Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

TN, Bengal MPs clashes over maritime varsity venue – Analysis & Opinion

Posted by Snapjudge மேல் மார்ச் 15, 2007

சிந்தித்து செய்கையை மாற்று

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் அமைவதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வரும் மேற்குவங்க எம்.பி.க்கள், கடந்த இரு தினங்களாக அவையை நடத்தவிடாமல் செய்துவரும் ரகளை ஆரோக்கியமான அரசியலாக இல்லை.

அமைச்சரை கைநீட்டி அடிக்கப் போகும் அளவுக்கு கைகலப்பை உருவாக்கிய இச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் இடதுசாரிகள் என்பது அரசியல் மீதான அவநம்பிக்கையை மேலும் வலுவாக்குகிறது. கடல்சார் பல்கலைக்கழகம் குறித்த விரிவான தகவல்களை அறிந்துகொள்ளாமல் இத்தகைய எதிர்ப்பில் அவர்கள் இறங்கியுள்ளது மற்றொரு வேதனை.

சென்னையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்க 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என்றும் இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என்றும் 2006 ஜூலை மாதத்தில் செய்திகள் வெளியாகின.

இத் தகவலைத் தெரிவித்த கப்பல்துறைச் செயலர் “இப் பல்கலைக்கழகம் சுவிட்சர்லாந்தில் உள்ள உலக கடல்சார் பல்கலைக்கழகத்தைப் போன்றே அமையும்; இதன் துணை வளாகங்கள் மும்பை, விசாகப்பட்டினம், கோல்கத்தா ஆகிய 3 இடங்களில் அமையும்; அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின்னர் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்றும் தெரிவித்திருந்தார்.

ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த தெளிவான அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. இதில் கருத்து மாறுபாடுகள் இருந்தால் அதை பிரதமரிடம் தெரிவித்து, சுமுகத் தீர்வு கண்டிருக்க முடியும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தரும் இடதுசாரிகள் எத்தனையோ கோரிக்கைகளுக்காக பிரதமரை பலமுறை சந்திக்கும்போது, இந்த விஷயத்தைப் பற்றியும் முன்னதாகவே பேசித் தீர்த்திருக்கலாம்.

இன்னும் புத்திசாலித்தனமாக இப்பிரச்சினையை அணுகுவதாக இருப்பின், சென்னையில் மட்டுமன்றி கோல்கத்தாவிலும் மற்றொரு பல்கலைக்கழகத்தை ஒரே நேரத்தில் தொடங்க வேண்டும் என்றுகூட கோரியிருக்கலாம்.

ஏனெனில், சர்வதேச கடல்சார் பல்கலைக்கழகங்களின் சங்கத்தில் உலகம் முழுவதும் உள்ள 29 பல்கலைக்கழகங்கள் சேர்ந்துள்ளன. இத்தகைய பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட இந்தியாவில் கிடையாது. ஆனால் சீனாவில் 10 பல்கலைக்கழகங்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளன.

ஆகவே இரு பல்கலைக்கழகங்களை அமைக்கலாம் என்று மேற்குவங்க எம்.பி.க்கள் வலியுறுத்தினால் அது நியாயமானதாகவும் தேவையானதாகவும்கூட இருக்கும்.

கடல்சார் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை ஆண்டுதோறும் 15 சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படித்து பயிற்சி முடித்து வருவோரின் எண்ணிக்கை, தேவையைவிட 5 சதவீதம் குறைவாக உள்ளது. இந்த இடைவெளி 2010ம் ஆண்டில் 10 சதவீதமாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் இரு பல்கலைக்கழகங்கள் அமைந்தாலும் நன்மையே.

7 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கடற்கரையைக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஆளுகைக்குள் 23 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கடல் உள்ளது. இந்திய மாணவர்களுக்கு பொதுவாக ஆங்கிலப் புலமையும் உள்ளது. உலக அளவில் கடல்சார் தொழில்நுட்பத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தியர்களுக்கு கப்பல் துறையில் அதிக அளவு வேலைவாய்ப்புகள் உள்ளன.

சீனாவில் தற்போது வர்த்தகப் பரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்ப அறிவுக்கான ஆங்கில மொழிப் பயிற்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும், அவர்களிடம் 10 கடல்சார் பல்கலைக்கழகங்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டால், உலக கப்பல் துறையில் இந்தியர்களுக்கான வாய்ப்புகளை சீனா தட்டிப் பறிக்கும் நிலை உள்ளதை உணரமுடியும்.

இடதுசாரிகள் இந்த ஆபத்தை உணர்ந்து, இந்தியர்களின் நலனை மனத்தில்கொண்டு, கடல்சார் பல்கலைக்கழகப் பிரச்சினையில் சரியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: