப்பதற்காகவே பாகிஸ்தான் அரசு இத்தகைய உறுதிமொழியை அளித்துள்ளது.

முஷாரப்பின் 8 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ள இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, அதிபர், பிரதமர் மற்றும் எம்.பி.களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த விவகாரத்தை அரசியலாக்கும் முயற்சிகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்; முற்றிலும் அரசமைப்புச் சட்டம் தொடர்பான இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளை அனுமதிக்கக் முடியாது.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. உச்ச நீதிமன்ற குழு வழங்கும் தீர்ப்பு எதுவாயினும் அதை அரசு ஏற்றுக் கொள்ளும்.

வழக்கறிஞர்கள் தங்களது கோரிக்கைகளை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்கும் (எதிர்க்கட்சிகளின்) முயற்சிகளை அவர்கள் அனுமதிக்கக் கூடாது என முஷாரப் கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஃப்திகார் முகமது செüத்ரியை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி போராடி வரும் எதிர்க்கட்சிகள் ஜனநாயக மீட்புக் கூட்டணியை அமைத்துள்ளன. போராட்டங்களை ஒடுக்குவதற்காக, பாகிஸ்தான் அரசு ஏராளமான எதிர்க்கட்சி தொண்டர்களை தடுப்புக் காவலில் கைது செய்துள்ளது.
================================================================================
முஷாரப் திறமையான பொய்யர்: பாக். மனித உரிமைக் கமிஷன் தலைவர் தாக்கு

நியூயார்க், மார்ச் 27: “அதிபர் பர்வீஸ் முஷாரப் ஒரு திறமையான பொய்யர்’ என கூறியுள்ளார் பாகிஸ்தான் மனித உரிமைக் கமிஷன் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர்.

“ஆனால் முஷராபின் பிடி நழுவி வருகிறது; எல்லா இடங்களில் இருந்தும் அவருக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது’ என கூறியுள்ளார் அவர்.

தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது செüத்ரியை, முஷாரப் பதவி நீக்கம் செய்துள்ள விவகாரம் குறித்து குறிப்பிட்ட அஸ்மா, முஷாரப் மீண்டும் ஒரு முறை பொய் சொல்வதுடன், அனைவரையும் திசை திருப்புகிறார். அவரது இந்த நடவடிக்கை, அவரே கூறியுள்ளது போல இயல்பானதோ அல்லது வழக்கமானதோ அல்ல. முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. நீதித்துறையை முஷாரப் சீர்குலைப்பது இது முதல்முறை அல்ல. ஆட்சிக்கு வந்தவுடனே, அதிபருக்கு விசுவாசமாக இருப்பதாக பதவிப் பிரமாணம் எடுக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை வலியுறுத்தியவர் அவர்.

அதிபராகவும், ராணுவத் தலைமைத் தளபதியாகவும் முஷாரப் இரட்டைப் பதவி வகிப்பதற்கு எதிராக இப்திகார் உத்தரவிடலாம் என்ற அச்சத்தினாலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதை ஏற்க முடியாது. இப்திகார் உள்ளிட்ட எந்த நீதிபதிக்கும் அத்தகைய துணிச்சல் கிடையாது.

நீதிபதி பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில் மாதக் கணக்கில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்திலும், வேலைநிறுத்தத்திலும் ஈடுபட முடியாது. எனவே அவர்களது போராட்டம் விரைவிலேயே உருக்குலைந்து போகும்.

பாகிஸ்தானில் காணாமல் போனவர்கள் பற்றி கவலை தெரிவித்து, அவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டுள்ளார் முஷாரப். காணாமல் போனவர்கள் தீவிரவாதிகள் என உலகை நம்ப வைக்க முயற்சிக்கிறார் அவர். ஆனால் அது உண்மை அல்ல. காணாமல் போன 141 பேரில் 60 -70 சதவீதம் பேர், சிந்தி மற்றும் பலூச் தேசியவாதிகள். அவர்கள் அனைவரும் மதச்சார்பற்றவர்கள். சிலர் நாடு முழுவதும் நன்கறியப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள். அவர்களுக்கும் தலிபான், அல்-காய்தா போன்ற அமைப்புகளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இந்த விஷயத்தில் முஷாரப் புளுகுகிறார்.

காணாமல் போனவர்களை அரசு கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என இப்திகார் முகமது உத்தரவிட்டது பற்றி அஸ்மாவிடம் கேட்கப்பட்டது.

இப்திகார் செüத்ரி காணாமல் போனவர்கள் பற்றி எந்தத் உத்தரவும் வழங்கவில்லை. மனித உரிமை ஆணையத்தின் புகாரை ஒன்றரை மாதங்கள் அவர் நிலுவையில் வைத்திருந்தார். வேறு வழியில்லாமல்தான் அந்த வழக்கை அவர் விசாரணைக்கு ஏற்றார்.

அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய அவர் எந்த உத்தரவும் வழங்கவில்லை. அவர் செய்ததெல்லாம் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதுதான். நூற்றுக் கணக்கானவர்கள் காணாமல் போகும்போது எந்த நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியும் என்றார் அஸ்மா ஜஹாங்கீர்.
================================================================================
பாக். தலைமை நீதிபதியான பகவான்தாஸ் குர்-ஆன் வாசகத்தை படித்து பதவியேற்பு

இஸ்லாமாபாத், மார்ச் 27: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தாற்காலிக தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த ராணா பகவான்தாஸ் குர்-ஆன் வாசகத்தைப் படித்து பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

பாகிஸ்தானில் 1985-ம் ஆண்டு ஜெனரல் ஜியா-உல் ஹக் சர்வாதிகார ஆட்சி நடத்தியபோது தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த சட்டத்தை ஏற்படுத்தினார்.

அச்சட்டத்தின்படி நீதிபதிகள் பதவியேற்பு உரையில் “”அல்லாவே என்னை வழிநடத்து, எனக்கு உதவி செய்” என்ற குர்-ஆன் வாசகம் இடம் பெற்றது. அதுவே வழக்கமாக இப்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் தாற்காலிக தலைமை நீதிபதியாக இந்து மதத்தைச் சேர்ந்த பகவான்தாஸ் நியமிக்கப்பட்டதை உலகமே கவனித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட பிறகு பாகிஸ்தான் திரும்பிய அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
================================================================================

பஜூர் பழங்குடிகளுடன் பாக். சமரச உடன்பாடு

இஸ்லாமாபாத், மார்ச் 28: ஆப்கானிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதியில் வெளிநாட்டுத் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, பஜூர் பழங்குடி இனத்தவருடன் சமரச உடன்பாட்டை பாகிஸ்தான் அரசு செய்து கொண்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில் பழங்குடி மக்களுடன் பாகிஸ்தான் அரசு (ராணுவம்) செய்துகொள்ளும் இரண்டாவது சமரச உடன்படிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

“வெளி நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் எவரையும் பழங்குடிகள் தங்கள் பகுதியில் செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்; எதற்காகவும் இரக்கப்பட்டு புகலிடமும் தர மாட்டார்கள். இதற்குப் பிரதிபலனாக, பழங்குடி பகுதிகளில் எந்தவித ராணுவ நடவடிக்கையாக இருந்தாலும் அதை பழங்குடிகளின் தலைவர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் சம்மதத்துக்குப் பிறகே எடுக்கப்படும்.

“பழங்குடி மக்களின் சடங்குகள், சம்பிரதாயங்கள் மதிக்கப்படும். அவர்களுடைய சமுதாயத் தலைவர்களின் செல்வாக்கிலும், நடவடிக்கைகளிலும் அரசோ, ராணுவமோ குறுக்கிடாது’ என்பதுதான் உடன்பாட்டின் முக்கிய அம்சமாகும்.

இதன் மூலம், வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பழங்குடி மக்களுக்குள்ள தனிச் சிறப்புகளும், சுயேச்சை உரிமைகளும் அரசால் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பஜூர் பழங்குடிகளுக்கு முன்னதாக, மாமுண்ட் என்ற பழங்குடிகளுடனும் இதே போன்ற ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்னால் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது.

பஜூர் பழங்குடிகள், தலிபான் பழங்குடிகளுக்கும் அவர்களின் தலைக்கட்டுகளுக்கும் ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்குடிப் பகுதிகளில் உஸ்பெகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் பழங்குடிகளுக்கும் நடந்த மோதலில் 100 பேருக்கும் மேல் இறந்தனர். சமீபத்தில் நடந்த இத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசையே குற்றஞ்சாட்டியது அமெரிக்க அரசு.

வசீரிஸ்தான் பகுதியில் பழங்குடிகளுக்கு அதிக செல்வாக்கை ஏற்படுத்தித் தருகிறது இத்தகைய உடன்படிக்கைகள் என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. இத்தகைய அதிகாரத்தால் அவர்கள் தலிபான்கள், அல்-காய்தா போன்ற அமைப்புகளை ஆதரிப்பதற்கு ஊக்கம் பெறுகிறார்கள் என்று சாடியது அமெரிக்கா. ஆனால் பாகிஸ்தான் இதற்கு நேர்மாறாக நினைக்கிறது. நமக்கும் அவர்களுக்கும் இடையிலான பலப்பரீட்சையைத் தவிர்த்துவிட்டால், அவர்கள் நாம் சொல்வதைத்தான் கேட்பார்கள் என்கிறது பாகிஸ்தான்.

கடந்த சில வாரங்களாகவே அன்னிய நாட்டு தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் பழங்குடிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதுவே தங்களுடைய கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்கிறது பாகிஸ்தான் அரசு.

வசீரிஸ்தான் பிரதேசத்தில் பஜூர் பழங்குடிகள் பகுதியில் உள்ள மசூதியில் அல்-காய்தா தீவிரவாதிகளும் தலிபான்களும் பதுங்கி இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தில் பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க வான்படையும் சில மாதங்களுக்கு முன்னால் குண்டுவீச்சு நடவடிக்கைகளில் இறங்கின.

இதில் 80-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். முஸ்லிம் மதப்பள்ளிக்கூடம் ஒன்று தரைமட்டமானது. அதில் படித்த அப்பாவி மாணவர்கள் உயிரிழந்தனர். இதை அடுத்து பாகிஸ்தான் அரசு மனம் மாறியது. அமெரிக்காவின் ஆலோசனையை உதறித்தள்ளிவிட்டு, பழங்குடிகளுடன் சமாதான ஒப்பந்தங்களை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது.

===========================================================
பாக். உளவுத்துறை அதிகாரி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத், மார்ச் 29: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி மாஜ் ஹம்ஸôவும் அவருடன் காரில் வந்த மேலும் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாஜ் ஹம்ஸô உள்ளிட்ட 6 பேர் பெஷாவரில் இருந்து கர் என்ற பகுதிக்கு காரில் வந்துகொண்டு இருந்தனர். ராஷாகாய் என்ற பகுதியில் கார் வந்தபோது மறைந்திருந்த சிலர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மாஜ் ஹம்ஸô, பணியாளர் சுபேதார் சய்யீத், 2 மலைவாழ் மக்கள் கொல்லப்பட்டனர். கார் டிரைவர், மற்றொரு மலைவாசி ஆகியோர் காயங்களுடன் தப்பினர்.

வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் பழங்குடியினத் தலைவரின் அனுமதி பெற்றே எடுக்கும் என்று பஜூர் மற்றும் மாமுண்ட் இன மக்களிடம் பாகிஸ்தான் உடன்படிக்கை செய்து கொண்டது. இது பிடிக்காத சில தலிபான் ஆதரவு சக்திகள் அப்பகுதியில் அமைதியைக் கெடுக்கும் முயற்சியாக இக்கொலைச் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

தெற்கு வஜிரிஸ்தானில் பழங்குடியினர் வாழும் டேங்க் பகுதியில் நடந்த தீவைப்பு மற்றும் குண்டுவீச்சு சம்பவங்களில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் 6 வங்கிகளைக் கொள்ளையடித்து அவற்றுக்கு தீ வைத்தனர் என போலீஸôர் தெரிவித்தனர். அப்பகுதியில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

மற்றொரு சம்பவத்தில் தனியார் பள்ளி முதல்வர் ஃபரீத் மெசூத் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதமேந்திய 12 தீவிரவாதிகள் அவரையும், அவருடைய சகோதரரையும் துப்பாக்கி முனையில் கடத்தினர்.


பாகிஸ்தான் தலைமை நீதிபதி மீதான விசாரணை இடை நிறுத்தம்

பாகிஸ்தான் தலைமை நீதிபதி இஃப்திகார் செளத்திரி
பாகிஸ்தான் தலைமை நீதிபதி இஃப்திகார் செளத்திரி

பாகிஸ்தானின் தலைமை நீதிபதி இஃப்திகார் சௌத்திரி அவர்களுக்கு எதிரான, தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டுக்கான நீதி விசாரணையை பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் இடை நிறுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிமன்றத்தின் சட்ட அதிகாரம் குறித்த சௌத்திரி அவர்களின் சாவலை கையாண்டு முடிக்கும் வரை இந்த விசாரணையை ஆரம்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சௌத்திரி அவர்கள் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, அதிபர் முஷாரப் அவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் சௌத்திரியை பணி இடைநீக்கம் செய்தார்.

சௌத்திரி அவர்களின் நீக்கத்துக்கு எதிரான எதிர்ப்புகள், இராணுவ ஆட்சிக்கு எதிரான பரந்துபட்ட போராட்டமாக மாறியுள்ளதுடன், 7 வருடங்களுக்கு முன்னர் அதிபர் முஷாரப் அவர்களை அதிகாரத்தை கைப்பற்றியது முதல், இன்று வரையிலான காலப்பகுதியில் அவரது நிர்வாகத்துக்கு எதிரான மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். 

7 பதில்கள் -க்கு “Pakistan judge sacking sparks rows – Political Changes”

 1. bsubra said

  பதவி நீக்கம் செய்யப்பட்ட பாக். தலைமை நீதிபதியின் ஆதரவாளர்கள், போலீஸôருக்கு இடையே கடும் மோதல்

  இஸ்லாமாபாத், மே 3: பாகிஸ்தானில் அதிபர் பர்வீஸ் முஷாரஃபின் நிர்பந்தம் காரணமாக வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து இறக்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இப்திகார் செüத்ரியின் ஆதரவாளர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே பலமுறை கடும் மோதல்கள் ஏற்பட்டன.

  ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸôர் மீது கற்களை வீசினர். பதிலுக்கு போலீஸôர் தடியடி நடத்தினர்.

  இச்சம்பவங்களால் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.

  இஸ்லாமாபாதில் புதன்கிழமை, முன்னாள் தலைமை நீதிபதி செüத்ரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ராணா பகவன்தாஸ் புதன்கிழமை விசாரணை செய்தார்.

  செüத்ரியின் வருகையையொட்டி உச்ச நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விசாரணைக்காக செüத்ரி வந்ததும் பதற்றம் அதிகமாகியது. அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

  கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போலீஸôர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை எறிந்தனர். பதிலுக்கு போலீஸôர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.

  செüத்ரிக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தானில் உள்ள பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களும், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு பேரணி நடத்தின. கவிஞர்கள், அறிவுஜீவிகள் பலரும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

  செüத்ரியை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்த அதிபர் பர்வீஸ் முஷாரப், பிரதமர் செüகத் அஜீஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  தலைமை நீதிபதியை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து விலக வைத்து அவர் மீது விசாரணை தொடங்கப்பட்டது முதல், இதுவரை 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் பதவி விலகிய தலைமை நீதிபதி தாக்கல் செய்த மனுவும் அடங்கும்.

  இந்த மனுக்கள் அனைத்தையும் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மே 7-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.

 2. bsubra said

  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனத்தில் செனட் ஆலோசனையை அதிபர் பெறவேண்டும்: பாக். நாடாளுமன்ற கமிட்டி பரிந்துரை

  இஸ்லாமாபாத், மே 4: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்வதற்கு முன் செனட் அவையில் ஆலோசனையை அதிபர் பெறும் வகையில் கட்டாயமாக்க சட்டம் இயற்ற நாடாளுமன்ற கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

  பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் எம்.செüத்ரியை அதிபர் திடீரென பதவி நீக்கம் செய்தார். இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாள்தோறும் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

  இந்நிலையில் மாகாண சுயாட்சியை மறுபரிசீலனை செய்த நாடாளுமன்ற உதவிக் குழு, அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது. அதன்படி அதிபரை கட்டுப்படுத்தும் வகையில் சட்டப்பிரிவு 177-ன் படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பதற்கு முன் செனட்டின் ஆலோசனையை அதிபர் பெறவேண்டும் என்று வலியுறுத்தும் பரிந்துரையை நாடாளுமன்றக் கமிட்டி அறிமுகப்படுத்தியுள்ளது.

  ஆனால் இந்த பரிந்துரையை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஷெர் ஆப்கான் நியாஸி ஏற்க மறுத்துவிட்டார்.

  அதேபோல் மற்றொரு பரிந்துரையையும் நாடாளுமன்றக் கமிட்டி அரசிடம் முன்வைத்துள்ளது. அதன்படி பொதுமக்களை வாரண்ட் உத்தரவு இல்லாமல் கைது செய்யக்கூடாது. மேலும் கைது செய்யப்பட்டவர்களை 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

  அரசுப் பொறுப்பில் உள்ள துறைமுகங்களை மாகாணங்கள் பொறுப்பில் விடுவதற்கான பரிந்துரையையும் நாடாளுமன்ற கமிட்டி முன்வைத்துள்ளது.

  இந்த பரிந்துரைகள், அதிபர் முஷாரப், பிரதமர் ஷெüகத் அஜீஸ், செனட் தலைவர் வாசீம் சஜத், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) தலைவர் சுஜாத் ஹுசைன் ஆகியோரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக “ஜியோ’ தொலைக்காட்சியை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

 3. bsubra said

  முன்னாள் தலைமை நீதிபதிக்கு ஆதரவு அதிகரிப்பு: பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அறிவிக்க வாய்ப்பு

  இஸ்லாமாபாத், மே 8: பாகிஸ்தானில் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இஃப்திகார் செüத்ரிக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் அச்சம் அடைந்துள்ள பாகிஸ்தான் அரசு நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தலாம் எனத் தெரிகிறது.

  நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர் செüகத் அஜீஸ், “நெருக்கடி நிலையை அறிவிக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. நிலைமைக்குத் தக்கவாறு இது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

  பஞ்சாப் மாகாண தலைநகரான லாகூரில் நடந்த வழக்கறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்க இஸ்லாமாபாதில் இருந்து சனிக்கிழமை சாலை வழி புறப்பட்ட செüத்ரிக்கு 300 கி.மீ. தொலைவைக் கடக்க 2 நாள்கள் தேவைப்பட்டன. வழிநெடுக எதிர்க்கட்சியினரும், ஆதரவு வழக்கறிஞர்களும் ஆயிரக்கணக்கில் கூடி வரவேற்பு அளித்தனர்.

  செüத்ரிக்கு ஆதரவு பெருகி வருவது பாகிஸ்தான் அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில் அரசு செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் செüகத் அஜீஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

  செüத்ரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றிய அறிக்கை அரசியல் சாசனத்துக்கும் சட்டத்துக்கும் உள்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அரசியல் லாபத்துக்காகவோ, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவோ பயன்படுத்த மாட்டோம்.

  5 நீதிபதிகள் அடங்கிய உச்சநிலை நீதி கவுன்சில் இந்த அறிக்கையின் மீது முடிவெடுக்கும். இந்த நாட்டில் யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றார்.

  உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டது பற்றி மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும் என்ற செüத்ரியின் வழக்கறிஞர்களின் கருத்தை அஜீஸ் நிராகரித்தார்.

  செüத்ரியின் பயணத்தை நேரடியாக ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சி சில பகுதிகளில் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது தவறு. கேபிள் ஆபரேட்டர்களால் இந்த தடை ஏற்பட்டிருக்கலாம்.

  பத்திரிகைத் துறையின் சுதந்திரத்தைக் காக்க இந்த அரசு உறுதிகொண்டுள்ளது. ஆனால், இந்த சுதந்திரத்தை பொறுப்புணர்வுடன், நடுநிலையான செய்திகளை வெளியிட செய்தி நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும். உண்மையின் அடிப்படையில் அமைந்த விமர்சனங்களை இந்த அரசு வரவேற்கும்.

  இந்த அரசால் கடந்த 7 ஆண்டுகளில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து மக்கள் நன்கு அறிந்துள்ளனர். இருப்பினும், மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது.

  60 சதவீத மக்கள் வாழும் கிராமப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அங்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு உணவு தானியங்களின் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 லட்சம் டன் கோதுமை இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவுக்கும் ஏற்றுமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

  பிற தெற்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானில் பல்வேறு அத்தியாவசியப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. 7 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் கருவூலம் காலியாக இருந்தது. அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சாதனை அளவாக அன்னிய முதலீடுகள் வந்துள்ளன என்றார் அஜீஸ்.

 4. bsubra said

  இஃப்திகார் செüத்ரிக்கு ஆதரவாக செயல்படுகிறார்: பாக். தாற்காலிக தலைமை நீதிபதி மீது வழக்கு

  இஸ்லாமாபாத், மே 10: பதவி நீக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் தலைமை நீதிபதி இஃப்திகார் செüத்ரிக்கு தாற்காலிக தலைமை நீதிபதியாக உள்ள ராணா பகவன்தாஸ் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  அவாமி ஹிமாயத் தெரீக் என்ற அமைப்பின் தலைவர் மெüலவி இக்பால் ஹைதர் செவ்வாய்க்கிழமை வழக்கு தொடுத்தார்.

  “முன்னாள் தலைமை நீதிபதி இஃப்திகார் செüத்ரி தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு நீதி விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக பகவான்தாஸ் செயல்பட்டு வருகிறார். இது உயர்நிலை நீதித்துறை கவுன்சிலின் நெறிகளையும் சட்ட விதிகளையும் மீறிய செயலாகும். செüத்ரியின் அறிவிக்கைக்கு எதிராக நான் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவை இதே போன்ற மற்ற மனுக்களுடன் சேர்க்கவில்லை’ என்று அவர் தனது வழக்கில் குற்றம்சாட்டியுள்ளார்.

  இந்த நிலையில் செüத்ரி மீது அரசு புதிய குற்றச்சாட்டுகளை சுமத்த திட்டமிட்டுள்ளது. அதிபர் பர்வீஸ் முஷாரப் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக செüத்ரி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க 14 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.

  நீதிபதி காலியுர் ரஹ்மான் ராம்தே தலைமையிலான இந்த பெஞ்ச் மே 14-ம் தேதி முதல் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று பகவான்தாஸ் கூறியுள்ளார். செüத்ரிக்கு எதிரான உயர்நிலை நீதித்துறை கவுன்சிலின் செயல்பாடு திங்கள்கிழமை முதல் நிறுத்தப்பட்டு முழு அளவில் நீதி விசாரணை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 5. bsubra said

  பாகிஸ்தானில் பதவி நீக்கப்பட்ட நீதிபதியின் வழக்கறிஞர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

  கராச்சி, மே 11: பாகிஸ்தானில் பதவி நீக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியின் முக்கிய வழக்கறிஞர் முனீர் மாலிக்கின் வீட்டின் மீது வியாழக்கிழமை அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அங்கு மேலும் பதற்றம் நிலவுகிறது.

  முனீர் மாலிக் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார்.

  அதிபர் முஷாரப்புக்கு எதிராக தங்களின் பலத்தை நிரூபிக்கும் நோக்கில் வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளும் பேரணியில் பங்கேற்க முன்னாள் தலைமை நீதிபதி இஃப்திகார் செüத்ரி கராச்சி செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்கு 2 நாள்களுக்கு முன்பு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  அதே நாளில் முஷாரப் ஆதரவு கட்சியான முத்தாஹிதா குவாமி கட்சியினரும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் கராச்சியில் பதற்றம் உச்சத்தில் உள்ளது.

  “வீட்டின் மீது 15 முறை சுடப்பட்டன. அவற்றில் 2 குண்டுகள் அறைக்குள் சுடப்பட்டன. அங்கு எனது மகள் கம்யூட்டரில் பணி புரிந்துகொண்டு இருந்தாள். கடவுள் கருணையால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை’ என்று முனீர் மாலிக் கூறினார்.

  “பேரணியில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலுக்கு பயந்து பேரணியில் கலந்துகொள்ளாமல் இருக்க மாட்டேன்’ என்றார்.

  பத்திரிகையாளர்களும், சக வழக்கறிஞர்களும் வந்த பின்பே போலீஸôரை வீட்டுக்குள் நுழைய அனுமதித்தார் மாலிக். தடயங்களை அழித்துவிடுவர் என்ற அச்சம் காரணமாகவே அவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.

 6. bsubra said

  தலையங்கம்
  Tuesday May 15 2007 00:00 IST

  பாகிஸ்தானில் கொந்தளிப்பு

  சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த ஜெனரல் முஷாரபுக்கு இதுவரை இல்லாத அளவில் இப்போது கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் மூண்ட கலவரங்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கராச்சி மற்றும் லாகூர், பெஷாவர் முதலான நகரங்களில் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  முஷாரப் கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இப்திகார் சௌதரியை சஸ்பெண்ட் செய்தபோது அந்த நடவடிக்கை தமது ஆட்சிக்கு எதிரான பெரிய இயக்கமாக உருவெடுக்கும் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். தலைமை நீதிபதி ராஜிநாமா செய்துவிட்டு கௌரவமாக ஒதுங்கிக் கொள்வார் என்று முஷாரப் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இப்திகார் சௌதரி விடுவதாக இல்லை. ஊர்ஊராகச் சென்று வழக்கறிஞர்கள் கூட்டத்தில் பேசலானார். நீதிமன்ற சுதந்திரத்தை நிலைநாட்ட அவர் இவ்விதம் மேற்கொண்ட நடவடிக்கை இப்போது நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி ஏற்பட வேண்டும் என்று விரும்புகிற பல்வேறு தரப்பினரின் பொது இயக்கமாக உருவெடுத்துள்ளது. பல அரசியல் கட்சிகளும் சௌதரியை ஆதரிக்கின்றன.

  அண்மையில் அவர் பல்வேறு மாகாணங்களுக்கும் சென்றபோது ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் அதேநேரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் காணப்பட்டன. பெரிய அளவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் அவர் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சிக்குச் செல்ல முயன்றபோது பிரச்சினை எழுந்தது. மத்தியில் முஷாரப் அரசை ஆதரிக்கின்ற ஒரு கட்சி சிந்து மாகாணக் கூட்டணி அரசிலும் அங்கம் வகிக்கிறது. அக் கட்சியினர் இப்திகார் சௌதரி கராச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாதபடி முற்றுகை இட்டனர். அதேநேரத்தில் அவரை வரவேற்க விமான நிலையத்துக்கு யாரும் செல்ல முடியாதபடி எல்லா வழிகளும் அடைக்கப்பட்டன. இவற்றுக்கு சிந்து மாகாண அரசும் உடந்தையாக இருந்தது. ஆகவேதான் கராச்சியில் கலவரம் மூண்டது.

  நீதிபதி இப்திகார் சௌதரி ஆடம்பரப் பிரியர் என்பதைத் தவிர அவர் மீது பெரிதாகப் புகார் கூற முடியாது. ஆனால் சௌதரி மீது பல புகார்கள் வந்துள்ளதாகவும் ஆகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் முஷாரப் அறிவித்தார். அவர் மீதான புகார்கள் என்ன என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.

  எனினும் பதவியிலிருந்து சௌதரி அகற்றப்பட்டதற்கான உண்மையான காரணம் அவர் சுதந்திரமாகச் செயல்பட்டுத் தீர்ப்புகளை வழங்கினார் என்பதாகும். முஷாரப் அரசுக்கு அவர் இசைவாக இருக்க மாட்டார் எனத் தெரியவந்தது என்பது அதைவிட முக்கிய காரணமாகும். முஷாரபின் பதவிக்காலம் முடிந்தபின் அவர் தொடர்ந்து ராணுவத் தலைமைத் தளபதி பதவியில் நீடிக்க சட்டத்தில் இடம் இல்லை என சில மாதங்களுக்கு முன்னர் சௌதரி கருத்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முஷாரபின் பதவிக் கால நீடிப்பு விவகாரம் விரைவில் உச்ச நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது. அந்த நிலைமையில் சௌதரி பதவியில் இருப்பது தமக்குப் பாதகமானது என்று முஷாரப் நினைத்திருந்தால் வியப்பில்லை.

  இப்திகார் சௌதரியை மையமாக வைத்து இப்போதைய ராணுவ ஆட்சிக்கு எதிராக எழுந்துள்ள இயக்கத்தை முஷாரப் இரும்புக்கரம் கொண்டு நசுக்கக் கூடியவரே. ஆனால் இப்போதைக்கு முஷாரப் அப்படிச் செய்வதற்குத் தயங்குவதாகத் தோன்றுகிறது.

  இதற்கிடையே இப்திகார் சௌதரி மீதான புகார்களை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முழு பெஞ்ச் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அதில் முஷாரபுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டால் பிரச்சினைதான்.

 7. bsubra said

  200 வழக்கறிஞர்கள் மீது வழக்கு: பாகிஸ்தானில் அரசு அதிரடி நடவடிக்கை

  கராச்சி, ஜூன் 2: கராச்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதியின் ஆதரவு வழக்கறிஞர்கள் 200 பேர் மீது பாகிஸ்தான் அரசு தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது.

  “தற்போது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை’ என மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

  கராச்சியில் மே 26-ம் தேதி உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற செüத்ரி ஆதரவு வழக்கறிஞர்கள் ராணுவம் உள்ளிட்ட அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

  இந்நிலையில், வழக்கறிஞர்கள் மீது அரசு அளித்த புகார் குறித்த மனு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஜாவித் இக்பால் முன் விசாரணைக்கு வந்தது.

  ஆனால், மனுவை விசாரிக்க அவர் மறுத்து விட்டார். மேலும், வழக்கறிஞர்கள் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளதால், வழக்கை நான் விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, இந்த வழக்கை விசாரிக்க அனைத்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்படுகிறது. இந்த பெஞ்ச் விசாரணையை திங்கள்கிழமை தொடங்கும் என தலைமை நீதிபதி ஜாவித் இக்பால் தெரிவித்தார்.

  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து இப்திகார் செüத்ரி கடந்த மார்ச் மாதம் அதிபர் முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, வழக்கறிஞர்கள் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

  வழக்கறிஞர்களின் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் இது போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: