Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மார்ச் 16th, 2007

Diarrhea – Solutions by Ayurvedha

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுக் கடுப்புக்கு முடிவு!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி வயிற்றுக் கடுப்பு அத்துடன் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. ஆங்கில மருந்துகள் தற்காலிக நிவாரணம் மட்டுமே தருகின்றன. IRRITABLE BOWEL SYNDROME என ஆங்கில மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த உபாதை நீங்க ஆயுர்வேத மருத்துவம் கூறவும்.

கே.இராசேந்திரன், வாலாட்டியூர், வேலூர்.

வயிற்றுக் கடுப்புடன் சிறிது சிறிதாக வெண்மையான கொழகொழப்பு திரவக் கசிவுடன் வயிற்றுபோக்கு காணும் இந்த உபாதைக்கான முக்கிய காரணங்களாக மைதா மாவினால் செய்யப்படும் பரோட்டா, எண்ணெய்யும் காரமும் கலந்து அதற்கு சைடு டிஷ்ஷாகக் குருமா சாப்பிடுவது, அதன் மேல் சூடான காபி குடிப்பது, அடிக்கடி குளிர்பானங்களைக் குடிப்பது, ஒவ்வாமை உணவுப்பொருட்களாகிய பாலுடன் உப்பையும், முள்ளங்கியுடன் உளுத்தம்பருப்பையும், வாழைப்பழத்தை தயிர், மோருடனும் மணத்தக்காளிக் கீரையுடன் மிளகையும், வெண்கலப் பாத்திரத்தில் பத்து இரவுகள் வைத்த நெய்யையும் சூடான தண்ணீரில் தேனைக் கலந்து பருகுவதும், பசலைக் கீரையுடன் எள்ளுப் பொடியும், வெயிலில் அலைந்துவிட்டு வந்தபின் திடீரென்று குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது, குடிப்பது போன்றவற்றாலும் இந்த உபாதை ஏற்படுகின்றது.

இதுபோன்ற உணவு மற்றும் செய்கைகளால் நம் உடலிலுள்ள நீர்மயமான வஸ்துக்கள் அனைத்தும் சீற்றமடைகின்றன. குடலில் பசியை மந்தப்படுத்தி மலத்துடன் இந்தக் கெட்டுப்போன நீர் கலந்து குடல் வாயுவினால் கீழ் நோக்கித் தள்ளப்பட்டு, நீங்கள் குறிப்பிடும் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்துகின்றது. இதில் மலம் சொற்பம் சொற்பமாக அடிக்கடி, முக்கலுடனும், முனகலுடனும் வெளியேறும்.

மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்த்து காலையில் ஒரு டீஸ்பூன் தேயிலை ஒரு கப் நீரில் போட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வடிகட்டி சிறிது சர்க்கரை கலந்து பருகலாம். சிறந்த தேயிலையில் காஃபின் ஒரு பங்கும் துவர்ப்பு மூன்று பங்கும் உள்ளன. துவர்ப்பு வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும், சிறுநீரைப் பெருக்கும் செய்கை கொண்டது.

காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக வில்வக்காயின் உள்ளேயிருக்கும் பிசின் போன்ற சுளைப்பகுதி 1/2 ஸ்பூன் (2 1/2 கிராம்) + வெல்லம் 1/4 ஸ்பூன் + நல்லெண்ணெய் 1/2 ஸ்பூன் + அரிசித் திப்பிலித்தூள் 1/4 ஸ்பூன் + சுக்குப் பொடி 1/4 ஸ்பூன். இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் குழைத்து நக்கிச் சாப்பிடவும்.

காலை உணவாக சூடான புழுங்கலரிசி சாதத்தில் புதினாக்கீரையைச் சட்னியாகச் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். புதினாக்கீரை ஜீரணமாகாமல் வரும் பெருமலப் போக்கைக் கட்டுப்படுத்தும் குணம் வாய்ந்தது. காலை உணவிற்குப் பிறகு ஆயுர்வேத மருந்தாகிய முஸ்தாரிஷ்டம் 15 மிலி + ஜீரகாரிஷ்டம் 15 மிலி + 1 வில்வாதி மாத்திரையை அரைத்துச் சேர்த்துச் சாப்பிடவும்.

மதிய உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பாக தாடிமாஷ்டகம் எனும் சூரணத்தை 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) அளவில் எடுத்து, ஒரு ஸ்பூன் சுத்தமான தேனில் குழைத்து நக்கிச் சாப்பிடவும். மதிய உணவின் முன் பாதியில் மிளகு சீரகப்பொடி அல்லது பருப்புப்பொடி, ஐங்காயப்பொடி போன்றவற்றில் ஒன்றை சூடான புழுங்கலரிசி சாதத்துடன் சிறிது ஆயுர்வேத மருந்தாகிய தாடிமாதி கிருதம் எனும் நெய் மருந்துடன் பிசைந்து சாப்பிடவும். மாங்காய் விற்பனைக்கு வந்துள்ள இந்த நேரத்தில் அதனுள்ளே இருக்கும் மாம்பருப்பை உலர்த்தி அத்துடன் கறிவேப்பிலையையும் சிறிது மிளகும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துச் சூடாக்கித் தாளித்து சிறிது உப்பு கலந்து கடைசியில் சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும். வயிற்றுக்

கடுப்பு, வயிற்றோட்டத்தைக் குறைக்கும்.

மாலையில் டீ ஒரு கப்பும், இரவு உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பாக வில்வாதி லேஹ்யத்தை 5 கிராம் (ஒரு ஸ்பூன்) நக்கிச் சாப்பிடவும். இரவில் கூவைக்கிழங்கு எனும் ஆரோரூட் மாவுக்கஞ்சி சிறிது மோர் கலந்து சாப்பிடவும். அதன்பிறகு காலை உணவிற்குப் பிறகு குறிப்பிட்ட மருந்தை மறுபடியும் 30 மிலி 1 வில்வாதி மாத்திரையுடன் சாப்பிடவும். இந்த உணவுமுறைகளையும் மருந்துகளையும் தொடர்ந்து 48 நாட்களாவது சாப்பிட வேண்டும்.

Posted in Alternate, Ayurvedha, Ayurvetha, Crap, Diarrhea, Food, IRRITABLE BOWEL SYNDROME, Liver, Loose Motion, medical, Medicine, Shit, solutions, Stomach, Tablets, Ulcer | Leave a Comment »

Dharmapuri – Superstitious builders try to do Human Sacrifice for successful completion of the Construction

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

தருமபுரி அருகே பாலம் கட்டும் பணிக்கு 3 சிறுவர்களை நரபலியிட முயற்சி?

சிறுவர்களை நரபலியிட முயன்ற சம்பவத்தால் ஆத்திரம் அடைந்து தனியார் நிறுவன கிடங்குக்கு தீயிட்டுக் கொளுத்தும் பொதுமக்கள். (உள்படம்) நரபலியிட முயன்ற கும்பலிடம் இருந்து தப்பிய சிறுவர்கள் (இடமிருந்து) தமிழரசு, சந்திரபாபு, சிவமணி.

தருமபுரி, மார்ச் 16: தருமபுரி அருகே 4 வழிச்சாலை பாலப் பணிக்காக பள்ளிச் சிறுவர்கள் 3 பேரை தனியார் நிறுவன ஊழியர்கள் நரபலியிட முயன்றதாகக் கூறி, கொந்தளித்த மக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் நிறுவன கிடங்குக்கும் ஒரு ஜேசிபி இயந்திரத்துக்கும் தீ வைத்தனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிப் பாதையாக மாற்றும் பணியை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பூலாப்பட்டி ஆத்துப்பாலம், பெரியாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணியிலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பூலாப்பட்டி ஆத்துப்பாலம் அருகிலும் பிற இடங்களிலும் கூடாரங்கள் அமைத்து, அந் நிறுவனம் அமைத்துள்ள கிடங்குப் பகுதியிலேயே தங்கியுள்ளனர்.

இந்நிலையில் பூலாப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயவேலின் மகன் சிவமணி (13), குமாரசாமி மகன் தமிழரசு (12), சிங்காரம் மகன் சந்திரபாபு (11) ஆகிய 3 சிறுவர்களும் வழக்கம்போல் பெரியாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை காலையில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளனர். சாலையோரம் நடந்து சென்ற 3 சிறுவர்களையும் 5 பேர் கொண்ட கும்பல், வாயைப் பொத்தி தூக்கிச் சென்றுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த கிடங்கில் பிற்பகல் வரை சிறுவர்களின் கையைக் கட்டி அமர வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பிற்பகலில் பாலம் நடைபெறும் இடத்துக்கு 3 சிறுவர்களையும் அழைத்து வந்து அங்கு பூஜைகள் செய்ததாகவும், நிலைமையை உணர்ந்த சிறுவன் சிவமணி தன்னை பிடித்திருந்த நபரின் கையை கடித்துவிட்டு தப்பி ஓடி வந்ததாகவும், அதே நேரத்தில் மற்ற சிறுவர்களும் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி வந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த தகவல் கேட்டு சுற்றுப் பகுதி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதுடன் அந்த தனியார் நிறுவனக் கிடங்குக்கு தீயிட்டுக் கொளுத்தியது. அதில் கிடங்கும் ஜேசிபி இயந்திரமும் தீக்கிரையானது.

Posted in Bridge, Builder, Child, Children, completion, Construction, Constructor, Dharmapuri, Dharmapury, flyover, Human, Kid, Sacrifice, success, Tharmapuri | Leave a Comment »

Georgina – Earn money from Home: Translate Tamil to English

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

இது புதுசு: டாலரில் சம்பாதிக்கலாம் வாங்க!

ரவிக்குமார்


ஜார்ஜினா

“”நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக எழுதும் திறனுள்ள இல்லத்தரசியா? இணைய வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் உங்களிடம் இருந்தால் போதும், டாலரில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை பல இணைய தளங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன” என்கிறார், தனது செல்ல நாய்க்குட்டியான டிரிக்ஸியைக் கொஞ்சியபடி ஜார்ஜினா!

ஜார்ஜினா- ஆங்கில மொழியில் பாடல் எழுதும் பாடலாசிரியர். குழந்தைகளுக்காக இவர் ஆறு கம்ப்யூட்டர் சி.டி. ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். ஒவ்வொருவரின் மனத்திலும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கும் “மெட்டி ஒலி’யின் ஆறு எபிசோட்களின் ஸ்கிரிப்ட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து சுமதி ராம் என்னும் பெண் இயக்குனர் எடுத்த “விஷ்வதுளசி’ படத்தில் வரும் “கண்ணம்மா..’ என்று தொடங்கும் பாடலை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

“”தமிழில் எனக்குப் பெரிய புலமை எல்லாம் கிடையாது. ஆனாலும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அந்த வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகளை எழுதுவதற்குத் தெரியும்…” என்ற ஜார்ஜினாவுடன் பேசியதிலிருந்து…

இணையத்தைப் பயன்படுத்தி இல்லத்தரசிகள் டாலரில் பணம் சம்பாதிக்கலாம் என்கிறீர்களே…எப்படி?

உண்மைதான். ஆங்கிலத்தில் பரவலாக எல்லாத் துறைகளுக்கும் இணையதளங்கள் உள்ளன. இதில் சில இணையதளங்களில் உயர்தரமான ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு, வீட்டிலிருந்தபடியே பணி செய்வதற்கு எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. நண்பர் ஒருவரால் எனக்கு அப்படி அறிமுகமான ஓர் இணையதளம்தான், http://www.proz.com இந்த இணையதளம், பல மொழிகளில் இருந்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகளை நாடுபவர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஒரு பாலமாக இருக்கின்றது. இதில் மொழி பெயர்ப்புகளைச் செய்ய விரும்புபவர்கள், அவர்களின் கல்வித் தகுதி, மொழிபெயர்ப்புப் பணியில் அவர்கள் இதுநாள் வரை செய்திருக்கும் விஷயங்கள், அவர்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து இணைத்துக் கொள்ளலாம். அப்படி இணைத்துக் கொள்பவர்கள், இணையதளத்தில் சென்று பார்த்தால், வெவ்வேறு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யக்கோரி பலரின் ஆர்டர்கள் இருக்கும். பணியின் விவரம், செய்துமுடிப்பதற்கான கடைசி நாள், பணிக்குக் கிடைக்கும் ஊதியம் போன்ற விவரங்கள் இருக்கும். இந்த விவரங்களைப் பின்பற்றி எவரும் இந்தப் பணியைச் செய்யலாம்.

ஆங்கிலப் புலமைக்குப் பிரத்யேகப் பயிற்சி ஏதாவது எடுத்துக் கொண்டீர்களா?

சென்னை, ஹோலி ஏஞ்சலீஸ் பள்ளியில் 17 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. பள்ளியில் ஆசிரியர்கள் வட்டத்திலேயே என்னை “நடமாடும் அகராதி’ என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். அந்த அளவுக்கு சின்ன சின்ன வார்த்தையாக இருந்தாலும் அதன் பொருளை, அதற்கான எளிய வார்த்தையை எழுதிவைத்துக் கொள்வேன். இந்த ஆர்வம்தான் மொழிபெயர்ப்பிலாகட்டும், ஆங்கிலத்தில் பாடல்களை எழுதுவதிலாகட்டும் எனக்கு அடிப்படையாக அமைந்தது.

சம்பாதிப்பதற்கு இந்த ஓர் இணையதளம் மட்டும்தானா?

தேடிப்பார்த்தால் இன்னும் எவ்வளவோ இணையதளங்கள் கிடைக்கக் கூடும். நான் மொழிபெயர்ப்புக்கான இணையதளமான பிராக்ஸ் டாட் காம்-ல் தான் முதலில் என்னைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்திருந்தேன். இதற்குப் பின்தான் எனக்கு “அகாடமியா ரிசர்ச்’ Academia_Research. com என்னும் இணையதளத்திலிருந்து பகுதி நேரமாகப் பணிபுரிய விருப்பமா? என்று கேட்டு எனக்கு ஈ-மெயில் வந்தது. இதற்கு நான் விருப்பம் தெரிவித்தவுடன், எனக்கு தலைப்பைக் கொடுத்து ஒரு கட்டுரையை அனுப்பச் சொன்னார்கள். இது ஆங்கிலமொழிப் புலமை அதிகம் இல்லாத பல நாடுகளில் பல மொழி பேசும் மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆய்வுக் கட்டுரைகளையும், அவர்களுக்கான தீஸிஸ்களையும் பெற்றுத் தருவதற்காக நடத்தப்படும் இணையதளம். இதில் கட்டுரைகள் நம்முடைய சொந்த வார்த்தைகளில் இருக்கவேண்டும் என்பது கடுமையான விதி. கட்டுரையில் இந்தந்த விஷயங்கள் இருக்கவேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். அந்த விஷயங்கள் குறித்த தேடுதல் வேட்டையை இணையதளத்தில் நாம் நடத்தி, அதைத் தொகுத்து, முறைப்படி அதை நம்முடைய வார்த்தைகளில் அலங்காரமாக வடித்துத் தரவேண்டும்.

ஒரு மாணவன் தேர்வுக்காக செய்யவேண்டிய ஆய்வுகளை அவனுக்கு மாற்றாகச் செய்கிறோமே…என்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு இல்லையா?

இதில் குற்ற உணர்ச்சிக்கு இடமே இல்லை. கல்விக்காக இன்றைக்கு மாணவர்கள் நாடுகளை விட்டும், கண்டங்களை விட்டும் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பல மொழி பேசுபவர்களாக இருந்து, ஆங்கில மொழியில் போதிய புலமை இல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில்தான் இந்த இணையத்தளத்தை அவர்கள் நாடுகிறார்கள். அவர்களுக்காக நான் தேர்வு எழுதினால்தான் தவறு. அவர்களுக்காக கட்டுரைகளை எழுதுவது தவறல்ல.

இணையத்தில் செய்யப்படும் இந்தப் பணியில் இருக்கும் முக்கியமான வசதி என்ன?

நம்மால் செய்ய முடிந்த வேலையை நாம் யோசனை செய்து நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி இதில் இருக்கிறது. உதாரணத்துக்கு, உலக அளவில் கணிதம் பாடத்திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களைக் குறித்து ஒருவர் ஒரு கட்டுரையைக் கேட்டிருந்தால், நான் “எஸ்கேப்’ ஆகிவிடுவேன். ஏனென்றால் நான் கணிதத்தில் பூஜ்யம். இதுபோல் நம்மால் செய்யமுடிந்த பணியை நாமே தேர்ந்தெடுத்து, அதைக் குறிப்பிட்ட அவகாசத்தில் செய்து கொடுத்துவிட வேண்டும். அது மிகவும் முக்கியம்.

அப்படி என்னென்ன துறைகளில் நீங்கள் கட்டுரையை அனுப்பியிருக்கிறீர்கள்?

அறிவியல், சட்டம் தொடர்பான கட்டுரைகளைக் கூட நான் எழுதி அனுப்பியிருக்கிறேன். உலக அளவில் இசை மற்றும் இசை தொடர்பான விஷயங்களில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களைக் குறித்து கூட கட்டுரை எழுதியிருக்கிறேன். இசையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. கட்டுரைக்காக தேடும்போது, உலகத்தின் மிகப் பெரிய இசைப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனமான உ.ங.ஐ. மிகச் சமீபத்தில், ஒருபக்கம் ஆடியோ சி.டியாகவும், இன்னொரு பக்கம் டி.வி.டி.யாகவும் இரட்டைப் பயன் தரும் டிஸ்க்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ள விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.

லண்டனையே ஸ்தம்பிக்க வைத்த, தீயணைப்பு வீரர்களின் புரட்சிகரமான வேலை நிறுத்தம் பற்றி கூட, லண்டனின் வரலாறு என்னும் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். இன்னொரு கட்டுரை, கரு முட்டைகளை அளிக்கும் பெண்களைப் பற்றி, அவர்களின் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது சரியா? தவறா? என்ற அலசல் கட்டுரை..இப்படி நிறைய எழுதியிருக்கிறேன். இது போன்ற பணியில் ஆர்வமிருப்பவர்கள் என்னை அணுகினால் அவர்களுக்கு என்னால் இயன்ற ஆலோசனைகளைச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறேன்.

ஆங்கிலத்தில் பாட்டு எழுதும் நீங்கள், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்க்கும் நீங்கள் தமிழில் எப்போது எழுதப் போகிறீர்கள்?

தமிழில் எழுதும் அளவுக்கு எனக்குப் புலமை இல்லை. அதனால் என்ன? தமிழ்ப் படத்தில் ஆங்கிலப் பாடல் எழுதும் வாய்ப்புதான் எனக்கு நிறைய வந்து கொண்டிருக்கிறதே…! சமீபத்தில் கூட, கமல்ஹாசனின் “தசாவதாரம்’ படத்தில் பின்னணி பாடுவதற்காக என்னுடைய மகள் சென்றிருந்தாள். அதில் தமிழ் பாடல்களுக்கு இடையில் ஆங்கிலத்திலும் ஒரு பாடல் வருகிறதாம். அதற்காக ஏற்கனவே வேறொருவரிடமிருந்து எழுதி வாங்கிய பாடல் சரியாகப் பொருந்த வில்லையாம். அப்போது அங்கிருந்த என்னுடைய மகள், “என் அம்மாவும் இங்கிலீஷ் பொயட்தான்’ என்று சொல்ல, வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போது மேலும் இரண்டு தமிழ்ப் படத்தில் ஆங்கிலத்தில் பாடல் எழுத இருக்கிறேன்.

– “எல்லாம் சரி…கடைசி வரையில் அவரின் மகள் யாரென்று சொல்லவே இல்லையே?’ என்று மறக்காமல் கடிதம் எழுதும் வாசக நக்கீரர்களின் கவனத்திற்கு…ஜார்ஜினாவின் செல்ல மகள்தான் பாப் ஷாலினி!

Posted in English, Georgina, Internet, Interview, Money, Proz.com, Rich, Schemes, Translate, Translations, Vishvathulasi, Vishwathulasi | 1 Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Thoothuvalai for Healthy Hearts and Thaamarai: Lotus

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

மூலிகை மூலை: இதய பலவீனத்துக்குத் தூதுவளை!

விஜயராஜன்

சிறிதாக உடைந்த முள் உள்ள இலைகளையும் மித ஊதா நிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்களையும், சிவப்பு நிறத்தில் பழங்களையும், வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய சிறு கொடி இனமாகும். இதைப் பந்தல் போட்டு வளர்ப்பது சிறந்த முறையாகும். கொடிகளில் முட்கள் இடைவிடாமல் அப்பி இருக்கும். ஐந்து ஆண்டுகள் வரை வளரக் கூடியது. சரியான முறையில் வளர்த்து வந்தால், அதற்கும் அதிக நாட்கள் வளர வாய்ப்பு உண்டு. வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவக் குணம் கொண்டவை. இதன் இலையும், பூவும் கோழையை அகற்றவும், உடலைப் பலப்படுத்தவும், காமத்தைப் பெருக்கவும் செய்யும். இதன் காய், பழம் பசியைத் தூண்டும், மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். தமிழ்நாடெங்கும் இது பரவலாக வளரும் செடியினம்.

வேறு பெயர்கள்: சிங்க வல்லி, ரத்து நயத்தான், தூதூவளை, தூதூளம், தூதுளை.

ஆங்கிலத்தில்: Soanum Grilobalum, Solanaceae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் காலையில் மட்டும் தொடர்ந்து குடித்து வர நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, குழம்பாகக் கடைந்தோ உண்டு வரக் கபக் கட்டு நீங்கி உடல் பலம் பெறும்.

ஆடா தொடை இலையை ஆவியில் வாட்டி பின்னர் அதைச் சாறு பிழிந்து ஒரு சங்களவு எடுத்து சிறிது தேன் கலந்து குடித்து வர இருமலுடன் துப்பும் சளியில் இரத்தம் கலந்து வருவது உடனே நிற்கும். அத்துடன் 10 சொட்டு தூதுவளை இலையைச் சாறு பிழிந்து குடிக்க, சவ்வு போன்று இழுத்துக் கொண்டு இருக்கும் இருமலும் நீங்கும்.

தூதுவளை இலையைச் சாறு பிழிந்து அதேயளவு நெய்யில் காய்ச்சி 1 தேக்கரண்டியளவு 2 வேளை குடித்து வர, எலும்புருக்கிக் காசம், மார்புச் சளி உடனே நீங்கும்.

தூதுவளைக் காயை நிழலில் உலர்த்திக் காயவைத்து தயிர், உப்பு சேர்த்து பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டு வர மனநலம் பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் குணமாகும்.

தூதுவளை சமூலத்தை 50 கிராம் அளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 150 மில்லியளவுக்கு வற்றக் காய்ச்சி வடிக்கட்டி 2 வேளை குடித்து வர, இரைப்பு, சுவாசகச் சளி, இருமல் குணமாகும்.

தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி புகை பிடிப்பது போல செய்து வர, இரைப்பு இருமல், மூச்சுத் திணறல், சளி இளகி வெளியேறும்.

தூதுவளைப் பூக்கள் 10 எடுத்து 1 டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் இருவேளை குடித்து வர, தாது விருத்தி, உடல் பலம், முகவசீகரம் பெறலாம்.

=========================================================

மூலிகை மூலை: தாமரை

விஜயராஜன்

சேற்றுப் பகுதியில் இருக்கும் வேர்க்கட்டுள்ள கிழங்கில் இருந்து கிளம்பி மிருதுவான தண்டுப் பகுதி வெளியேறி அதைத் தொடர்ந்து வட்டமான பெரிய இலைகளை நீர்ப்பரப்பில் பெற்றிருக்கும். அதற்கு மேல் கூம்பு மலரையும் பெற்று இருக்கும். தாமரை இலையின் மேல் பரப்பில் நீர் ஒட்டாத ஒரு தன்மை இருக்கும். தண்ணீர் மேல் மட்டத்தில் பாய் விரித்தாற் போல மிதந்து கொண்டு இருக்கும். இது நேராக வளரும் நீர்க் கொடி இனமாகும். பூ, விதை மருத்துவக் குணம் உடையது. தாமரை மலர்கள் தாது வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும் மருத்துவக் குணம் உடையது. தமிழகம் எங்கும் குளம், குட்டை, கோவில் தடாகத்திலுள்ள பொய்கைகளில் தானாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள்: அம்புயம், அம்புசாதம், அரவிந்தம், அன்புசன் மடம், அம்போசம், அம்போருசம் ஆசிய பத்திரம், ஆய் மலர், ஆசைய பத்திரம், இரதிகாந்தன், கந்தோதம், கமலம், கசம், கரோசம், சரோருகம், சலகாங்கம், சலசம், சல சங்கமம், சல நகம்.

வகைகள்: வெண் தாமரை, கல்தாமரை, செந்தாமரை, வெண்ணிற பூக்களைக் கொண்ட தாமரை, வெண் தாமரை என்றும், இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்களைக் கொண்ட தாமரை செந்தாமரை என்றும் பெயர் பெற்றுள்ளது. செந்தாமரையை விட வெண் தாமரைக்கே மருத்துவக் குணம் அதிகம் உள்ளது.

ஆங்கிலத்தில்: Nelumbium speciosum, Wild, Nymphaeqceae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறப் போட்டு மறுநாள் அதை அடுப்பில் வைத்து 1 லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரை 1 கிலோ கலந்து தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு 15 மில்லி எடுத்து வெந்நீரில் கலந்து 2 வேளை குடித்து வர, உடல் சூடு, தாகம் அடங்கி கண் குளிர்ச்சி பெறும்.

தாமரை இதழ்களை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் பொடியைத் தேன்விட்டு குழப்பி 2 வேளை சாப்பிட்டு வர, இருதயம் பலப்படும். இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் சீராக அனுப்பும்.

செந்தாமரை பூவின் இதழ்களை 10 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவர உடல் சூடு தணியும்.

தாமரை விதைகள் நன்றாகக் காய்ந்ததாக ஒரு கையளவு எடுத்து 1 டம்ளர் பசும் பாலில் 12 மணிநேரம் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் இந்தப் பாலை மட்டும் குடித்துவர, உடல் குளிர்ச்சி அடைந்து மூத்திரம் வெள்ளையாகப் பிரிந்து போகும்.

தாமரை விதையை 1 கிராம் எடுத்து அதை 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்துவர உடல் சூடு தணிந்து தாது வளர்ச்சி அடையும்.

கல்தாமரையை பாலில் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர, வீரிய விருத்தியும், தேக பலமும் உண்டாகும். (குட்ட வியாதி உள்ளவர்களுக்கு இது ஆகாது.)

============================================

மூலிகை மூலை: பசிக்கு…ருசிக்கு… கறிவேம்பு!

விஜயராஜன்

கொத்தான மாற்று அடுக்கில் அமைந்த நறுமணமுள்ள இலைகளையும் கொத்தான மலர்களையும் கரிய நிறமான பழங்களையும் உடைய நடுத்தர குறுமர வகையைச் சார்ந்ததாகும். இலை மருத்துவ குணம் உடையது. இதனை மருந்தாகப் பயன்படுத்துவதால் பசியைத் தூண்டும். தாதுபலம் பெருகும். வயிற்றில் வெப்பமுண்டாகி வாயுவைக் கலைக்கும். கறிவேம்பினால் தாளிக்காத ஒரு குழம்பு ஒரு குழம்பா? என்று கேட்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காய்கறிச் சமையலுக்கு மணமூட்டியாகப் பயன்படுகிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தோட்டக்கால்களில் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றது.

வேறு பெயர்கள்: கருவேப்பிலை, கறிவேப்பிளை.

ஆங்கிலத்தில்: Murraya konigii, spreng (Bergera konigii) Rutaceae.

இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.

கறிவேம்பு நன்றாக முற்றியது 100 கிராம் எடுத்து சுக்கு 25 கிராம் கடுக்காய்த் தோல் 50 கிராம் இவற்றை நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகைப் பொடியை வெந்நீரில் இருவேளை குடித்துவர அழிந்து போன சுரப்பிகள் புதுப்பிக்கப்பட்டு ருசியில்லாத நாக்கில் ருசி ஏற்படும். நாம் உண்ணும் உணவுகள் சீர் பெறாமல் வயிற்றில் உளைச்சலைக் கொடுத்தால் அதைச் சமப்படுத்தும். வாத, பித்தங்கள் உடலில் எங்காவது ஒளிந்து கொண்டு இருந்தால் அவற்றை வெளியேற்றும்.

கறிவேம்பு இலையைக் கைப்பிடியளவு, மிளகாய் 2 இவற்றை நெய்யில் வதக்கிப் பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையல் செய்து, சாப்பிடும்போது முதல் வாய் உணவுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட குமட்டல், வாந்தி, அசீரண பேதி, சீதபேதி, செரியா மந்தம், வயிற்றுக் கோளாறு குணமாகும்.

கறி வேம்பு இலை, மருதாணி இலை, கரிசலாங் கண்ணி இலையின் தண்டு, கைப்பிடி அளவுடன் சிறிது வேப்பிலையின் கொழுந்தையும் சேர்த்து அரைத்து தலையில் தடவி வர பித்த நரை, இளநரை மாறும்.

கறிவேம்பு, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்தப் பெருங்காயம் சம அளவாக எடுத்து நிழலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை நெய்விட்டுப் பிசைந்து சுடு சோறுடன் கலந்து உண்ண மலச்சிக்கல் பேதி நிற்கும். குடல் பலவீனத்தால் ஏற்படுகின்ற பேதியும் நிற்கும்.

கறிவேம்பைத் தொடர்ந்து உணவில் உபயோகித்து வர சளி, கபநீர்க்கட்டு அடங்கும்.

கறிவேம்பு ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முறுங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி நான்கு வேளை 50 மில்லி வீதம் குடித்துவர சளி, இருமல், காய்ச்சல், வாதக் காய்ச்சல் குணமாகும்.

கறிவேம்பு இலை, கொத்தமல்லியிலை, பூண்டு, புதினாக்கீரை, உளுத்தம் பருப்பு, பிரண்டைத் தண்டு, கடுகு இவற்றை நல்லெண்ணையில் வதக்கி அதைப் பின்னர் சட்டினியாக அரைத்து எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு மறுபடியும் தாளித்து ஊறுகாயாக உணவுடன் சேர்த்துவர கபாலநீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.

கறிவேம்பு இலையை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து இரண்டுவேளை தொடர்ந்து சாப்பிட்டு வர நீர்க் கோவை, சூதக வாய்வு குணமாகும்.

கறிவேம்பு ஈர்க்கு, சுக்கு, சீரகம், ஓமம் வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி சிறிது சர்க்கரை சேர்த்துக் குடிக்க செரியாமை, வாயு நீங்கும்.

Posted in Ayurveda, Ayurvedha, Dhoodhuvalai, Dhoothuvalai, Flower, garland, Health, Healthy, Heart, Hearts, Herbs, Kari Patha, Karipatha, Karipaththa, Karivepilai, Kariveppilai, Karu Veppilai, Karuvepilai, Karuveppilai, Lotus, Mooligai, Mooligai Corner, Naturotherapy, Nelumbium speciosum, Patha, Paththa, Plants, Soanum Grilobalum, Solanaceae, Thaamarai, Thamarai, Thoodhuvalai, Thoothuvalai, waterplant | 4 Comments »

London Diary – Era Murugan: Covent Garden Literary Acts

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

லண்டன் டைரி: கோவண்ட் தோட்டத்துப் படைப்புகள்!

இரா. முருகன்

வெல்லிங்டன் தெருவில் நடக்கும்போது, வெள்ளைக்காரத் துரைகளைப் பின்னால் தள்ளிக்கொண்டு மனதின் உள்ளறையிலிருந்து, “”எப்படிடா இருக்கே?” என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறவன் தடிராஜா. ரொம்ப வருடம் முன்னால் பள்ளிக்கூடத்தில் கூடப்படித்தவன். புத்தகம் சேகரிப்பில் பேய்த்தனமான ஆசை. எல்லாமே சோனியான சினிமா பாட்டுப் புத்தகங்கள். அட்டையில் மசமசவென்று படத்தின் ஒரு ஸ்டில் போட்டு, உள் அட்டையில் நாலுவரி திரைக்கதை எழுதி, “மீதியை வெள்ளித்திரையில் காண்க’ என்று தவறாமல் அச்சடித்திருக்கும். மீதிப் பக்கங்களில், அந்தச் சினிமாவில் இடம் பெற்ற பாடல்கள், நடுநடுவே “ஜிஞ்ஜின்னாக்கடி ஜிஞ்ஜின்னாக்கடி’, “கும்தலக்கா கும்தலக்கா கும்மா’ போன்ற அரிய இசைக்குறிப்புகளோடு வெளியாகியிருக்கும் வயசாகி, பைண்ட் செய்த அந்தப் பாட்டு புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டு கொஞ்சமும் அபஸ்வரம் விலகாத குரலில் அதிலிருந்து நேயர் விருப்பமாக எனக்குக் கொஞ்சம் பாடிக்காட்டினான். அந்த நினைவு வெல்லிங்டன் தெருவில் இப்போது எழக் காரணம் இல்லாமல் இல்லை.

கிட்டத்தட்ட இருநூறு வருடம் முன்புவரை லண்டன் கோவண்ட் தோட்டப் பகுதி நாடகக் கொட்டகைகள் தினசரி அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலில் சக்கைப்போடு போட்டது உண்மைதான். ஆனால் ரசிகர்கள் அந்த நாடகங்களைப் பார்த்து ரசித்துவிட்டு மனதில் அசைபோட்டபடி வீட்டுக்குப் போகத்தான் முடியும். நாடகத்தைப் புத்தகமாக அச்சடித்து விற்கத் தடை இருந்ததால், வீட்டில் ஓய்வாக வசனத்தைப் படித்து ரசிக்கவோ, பலகுரலில் நடித்து மற்றவர்களை இம்சிக்கவோ முடியாத சூழ்நிலை. 1830-ம் ஆண்டு தாமஸ் லேக்கி என்ற புத்தக வெளியீட்டாளர் அரும்பாடுபட்டு இதை மாற்றி, வெல்லிங்டன் தெருவில் நாடகங்களை அச்சுப்போட்டு, மலிவுப் பதிப்பாக விற்க ஆரம்பிக்க, அவருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. தமிழ் சினிமாவுக்கு முதல் பாட்டுப் புத்தகம் போட்டவரை நாம் மறந்துவிட்டாலும், தாமஸ் லேக்கியை கோவண்ட் தோட்டம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறது.

இந்தக் கோவண்ட் தோட்டம் தலைசிறந்த ஆங்கில இலக்கியப் படைப்புகள் பலவற்றிலும் இடம் பெற்றிருக்கிறது. காரணம் அந்தக் கால இலக்கியப் பிரபலங்கள் பலரும் இந்தப் பேட்டையில் வசித்திருக்கிறார்கள். அல்லது தினசரி ஒரு தடவையாவது இங்கே வந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு, சக எழுத்தாள நண்பர்களோடு கோஷ்டியாகக் கடையில் ஏறி ஆளுக்கு ஒரு கிளாஸ் பியரோ அல்லது ஒரு கப் காப்பியோ குடித்தபடி சண்டை போட்டு, சமாதானமாகித் திரும்பிப் போயிருக்கிறார்கள். ஹென்றி ஃபீல்டிங்க் என்ற எழுத்தாளர் இந்தச் சண்டைகளுக்காகவே கோவண்ட் தோட்ட மதுக்கடைகளை நித்தியப்படி சுற்றி வருவாராம். (அந்தக் காலத்தில் சண்டை போட்டுக்கொள்ள இலக்கியச் சிற்றிதழ் போன்ற வசதிகள் இல்லையோ என்னமோ). வயதாகி நடை

தளர்ந்து சண்டை போடமுடியாமல் போனபோதும் இவர் அசரவில்லை. காசு கொடுத்து யாரையாவது கூட்டிவந்து தன் சார்பில் பொறிபறக்க மோதவைத்துவிட்டு, ஓரமாக ஸ்டூலில் உட்கார்ந்து பியர் குடித்துக்கொண்டு உற்சாகமாக வேடிக்கைப் பார்ப்பாராம்.

புகழ்பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் கோவண்ட் தோட்டப் பகுதிவாசி. அவருடைய “ஆலிவர் டுவிஸ்ட்’ நாவலில் லண்டனுக்கு வரும் அனாதைச் சிறுவன் ஆலிவர் போய்ச்

சேரும் இடம் கோவண்ட் கார்டன்தான். கோவண்ட் தோட்டப் பகுதியில் சார்லஸ் டிக்கன்ஸ் வசித்த வீட்டைத் தேடியலைகிறேன். “குடும்பத்தைப் பராமரிக்கச் சாமர்த்தியம் போதாது’ என்ற வினோத காரணத்துக்காக இந்தப் பிரபல எழுத்தாளர் அவருடைய மனைவியை விவாகரத்து செய்தபோது எழுதிய கடிதம், அவருடைய நாவல்களின் கையெழுத்துப் பிரதிகள், இவற்றோடு அவருடைய மைத்துனிக்கு எழுதிய அன்புக் கடிதங்களும் இங்கே காட்சியாக வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல். கதை அப்படிப் போகிறதாக்கும்.

இலக்கிய மேதை பெர்னார்ட்ஷா எழுதிய புகழ்பெற்ற நாடகமான “பிக்மாலியன்’ கோவண்ட் தோட்டம் ராயல் ஓபரா வாசலில்தான் தொடங்குகிறது. எலிசா டூலிட்டில் என்ற பூ விற்கும் ஏழையான இளம்பெண்ணை ஒரு பேராசிரியர் நாகரீக சீமாட்டியாக்கும் கதை இது. இந்த நாடகத்தின் அடிப்படையில் சோ தமிழில் எழுதிய “மனம் ஒரு குரங்கு’ கோவண்ட் தோட்டச் சூழ்நிலைக்குப் பொருத்தமான கொத்தவால்சாவடிப் பகுதியில் தொடங்குகிறதா என்பது நினைவில் இல்லை.

பழைய லண்டன் டவர் மிருகக்காட்சி சாலையைச் சுற்றிவந்து “புலிக்கவிதை’ எழுதிய கவிஞர் வில்லியம் ப்ளேக்கும் இன்னொரு கோவண்ட் தோட்டவாசிதான். “ஆவிகளோடு பேசுவதில்’ ஈடுபட்டிருந்த இவர், தனக்கு நூறு வருடம் முன்னால் இறந்துபோன மகாகவி மில்டனின் ஆவியோடு தொடர்பு கொண்டு, அவர் சொல்லச் சொல்ல எழுதியதாக, ஒரு காவியம் வெளியிட்டார். ஆனால் கவிதை ரசிகர்களோ, ஆவி ஆராதகர்களோ அதில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லையாம்.

ஆவி என்றதும் அடுத்து நினைவுக்கு வருகிறவர், திடுக்கிட வைக்கும் திகில் சினிமாப் படங்களை இயக்கிய ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். இந்தப் பிரசித்தி பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் கோவண்ட் தோட்டக் காய்கறிக்கடை வியாபாரி ஒருவரின் மகன். சின்ன வயதில் அப்பாவுக்கு உதவியாகக் கடையில் இருந்ததோடு கோவண்ட் தோட்டத்தையும் இண்டு இடுக்கு விடாமல் சுற்றி வந்த ஹிட்ச்காக், தன்னுடைய “பிரன்ஸி’ படத்தில் சாப்பாட்டிலும், கொலையிலும் விருப்பம் கொண்ட கதாநாயகனாக்கியது ஒரு கோவண்ட் தோட்டக் காய்கறிக் கடைக்காரரைத்தான்.

ஹிட்ச்காக்கின் மற்ற படங்களைப் பற்றி யோசித்தபடி லைசியம் தியேட்டரைக் கடக்கிறேன். நீலக் கோட்டும் டையும் அணிந்த ஒரு மத்திய வயசு வெள்ளைக்காரர் மணி கேட்கிறார். கைக்கடியாரத்தைப் பார்ப்பதற்கு முன், எனக்கு முன்னால் ஒரு கத்தை டிக்கெட்டுகள் நீட்டப்படுகின்றன. கோவண்ட் தோட்ட, மற்றும் பக்கத்து ஸ்ட்ராண்ட் பகுதி நாடகக் கொட்டகைகளில் இன்று மாலைக்காட்சிக்கான நுழைவுச் சீட்டுகள். லைசியம் அரங்கத்தில் பத்து பவுண்டுக்கு “சிங்க அரசன்’ பகல் காட்சிக்கே கிடைக்கிறது. இருபது வருடமாக லைசியம் தியேட்டரில் தொடர்ந்து நடக்கிற இசை நாடகம். ஒரு வாரம் முன்னால்தான் இன்னோர் இசை நாடகமான ஈவிதா பார்த்ததால் “லயன் கிங்’ பார்க்கும் படலத்தைச் தள்ளிப்போட உத்தேசித்திருப்பதாக அவரிடம் மரியாதையோடு தெரிவிக்கிறேன். கோட் பாக்கெட்டிலிருந்து வேறு எதையோ எடுத்து நீட்டும் முன்னால் கொஞ்சம் நடையை எட்டிப் போட்டு கோவண்ட் தோட்ட ரயில் நிலையத்தை நோக்கித் திரும்புகிறேன்.

லண்டனில் எங்கெங்கோ எல்லாம் இருந்து புறப்பட்டு பெருவெள்ளமாக ஒரு ஜனக்கூட்டம் ரயில்நிலையத்தை விட்டு வெளியேறி கோவண்ட் தோட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறது. இதில் எதிர் நீச்சல் போட்டு உள்ளே நுழைவது சிரமம். கொஞ்சம் காலாற நடந்தால் சாரிங் கிராஸ் தெரு வரும். அங்கே பழைய புத்தகக்கடைகளை மேய்ந்துவிட்டு சாரிங் கிராஸ் ஸ்டேஷனில் ரயிலைப் பிடிக்க வேண்டியதுதான். பழைய புத்தகக் கடையில் தேடினால் பழைய சினிமா பாட்டுப் புத்தகம் கிடைக்கக் கூடும். பெர்னார்ட் ஷாவின் பிக்மேலியனை இசைச் சித்திரமாக எடுத்த “மைஃபேர் லேடி’, டிக்கன்ஸ் கதையான “ஆலிவர்!’, யூல் பிரின்னர் நடித்த “கிங்க் அண்ட் ஐ’, ஜாலி ஆண்ரூஸின் “சவுண்ட் ஆஃப் ம்யூசிக்’… “கர்ணன்’கூடக் கிடைக்கலாம். தடிராஜா கலெக்ஷனில் அந்தச் சினிமாப் பாட்டுப்புத்தகம் மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறான்.

=======================================================

லண்டன் டைரி: விறைபேபான ‘பிக்கடில்’ !

இரா. முருகன்

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சென்னைக்குக் குடியேறிய புதிதில், சமர்த்தாக ஆபீஸ் போய்க்கொண்டிருந்தேன். மிச்ச நேரம் புதுக்கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். அஞ்சலில் அனுப்பினால் போய்ச்சேர நாளாகிவிடும் என்பதால், கவிதை எழுதிய காகிதத்தைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டு ஜெமினி பக்கம் தொடங்கி, அண்ணாசாலை நெடுக நடந்து, அந்தக் கோடியில் அண்ணாசிலைக்கு அருகேயிருந்த பத்திரிகை அலுவலகத்துக்குப் போகிற வழக்கம். சென்னை மாநகரின் பரபரப்பும் இரைச்சலும் வேகமும் நிறைந்த இதயத் துடிப்பை ஒளி, ஒலி, வாடை ரூபமாக நெருக்கத்தில் இருந்து அனுபவித்துக்கொண்டு மூச்சு வாங்கப் பத்திரிகை ஆபீஸ் படியேறிய அந்தக் கணங்களைக் கொஞ்சம்போல் லண்டனில் இப்போது திரும்ப அனுபவிக்கிறேன். லண்டன் மாநகரின் இதயமான பிக்கடலியின் மேற்குப் பக்கத்து கிரீன்பார்க் ரயில் நிலையத்தில் தொடங்கி, கிழக்கே பிக்கடலி சதுக்கத்தை நோக்கி அந்தி சாய்கிற நேரத்தில் ஓய்வாக ஒரு நடை.

“பிக்கடலி’ இந்த வார்த்தை காதில் விழுந்ததும், உலகம் முழுக்கக் கடைவீதி, ஒட்டுச் சந்து, வீட்டுத் திண்ணைகளில் தையல் மிஷினுக்கு முன்னால் உட்கார்ந்து மும்முரமாகத் தைத்துக்கொண்டிருக்கும் லட்சக் கணக்கான தையல்காரர்கள் ஒரு நொடி இயந்திரத்தை நிறுத்திக் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெருமைப் பட்டுக்கொள்ளலாம். காரணம், தையல் இல்லாவிட்டால் பிக்கடலி இல்லை.

பிக்கடில் என்பது விறைப்பான சட்டைக் காலருக்கான பெயர். பிக்கடில்களைத் தயாரித்து விற்றுப் பெரும் பணம் சம்பாதித்த ராபர்ட் பேக்கர் 1612-ல் வெற்று வெளியாகக் கிடந்த இந்தப் பகுதியில் முதல் வீட்டுமனை வாங்கிக் கட்டிக் குடிபோனாராம். அவர் தயாரித்த காலர் நினைவாக, இந்தப் பிரதேசமே பிக்கடலி என்று நாமகரணம் செய்யப்பட்டது என்று லண்டன் சரித்திரம் தெரிவிக்கிறது. காலர் மட்டும் தயாரித்தே இப்படி ஒரு பெரிய பிரதேசத்துக்குப் பெயர் கொடுத்த அந்தத் தையல்காரர் சட்டை, பேண்ட், பிளவுஸ் என்று தைத்துத் தள்ளியிருந்தால், லண்டன் நகரத்துக்கே தையல்கடை என்று பெயர் மாற்றியிருப்பார்களோ என்னமோ.

ராபர்ட் பேக்கர் டெய்லர் பிக்கடலியின் குடிபுகுந்த முகூர்த்தம், உள்நாட்டுக் கலகம், சண்டை சச்சரவெல்லாம் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவ ஆரம்பித்திருந்தது. பரம்பரைப் பணக்காரர்களான ரோத்சைல்ட், ரோத்மன், பர்லிங்டன் போன்ற பிரபுக்களும் இங்கே வசிக்க ஆரம்பிக்க, பிக்கடலி நவநாகரிகமான பிரதேசமானது. அடுத்த முன்னூறு வருடத்தில் பழைய பங்களாக்கள் இருந்த இடத்தில் பெரிய கடைகள் எழுந்து நிற்க, நகரின் முக்கியமான வியாபார கேந்திரமாக பிக்கடலி மாறியது. இதற்கு வழி செய்தவர் பர்லிங்டன் பங்களாவாசியான கேவண்டிஷ் பிரபு.

“”ஏங்க, நிதம் இங்கே தொந்தரவாப் போச்சு. ஊர்லே திரியற வேலைவெட்டியில்லாத ஆளுங்க சதா அழுகின முட்டை, நத்தை ஓடு, செத்தை குப்பைன்னு வீட்டுக்குள்ளே விட்டெறிஞ்சுட்டுப் போறாங்க. வேலைக்காரங்க சுத்தம் செய்யறதை மேற்பார்வை செஞ்சு செஞ்சு உடம்பெல்லாம் வலிக்குது. இதை உடனே நிறுத்த ஆம்பளையா லட்சணமா ஏதாவது வழி பண்றீங்களா இல்லே…”

காவண்டிஷ் பிரபுவின் வீட்டம்மா மிரட்டியிருக்கலாம். அவர் உடனே விரைவாகச் செயல்பட்டு, பர்லிங்க்டன் பங்களாவை ஒட்டி பர்லிங்டன் ஆர்க்கேட் என்ற கடைப் பகுதியை உருவாக்கினார். கடைகளுக்கு வாடகையாகக் கணிசமான வருமானம். பணப் புழக்கம், வரி என்பதால் அரசாங்க ஆதரவு. கடைச் சிப்பந்திகளுக்கு வேலைவாய்ப்பு என்ற ஜனரஞ்சகமான ஏற்பாடு. அங்காடிக்குக் கடைக்காரர்கள் செலவில் இருபத்துநாலு மணிநேரமும் கட்டுக்காவல் என்பதால் அதை ஒட்டிய தன் வீட்டில் அழுகிய முட்டை விழுவது நிறுத்தம். இப்படி ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்களைக் குறிவைத்து 1819-ல் உருவான இந்த பர்லிங்டன் ஆர்க்கேட் தான் லண்டனின் நாகரீகமான பெரிய கடைகள் நிறைந்த முதல் அங்காடி.

இதைக் கட்டிமுடிக்க அந்தக் காலத்திலேயே கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் செலவு. மொத்தம் நாற்பத்தேழு கடை. ஒரு கடைக்கு அறுபது பவுண்ட் வருட வாடகை. காவண்டிஷ் பிரபு அங்காடியைக் கட்டும்போது, இதைப் பெண் வணிகர்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடுவேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். நகை விற்கிற கடை, புகையிலை விற்கிற கடை, துணிக்கடை, தொப்பி விற்கிற கடை, துப்பாக்கிக் கடை, புத்தகக் கடை என்று நாற்பத்தேழு கடைகளையும் குத்தகைக்கு எடுத்தவர்களில் பெண்களைவிட ஆம்களே அதிகம். என்ன போச்சு? பர்லிங்டன் ஆர்க்கேடில் கடைபோட்ட அய்யாக்களும் அம்மணி(மேடம்) என்றே அழைக்கப்பட, காவண்டிஷ் பிரபுவின் நிபந்தனை நிறைவேறியது.

இங்கே கடை வைத்தவர்கள் கடைக்கு மேலேயே நெருக்கியடித்துக் குடும்பம் நடத்திக் கீழ்த்தளத்தில் வியாபாரம் செய்து வந்ததாகத் தகவல். இங்கிலாந்து ராஜ குடும்பம் இங்கே பல கடைகளின் வாடிக்கையாளராகச் சுருட்டும், துணியும் தொப்பியும் வாங்கியிருக்கிறது. வாடகை அதிகம் என்றாலும் முடிதிருத்தும் நிலையம்கூட நூற்றெழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இங்கே இருந்திருக்கிறது. ” எங்க கடையில் முடிவெட்டினால், ஒவ்வொருத்தருக்கும் புதுச்சீப்பு’ என்று அவர்கள் 1851-ல் “தினச் செய்தி’ பத்திரிகையில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். சவுரிமுடி, விக் விற்பனையும் கடையில் அமோகமாக நடந்ததாகத் தெரிகிறது.

மேட்டுக்குடிக்கான கடைப்பிரதேசமான இங்கே ஹாலிவுட் கனவுக்கன்னி இன்கிரிட் பெர்க்மென் (உத்தேசமாக நம் நாட்டியப் பேரொளி பத்மினி, சாவித்திரி காலம்) ஷாப்பிங் செய்ய வந்தபோது, கூட்டம் கூடாமல் தடுக்க, அங்காடியின் வெளிக்கதவை அடைத்து வைத்திருந்தார்களாம். அதையும் மீறி உள்ளே நுழைந்து துணிக்கடையில் படியேறிய ஒரு மூதாட்டியிடம் வெளியே நின்ற கடைச்சிப்பந்தி பெருமையாகச் சொன்னார்- “”உள்ளே பாருங்க, யார் இருக்காங்கன்னு..” பாட்டியம்மா கண்ணை இடுக்கி உள்ளே பார்த்துவிட்டு முணுமுணுத்தாராம்- “”ஆமா, தொந்தியும் தொப்பையுமா உங்க முதலாளி யாரோ ஒல்லியா ஒரு பொண்ணு கூடப் பேசிட்டு நிக்கறார். இந்தக் கண்றாவியை எல்லாம் வெளியேபோய் வைச்சுக்கக் கூடாதா? வியாபார நேரத்திலே எதுக்கு?” இன்க்ரிட் பெர்க்மென் கேட்டிருந்தால் தரைக்கு இறங்கியிருப்பார்.

பர்லிங்டன் ஆர்க்கேட் உள்ளே நுழைகிறேன். அதிக விலைக்குச் செருப்பு, கூடுதல் விலைக்கு நகைநட்டு, வாசனை திரவியம், பளிங்கு சமாச்சாரங்கள், ஓவியம், சிற்பம், வெள்ளிப் பாத்திரம் என்று விற்கிற கடைகள் வரிசையாக வரவேற்கின்றன. சமாதானமும் சந்தோஷமுமாகச் சாமானிய வாழ்க்கை நடத்த எதெல்லாம் தேவையில்லை என்று மனதில் பட்டியல் போட இந்த அங்காடி உதவி செய்கிறது.

தங்கக் கலர் ரேக்கு வைத்த நீளத் தொப்பி அணிந்த காவலர்கள் பர்லிங்டன் அங்காடியைச் சுற்றிவந்து காவல் காக்கிறார்கள். லண்டன் மாநகரின் முதலும் கடைசியுமான தனிநபர் காவலர்படை இவர்களுடையது. காவண்டிஷ் பிரபு “பீடில்’ என்ற இந்தக் காவலர்களை நியமித்துக் கடந்த இருநூறு வருடமாக இந்த மரபு தொடர்ந்து வருகிறது.

வெளியே வருகிறேன். அடுத்த கட்டடமான ராயல் அகாதமி சுவரில் மாபெரும் நடராசர் ஓவியம் கண்ணில் படுகிறது. இடது பாதம் தூக்கி ஆடும் பெருமான் பிக்கடலியில் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அறிய ஆவலாக, அகதாமிக்கு உள்ளே நடக்கிறேன்.

Posted in Covent, Covent Garden, Dinamani, England, Era Murugan, Garden, Journal, Kathir, London, London Diary, Murugan, Tour, Tourist, Travelog, Travelogues, UK | Leave a Comment »

Malaysia eases visa rules for Indians, except from Chennai

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

சென்னையில் இருந்து செல்லும் பயணிகளுக்கு விசா விதிமுறைகளை தளர்த்தியது மலேசியா

கோலாலம்பூர், மார்ச் 16: சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகளுக்கான விசா விதிகளைத் தளர்த்தியுள்ளது மலேசிய அரசு.

இதையடுத்து, சென்னையைத் தவிர தென்னிந்திய நகரங்களில் இருந்து மலேசியாவுக்கு வரும் பயணிகள் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கியதும் விசா பெற்றுக் கொள்ளலாம் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் வசிப்போர் அங்குள்ள மலேசியத் தூதரகத்தில் இருந்து முன்கூட்டியே விசா பெறும் வசதி உள்ளதால் அவர்களுக்கு புதிய விதி பொருந்தாது என்று கோலாலம்பூரில் வியாழக்கிழமை தெரிவித்தார் துணைப் பிரதமர் நஜீப் ரஸôக்.

சென்னையில் இருந்து வருவோர் விசாவில் அனுமதிக்கப்பட்ட நாள்களை விட கூடுதல் நாள்கள் மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கி விடுவதை அடுத்து, விசா வழங்குவதைக் கடந்த டிசம்பரில் நிறுத்தியது மலேசியா.

சென்னையில் இருந்து வருவோரில் 25 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்ட நாள்களை விட அதிக நாள்கள் சட்டவிரோதமாகத் தங்குகின்றனர் என்று நஜீப் கூறினார்.

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 19 ஆயிரம். இதில் 3 ஆயிரம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகள், ஈரான், இராக், பாலஸ்தீனம் மற்றும் சிரியாவில் இருந்து வருவோருக்கும் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே விசா வழங்கப்படும் என்று மலேசியா அறிவித்துள்ளது.

Posted in Airport, Chennai, Consulate, Employment, Flight, Illegal, Indians, International, Jobs, Kuala Lumpur, Kualalumpur, Malaysia, overstay, residents, Tourists, Visa, Work | Leave a Comment »

Bengal shuts down to protest violence in Nandigram, Singur

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

கறுப்பு நாள்

மேற்கு வங்கத்தின் நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சினையில் வன்முறை ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இடதுசாரி முன்னணியின் 29 ஆண்டுகால ஆட்சியில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததில்லை என்பதால் இது ஒரு கறுப்பு நாள் என்று மாநில அமைச்சர் ஒருவரே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் போராட்டத்தை ஒடுக்க போலீûஸப் பயன்படுத்துவதற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இச் சம்பவம் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

கோல்கத்தாவுக்கு தென்மேற்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் நந்திகிராமம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இந்தோனேசியாவின் சலீம் குழுமத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அரசும், அந்த நிறுவனமும் தலா 50 சதவீத முதலீட்டில் 10 ஆயிரம் ஏக்கரில் ரசாயனத் தொழில் பூங்கா அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கான நிலத்தை நந்திகிராமம் பகுதியில் கையகப்படுத்தப்போவதாக கடந்த டிசம்பரில் தகவல் வெளியானது. இதையடுத்து பிரச்சினை உருவானது. எனினும், உள்ளூர் மக்கள் சம்மதம் தெரிவித்தாலன்றி எந்த நிலமும் கையகப்படுத்தப்படமாட்டாது என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறிவந்தார். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இத் திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதற்கிடையே, விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியானதை அடுத்து அரசுக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது 6 பேர் இறந்தனர்.

இந்த நிலையில் நந்திகிராமத்தின் முதல் பிளாக்கில் உள்ள 5 கிராமங்கள், நிர்வாகத்துடன் கடந்த இரண்டரை மாதங்களாக எவ்விதத் தொடர்பும் இன்றி இருந்தன. நிலம் கையகப்படுத்தப்படலாம் என்ற ஊகத்தில் அன்னியர் எவரும் கிராமப் பகுதியில் நுழைவதைத் தடுக்க சிலர் சாலைகளின் குறுக்கே பள்ளங்கள் தோண்டினர். பாலங்களை உடைத்தனர். நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும் போலீஸôர் அல்லது அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

எனவே சாலைகள், பாலங்களைச் சீரமைக்க புதன்கிழமை பெரும் எண்ணிக்கையில் அக் கிராமப்பகுதியில் போலீஸôர் நுழைந்தனர். அவர்கள் மீது கற்கள், கையெறிகுண்டுகள் சகிதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் போட்டியிடும் தன்மையை உருவாக்கவும், ஏற்றுமதிக்குச் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வகை செய்யும் கொள்கை 2000-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மண்டலங்களில் உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அன்னியச் செலாவணிக்காகவும், ஏற்றுமதியை நோக்கமாகவும் கொண்டவை. ஆண்டுதோறும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அன்னியச் செலாவணி பெருகி நாட்டின் பொருளாதாரம் மேம்பட இது உதவிகரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக விளை நிலங்களை அழித்து அதன் மீது தொழிற்சாலைகளை அமைக்கக்கூடாது. அது வேளாண் பொருள் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துவிடுவதோடு மட்டுமன்றி அத் தொழிலை நம்பியுள்ள பல கோடி மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுடன் ஆலோசனை செய்த பின்பே முடிவு எதையும் மேற்கொள்ள வேண்டும்.

————————————————————————————————————————–
Monday November 26 2007

மதிப்பை இழந்த மார்க்சிஸ்ட்

நீரஜா சௌத்ரி

மேற்கு வங்க மாநிலம், மிதுனபுரியில் உள்ள ஏதோ ஓர் இடம் என்பதைவிட கூடுதல் அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.

சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைக்கு எதிரான “போராட்டத்தின் மறுபெயர்’ என்பதைவிட விரிவான அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.

இத்தகைய சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 1984-ல், சீக்கியரான தனது பாதுகாவலராலேயே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களின் தூண்டுதலின்பேரில் அப்பாவி சீக்கியர்கள் மீது அராஜகக் கும்பல்கள் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை உயிரோடு எரித்துக் கொன்றனர். மூன்று நாள்களாக இந்த அராஜகம் தொடர்ந்துகொண்டு இருந்தபோதிலும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன.

2002-ல் கோத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த கரசேவகர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிதீர்க்கும் வகையில் குஜராத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்க தளம், பாஜக ஆகிய அமைப்புகள் வன்முறையில் இறங்கின. இச்செயல்களுக்கு குஜராத் முதல்வரின் ஆதரவும் தூண்டுதலும் இருந்தன என்பது, அண்மையில் “தெஹல்கா’ பத்திரிகை நடத்திய புலனாய்விலிருந்து தெரியவந்துள்ளது.

நந்திகிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் பல கிராமங்களை மீண்டும் கைப்பற்றச் சென்ற ஆயுதம் தாங்கிய குண்டர்கள் பல பெண்களைக் கற்பழித்ததுடன், அப்பாவி மக்களைக் கொலை செய்து, அவர்களது வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தியிருக்கின்றனர் என்பது அப் பகுதிக்குச் சென்று வந்த நிருபர்களின் செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேற்கண்ட மூன்று சம்பவங்களிலுமே “எதிர்ப் பிரிவினரு’க்குப் பாடம் புகட்டுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அரசும் துணைபோயிருக்கிறது அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அத் தாக்குதல்களுக்கு உதவி செய்திருக்கிறது.

ஆனால், நந்திகிராமத்தில் அரசு மேலும் ஒரு படி மேலே சென்றுவிட்டது. “”தார்மிக ரீதியில் சரியானது; நியாயமானது” என்று கூறி, அந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பகிரங்கமாக வக்காலத்து வாங்கியிருக்கிறது அரசு.

எதிர்க்கட்சியினருக்கு அவர்களது “”மொழியிலேயே பதிலடி” கொடுத்திருக்கின்றனர் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் என்று கூறியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.

எந்தக் கட்சியையும் சாராதவரும், இடதுசாரிக் கட்சிகளின் ஒப்புதலுடன், அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட நிர்வாகியுமான மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, “நந்திகிராமம் யுத்தகளமாகிவிட்டது’ என்று கூறிய பிறகும் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார் முதல்வர். மாநில உள்துறைச் செயலரும் ஆளுநரைப் போலவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

நந்திகிராமத்தில் அப்புறப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டு இருந்தபொழுது, எந்த நிருபரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1984-ல் தில்லியிலோ அல்லது 2002-ல் குஜராத்திலோ இந்த நிலை இருக்கவில்லை.

“நந்திகிராமத்தில் உள்ள கிராமங்களின் கட்டுப்பாட்டை மாவோயிஸ்டுகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டனர்; ஒரு மாநிலத்துக்குள்ளேயே அப் பகுதியில் தனி அரசை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்; மார்ச் மாதம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப அவர்கள் அனுமதிக்கவில்லை’ என்று கூறி, இப்போது நடந்திருக்கும் சம்பவங்களை மார்க்சிஸ்ட் தலைவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

நந்திகிராமத்தில் வேதியியல் தொழில்பேட்டையை அமைப்பதை எதிர்த்து முதன்முதலில் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடங்கியது மார்க்சிஸ்ட் கட்சிதான். முதலில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டமாகத்தான் அது இருந்தது. பிறகுதான் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், ஜமாத்-இ-உலேமா ஹிந்த், எஸ்யுசிஐ மற்றும் மாவோயிஸ்டுகள் ஆகியோர் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடிக்கொண்டு இருந்தவர்களுடன் இணைந்தனர்.

ஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரு குழுக்கள் மோதிக்கொண்டதல்ல இங்கு பிரச்னை. ஒரு ஜனநாயக அமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ஓர் அரசு செயல்பட்டு இருப்பதுதான் இங்கு பிரச்னை. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தை நசுக்க மார்ச் மாதம் மாநில போலீûஸ மார்க்சிஸ்ட் அரசு பயன்படுத்தியபோது, துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர்; அது உயர் நீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.

எனவே, இப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸýக்குப் பதிலாகத் தனது கட்சித் தொண்டர்களையும் சமூகவிரோத சக்திகளையும் ஈடுபடுத்திவிடலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துவிட்டதுபோலும். போலீஸ் அதில் நேரடியாக ஈடுபடவில்லையென்றபோதிலும், வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக முதல்வரே பேசிய பிறகு, நிராயுதபாணியான அப்பாவி மக்களைக் காக்க வேண்டிய கடமையிலிருந்து முற்றிலுமாகத் தவறிவிட்டது போலீஸ்.

அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், தனது கட்டுப்பாட்டை அப் பகுதியில் மீண்டும் நிலைநாட்ட மார்க்சிஸ்ட் கட்சி நினைத்திருந்தாலும் சரி, கட்சிக்கு எதிராகச் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்த்த நினைத்திருந்தாலும் சரி, அது இப்போது அக் கட்சிக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிட்டுவிட்டது.

நந்திகிராமத்தில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றி, அங்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டிவிட்டால், இப்போதைக்கு அதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்தாலும், இறுதியில் யதார்த்த நிலையை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று அக் கட்சி கருதியிருக்கக்கூடும்.

நந்திகிராம வன்முறை குறித்து எதுவும் கூறாமல் மெüனமாக இருக்கிறது காங்கிரஸ். பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி போன்றவர்களின் வற்புறுத்தலால்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இந்த வன்முறை குறித்து ஒரு தீர்மானம், அதுவும் மார்க்சிஸ்ட் பற்றி குறிப்பிடாமல் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆதரவாளராக இடதுசாரிகள் இல்லாதிருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுப்பதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டிருக்காது, மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ்.

கோல்கத்தாவில் ஒரு லட்சம் பேர் நடத்திய மெüன ஊர்வலத்தில் எழுத்தாளர்களும் ஓவியர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் பங்கேற்று இருப்பதிலிருந்தே மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர முடியும்.

இடதுசாரி முன்னணியில் இருந்து விலகிவிடவில்லையெனினும், மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணிக் கட்சிகளேகூட அதன் நடவடிக்கையை விரும்பவில்லை. புரட்சிகர சோசலிஸ்ட் சிறிய கட்சியாக இருந்தபோதிலும், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களைத் திரும்பப் பெறப் போவதாக எச்சரித்தது.

நந்திகிராம கறையைக் கழுவ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட காலம் ஆகும். தேர்தலில் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 30 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறது அக் கட்சி. ஆனால், அதற்கு எதிராக உருவாகிக்கொண்டு இருக்கும் எதிர்ப்புக்கு ஒரு புதிய கோணத்தைக் கொடுத்திருக்கிறது நந்திகிராமம்.

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மீது அக்கறை கொண்ட கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி இனம் காணப்பட்டு இருந்தபோதிலும், அதுவும் தனது சொந்த குறுகிய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படக்கூடியதே என்பதைக் கடந்த இரு வாரங்களாக நடந்துவரும் சம்பவங்கள் காட்டிவிட்டன.

அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் அக் கட்சி எடுத்த நிலையை இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் முடிவெடுக்கும் இறையாண்மை அதிகாரத்தையும் உறுதி செய்வதற்கான போராட்டமாகப் பலர் கருதினர்; அது மக்களில் குறிப்பிட்ட பகுதியினரிடம் அக் கட்சிக்கு நற்பெயரையும் பெற்றுத் தந்திருக்கும் நேரத்தில் இச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது அக் கட்சி.

தனது அதிகாரத்தை நிலைநாட்ட எந்த அளவுக்கு அக் கட்சி தரம்தாழ்ந்து செல்லும் என்பதை நந்திகிராம நடவடிக்கை காட்டிவிட்டது. அதைவிட முக்கியமாக, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக முறைகளுக்கும் அக் கட்சி என்ன மதிப்பு கொடுக்கிறது என்பதையும் அச் சம்பவம் அம்பலப்படுத்திவிட்டது.

Posted in acquisition, Ashim Dasgupta, Ban, Bengal, Bharatiya Janata Party, BJP, Buddhadeb Bhattacharya, Calcutta, Centre for Indian Trade Union, CITU, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), CPI, CPI (M), CPI(M), CPI-ML, dead, Dinajpur, Exports, Finance, Government, Howrah, Kolkata, Land, Law, Left, Mamata, Mamata Banerjee, Mamta, Mamtha, Mamtha bannerjee, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Nandhigram, Nandigram, Natives, Oppression, Order, Panchla, Police, Property, Protest, Sealdah, SEZ, Singur, Socialism, Socialist Unity Centre of India, SUCI, TATA, TMC, tribal, Tribal People, Tribals, Trinamool, Trinamool Congress, Trinamul, Uttar Dinajpur, Violence, WB, West Bengal | 3 Comments »

63 SEZ – 900 Crore unit in Ennore; Chennai: 2

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

எண்ணூரில் 900 கோடியில் சிறப்பு பொருளாதார மண்டலம்: சென்னையில் 2 } திருவள்ளூரில் 3

எம். ரமேஷ்

சென்னை, மார்ச் 16: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் ரூ.900 கோடியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 14 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் திட்டமிடப்பட்டன. அவற்றுள் நான்கு செயல்பட்டு வருகின்றன. புதிதாக 10 இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திருவள்ளூரில்…: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் ரூ. 900 கோடி முதலீட்டில் பல தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2,650 ஏக்கர் நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் “ஆட்டோ சிட்டி’ என்ற பெயரில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமையும். என்எம்சி ஆட்டோமோடிவ் இன்ஃபிராஸ்டிரக்சர் (பி) நிறுவனம்-டிட்கோ இணைந்து இந்த “ஆட்டோ சிட்டி’-யை அமைக்கின்றன.

மூன்றாவதாக சிங்கப்பூர் நிறுவனம் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் எலெக்ட்ரானிக், ஹார்ட்வேர் சார்ந்த ஐடி மற்றும் ஐடிஇஎஸ், லாஜிஸ்டிக்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை திருவள்ளூரில் அமைக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த அசென்டாஸ் நிறுவனம் இதை உருவாக்குகிறது.

சென்னையில்…: சென்னையில் இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகின்றன. இவை இரண்டும் டைடல்-2, டைடல்-3 என்ற பெயரில் தரமணியில் அமைகின்றன. டைடல்-2 சிறப்புப் பொருளாதார மண்டலம் 26.39 ஏக்கர் நிலப்பரப்பிலும், டைடல்-3 பொருளாதார மண்டலம் 25 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைகிறது.

கோவையில்…: டைடல்-4 என்ற பெயரிலான மற்றொரு சிறப்புப் பொருளாதார மண்டலம் கோவையில் உருவாக்கப்பட்டு வருகிறது. “எல்காட்’ நிறுவனத்தின் கூட்டுடன் இது உருவாக்கப்படுகிறது.

ஒசூரில் ரூ. 500 கோடி முதலீட்டில் 2,600 ஏக்கரில் பல தொழில்களை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 3,000 ஏக்கர் பரப்பளவில் பல தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் ரூ. 500 கோடி முதலீட்டில் உருவாக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் ரூ. 14.52 கோடி செலவில் ரப்பர் பொருள்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலம் தேர்வு செய்யப்படுகிறது.

==========================================
63 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அறிவிப்பு

புதுதில்லி, மார்ச் 16: நாடு முழுவதும் 237 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 63 மண்டலங்கள் குறித்து இதுவரை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அசாமில் 2006-07ம் ஆண்டில் தேயிலை தொழிலுக்கான மானியமாக ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டது. தேயிலை சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைய தேயிலை நிதியை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விவசாயிகளை அவர்களின் விளை நிலங்களிலிருந்து வெளியேற்றியது. மக்கள் இடம் பெயர்ந்தது ஆகியவை குறித்து தெரிவிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. எனவே இவை குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று ஊரக மேம்பாட்டு அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் கூறினார்.

ஆயுதமற்ற விண்வெளிக்கு ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி

விண்வெளியை அமைதியான முறையில் அனைவரும் பயன்படுத்தவும், ஆயுதங்களை அங்கே வைக்காமல் இருக்கவும், விண்வெளியில் உள்ள பொருள்களின் மீது ஆயுதங்களைப் பயன்படுத்தி சோதனை செய்வதற்கு எதிராகவும் உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த அரசு அக்கறை காட்டி வருகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி மாநிலங்களவையில் தெரிவித்தார்.

10 சதவீத வளர்ச்சிக்கு வரைவு அறிக்கை

2011-12-ம் ஆண்டில் 10 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டும் இலக்குடன் 11-வது ஐந்தாண்டு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேசிய வளர்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய திட்டத்துறை இணை அமைச்சர் எம்.வி.ராஜசேகரன் கூறினார்.

விக்ராந்த் போர்க்கப்பலின் ஆயுளை நீட்டிக்க ஆய்வு

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க் கப்பலின் ஆயுள் காலத்தை 2012-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய கப்பல் படை ஆய்வு மேற்கொண்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

சில கோளாறுகளை சரி செய்வதன் மூலமும், குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு செய்வதன் மூலம் இக்கப்பலின் ஆயுளை நீட்டிக்கலாம் என கப்பல் படை நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 44 ஆயிரம் டன் எடை கொண்ட அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க் கப்பலை இந்தியா வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

ரூ.267 கோடியில் தில்லி-ஆக்ரா புதிய சாலை

தில்லி-ஆக்ரா இடையே ரூ.267 கோடியில் போக்குவரத்து சிக்னல் இல்லாத நெடுஞ்சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

Posted in 237, 63, Agriculture, Assam, Chennai, Coimbatore, Commerce, Economy, Employment, Ennoor, Ennore, Exports, Factory, Farmer, Farmlands, Hosur, Human Rights, Industry, Jobs, Kamalnath, Kovai, Land, Madras, Manufacturing, Nagercoil, Nagerkovil, Perambaloor, Perambalur, SEZ, Special Economic Zone, Thiruvalloor, Thiruvallur, TIDEL | 1 Comment »