Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Usage of Technology for Surveillance in Indian Sea borders – Sri Lanka, LTTE, Tamil Nadu & Eezham

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

தொழில்நுட்பம் உயிர் காக்கும்

சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ரோந்து நடத்துவது பயனுள்ளதாக இருக்கும். இலங்கை அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறியுள்ள தமிழக முதல்வர், இந்திய அரசையும் இதற்கு இணங்கச் செய்து கூட்டு ரோந்துப் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை ராணுவத்தினர் இந்தியக் கடல் எல்லையோரம் தங்களது ரோந்து மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆயுதம், மருந்துப் பொருள்கள் தமிழக கடற்பகுதியிலிருந்து செல்கின்றன என்பதுதான். அண்மைக் கால சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களைச் சுடும் சம்பவங்களும், அதில் உயிர்ப்பலி அதிகரித்திருப்பதும் அண்மைக் காலமாகத்தான்.

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களில், இலங்கை ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து சுட்டது என்பதான குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழக மீனவர்கள் இரண்டு காரணங்களுக்காக இலங்கைக் கடல் எல்லைக்குள் சென்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லையைக் கடந்துவிடுகிறார்கள். ஒரு சில மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பதற்காக எல்லை தாண்டுகிறார்கள் என்பது இரண்டாவதாக சொல்லப்படும் காரணம்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்தபோது கூறியதாவது: “இது பற்றி இலங்கைக் கடற்படை அதிகாரிகள் எங்களுக்குச் சொல்லும்போது, “”மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லை கடக்கும் மீனவர்கள் எங்களைக் கண்டதும் படகை வேகமாகச் செலுத்தாமல், இருந்த இடத்தில் இருந்தால் நாங்கள் சுடுவதில்லை. படகில் பொருள்கள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தபின் எச்சரித்து அனுப்பி விடுகிறோம். அந்தப் படகில் இருக்கும் மீன்கள் மற்றும் பிற தடயங்களை வைத்தே, மீன் பிடித்துள்ளார்களா? கடத்தல் பொருள் கைமாறிவிட்டதா என கண்டறிய முடியும். சந்தேகம் இருந்தால் மட்டுமே கைது செய்கிறோம்” என்பதுதான். கைது செய்யப்பட்டவர் அப்பாவிகள் என்றால், இந்தியத் தூதரகம் தலையிட்டு அவர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கிறது. பெரும்பாலும், அப்பாவி மீனவர்கள்கூட, இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முயலும்போதுதான் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது”.

கூட்டு ரோந்து நடத்தப்படுமானால் இந்த அதிகாரியின் கூற்று உண்மையா, வெறும் சமாளிப்பா என்பதை நேரடியாகக் காணலாம். இந்திய ராணுவத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை ராணுவம் முயலாது.

சாதாரண, அப்பாவி மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைக் கடந்து செல்லாமல் இருக்கச் செய்தாலே, 99 சதவீதம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். கடல் எல்லையைத் தாண்டும்போது நுண்அலைவரிசை தொடர்பு துண்டிக்கப்பட்டு “பீப்’ ஒலி எழுப்பும் கருவிகளை மீனவர்களுக்கு வழங்கலாம். இதன் விலையும் மிகக் குறைவே.

இதைவிட மேலானது ஹாம் ரேடியோ. கரையில் உள்ள மீனவர் அமைப்பு அல்லது மீனளத் துறை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும், தொடர்பு எல்லைக்கு வெளியேபோய், கடல் எல்லையை மீறும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கச் செய்யவும் முடியும். கடலில் நடக்கும் இடர்ப்பாடுகள் மற்றும் நிகழ்வுகளைக் கரையில் உள்ள அலுவலகத்திற்குத் தெரிவிக்க உதவியாக அமையும். இதற்கான கருவிகளை தமிழக அரசு மீனவர்களுக்கு இலவசமாக வழங்கவும் அல்லது கடலுக்குச் செல்லும்முன்பாக கரையில் உள்ள அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, கருவியைப் பெற்றுச் செல்லும்படியும் கரை திரும்பியதும் திருப்பிக் கொடுத்துவிடச் செய்யவும் வகை செய்யலாம்.

ஒரு பதில் -க்கு “Usage of Technology for Surveillance in Indian Sea borders – Sri Lanka, LTTE, Tamil Nadu & Eezham”

  1. bsubra said

    இலங்கை விமானப்படையின் தளம் மீது விடுதலைப் புலிகள் வான் வழித் தாக்குதல்

    இலங்கையின் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள விமானப்படைத் தளத்தின் மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டனர்.

    இந்தத் தாக்குதலின் போது மூவர் கொல்லப்பட்டு 16 பேர் காயமடைந்துள்ளனர். புலிகளின் ஒரு இலகுரக விமானம் வான் வழியே இரண்டு குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இலங்கை படையினரின் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலைகளை குறி வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

    இந்தத் தாக்குதலால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும், சிறிது நேரம் மூடியிருந்த பிறகு வழமை போல இயங்கத் தொடங்கியுள்ளது எனவும் இலங்கை விமானப் படையின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் இன யுத்த வரலாற்றில் இந்தச் சம்பவம் ஒரு புதிய இராணுவப் பரிமாணத்தினை ஏற்படுத்தியுள்ளது என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

    மேலும் இது போன்ற தாக்குதல்கள் தொடரும்

    இந்தத் தாக்குதலுக்கு பிறகு கருத்து வெளியிட்டுள்ள் விடுதலைப் புலிகள், இது போன்ற தாக்குதல்கள் தொடரும் எனக் கூறியுள்ளனர். இலங்கையின் இராணுவப் படைகள், வான்வழியே தமிழ் மக்களைத் தாக்கி இனப்படுகொலைகளை மேற்கொள்வதிலிருந்து, தமிழ் மக்களை பாதுகாக்கவே இந்த வகையான நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

    இந்தத் தாக்குதல்கள் மூலம் புலிகள் தமக்கு வான்வழித் தாக்குதல்களை நடத்தக்கூடிய வலிமை உள்ளது என நிரூபித்துள்ளார்கள் என கொழும்பிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

    இந்தத் தாக்குதலில் போது காயமடைந்த விமானப்படையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விடுதலைப் புலிகள் விமாங்களின் உதிரிப் பாகங்களைக் கடத்தி, அவற்றை தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள இடங்களில் விமானங்களாக கட்டமைக்கிறார்கள் என்கிற அரசின் சந்தேகத்தை, இந்தத் தாக்குதல் உறுதி செய்கிறது எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

    தாக்குதல்கள் ஆச்சரியமளிக்கின்றன என்கிறது கண்காணிப்புக் குழு

    இந்தத் தாக்குதலுக்கு பிறகு பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் சார்பில் பேசவல்ல அதிகாரியான தோர்பினுர் ஓமர்சன், இந்தத் தாக்குதல்கள் மேலும் மோதல்களுக்கு வழிவகுக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

    இவ்வகையான வான் தாக்குதலை நடத்திவிட்டு அந்த விமானங்கள் வடபகுதியில் உள்ள தமது நிலைகளுக்கு பாதுகாப்பாக திரும்பியது ஆச்சரியம் அளிக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதல் உலக மட்டத்தில் பாதுகாப்புக் கவலைகளை அதிகரிக்கும்’ – பாதுகாப்புத் துறை ஆய்வாளர் ராமன்

    விடுதலைப்புலிகளால் கட்டுநாயக்காவில் உள்ள விமானத்தளத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலானது, தெற்காசியாவில் மாத்திரமல்லாமல் உலகமட்டத்திலேயே ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் என்று முன்னாள் மூத்த இந்திய அதிகாரியும், பாதுகாப்புத் துறை ஆய்வாளருமான பி. ராமன் தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இந்த விமானத் தாக்குதலை உலகின் ஏனைய பயங்கரவாத அமைப்புகளும் பின்பற்றலாம் என்று அஞ்சப்படுவதால், இது உலக மட்டத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக இந்திய அரசாங்க மட்டத்திலும் கவலைகள் அதிகரிக்கும் என்றும் கூறிய அவர், ஆயினும் இந்தியத் தரப்பால் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எதனையும் எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

    இலங்கை அரசாங்கப் படைகளால் தமிழர் பகுதிகளில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பல தமிழர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலான தாக்குதல் என்று கூறப்படும் விடுதலைப்புலிகளின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக, இந்தியா எதனையாவது செய்ய முயற்சிக்குமானால், அது தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பலைகளை உண்டாக்கலாம் என்று கூறும் ராமன் அவர்கள், இதனால் இந்தியா இந்த விடயத்தில் எதனையும் செய்யாது என்றும் கூறினார்.

    தமிழர் பகுதிகள் மீதான இலங்கை விமானப்படையின் தாக்குதல்கள் நிறுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே விடுதலைப்புலிகள் மீது சர்வதேச சமூகத்தினால் ஏதேனும் அழுத்தத்தைக் கொண்டு வரமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    டி.பி.எஸ். ஜெயராஜ் கருத்து

    விடுதலைப்புலிகளின் இந்த விமானத்தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவர்கள் எப்படி முன்னேடுக்கப் போகிறார்கள் என்பதன் மூலமும் மற்றும் அவற்றை இலங்கை அரசாங்கப் படையினர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துமே கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீதான தாக்குதல் ஒரு திருப்பு முனையா, என்பது கணிக்கப்படும் என்று இலங்கை விவகார ஆய்வாளர் டி. பி. எஸ். ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

    வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் இந்தத் தாக்குதல் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றும், அதேவேளை சர்வதேச மட்டத்தில், இப்படியான கிளர்ச்சிக்குழு ஒன்றால் நடத்தப்பட்ட வான் தாக்குதல் மிகவும் உன்னிப்பாகப் பார்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இவர்கள் இருவரது செவ்விகளை முழுமையாக இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

    வட இலங்கையில் இலங்கை அரசாங்க விமானங்கள் குண்டு வீச்சு

    இலங்கையின் வடமேற்கே மன்னார் மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் மீது இலங்கை விமானப் படை விமானங்கள் இன்று குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் பொது மக்கள் வாழும் இடங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதலில் உயிர்ச் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை எனவும் விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

    தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள விமானப் படை தளத்தின் மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட விமானக் குண்டுத் தாக்குதலுக்குப் பதில் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகள் பிரதேசத்தில் நடத்தப்பட்டிருப்பது போலத் தோன்றுவதாக வன்னித் தகவல்கள் கூறுகின்றன.

    இலங்கை விமானப் படை மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் இதுவரை கருத்து எதனையும் வெளியிடவில்லை.

    இதனிடையே, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள விமானப் படைத் தளத்தின் மீது நடந்த விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலை அடுத்து ஆசியாவின் மூன்றாவது மிகப் பெரிய விமான சேவையான கேதே பசிஃபிக், கொழும்பிலிருந்து தினமும் புறப்பட்டுச் செல்லும் தனது விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.

    இன்றைய தாக்குதலையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இலங்கை சர்வதேச விமான நிலையம் பல மணி நேரங்கள் கழித்து மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: