Diarrhea – Solutions by Ayurvedha
Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுக் கடுப்புக்கு முடிவு!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி வயிற்றுக் கடுப்பு அத்துடன் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. ஆங்கில மருந்துகள் தற்காலிக நிவாரணம் மட்டுமே தருகின்றன. IRRITABLE BOWEL SYNDROME என ஆங்கில மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த உபாதை நீங்க ஆயுர்வேத மருத்துவம் கூறவும்.
கே.இராசேந்திரன், வாலாட்டியூர், வேலூர்.
வயிற்றுக் கடுப்புடன் சிறிது சிறிதாக வெண்மையான கொழகொழப்பு திரவக் கசிவுடன் வயிற்றுபோக்கு காணும் இந்த உபாதைக்கான முக்கிய காரணங்களாக மைதா மாவினால் செய்யப்படும் பரோட்டா, எண்ணெய்யும் காரமும் கலந்து அதற்கு சைடு டிஷ்ஷாகக் குருமா சாப்பிடுவது, அதன் மேல் சூடான காபி குடிப்பது, அடிக்கடி குளிர்பானங்களைக் குடிப்பது, ஒவ்வாமை உணவுப்பொருட்களாகிய பாலுடன் உப்பையும், முள்ளங்கியுடன் உளுத்தம்பருப்பையும், வாழைப்பழத்தை தயிர், மோருடனும் மணத்தக்காளிக் கீரையுடன் மிளகையும், வெண்கலப் பாத்திரத்தில் பத்து இரவுகள் வைத்த நெய்யையும் சூடான தண்ணீரில் தேனைக் கலந்து பருகுவதும், பசலைக் கீரையுடன் எள்ளுப் பொடியும், வெயிலில் அலைந்துவிட்டு வந்தபின் திடீரென்று குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது, குடிப்பது போன்றவற்றாலும் இந்த உபாதை ஏற்படுகின்றது.
இதுபோன்ற உணவு மற்றும் செய்கைகளால் நம் உடலிலுள்ள நீர்மயமான வஸ்துக்கள் அனைத்தும் சீற்றமடைகின்றன. குடலில் பசியை மந்தப்படுத்தி மலத்துடன் இந்தக் கெட்டுப்போன நீர் கலந்து குடல் வாயுவினால் கீழ் நோக்கித் தள்ளப்பட்டு, நீங்கள் குறிப்பிடும் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்துகின்றது. இதில் மலம் சொற்பம் சொற்பமாக அடிக்கடி, முக்கலுடனும், முனகலுடனும் வெளியேறும்.
மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்த்து காலையில் ஒரு டீஸ்பூன் தேயிலை ஒரு கப் நீரில் போட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வடிகட்டி சிறிது சர்க்கரை கலந்து பருகலாம். சிறந்த தேயிலையில் காஃபின் ஒரு பங்கும் துவர்ப்பு மூன்று பங்கும் உள்ளன. துவர்ப்பு வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும், சிறுநீரைப் பெருக்கும் செய்கை கொண்டது.
காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக வில்வக்காயின் உள்ளேயிருக்கும் பிசின் போன்ற சுளைப்பகுதி 1/2 ஸ்பூன் (2 1/2 கிராம்) + வெல்லம் 1/4 ஸ்பூன் + நல்லெண்ணெய் 1/2 ஸ்பூன் + அரிசித் திப்பிலித்தூள் 1/4 ஸ்பூன் + சுக்குப் பொடி 1/4 ஸ்பூன். இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் குழைத்து நக்கிச் சாப்பிடவும்.
காலை உணவாக சூடான புழுங்கலரிசி சாதத்தில் புதினாக்கீரையைச் சட்னியாகச் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். புதினாக்கீரை ஜீரணமாகாமல் வரும் பெருமலப் போக்கைக் கட்டுப்படுத்தும் குணம் வாய்ந்தது. காலை உணவிற்குப் பிறகு ஆயுர்வேத மருந்தாகிய முஸ்தாரிஷ்டம் 15 மிலி + ஜீரகாரிஷ்டம் 15 மிலி + 1 வில்வாதி மாத்திரையை அரைத்துச் சேர்த்துச் சாப்பிடவும்.
மதிய உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பாக தாடிமாஷ்டகம் எனும் சூரணத்தை 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) அளவில் எடுத்து, ஒரு ஸ்பூன் சுத்தமான தேனில் குழைத்து நக்கிச் சாப்பிடவும். மதிய உணவின் முன் பாதியில் மிளகு சீரகப்பொடி அல்லது பருப்புப்பொடி, ஐங்காயப்பொடி போன்றவற்றில் ஒன்றை சூடான புழுங்கலரிசி சாதத்துடன் சிறிது ஆயுர்வேத மருந்தாகிய தாடிமாதி கிருதம் எனும் நெய் மருந்துடன் பிசைந்து சாப்பிடவும். மாங்காய் விற்பனைக்கு வந்துள்ள இந்த நேரத்தில் அதனுள்ளே இருக்கும் மாம்பருப்பை உலர்த்தி அத்துடன் கறிவேப்பிலையையும் சிறிது மிளகும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துச் சூடாக்கித் தாளித்து சிறிது உப்பு கலந்து கடைசியில் சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும். வயிற்றுக்
கடுப்பு, வயிற்றோட்டத்தைக் குறைக்கும்.
மாலையில் டீ ஒரு கப்பும், இரவு உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பாக வில்வாதி லேஹ்யத்தை 5 கிராம் (ஒரு ஸ்பூன்) நக்கிச் சாப்பிடவும். இரவில் கூவைக்கிழங்கு எனும் ஆரோரூட் மாவுக்கஞ்சி சிறிது மோர் கலந்து சாப்பிடவும். அதன்பிறகு காலை உணவிற்குப் பிறகு குறிப்பிட்ட மருந்தை மறுபடியும் 30 மிலி 1 வில்வாதி மாத்திரையுடன் சாப்பிடவும். இந்த உணவுமுறைகளையும் மருந்துகளையும் தொடர்ந்து 48 நாட்களாவது சாப்பிட வேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்