Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

63 SEZ – 900 Crore unit in Ennore; Chennai: 2

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

எண்ணூரில் 900 கோடியில் சிறப்பு பொருளாதார மண்டலம்: சென்னையில் 2 } திருவள்ளூரில் 3

எம். ரமேஷ்

சென்னை, மார்ச் 16: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் ரூ.900 கோடியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 14 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் திட்டமிடப்பட்டன. அவற்றுள் நான்கு செயல்பட்டு வருகின்றன. புதிதாக 10 இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திருவள்ளூரில்…: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் ரூ. 900 கோடி முதலீட்டில் பல தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2,650 ஏக்கர் நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் “ஆட்டோ சிட்டி’ என்ற பெயரில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமையும். என்எம்சி ஆட்டோமோடிவ் இன்ஃபிராஸ்டிரக்சர் (பி) நிறுவனம்-டிட்கோ இணைந்து இந்த “ஆட்டோ சிட்டி’-யை அமைக்கின்றன.

மூன்றாவதாக சிங்கப்பூர் நிறுவனம் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் எலெக்ட்ரானிக், ஹார்ட்வேர் சார்ந்த ஐடி மற்றும் ஐடிஇஎஸ், லாஜிஸ்டிக்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை திருவள்ளூரில் அமைக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த அசென்டாஸ் நிறுவனம் இதை உருவாக்குகிறது.

சென்னையில்…: சென்னையில் இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகின்றன. இவை இரண்டும் டைடல்-2, டைடல்-3 என்ற பெயரில் தரமணியில் அமைகின்றன. டைடல்-2 சிறப்புப் பொருளாதார மண்டலம் 26.39 ஏக்கர் நிலப்பரப்பிலும், டைடல்-3 பொருளாதார மண்டலம் 25 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைகிறது.

கோவையில்…: டைடல்-4 என்ற பெயரிலான மற்றொரு சிறப்புப் பொருளாதார மண்டலம் கோவையில் உருவாக்கப்பட்டு வருகிறது. “எல்காட்’ நிறுவனத்தின் கூட்டுடன் இது உருவாக்கப்படுகிறது.

ஒசூரில் ரூ. 500 கோடி முதலீட்டில் 2,600 ஏக்கரில் பல தொழில்களை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 3,000 ஏக்கர் பரப்பளவில் பல தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் ரூ. 500 கோடி முதலீட்டில் உருவாக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் ரூ. 14.52 கோடி செலவில் ரப்பர் பொருள்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலம் தேர்வு செய்யப்படுகிறது.

==========================================
63 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அறிவிப்பு

புதுதில்லி, மார்ச் 16: நாடு முழுவதும் 237 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 63 மண்டலங்கள் குறித்து இதுவரை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அசாமில் 2006-07ம் ஆண்டில் தேயிலை தொழிலுக்கான மானியமாக ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டது. தேயிலை சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைய தேயிலை நிதியை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விவசாயிகளை அவர்களின் விளை நிலங்களிலிருந்து வெளியேற்றியது. மக்கள் இடம் பெயர்ந்தது ஆகியவை குறித்து தெரிவிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. எனவே இவை குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று ஊரக மேம்பாட்டு அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் கூறினார்.

ஆயுதமற்ற விண்வெளிக்கு ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி

விண்வெளியை அமைதியான முறையில் அனைவரும் பயன்படுத்தவும், ஆயுதங்களை அங்கே வைக்காமல் இருக்கவும், விண்வெளியில் உள்ள பொருள்களின் மீது ஆயுதங்களைப் பயன்படுத்தி சோதனை செய்வதற்கு எதிராகவும் உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த அரசு அக்கறை காட்டி வருகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி மாநிலங்களவையில் தெரிவித்தார்.

10 சதவீத வளர்ச்சிக்கு வரைவு அறிக்கை

2011-12-ம் ஆண்டில் 10 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டும் இலக்குடன் 11-வது ஐந்தாண்டு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேசிய வளர்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய திட்டத்துறை இணை அமைச்சர் எம்.வி.ராஜசேகரன் கூறினார்.

விக்ராந்த் போர்க்கப்பலின் ஆயுளை நீட்டிக்க ஆய்வு

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க் கப்பலின் ஆயுள் காலத்தை 2012-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய கப்பல் படை ஆய்வு மேற்கொண்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

சில கோளாறுகளை சரி செய்வதன் மூலமும், குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு செய்வதன் மூலம் இக்கப்பலின் ஆயுளை நீட்டிக்கலாம் என கப்பல் படை நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 44 ஆயிரம் டன் எடை கொண்ட அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க் கப்பலை இந்தியா வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

ரூ.267 கோடியில் தில்லி-ஆக்ரா புதிய சாலை

தில்லி-ஆக்ரா இடையே ரூ.267 கோடியில் போக்குவரத்து சிக்னல் இல்லாத நெடுஞ்சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

ஒரு பதில் -க்கு “63 SEZ – 900 Crore unit in Ennore; Chennai: 2”

  1. bsubra said

    சென்னையில் ரூ. 1,500 கோடியில் சிறப்புப் பொருளாதார மண்டலம்: 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

    முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

    சென்னை, ஏப். 7: சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் ரூ. 1,500 கோடியில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு 44 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதில் 10 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 4 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மேலும் ஒரு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அமைய உள்ள 15-வது சிறப்புப் பொருளாதார மண்டலமாக இது இருக்கும்.

    ஆந்திர மாநிலம் செகந்திராபாதைச் சேர்ந்த “நுஸிவீடு ஸீட்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனமும், தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் இணைந்து இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குகின்றன.

    சென்னை அருகே சோழிங்கநல்லூரில் 66 ஏக்கர் நிலப்பரப்பில் இச் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமையும்.

    இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தகவல் தொழில்நுட்பத் தொழில்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், பணியாளர் குடியிருப்புகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் 150 அறைகள் கொண்ட ஹோட்டல் ஆகியன சுமார் 73 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளன.

    இத்திட்டம் மூலம் 25 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புக் கிடைக்கும். இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கு மத்திய அரசின் அனுமதி ஏற்கெனவே பெறப்பட்டுள்ளது.

    இத்திட்டம் 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். வெளி நாடுகளில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களிலிருந்து அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

    இத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் “நுஸிவீடு ஸீட்ஸ் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் அதன் செயல் இயக்குநர் பிரபாகர் ராவ் மற்றும் “டிட்கோ’ நிறுவனத்தின் செயல் இயக்குநர் எஸ். ராமசுந்தரம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி, தொழில்துறைச் செயலர் சக்தி காந்ததாஸ், நிதித்துறைச் செயலர் கு. ஞானதேசிகன் மற்றும் அமைச்சர் ஆர்க்காடு என். வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: