Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Chickenpox & Measles epidemic in Chennai – Medical Treatment options

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

சென்னையில் பரவுகிறது சின்னம்மை

சென்னை, மார்ச் 12: சென்னையில் சின்னம்மை (“சிக்கன்பாக்ஸ்’), தட்டம்மை (“மீஸில்ஸ்’) பரவத் தொடங்கியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் சின்னம்மை – தட்டம்மையால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சின்னம்மை – தட்டம்மை பரவுவதற்கான காரணம், பாதிக்கப்படும் நிலையில் சிகிச்சை, உணவு முறை, தடுத்துக் கொள்வது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

அறிகுறிகள் என்ன? “”பருவ மாற்றம் (கோடை) காரணமாக “வெரிசல்லா úஸôஸ்டர்’ என்ற வைரஸôல் சின்னம்மை பரவுகிறது. லேசான காய்ச்சல், உடலில் பொதுவாக மார்பகத்தில் அம்மை கொப்புளங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். முன்புபோல் இல்லாமல் அலோபதி மருத்துவத்தில் தற்போது அம்மை நோயைக் குணப்படுத்த நல்ல மருந்து உள்ளது.

“ஏசைக்ளோவிர்’ என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் அம்மை நோய் குணமாகும். இந்த மாத்திரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. அம்மையின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 5 வேளைகள் வீதம் தொடர்ந்து 5 நாள்களுக்கு இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் அம்மை மறையும். இத்துடன் வைட்டமின் ஏ சத்து மாத்திரையும் தரப்படும்.

சுய மருத்துவம் கூடாது: அம்மை குறித்துச் சந்தேகம் எழும் நிலையில் சுயமாக மருந்துகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அம்மை காரணமாக நிமோனியா காய்ச்சல், மூளைக் காய்ச்சலால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அம்மையுடன் மூச்சுத் திணறலோ அல்லது நினைவிழத்தலோ ஏற்பட்டால் நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

உணவு முறை: அம்மையால் பாதிக்கப்படும் நிலையில் காரம் – மசாலா இல்லாத உணவைச் சாப்பிட வேண்டும். தயிர் சாதம் நல்லது. கீரை, கேரட் உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்லது. அரிப்பு ஏற்படும் நிலையில் கொப்புளங்களை கிள்ளுவது கூடாது. இருமினால், தும்மினால்கூட காற்றின் மூலம் அம்மை வைரஸ் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவரை வீட்டில் தனிமையில் வைத்துப் பராமரிப்பது நல்லது. நல்ல காற்றோட்டமான இடத்தில் நோயாளி ஓய்வு எடுக்க வேண்டும்.

தடுப்பூசி உண்டு: ஒருவருக்கு சின்னம்மை வந்துவிட்ட நிலையில், மற்றவர்கள் அம்மை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள மிக அவசியம் ஏற்படும் நிலையில் சின்னம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் இதன் விலை ரூ.1,200. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2,400 செலவு செய்து இத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து வசதி இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

========================================================
அம்மையை விரட்டும் சிறுங்கி பற்பம்

சென்னை, மார்ச் 12: சின்னம்மை உள்பட எல்லாவித அம்மையையும் போக்கும் ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உண்டு என்றார் டாக்டர் ராஜலட்சுமி சிவராமன்.

“”அம்மையால் பாதிக்கப்பட்டு உறுதியாகிவிட்ட நிலையில், நோயாளியை டாக்டரிடம் அழைத்துச் செல்லாமலேயே சித்த மருந்துக் கடைகளில் உறவினர்கள் சிறுங்கி பற்பத்தை (வெண்மையான பவுடர்) வாங்கி நோயாளிக்குக் கொடுக்கலாம். இந்த பற்பத்தை இரண்டு சிட்டிகை அளவு, காலை-மாலை இரு வேளை பாலில் கலந்து நோயாளிக்கு ஒரு வாரம் கொடுத்தால் அம்மை மறையும். நோய் வராமல் தடுத்துக் கொள்ள மற்றவர்களும் இந்த பற்பத்தைச் சாப்பிடலாம்.

அலோபதி மருந்துகள் சாப்பிட்டாலும்கூட இந்த பற்பத்தைச் சாப்பிடுவதில் தவறில்லை. ஏனெனில் அம்மை காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள உள் சூட்டை இந்த பற்பம் குணப்படுத்தும். வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் வேப்ப இலையைப் பரப்பி நோயாளி படுப்பது நல்லது.

அம்மை பரவாமல் தடுக்கும் ஆற்றலும் வேம்புக்கு உண்டு’ என்றார் டாக்டர் ராஜலட்சுமி சிவராமன்.
=============================================

சின்னம்மை நோய் தாக்கிய மாணவர்கள் தனியாக அமர்ந்து தேர்வு எழுதலாம்

சென்னை, மார்ச் 12: சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

“”பிளஸ் டூ தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் யாராவது திடீரென்று சின்னம்மையால் பாதிக்கப்பட்டு, தேர்வு எழுதும் நிலையில் இருந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அவர்களுக்காகத் தனி அறை, மேசை, நாற்காலி அளிக்கப்படும். தனியாக அவருக்கென்று ஒரு மேற்பார்வையாளரும் இருப்பார்” என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் வெள்ளிக்கிழமை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

“”நன்றாகப் படிக்கும் மாணவர் இந்நோய் காரணமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படா விட்டால், அவருக்கு ஓராண்டு வீணாகிவிடும். எனவே, மனிதாபிமான அடிப்படையில் அவர் தேர்வு எழுதலாம். மருத்துவர்கள் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோயுற்றவரை நேரில் கண்டறிந்து தேர்வுக்கூட மேற்பார்வையாளரே தெரிவித்து அதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம் என்றும், எனினும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க இயலாத நிலையில் உள்ளவர் யாரும் தேர்வு எழுத முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

===================================================

சின்னம்மை: சென்னையில் 410 பேர் பாதிப்பு

சென்னை, மார்ச் 16: சென்னையில் சின்னம்மை நோயினால் 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப் பகுதிகளில் 133 பேர் பாதிக்கப்பட்டு சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது குறித்து அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

“”சின்னம்மை நோய் 15 வயதுக்குள்பட்டவர்களை அதிகமாகத் தாக்கும் தன்மை உடையதால் குழந்தைகள் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

சின்னம்மை நோய் தாக்கியவர்களுக்கு “ஏசைக்ளோவீர்’ எனப்படும் மருந்துகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் கிடைக்கிறது. மருத்துவர் மேற்பார்வையில் 5 நாள்களுக்கு இம் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் 1.36 லட்சம் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்நோய் தாக்கியவர்களுக்கு உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தியினால் அவர்களுக்கு மீண்டும் இந்நோய் வரவே வராது. பள்ளிகளில் சிறுவர்களை தினசரி பரிசோதித்து, தோலில் சிவந்த தடிப்புகளோ, கொப்புளங்களோ காணப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு ஒருவாரம் விடுப்பு அளித்து அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக” அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

=====================================================

யாருக்கு சின்னம்மை வராது?

சென்னை, மார்ச் 26: குழந்தைப் பருவத்திலேயே சின்னம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் சின்னம்மை வராது. ஏனெனில் ஒரு முறை சின்னம்மை வந்து குணமானவுடன், நோய் எதிர்ப்புப் பொருள் உடலில் உருவாகி ஆயுள் முழுவதும் சின்னம்மை வராமல் தடுத்து விடும்.

இதேபோன்று இளம் வயதிலேயே தட்டம்மை ஏற்படும் நிலையில், வளரும் நிலையில் தட்டம்மை மீண்டும் வராது. மேலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையிலேயே தட்டம்மை தடுப்பூசி இடம்பெற்றுள்ளதால், தட்டம்மையால் பாதிக்கப்படுவோர் மிக மிகக் குறைவு.

சின்னம்மை தடுப்பூசி நல்லது: சின்னம்மை வராமல் தடுத்துக் கொள்ள தடுப்பூசி உள்ளது; ஆனால் சின்னம்மை வந்த பிறகு இந்தத் தடுப்பூசி பலன் தராது. சின்னம்மை தடுப்பூசி மருந்தின் விலை ரூ.1,200. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2,400 செலவு செய்து இத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

கர்ப்பிணிகளே உஷார்…: சின்னம்மையால் பாதிக்கப்பட்டவருக்கு தனியே அறை, தட்டு, துண்டு, தலையணை, போர்வை அளிப்பது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு சின்னம்மை பரவாமல் தடுக்க முடியும். மேலும் பாதிக்கப்பட்டவர் காற்றோட்டமான அறையில் முழுமையாக ஓய்வு எடுப்பது அவசியம்.

வீட்டில் யாருக்காவது சின்னம்மை ஏற்படும் நிலையில், கருக் குழந்தைக்கு உறுப்புகள் உருவாகும் முதல் மூன்று மாத கால கர்ப்பிணிகள் உஷாராக இருந்து அம்மை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு அம்மை ஏற்பட்டால், வைரஸ் காரணமாக கருக் குழந்தைக்குப் பரவி, பிறவி ஊனம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
====================================================================================
15 மாவட்டங்களில் சின்னம்மை நோய்: அரசு தீவிர தடுப்பு நடவடிக்கை

சென்னை, மார்ச் 26: சென்னையிலிருந்து காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், மதுரை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு சின்னம்மை (“சிக்கன்பாக்ஸ்’) பரவியுள்ளது.

கோடை காரணமாக “வெரிசல்லா úஸôஸ்டர்’ என்ற வைரஸ் மூலம் 10 தினங்களுக்கு முன்பு சின்னம்மை சென்னையில் பரவத் தொடங்கியது. சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மட்டும் இதுவரை 535 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும்…: ஆரம்ப சுகாதார மைய பதிவேடுகளின் அடிப்படையில் வேலூர், மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட மேற்சொன்ன மாவட்டங்களில் தலா 25 பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு வருகிறது.

மாத்திரை இலவசம்: “ஏசைக்ளோவிர்’ என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் 5 நாள்களில் சின்னம்மை குணமாகும். அனைத்து 1,417 ஆரம்ப சுகாதார மையங்களிலும் இந்த மாத்திரையை இலவசமாக விநியோகிக்க அரசின் பொது சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

ஒரு நோயாளிக்கு ரூ.1000 செலவு: மருந்துக் கடைகளில் ஒரு “ஏசைக்ளோவீர்’ மாத்திரையின் விலை ரூ.8.56. சின்னம்மை வந்துவிட்டால் 5 நாள்களுக்குத் தொடர்ந்து மூன்று வேளை மாத்திரை சாப்பிட வேண்டும்; இதனால் ரூ.1,000 அளவுக்கு மருத்துவச் செலவு ஆகும். ஆக, ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் ஒரு நோயாளிக்கு ரூ.1,000 மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

விழிப்புணர்வு பிரசுரங்கள்: சின்னம்மை நோய் மேலும் பரவாமல் தடுக்க நோயின் அறிகுறிகள், நோயாளியைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியம், இலவச மாத்திரை, கேரட் உள்பட வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவு ஆகியவற்றை விளக்கி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.

மூச்சுத் திணறல், நினைவிழத்தல் ஏற்படும் நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது அவசியம் என்றார் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் பி. பத்மநாபன்.

2 பதில்கள் to “Chickenpox & Measles epidemic in Chennai – Medical Treatment options”

  1. bsubra said

    சின்னம்மை. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நோய். எப்படியும் ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆய்வு செய்தபோது, ஒரு விஷயம் தெரிய வந்தது. சின்னம்மைக்கு மருந்து மாத்திரை, ஊசி எதுவும் கிடையாது. ஆனால், இந்நோய் வராமல் தடுக்க முடியும். தடுப்பூசி தோன்றியது அப்போதுதான். கண்டுபிடித்தவர் எட்வர்ட் ஜென்னர்.

    பிறக்கும் குழந்தைகள் அத்தனை பேரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்னும் எழுதப்படாத சட்டம் அனைத்து
    நாடுகளிலும் எழுதப்பட்டன. பிறக்கும் குழந்தைகள் அத்தனை பேருக்கும் சுருக் சுருக்கென்று ஊசி குத்தினார்கள்.

    அமெரிக்காவில் கடைசி கடைசியாக சின்னம்மை நோய்
    கண்டுபிடிக்கப்பட்டது 1949ம் ஆண்டில். ஆளானப்பட்ட
    சோமாலியாவிலேயே 1977க்குப் பிறகு சின்னம்மை முற்றிலுமாக
    ஒழிந்துவிட்டது.

    சின்னம்மை தோன்றுவதற்குக் காரணமாக இருக்கும் வேரியோலா (Variola virus) வைரஸ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. ஆராய்ச்சி செய்வதற்கு மட்டும் கொஞ்சூண்டு வைத்துக்கொண்டு மற்ற வைரஸ்களை முற்றிலுமாக
    அழித்தொழித்துவிட்டார்கள்.

    அக்டோபர் 2001ல் இந்த வைரஸ் மீண்டும் செய்தித்தாள்களில் அடிபட்டது. காரணம், உயிரியல் ஆயுதமாக இந்த வைரஸைப் பயன்படுத்துகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு. எளிதில் பரவி
    விடக்கூடியது என்பதால் எல்லோரும் பயந்தார்கள்.

    உண்மையில் சின்னம்மை தொற்று நோயா? ஆம். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக எளிதில் இந்நோய்க் கிருமி பரவிவிடும். ரத்தம் மூலமாகப் பரவும். உடலில் சுரக்கும் நீர் மூலமாகப் பரவும்.
    அணிந்துகொள்ளும் துணி மூலம் பரவும். மற்றபடி, வானத்திலிருந்து கோலமாவு போல் தூவினால் பரவாது. பாதிக்கப்பட்ட நபருடன் ஒரே அறையிலோ அல்லது ஒரே கட்டடத்திலோ அமர்ந்து வேலை செய்தால் பரவாது. கொசுக்கள் மூலமாகவோ, பூச்சிகள் மூலமாகவோ, வளர்ப்புப் பிராணிகள் மூலமாகவோ வைரஸ் பரவாது.

    வைரஸ் தாக்கியுள்ளது என்பதை எப்படிக் கண்டு பிடிக்கலாம்?

    மித மிஞ்சிய காய்ச்சல் அடிக்கும். எழுந்திருக்கக்கூட திராணி இருக்காது. முகத்தில் ஆரம்பித்து, உடல் முழுவதும் சிறுசிறு கொப்புளங்கள் தோன்றும். முதல் அறிகுறி காய்ச்சல். 101 முதல் 104 டிகிரி வரை இருக்கும். கூடவே, தலை வலி, உடல் வலி. சில சமயம் வாந்தி. வைரஸ் தாக்கப்பட்ட இரண்டு அல்லது நான்காவது நாள் இந்த அறிகுறிகள் தென்படும். இதை Prodrome Phase என்று
    அழைக்கிறார்கள்.

    இந்த அறிகுறிகள் தோன்றிய நான்கு நாட்களுக்குப் பிறகு, நாக்கில்
    சிறு கொப்புளங்கள் தோன்றும். பொதுவாகச் சிவப்பு நிறத்தில் காணப்படும். நாக்கில் ஆரம்பித்து சிறிது சிறிதாக வாய் முழுவதும் கொப்புளங்கள் பரவும். இந்தக் கட்டிகள் உடையும்போது, வாய்
    வழியாகக் கிருமிகள் தொண்டைக்குள் இறங்க ஆரம்பிக்கும்.

    அதுவரை சம்பந்தப்பட்டவரை மட்டுமே இம்சித்துக் கொண்டிருந்த வைரஸ், அடுத்தவரையும் பாதிக்க ஆரம்பிப்பது இந்தக் கட்டத்தில்தான். வைரஸ் தொண்டைக்குள் இறங்கிய இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் முகத்தில் கொப்புளங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
    பிறகு, உடலிலும் பரவுகின்றன. மூன்றாவது நாளில் கொப்புளங்கள் உப்ப ஆரம்பித்து, நான்காவது நாள் கொப்புளங்கள் அளவில் பெரிதாக வளர்ந்து நிற்கின்றன. தவிரவும், கொப்புளங்கள் உடைந்து நீர் வெளிவர ஆரம்பிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் காய்ச்சல் விட்டுவிட்டு அடிக்கும். இதை Early Rash Phase என்று அழைக்கிறார்கள்.

    பிறகு வருவது Pustular Rash. ஐந்தாவது நாளில் இந்நிலை
    ஆரம்பிக்கிறது. கொப்புளங்கள் கூர்மையாக மாறுவது இந்தச்
    சமயத்தில்தான். இரண்டாவது வாரம் கொப்புளங்கள் உடலிலிருந்து உதிர்ந்தாலும், கொப்புளங்கள் இருந்த இடம் தோலில் வடுவாக உட்கார்ந்து விடுகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான் : உடலிலிருந்து கொப்புளங்கள் உதிரும் வரை வைரஸ் மற்றவர்களுக்குப் பரவும் அபாயம் நீடிக்கிறது.

  2. bsubra said

    அம்மை நோயும் தடுப்பு முறையும்

    கு. கணேசன்

    கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. மக்கள் வியர்வை மழையில் நனையத் தயாராகி விட்டனர். இனி காற்றுமண்டலத்தில் வெப்பம் அதிகமாக அதிகமாக வெப்ப நோய்கள் மக்களைப் பாடாய்ப் படுத்திவிடும்.

    கோடைகாலத்தில் பரவுகின்ற முக்கிய நோய்களில் ஒன்று சின்னம்மை ( இட்ண்ஸ்ரீந்ங்ய்ல்ர்ஷ்). இந்த நோய் சென்ற வாரம் சென்னையில் பரவத் தொடங்கியது. அதிதீவிர தொற்று நோயான சின்னம்மை, சென்னையிலிருந்து உடனடியாக பதினைந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் பரவிவிட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

    கோடையில் நிலவும் கடுமையான வெப்பம்தான் அம்மை வரக் காரணம் என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல. உடல் வெப்பத்துக்கும் அம்மைநோய்க்கும் தொடர்பில்லை. கோடை வெப்பத்தால் நிலம் உஷ்ணம் அடையும்போது குப்பை, கூளங்களில் குடியிருக்கும் “வேரிசெல்லா ஜாஸ்டர்’ எனும் வைரஸ் கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. இவைதான் நமக்கு சின்னம்மை நோயை ஏற்படுத்துகின்றன.

    சின்னம்மை, குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். என்றாலும் பத்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைக் குறி வைத்துத் தாக்குவது இதன் இயல்பு. அதிலும் குறிப்பாக மக்கள் அதிகமாக வாழும் இடங்கள், நெரிசல் மிகுந்த இடங்கள், குடிசைப்பகுதிகள், விடுதிகள் போன்றவற்றில் வசிப்போருக்கு இந்நோய் விரைவில் பரவிவிடும். குடும்பத்தில் ஒருவருக்கு இந்நோய் வந்தால் மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புண்டு. இந்நோய்க் கிருமிகள் மாசுபட்ட காற்று மூலம் ஒருவர் உடலிலிருந்து அடுத்தவர் உடலுக்குள் நுழைந்து விடும். முதலில் நம் சுவாசப்பாதையை அடைகின்ற இக்கிருமிகள், உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி, லட்சக்கணக்கில் பல்கிப் பெருகி, அடுத்த இரண்டு வாரங்களில் அம்மைநோய்க் குணங்களை ஏற்படுத்தும்.

    முதலில் சாதாரண தடுமக்காய்ச்சல் போலத்தான் நோய் தொடங்கும். இரண்டாம் நாளில் உடல்வலி, தலைவலி, சோர்வு அதிகமாகும். காய்ச்சல் கடுமையாகும். உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் ஏற்படும். வாயிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள் தெரியும். கண்கள் சிவக்கும். மார்பிலும் முதுகிலும் சிவப்புநிற எழுச்சிகள் தோன்றும். அடுத்த 24 மணிநேரத்தில் இவை எல்லாமே நீர் கோர்த்த கொப்புளங்களாக மாறிவிடும்.

    சின்னம்மைக் கொப்புளங்கள் முகம், மார்பு, வயிறு, முதுகு, அக்குள் போன்ற பகுதிகளில் மிக நெருக்கமாகவும் அதிகமாகவும் காணப்படும். முன்கை மற்றும் முன்கால்களில் மிகப் பரவலாகவும் எண்ணிக்கையில் குறைந்தும் தெரியும். இது சின்னம்மைக்கே உரிய முக்கியத் தடயமாகும்.

    நோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும் மூக்குச்சளியிலும் இந்நோய்க் கிருமிகள் வசிக்கும். அம்மைக் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறும்போது இந்த வைரஸ் கிருமிகள் மற்றவர்களைத் தொற்றிக் கொள்ளும். குறிப்பாக, நோயாளியோடு நெருக்கமாகப் பழகுபவர்களுக்குச் சின்னம்மை நோய் இவ்வழியில் பரவுகிறது. நோயாளி இருமும்போதும் தும்மும்போதும் மூக்குச்சளியில் இவ்வைரஸ் கிருமிகள் வெளியேறி காற்று மூலம் பிறருக்குப் பரவுகிறது. அடுத்து, நோயாளி உபயோகித்த உடைகள், உணவுத்தட்டுகள், போர்வை, துண்டு போன்றவற்றின் மூலமும் இந்நோய் அடுத்தவர்களுக்குப் பரவலாம். இதனால்தான் அம்மை நோயாளிகளைத் தனித்து வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    வழக்கமாக இந்நோய் தொடங்கிய ஏழாம் நாளில் காய்ச்சல் குறையும். அடுத்த நான்கு நாள்களில் கொப்புளங்கள் சுருங்கி, பொறுக்குகள் உதிரும். அம்மைத் தழும்புகள் சில மாதங்களில் மறைந்துவிடும். ஒருமுறை சின்னம்மை வந்து குணமானவருக்கு, அவரது உடலில் நோய் எதிர்ப்பு அங்கங்கள் உருவாகி விடுவதால், ஆயுள் முழுவதும் அவருக்கு இந்நோய் மீண்டும் வராது.

    பொதுவாக அம்மை நோய்கள் குறித்து நம் சமூகத்தில் பலவிதமான தவறான கருத்துகளும் மூடநம்பிக்கைகளும் நிலவுகின்றன. “அம்மனின் கோபமே அம்மைநோய்’ என்றும், “அம்மைக்குச் சிகிச்சை பெற்றால் தெய்வக் குற்றமாகிவிடும்’ என்றும் அஞ்சி பெரும்பாலோர் சிகிச்சை பெறாமல் இருந்து விடுகின்றனர்.

    கிராமப்புறங்களில், ஏன் நகர்ப்புறங்களில் கூட அம்மைநோய் ஏற்பட்டால் மருந்து, மாத்திரை சாப்பிடக்கூடாது என்ற எண்ணம் மக்கள் மனத்தில் வேரூன்றி உள்ளது. அம்மைக் கொப்புளங்களில் வேப்பிலை அல்லது மஞ்சளை அரைத்துப் பூசுவது ஒன்றுதான் மருந்து என்று சொல்லி அதை மட்டுமே தினமும் அரைத்துப் பூசுவார்கள். வேப்பிலைக்கும் மஞ்சளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. ஆனாலும் இந்த நோய்க்கான வைரஸ் கிருமிகளை ஒழிக்க இவை மட்டுமே போதாது.

    சின்னம்மைக்குப் பல காலமாகச் சிகிச்சை இல்லாமல் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது இந்நோய்க்கு அலோபதி மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. நோய் தொடங்கிய உடனேயே “ஏசைக்ளோவிர்’ எனும் மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் ஐந்தாம் நாளில் சின்னம்மை முற்றிலும் குணமாகிவிடும். அத்தோடு “ஏசைக்ளோவிர்’ களிம்பை அம்மைக் கொப்புளங்களில் தினமும் தடவினால் அரிப்பு, எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் அறவே இருக்காது. அம்மை நோயாளிகள் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். இதிலும் உண்மையில்லை. உணவில் எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை. எல்லா உணவுகளையும் வழக்கம்போல் அவர்கள் சாப்பிடலாம்.

    பொதுவாக அம்மை நோயாளியின் உடலில் நீரிழப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் பால், நீர்மோர், கரும்புச்சாறு, இளநீர், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சைப் பழச்சாறுகள், அரிசிக் கஞ்சி, ஜவ்வரிசிக் கஞ்சி, சத்துமாவு, கூழ், குளுக்கோஸ், சத்துமிக்க பானங்கள், உப்புச் சர்க்கரைக் கரைசல் போன்ற திரவ உணவுகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் வைட்டமின் ஏ சத்து நிறைந்த காரட், பப்பாளி, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.

    அடுத்து, அம்மை நோயாளிகள் உடலில் கொப்புளங்கள் அனைத்தும் மறைந்த பிறகுதான் குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதுவும் தவறு. இவர்கள் வெதுவெதுப்பான உப்புநீர் கொண்டு காலை, மாலை இருவேளைகளில் வாய் கொப்பளிக்கலாம். முகத்தையும் கண்களையும் அடிக்கடி சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளலாம். அம்மைக் கொப்புளங்கள் மீது அழுத்தித் தேய்க்காமல் தினமும் குளிக்கலாம்.

    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த நோய் ஏற்படுமானால், மூளைக்காய்ச்சல், நிமோனியா, இதய நோய், சிறுநீரக நோய், மூட்டழற்சி நோய் என்று பல மோசமான விளைவுகள் உண்டாகவும் வாய்ப்புண்டு. அதேபோல் கர்ப்பிணிகளுக்கு இந்நோய் வந்தால் கருவில் வளரும் குழந்தைக்கும் பரவி, பிறவி ஊனம் ஏற்படலாம்.

    மேலும், சின்னம்மை வந்து குணமான பின்னர், சிலருக்கு இந்நோய்க் கிருமிகள் நரம்புகளில் தங்கி, சில ஆண்டுகள் கழித்து “அக்கி அம்மை’யை ஏற்படுத்தும். இது அந்த நரம்பு செல்லும் இடமெல்லாம் கொப்புளங்களை உண்டாக்கி அதிக வலியையும் ஏற்படுத்தும். கிராமப்புறங்களில் “அக்கி அம்மை’ கொப்புளங்களில் ஒரு வகை “காவி’ மண்ணைத் தடவுவார்கள். இதனால் அவ்வளவு பலன் கிடைப்பதில்லை. பதிலாக “ஏசைக்ளோவிர்’ களிம்பை அக்கொப்புளங்களில் தடவினால் வலி உடனே குறையும்.

    சின்னம்மையால் இத்தனை துன்பங்கள் வந்து சிரமப்படுவதைவிட இதை வரவிடாமல் தடுத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். ஏனென்றால், சின்னம்மை மற்றும் “அக்கி அம்மை’ வராமல் தடுத்துக் கொள்ள இப்போது தடுப்பூசி உள்ளது. நோய் வந்த பிறகு இத்தடுப்பூசி போட்டால் பலன் தராது. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒருமுறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் இரண்டு மாத இடைவெளியில் இரண்டு முறை போட்டுக் கொள்ள வேண்டும்.

    (கட்டுரையாளர்: ராஜபாளையம் கணேஷ் மருத்துவமனையின் பொது மருத்துவர்).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: