Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மார்ச் 14th, 2007

Adoor to churn out two films from Thakazhi’s stories

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

ஞானபீட விருது எழுத்தாளர் தகழி சிவசங்கரரின் கதைகளை படமாக்குகிறார் அடூர் கோபாலகிருஷ்ணன்

திருவனந்தபுரம், மார்ச் 12: ஞானபிட விருது பெற்ற மலையாள எழுத்தாளரான தகழி சிவசங்கர பிள்ளையின் 6 சிறுகதைகள் இரண்டு படமாக தயாரிக்கப்பட உள்ளன.

இதை பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும், தாதா சாகேப் பால்கே விருது வென்றவருமான அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்க உள்ளார். படங்களுக்கான திரைக்கதை வசனம் எழுதப்பட்டு விட்டன. ஒரு படத்திற்கு “மூனு பெண்ணுகள்’ (மூன்று பெண்கள்) என்றும், மற்றொரு படத்திற்கு “கள்ளன்டே மகன்’ (திருடன் மகன்) என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியது: நான் படமாக தயாரிக்க உள்ள 6 கதைகளுமே தகழி சிவசங்கரரால் 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. இருந்தபோதிலும் அவை நிகழ்காலத்திற்கு பொருந்தக் கூடியவை. மூன்று கதைகள் பல்வேறு குணாதிசயங்களை உடைய பெண்களைப் பற்றியவை. மற்ற மூன்றும் இந்த சமுதாயத்தில் நடுத்தரக் குடிமகனுக்கு எவ்வாறு நீதி கிடைக்கிறது என்பதைப் பற்றியவை.

இந்த கதைகள் அனைத்தும் என்னை வெகுவாக கவர்ந்தவை. இதனால் கதைகளின் தன்மை மாறும் வகையில் எந்த இடத்திலும் மாற்றம் செய்யவில்லை. இரண்டு படத்தின் படப்பிடிப்பையும் 45-50 நாள்களுக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளேன். இருந்தபோதிலும் “மூனு பெண்ணுகள்’ படத்தை விரைவில் வெளியிட்டுவிட்டு, பின்னர் “கள்ளன்டே மகனை’ வெளியிட முடிவு செய்துள்ளேன். படங்களை கதை படைப்பாளர் தகழி சிவசங்கரருக்கே அர்ப்பணிக்க உள்ளேன்.

“மூனு பெண்ணுகள்’ படத்தில் நந்திதா தாஸ், பத்மப்பிரியா, காவ்யமாதவன், முரளி மற்றும் சிலர் முக்கியப் பாத்திரம் ஏற்று நடிக்க உள்ளனர். “கள்ளன்டே மகன்’ படத்தில் விஜயராகவன் “திருடன்’ வேடம் தாங்கி நடிக்கிறார் என்றார்.

Posted in Adoor, Adoor Gopalakrishnan, Author, Basheer, Chemeen, Dada Saheb, Doordarshan, Films, Kaavya, Kaavya Madhavan, Kallante Makan, Kerala, Literature, Malyalam, Mohammed Basheer, Mollywood, Moonnu Pennungal, Murali, Nandhitha, Padmapriya, Paul Zachariah, screenplays, Sivasankara Pillai, stories, Thagali, Thagazhi, Thakali, Thakazhi, Thakazhi Sivasankara Pillai, Trivandrum, Vaikom, Women, Writer | Leave a Comment »

Chennai: Three new training centers for Fashion & Export design in Garments

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

சென்னையில் 2007-க்குள் மேலும் 3 ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம்

சென்னை, மார்ச் 14: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இந்த ஆண்டுக்குள் மேலும் 3 ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் (ஏ.இ.பி.சி), ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம் (ஏ.டி.டீ.சி) தலைவர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தொழில்நுட்ப அறிவை அதிகரிக்கும் வகையில் ஏ.இ.பி.சி. நாட்டின் பல்வேறு இடங்களில் ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. சென்னை கிண்டியில் 1996-ல் முதல் பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.

இதுதவிர தில்லி, குர்கான், நொய்டா, லூதியானா, ஜெய்ப்பூர், கோல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், திருப்பூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 21 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் மேலும் ஒரு பயிற்சி மையத்தை ஏ.இ.பி.சி. தற்போது அமைத்துள்ளது. இதைத் திறந்துவைத்த விஜய் அகர்வால் பேசியது:

தகவல் தொழில் நுட்பத்துறை, ஆயத்த ஆடை தயாரிப்புத் துறை ஆகிய இரு துறைகளும் இந்தியாவில் சிறந்து விளங்கும் துறைகளாகும். இவை இரண்டும் அதிக வேலைவாய்ப்பையும், வருவாயையும் ஈட்டித் தரக்கூடிய துறைகளாக உள்ளன.

2006-07-ம் ஆண்டில் ரூ.42 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இதில் 25 சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

2010-11 ஆம் ஆண்டில் ரூ.113 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட 15 லட்சம் கூடுதல் பணியாளர்கள் இத்துறைக்கு தேவைப்படுவர். இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

இதற்காக ஏ.இ.பி.சி. இந்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் கூடுதலாக 27 ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. மேலும் நடமாடும் பயிற்சி மையங்கள் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஆடை தயாரிப்பு குறித்த அடிப்படை பயிற்சிகளை இக்கவுன்சில் அளித்து வருகிறது என்றார் விஜய் அகர்வால்.

தொடக்க விழாவில் ஏ.இ.பி.சி. மூத்த உறுப்பினர் ரஞ்சித் ஷா, கிண்டி ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கே.கே.அகர்வால், முகப்பேர் ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Posted in ADTC, AEBC, Chennai, Design, Dress, Export, Fashion, Garments, Madras, NIFT, Tailor, Tailoring, Technology, Training | Leave a Comment »

Usage of Technology for Surveillance in Indian Sea borders – Sri Lanka, LTTE, Tamil Nadu & Eezham

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

தொழில்நுட்பம் உயிர் காக்கும்

சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ரோந்து நடத்துவது பயனுள்ளதாக இருக்கும். இலங்கை அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறியுள்ள தமிழக முதல்வர், இந்திய அரசையும் இதற்கு இணங்கச் செய்து கூட்டு ரோந்துப் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை ராணுவத்தினர் இந்தியக் கடல் எல்லையோரம் தங்களது ரோந்து மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆயுதம், மருந்துப் பொருள்கள் தமிழக கடற்பகுதியிலிருந்து செல்கின்றன என்பதுதான். அண்மைக் கால சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களைச் சுடும் சம்பவங்களும், அதில் உயிர்ப்பலி அதிகரித்திருப்பதும் அண்மைக் காலமாகத்தான்.

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களில், இலங்கை ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து சுட்டது என்பதான குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழக மீனவர்கள் இரண்டு காரணங்களுக்காக இலங்கைக் கடல் எல்லைக்குள் சென்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லையைக் கடந்துவிடுகிறார்கள். ஒரு சில மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பதற்காக எல்லை தாண்டுகிறார்கள் என்பது இரண்டாவதாக சொல்லப்படும் காரணம்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்தபோது கூறியதாவது: “இது பற்றி இலங்கைக் கடற்படை அதிகாரிகள் எங்களுக்குச் சொல்லும்போது, “”மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லை கடக்கும் மீனவர்கள் எங்களைக் கண்டதும் படகை வேகமாகச் செலுத்தாமல், இருந்த இடத்தில் இருந்தால் நாங்கள் சுடுவதில்லை. படகில் பொருள்கள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தபின் எச்சரித்து அனுப்பி விடுகிறோம். அந்தப் படகில் இருக்கும் மீன்கள் மற்றும் பிற தடயங்களை வைத்தே, மீன் பிடித்துள்ளார்களா? கடத்தல் பொருள் கைமாறிவிட்டதா என கண்டறிய முடியும். சந்தேகம் இருந்தால் மட்டுமே கைது செய்கிறோம்” என்பதுதான். கைது செய்யப்பட்டவர் அப்பாவிகள் என்றால், இந்தியத் தூதரகம் தலையிட்டு அவர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கிறது. பெரும்பாலும், அப்பாவி மீனவர்கள்கூட, இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முயலும்போதுதான் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது”.

கூட்டு ரோந்து நடத்தப்படுமானால் இந்த அதிகாரியின் கூற்று உண்மையா, வெறும் சமாளிப்பா என்பதை நேரடியாகக் காணலாம். இந்திய ராணுவத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை ராணுவம் முயலாது.

சாதாரண, அப்பாவி மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைக் கடந்து செல்லாமல் இருக்கச் செய்தாலே, 99 சதவீதம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். கடல் எல்லையைத் தாண்டும்போது நுண்அலைவரிசை தொடர்பு துண்டிக்கப்பட்டு “பீப்’ ஒலி எழுப்பும் கருவிகளை மீனவர்களுக்கு வழங்கலாம். இதன் விலையும் மிகக் குறைவே.

இதைவிட மேலானது ஹாம் ரேடியோ. கரையில் உள்ள மீனவர் அமைப்பு அல்லது மீனளத் துறை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும், தொடர்பு எல்லைக்கு வெளியேபோய், கடல் எல்லையை மீறும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கச் செய்யவும் முடியும். கடலில் நடக்கும் இடர்ப்பாடுகள் மற்றும் நிகழ்வுகளைக் கரையில் உள்ள அலுவலகத்திற்குத் தெரிவிக்க உதவியாக அமையும். இதற்கான கருவிகளை தமிழக அரசு மீனவர்களுக்கு இலவசமாக வழங்கவும் அல்லது கடலுக்குச் செல்லும்முன்பாக கரையில் உள்ள அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, கருவியைப் பெற்றுச் செல்லும்படியும் கரை திரும்பியதும் திருப்பிக் கொடுத்துவிடச் செய்யவும் வகை செய்யலாம்.

Posted in Arms, borders, Defense, Dispatch, Dispute, Eelam, Eezham, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishers, Fishery, Fishing, HAM, LTTE, Military, Narcotics, Naval, Navy, Police, Pulikal, Radio, Ramesvaram, Rameswaram, Sea, Sea tigers, Sri lanka, Srilanka, Surveillance, TN, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | 1 Comment »

Social Scientist ‘Carl Marx’ – R Jeyaprakash: History & Biosketch

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

சமூக விஞ்ஞானி கார்ல் மார்க்ஸ்

ஆர். ஜெயப்பிரகாஷ்

சோஷலிச உலகை உருவாக்க கனவு கண்டவர் கார்ல் மார்க்ஸ்.

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! இழப்பதற்கு ஒன்றுமில்லை! புதிய உலகம் காத்திருக்கிறது என்று உலகில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினருக்கு அறைகூவல் விடுத்த மாமேதை அவர். மனித சமுதாயத்தையே தன் பக்கம் ஈர்த்து மனிதனைச் சிந்திக்க வைத்த மாபெரும் சமூக விஞ்ஞானி.

கார்ல் மார்க்ஸ் புருஷ்யாவில் (ஜெர்மனி) டிரையர் என்ற நகரில் 1818 மே 5-ம் தேதி பிறந்தார். மார்க்ஸின் தந்தை ஹெய்ன்ரிக் ஒரு வழக்கறிஞர். தன் கணவரைப்போல் மகனும் வழக்கறிஞராக வேண்டும் என்றே கார்ல் மார்க்ஸின் தாய் ஹென்ட்ரிட்டே ஆசைப்பட்டார்.

பான் பல்கலைக்கழகத்திலும் பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்திலும் கார்ல் மார்க்ஸ் சட்டக்கல்வி பயின்றார். ஹெகல் என்பவரது சித்தாந்தத்தைப் பின்பற்றக்கூடிய இளம் ஹெகலியவாதிகள் குழுவில் சேர்ந்த மார்க்ஸ் அரசியல், சமூகம், பொருளாதாரம் பற்றிய ஆழ்ந்த விவாதங்களில் ஈடுபட்டார்.

“ரைனிஷ் ஜெய்ட்டுங்’ பத்திரிகையில் சேர்ந்து அதன் ஆசிரியராகவும் உயர்ந்தார். விவசாயிகள் படும் துன்பங்களையும் கொடுமைகளையும் அப்பத்திரிகையில் வெளியிட்டார். இதனால் அப்பத்திரிகையின் சுதந்திரம் பறிக்கப்பட்டது.

அப் பத்திரிகை மூடப்பட்ட பின்னர் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். வாழ்நாள் முழுவதும் தனது நண்பராக இருந்து அவரது அரசியல் கருத்துகளோடு இணைந்திருந்த பிரடெரிக் ஏங்கெல்ûஸ பிரான்ஸின் பாரிஸ் நகரில் சந்தித்தார். காலத்தை எப்போதும் தனதாக்கிக் கொள்ளும் வெறியோடிருந்த மார்க்ஸ், இளம் வயதில் ஜென்னியை பதிவுத்திருமணம் செய்து கொண்டார்.

அரசியல், பொருளாதாரம் குறித்த சிந்தனைகள் அவருக்குள் வளர்ந்து கொண்டேயிருந்தது. தானே உணர்கிற உண்மைகளையும், கருத்துகளையும் ஒருபோதும் ஒருபக்கத்தில் நின்று ஒரு கோணத்தில் மட்டும் ஒப்புக்கொள்ள மாட்டார். அனைத்துக் கோணங்களிலும் நின்று விமர்சனங்கள், தர்க்கவியல் மூலமாகத் தனக்குத்தானே தெளிவுபடுத்திக் கொண்டால் மட்டுமே ஒப்புக்கொள்வார் மார்க்ஸ்.

தத்துவஞான வெளிச்சத்தில் வரலாற்றை மார்க்ஸ் படிக்கத் தொடங்கினார். மாண்டெஸ்கியே, மக்கியவல்லி, ரூúஸô ஆகியோரது சமூக தத்துவங்களையும் படித்தார்.

பண்டங்கள், பரிவர்த்தனை மதிப்பு, தொழில், கூலி உழைப்பு, உற்பத்தி இவற்றையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டார். மனிதனின் தேவைகளின் பொருட்டே புதிய கண்டுபிடிப்புகளும் உற்பத்தி சக்திகளும் தோன்றி வளர்கின்றன. இந்த வளர்ச்சியால் சமுதாயம் மாறுகிறது. உற்பத்தி சக்திகளும் மாறுகின்றன. இந்த உண்மைகளை உலகுக்குக் கண்டுபிடித்துச் சொன்னார் மார்க்ஸ். இதற்கு நண்பர் ஏங்கெல்சும் உறுதுணையாக இருந்தார்.

தொழிலாளர்களின் எழுச்சி பற்றி மார்க்ஸ் எழுதிய கருத்துகளுக்காக அவரை பிரெஞ்சு அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றியது. பிறகு பெல்ஜியம் சென்று ஏங்கெல்சுடன் இணைந்து ஜெர்மன் சித்தாந்தம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை போன்ற நூல்களை எழுதினார்.

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மிகுந்த வறுமையிலேயே மார்க்ஸ் கழித்தார். அரசியல் கருத்துகளுக்காகப் பலமுறை நாடு கடத்தப்பட்டார். மார்க்ஸ் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது.

கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான நேரமும் ஐரோப்பாவே தீப்பிடித்துக் கொண்ட நேரமும் ஒன்றாகவே இருந்தது. பிரான்சில் லூயிபிலிப் மன்னரை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்தனர். அந்தக் கிளர்ச்சியின் வெப்பம் போலந்து, ஹங்கேரி, ஸ்பெயின், ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் பரவியது. மார்க்ஸýம், ஏங்கெல்சும் தங்கள் சொந்த மண்ணில் புரட்சியின் வருகையைக் காண விரும்பினர். தொழிலாளர்களுக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினர்.

மார்க்ஸியம் என்பது வெறும் அரசியலுக்கு மட்டும் பொருந்துகிற தத்துவம் இல்லை. அது மனித வாழ்க்கையைப் பண்படுத்திக் காட்டுகிற ஓர் ஒழுங்குமுறை.

மனிதன் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தான் என்பதை டார்வின் கண்டுபிடித்தார். மானிட இனத்தின் சரித்திரம் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.

மார்க்ஸின் பிரதான பணி சோஷலிசத்தைப் பற்றி விவரித்தது அல்ல; மூலதனத்தைப் பற்றி அக்குவேறு, ஆணிவேறாக அம்பலப்படுத்தியதுதான். மூலதனம் என்ற நூலை எழுதி உலகையே தன் பக்கம் திருப்பினார்.

அப்போது பன்னாட்டுக் கம்பெனிகள் இல்லை. சுதந்திரச் சந்தையும் இல்லை, உற்பத்தியும் அதைச் சார்ந்த முறைகளும் என்றைக்காவது உலகம் சார்ந்ததாக மாறும் என்பதை மார்க்ஸ் அன்றே கூறிவிட்டார்.

தொழிலாளி எவ்வளவு செல்வத்தை உற்பத்தி செய்கிறானோ அந்த அளவுக்கு வறுமையில் வாடுகிறான். தொழிலாளி எவ்வளவு பொருள்களை உருவாக்குகிறானோ அந்த அளவுக்கு மலிவாகத் தனது உழைப்பை விற்கிறான். முதலாளித்துவ அமைப்பு முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்று அறிவுபூர்வமாக உணர வைத்தார். ஆனால் அந்த நாள் தானாக வந்துவிடாது எனவும் உணர்த்தினார்.

சமுதாயத்தில் இந்தக் கொள்கைகளை உறுதிப்படுத்த, பாட்டாளி வர்க்கத்துக்கு அதன் சக்தியை உணர்த்த கம்யூனிஸ்டுகள் கிரியா ஊக்கிகளாய் செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார். மார்க்சின் உயிர் மூச்சும் அதுவாகவே இருந்தது.

தொடர்ந்து வறுமையில் வாடிய மார்க்ஸின் வாழ்வில் வேராக இருந்த மனைவி ஜென்னியும் இறந்து போனார். எல்லா சோகங்களுக்கு மத்தியிலும் மார்க்ஸ் தன் கருத்துகளை பாட்டாளி வர்க்கத்துக்காகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார்.

ஒவ்வொரு காலத்திலும் ஆளுகின்ற கருத்துகள் அந்தக் காலத்தின் ஆளும் வர்க்க சிந்தனைகளாகவே இருக்கின்றன என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர் மார்க்ஸ். எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு, எட்டுமணி நேர தூக்கம் என்றார். இப்படி மனிதர்களுக்காக, மக்களுக்கான அதிகாரம் பற்றி சிந்தித்த மார்க்ஸ் நோய்வாய்ப்பட்டார். 1883-ஆம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி மார்க்ஸ் மூச்சு நின்றுவிட்டது.

மார்க்ஸின் 40 ஆண்டுகால சிந்தனையில் முகிழ்த்ததே “மூலதனம்’. அது அரசியல் பொருளாதாரத் தத்துவம் மட்டுமல்ல; மனித வாழ்க்கையின் பயன்பாட்டுக் கருவூலமாகும். முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பை தூக்கியெறிந்து ஒரு சோஷலிச சமூகத்தை, பொதுவுடமைச் சமுதாயத்தை, கட்டியமைப்பதில் தொழிலாளர் வர்க்கம் வகிக்க வேண்டியதை மார்க்ஸ் கண்டறிந்தார்.

செல்வந்தன் ஓர் ஏழைக்கு எதைச் செய்தாலும் அவை அனைத்தையும் நிச்சயம் திரும்பப் பெற்றுக் கொள்கிறான் என்றார் மார்க்ஸ்.

இன்று எந்த முற்போக்கு அமைப்புகளும் மார்க்சிய கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் விடுதலையை வென்றெடுக்க முடியாது.

(கட்டுரையாளர்: விரிவுரையாளர், சாஸ்தா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கீழா நிலைக்கோட்டை).

Posted in Biography, Biosketch, Carl Marx, China, Communism, Das Kapital, History, India, Karl, Karl Marx, Marks, Marx, Marxism, Russia, Socialism, Society, Soviet, USSR | Leave a Comment »

Uttar Pradesh Elections – Anlaysis: BSP, BJP, Congress, SP

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

உ.பி. மாநிலத் தேர்தல்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.

பாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.

மற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.

இப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.

மாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.

உ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.

===========================================================
உ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்

லக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:

உ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.

நான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.

அவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி

  • 139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்
  • 86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,
  • 93 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும்,
  • 61 முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.

முலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

================================================

உ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை

புது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.

இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.

403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

பணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.

தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

=================================================================
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி

எட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.

சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

அதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.

லக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.
=================================================================
அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி

லக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

கட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.

பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.

அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.

விதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.

அரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

சுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.

அங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.

வேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.

இளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

முதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.

விலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.

பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

பாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.

=================================================================

Posted in abuse, Alliances, Allocation, Amar Singh, Amitabh, Anlaysis, Apna Dal, Apna Dhal, Assembly, Ayodhya, Backgrounder, BJP, booth capturing, Boothcapturing, Brahmins, BSP, candidates, Caste, Chief Minister, CM, Communist, Congress, Corruption, CPI, EC, Elections, Electorate, Employment, FC, Females, Filmfare, History, Janata Dal, Jats, Jobs, Kalyan, Kalyan Singh, Kanshiram, Lucknow, Manifesto, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mulayam, Mulayam Singh Yadav, Muslim, Natwar, OBC, Opinion, Party, pension, Perspectives, Polls, Religion/Politics, Reservation, Samajvadi, Samajwadi, SC, School, seats, Sonia, SP, ST, Surya Namaskar, Tiwari, UP, Uttar Pradesh, Vajpayee, Vande Mataram, Vandhe Mataram, Varanasi, VAT, voters, Votes, VP Singh, Women, Yadav, Yoga, Yogasana, Youth | Leave a Comment »

Chickenpox & Measles epidemic in Chennai – Medical Treatment options

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

சென்னையில் பரவுகிறது சின்னம்மை

சென்னை, மார்ச் 12: சென்னையில் சின்னம்மை (“சிக்கன்பாக்ஸ்’), தட்டம்மை (“மீஸில்ஸ்’) பரவத் தொடங்கியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் சின்னம்மை – தட்டம்மையால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சின்னம்மை – தட்டம்மை பரவுவதற்கான காரணம், பாதிக்கப்படும் நிலையில் சிகிச்சை, உணவு முறை, தடுத்துக் கொள்வது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

அறிகுறிகள் என்ன? “”பருவ மாற்றம் (கோடை) காரணமாக “வெரிசல்லா úஸôஸ்டர்’ என்ற வைரஸôல் சின்னம்மை பரவுகிறது. லேசான காய்ச்சல், உடலில் பொதுவாக மார்பகத்தில் அம்மை கொப்புளங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். முன்புபோல் இல்லாமல் அலோபதி மருத்துவத்தில் தற்போது அம்மை நோயைக் குணப்படுத்த நல்ல மருந்து உள்ளது.

“ஏசைக்ளோவிர்’ என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் அம்மை நோய் குணமாகும். இந்த மாத்திரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. அம்மையின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 5 வேளைகள் வீதம் தொடர்ந்து 5 நாள்களுக்கு இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் அம்மை மறையும். இத்துடன் வைட்டமின் ஏ சத்து மாத்திரையும் தரப்படும்.

சுய மருத்துவம் கூடாது: அம்மை குறித்துச் சந்தேகம் எழும் நிலையில் சுயமாக மருந்துகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அம்மை காரணமாக நிமோனியா காய்ச்சல், மூளைக் காய்ச்சலால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அம்மையுடன் மூச்சுத் திணறலோ அல்லது நினைவிழத்தலோ ஏற்பட்டால் நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

உணவு முறை: அம்மையால் பாதிக்கப்படும் நிலையில் காரம் – மசாலா இல்லாத உணவைச் சாப்பிட வேண்டும். தயிர் சாதம் நல்லது. கீரை, கேரட் உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்லது. அரிப்பு ஏற்படும் நிலையில் கொப்புளங்களை கிள்ளுவது கூடாது. இருமினால், தும்மினால்கூட காற்றின் மூலம் அம்மை வைரஸ் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவரை வீட்டில் தனிமையில் வைத்துப் பராமரிப்பது நல்லது. நல்ல காற்றோட்டமான இடத்தில் நோயாளி ஓய்வு எடுக்க வேண்டும்.

தடுப்பூசி உண்டு: ஒருவருக்கு சின்னம்மை வந்துவிட்ட நிலையில், மற்றவர்கள் அம்மை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள மிக அவசியம் ஏற்படும் நிலையில் சின்னம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் இதன் விலை ரூ.1,200. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2,400 செலவு செய்து இத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து வசதி இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

========================================================
அம்மையை விரட்டும் சிறுங்கி பற்பம்

சென்னை, மார்ச் 12: சின்னம்மை உள்பட எல்லாவித அம்மையையும் போக்கும் ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உண்டு என்றார் டாக்டர் ராஜலட்சுமி சிவராமன்.

“”அம்மையால் பாதிக்கப்பட்டு உறுதியாகிவிட்ட நிலையில், நோயாளியை டாக்டரிடம் அழைத்துச் செல்லாமலேயே சித்த மருந்துக் கடைகளில் உறவினர்கள் சிறுங்கி பற்பத்தை (வெண்மையான பவுடர்) வாங்கி நோயாளிக்குக் கொடுக்கலாம். இந்த பற்பத்தை இரண்டு சிட்டிகை அளவு, காலை-மாலை இரு வேளை பாலில் கலந்து நோயாளிக்கு ஒரு வாரம் கொடுத்தால் அம்மை மறையும். நோய் வராமல் தடுத்துக் கொள்ள மற்றவர்களும் இந்த பற்பத்தைச் சாப்பிடலாம்.

அலோபதி மருந்துகள் சாப்பிட்டாலும்கூட இந்த பற்பத்தைச் சாப்பிடுவதில் தவறில்லை. ஏனெனில் அம்மை காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள உள் சூட்டை இந்த பற்பம் குணப்படுத்தும். வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் வேப்ப இலையைப் பரப்பி நோயாளி படுப்பது நல்லது.

அம்மை பரவாமல் தடுக்கும் ஆற்றலும் வேம்புக்கு உண்டு’ என்றார் டாக்டர் ராஜலட்சுமி சிவராமன்.
=============================================

சின்னம்மை நோய் தாக்கிய மாணவர்கள் தனியாக அமர்ந்து தேர்வு எழுதலாம்

சென்னை, மார்ச் 12: சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

“”பிளஸ் டூ தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் யாராவது திடீரென்று சின்னம்மையால் பாதிக்கப்பட்டு, தேர்வு எழுதும் நிலையில் இருந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அவர்களுக்காகத் தனி அறை, மேசை, நாற்காலி அளிக்கப்படும். தனியாக அவருக்கென்று ஒரு மேற்பார்வையாளரும் இருப்பார்” என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் வெள்ளிக்கிழமை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

“”நன்றாகப் படிக்கும் மாணவர் இந்நோய் காரணமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படா விட்டால், அவருக்கு ஓராண்டு வீணாகிவிடும். எனவே, மனிதாபிமான அடிப்படையில் அவர் தேர்வு எழுதலாம். மருத்துவர்கள் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோயுற்றவரை நேரில் கண்டறிந்து தேர்வுக்கூட மேற்பார்வையாளரே தெரிவித்து அதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம் என்றும், எனினும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க இயலாத நிலையில் உள்ளவர் யாரும் தேர்வு எழுத முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

===================================================

சின்னம்மை: சென்னையில் 410 பேர் பாதிப்பு

சென்னை, மார்ச் 16: சென்னையில் சின்னம்மை நோயினால் 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப் பகுதிகளில் 133 பேர் பாதிக்கப்பட்டு சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது குறித்து அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

“”சின்னம்மை நோய் 15 வயதுக்குள்பட்டவர்களை அதிகமாகத் தாக்கும் தன்மை உடையதால் குழந்தைகள் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

சின்னம்மை நோய் தாக்கியவர்களுக்கு “ஏசைக்ளோவீர்’ எனப்படும் மருந்துகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் கிடைக்கிறது. மருத்துவர் மேற்பார்வையில் 5 நாள்களுக்கு இம் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் 1.36 லட்சம் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்நோய் தாக்கியவர்களுக்கு உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தியினால் அவர்களுக்கு மீண்டும் இந்நோய் வரவே வராது. பள்ளிகளில் சிறுவர்களை தினசரி பரிசோதித்து, தோலில் சிவந்த தடிப்புகளோ, கொப்புளங்களோ காணப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு ஒருவாரம் விடுப்பு அளித்து அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக” அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

=====================================================

யாருக்கு சின்னம்மை வராது?

சென்னை, மார்ச் 26: குழந்தைப் பருவத்திலேயே சின்னம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் சின்னம்மை வராது. ஏனெனில் ஒரு முறை சின்னம்மை வந்து குணமானவுடன், நோய் எதிர்ப்புப் பொருள் உடலில் உருவாகி ஆயுள் முழுவதும் சின்னம்மை வராமல் தடுத்து விடும்.

இதேபோன்று இளம் வயதிலேயே தட்டம்மை ஏற்படும் நிலையில், வளரும் நிலையில் தட்டம்மை மீண்டும் வராது. மேலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையிலேயே தட்டம்மை தடுப்பூசி இடம்பெற்றுள்ளதால், தட்டம்மையால் பாதிக்கப்படுவோர் மிக மிகக் குறைவு.

சின்னம்மை தடுப்பூசி நல்லது: சின்னம்மை வராமல் தடுத்துக் கொள்ள தடுப்பூசி உள்ளது; ஆனால் சின்னம்மை வந்த பிறகு இந்தத் தடுப்பூசி பலன் தராது. சின்னம்மை தடுப்பூசி மருந்தின் விலை ரூ.1,200. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2,400 செலவு செய்து இத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

கர்ப்பிணிகளே உஷார்…: சின்னம்மையால் பாதிக்கப்பட்டவருக்கு தனியே அறை, தட்டு, துண்டு, தலையணை, போர்வை அளிப்பது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு சின்னம்மை பரவாமல் தடுக்க முடியும். மேலும் பாதிக்கப்பட்டவர் காற்றோட்டமான அறையில் முழுமையாக ஓய்வு எடுப்பது அவசியம்.

வீட்டில் யாருக்காவது சின்னம்மை ஏற்படும் நிலையில், கருக் குழந்தைக்கு உறுப்புகள் உருவாகும் முதல் மூன்று மாத கால கர்ப்பிணிகள் உஷாராக இருந்து அம்மை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு அம்மை ஏற்பட்டால், வைரஸ் காரணமாக கருக் குழந்தைக்குப் பரவி, பிறவி ஊனம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
====================================================================================
15 மாவட்டங்களில் சின்னம்மை நோய்: அரசு தீவிர தடுப்பு நடவடிக்கை

சென்னை, மார்ச் 26: சென்னையிலிருந்து காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், மதுரை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு சின்னம்மை (“சிக்கன்பாக்ஸ்’) பரவியுள்ளது.

கோடை காரணமாக “வெரிசல்லா úஸôஸ்டர்’ என்ற வைரஸ் மூலம் 10 தினங்களுக்கு முன்பு சின்னம்மை சென்னையில் பரவத் தொடங்கியது. சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மட்டும் இதுவரை 535 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும்…: ஆரம்ப சுகாதார மைய பதிவேடுகளின் அடிப்படையில் வேலூர், மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட மேற்சொன்ன மாவட்டங்களில் தலா 25 பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு வருகிறது.

மாத்திரை இலவசம்: “ஏசைக்ளோவிர்’ என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் 5 நாள்களில் சின்னம்மை குணமாகும். அனைத்து 1,417 ஆரம்ப சுகாதார மையங்களிலும் இந்த மாத்திரையை இலவசமாக விநியோகிக்க அரசின் பொது சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

ஒரு நோயாளிக்கு ரூ.1000 செலவு: மருந்துக் கடைகளில் ஒரு “ஏசைக்ளோவீர்’ மாத்திரையின் விலை ரூ.8.56. சின்னம்மை வந்துவிட்டால் 5 நாள்களுக்குத் தொடர்ந்து மூன்று வேளை மாத்திரை சாப்பிட வேண்டும்; இதனால் ரூ.1,000 அளவுக்கு மருத்துவச் செலவு ஆகும். ஆக, ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் ஒரு நோயாளிக்கு ரூ.1,000 மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

விழிப்புணர்வு பிரசுரங்கள்: சின்னம்மை நோய் மேலும் பரவாமல் தடுக்க நோயின் அறிகுறிகள், நோயாளியைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியம், இலவச மாத்திரை, கேரட் உள்பட வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவு ஆகியவற்றை விளக்கி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.

மூச்சுத் திணறல், நினைவிழத்தல் ஏற்படும் நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது அவசியம் என்றார் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் பி. பத்மநாபன்.

Posted in Acyclovir, Allopathy, Ammai, Ayurveda, Ayurvedha, Chennai, Chicken pox, Chickenpox, Child, Costs, cure, Doctor, Environment, epidemic, Health, Healthcare, Herbal, Infection, Injection, Kid, Local Body, Madras, Measles, medical, Natural, Outbreak, Prevention, Tablet, Treatment, unaani, Unani, Yunaani, Yunani | 2 Comments »

Chennai Municipality Corporation Budget – No new Taxes

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

சென்னை மாநகராட்சி: வரி உயர்வு இல்லாத உபரி பட்ஜெட்

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த வரி விதிப்பு, நிதி நிலைக்குழு தலைவர் ராதா சம்பந்தம்.

சென்னை, மார்ச் 13: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட எந்த வரி உயர்வும் இல்லாத 2007-08ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை வரி விதிப்பு மற்றும் நிலைக்குழுத் தலைவர் ராதா சம்பந்தம் தாக்கல் செய்தார். இதன்படி புதிய வரிகள் இல்லை. பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு பட்ஜெட்டில் ரூ. 2.67 கோடி உபரி நிதியாக காட்டப்பட்டுள்ளது.

சென்னையில் 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும், மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளை மேம்படுத்த ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் வரும் நிதி ஆண்டில் மேற்கொள்ள உள்ள புதிய திட்டங்கள் குறித்து அவர் பேசியது: வரும் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை, தற்போது நடைமுறையில் உள்ள சொத்து வரி உள்பட எந்த வரி விகிதங்களும் உயர்த்தப்படவில்லை.

2007-08ம் நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மொத்த வருவாய் 702.03 கோடியாக இருக்கும். செலவு 699.36 கோடியாக இருக்கும்.

புதிய திட்டங்கள்: சென்னை மாநகராட்சியில் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் உள்ள 296 கிலோ மீட்டர் சாலைகள் ரூ. 90 கோடியில் சிமென்ட் சாலைகளாக மேம்படுத்தப்படும். மக்கள் வசதிக்காக பஸ் நிறுத்தங்களில் உலகத் தரம் வாய்ந்த, அதிநவீன நிழற்குடைகள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, 350 நிறுத்தங்களில் இத்தகைய நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும்.

எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள்: சென்னையில் பெருகிவரும் பாதசாரிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, 15 இடங்களில் இத்தகைய நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். அதிநவீன நிழற்குடை, நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் முறையில் (பி.ஓ.டி.) தனியார் மூலம் மேற்கொள்ளப்படும்.

சாலைகள் மேம்பாடு: மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பேருந்து சாலைகள் ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்படும். முக்கிய சாலை சந்திப்புகளில் அடிக்கடி பழுதடைவதைத் தவிர்க்க ரூ. 4 கோடியில் மாஸ்டிக் ஆஸ்பால்ட் கான்கிரீட் அமைக்கப்படும்.

அனைத்து உட்புறச் சாலைகளும் ரூ. 73 கோடியில் தார் சாலைகளாக மேம்படுத்தப்படும்.

புதிய மேம்பாலங்கள்: சென்னை எழும்பூர் ஆன்டர்சன் பாலம் அருகில் எத்திராஜ் சாலை- கிரீம்ஸ் சாலையையும் இணைக்கும் வகையில் கூவத்தின் குறுக்கே பாலம் கட்டப்படும்.

வில்லிவாக்கம் ரயில்வே கேட் பகுதியில் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு அருகில் எல்.சி. 1 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும்.

வேளச்சேரி, அரும்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.

அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு: 1,146 அங்கன்வாடி மையங்களிலும் உள்ள சமையலறைகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

அனைத்து வார்டுகளிலும் ஆரம்ப சுகாதார மையம்: சென்னையில் தற்போது 115 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் மேலும் 40 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளிலேயே பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டம் நடத்த ஒவ்வொரு மண்டலத்திலும் தனியான கட்டடம் கட்டித்தரப்படும்.

மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்களில் முதல் 25 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

கலை, அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அவர்களின் படிப்பு முடியும் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். மாநகராட்சி பள்ளி மாணவர்களில் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தனியார் மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

முதியோர், ஊனமுற்றோர் எளிதில் பயன்படுத்தும் வகையில் 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். மாநகராட்சி தாய்சேய் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் செலவில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதிகள் அமைக்கப்படும் என்றார் மேயர்.

Posted in Anganvadi, Anganwadi, Bonds, Budget, Chennai, Child, Children, Civic, Coporation, DMK, Economy, Education, Expenses, Finance, Flyovers, Healthcare, Income, IT, Kids, Loans, Local Body, Loss, Ma Subramanian, Maintenance, Mayor, MK Stalin, Municipality, Planning, Profit, Radha Sambandham, Revenues, Rippon, Rippon Building, Roads, Schemes, Schools, Stalin, Streets, Surplus, Tax, Taxes, TN, Welfare, Women | 1 Comment »

“Sify gives wrong details on Rajni & Shankar with AR Rehman’s ‘Sivaji’ The Boss” – AVM

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்

சென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

ஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்பனை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“சிவாஜி’ படத்தின் விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.

இதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.

ஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.

எங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.

ஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Abroad, Aingaran, Andhra, Andhra Pradesh, AP, ARR, Audio, AVM, AVM Sarvanan, Ayngaran, Aynkaran, Canada, Distributor, DVD, Europe, Iyngaran, Iynkaran, Karunamoorthy, Karunamurthy, Kerala, Kolywood, Market, NRI, Overseas, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rehman, Rumour, Sale, Sarvanan, Shankar, Shivaji, Shivaji the boss, Sify, Singapore, Sivaji, Sivaji Story, Sivaji the Boss, Sri lanka, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Pictures, Tamil Stars, Telugu, Tollywood, VCD, video | Leave a Comment »

RS Narayanan – Cows, Biodiversity, Organic Growth & Environment

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

அழிந்து வரும் பாரம்பரியப் பசுக்கள்

ஆர்.எஸ். நாராயணன்

நமது இயற்கை அற்புதங்களின் முக்கிய அம்சம் “பயோடைவர்சிட்டி’ என்ற பல்லுயிர்ப் பெருக்கம்.

இப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு நமது தாவரங்கள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் வேற்றுமைப் பண்புகள் அடிப்படை. உதாரணமாக நெல்லில் மட்டும் 5 ஆயிரம் வித்தியாசமான ரகங்கள் உண்டு. கத்தரிக்காயில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் தமிழ்நாட்டில் உண்டு.

இயற்கையின் அற்புதத்தால் நிகழ்ந்த பல்லுயிர்களின் வேற்றுமை குணங்களின் பல்லாயிரம் ஆண்டுக்காலப் பெருக்கமே நமது தேசியச் செல்வம். நவீன விவசாயத்தாலும், நவீன கால்நடை வளர்ப்பினாலும் நமது தேசியச் செல்வங்கள் “”விதைவங்கி” “”ஜீன்வங்கி” என்ற பெயரில் கொள்ளை போனது ஒரு பங்கு. அரசின் ஆதரவு இல்லாமல் அழிந்தவை பல பங்கு.

எதிர்கால வேளாண்மைக்கு வளம் சேர்க்கும் இலக்கில் நாம் இழந்துவிட்ட நெல் ரகங்களைத் தேடிப் பாதுகாத்து அதன் சாகுபடியை உயர்த்த தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நமது பாரம்பரிய நெல்லில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் பல விவசாயிகள் கிச்சலி, சீரகச்சம்பா, பெருங்கார், சம்பா, வையக்குண்டான் என்று தேடி அலைந்து பயிர் செய்யவும் ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் இதே விழிப்புணர்வு பாரம்பரியப் பசுக்களின் மீட்பில் இல்லை. “”மூர்த்தி சிறிது, ஆனால் கீர்த்தி பெரிது” என்று பெயர் பெற்ற புங்கனூர்க் குட்டை எங்கே? காங்கேயம் எங்கே? உம்பளச்சேரி எங்கே? காங்கிரஜ் எங்கே? ரதி எங்கே? சாசிவால் எங்கே? தார்ப்பார்க்கர் எங்கே? தாங்கி எங்கே? சிந்தி எங்கே? என்று கேட்பாரில்லை. இன்றுள்ள சீமைரகக் கலப்பினங்களை விடவும் அல்லது அதே அளவும் அதைவிடக் கெட்டியான பால் வழங்கும் இயல்புள்ளவை நாம் வளர்த்த பாரம்பரியப் பசுக்கள்.

இந்தியாவின் செல்வங்களை மதிப்பீடு செய்ய முகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்திலேயே ஆங்கிலேயர்கள் இங்கு வந்து நமது மேழிச் செல்வத்தைக் கண்டு வியந்தனர். நாட்டினப் பசுக்களின் பால், காளைகளின் உழைப்புத்திறன், நோயற்ற நிலை கண்டு புகழ்ந்துரைத்தனர்.

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் லிட்டில்வுட், ஓல்வர், மெக்கென்னி என்று கால்நடைத் துறையில் பணியாற்றிய பலரின் குறிப்புகள் கவனத்திற்குரியவை.

18, 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்திய மாடுகள் பிரேசில், வடஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. அன்றுதொட்டே இந்திய நாட்டு மாடுகளுக்கு அந்நாடுகளில் மிகுந்த மரியாதை உண்டு. அகராதியில் திமில் பருத்த மாட்டு இனம் என்று பொருள். இந்தியப் பசுக்களை அந்நியர்கள் இப்பெயரில் அழைப்பார்கள். சீமை இன மாடுகளுக்கு திமில் இல்லை. இந்தத் திமில் காரணமாகவே இந்திய மாடுகள் வெப்பத்தைத் தாங்கும் சக்தியுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் இருந்தது.

சீமை மாடுகளின் இயல்புப்படி அந்த நாட்டின் தட்பவெப்பம் வளர்ப்பு காரணமாக அதிக பால் தந்தாலும் வலுக்குன்றியவை. நோய் எதிர்ப்புச் சக்தி இல்லை. இறைச்சியிலும் ருசி இல்லை. இறைச்சி ருசிக்காகவும் நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் திமில் பருத்த மாடுகள் கடல் கடந்து சென்றன.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது கறவைக்காகவும் சில மாடுகளின் தூயரகம் போற்றப்பட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டவற்றில் காங்கிரஜ், தார்ப்பார்க்கர், சிவப்பு சிந்தி, சாஹிவால், நெல்லூர், புங்கனூர், காங்கேயம் குறிப்பிடத்தக்கவை.

அம்ரித்மகால், ஹள்ளிகர், ஓங்கோல் காளைகளின் சக்தி குதிரை சக்தியைவிட அதிகம். இவற்றில் ஹள்ளிகர், அமரித்மகால் செல்லும் வேகத்தினால் திப்புசுல்தானுக்குப் போர் வெற்றி கிடைத்துள்ளது. ராணுவத் தளவாடங்களைச் சுமந்து செல்லும் வண்டிக்குப் பூட்டப்பட்ட இக் காளைகள் சிட்டாய்ப் பறந்து வெள்ளைக்காரர் குதிரைகளை வென்றனவாம். அம்ரித்மகால் இன காளைகளை உருவாக்கியவர்கள் உடையார் மன்னர்கள். வளர்த்தவர்கள் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும்.

தமிழ்நாட்டில் காங்கேய இனம் அழிந்து வருகிறது. கூடவே கொரங்காடு மேய்ச்சல் நிலமும் அழிகிறது. சில தலைமுறைகளுக்கு முன்பு பாளையங்கோட்டை ஜமீன் மன்றாடியார் வம்சத்தினர் காங்கேய மாடுகளின் இனப்பெருக்கத்தையும் கொரங்காடு மேய்ச்சல் நிலத்தையும் தொடங்கினர். காங்கேயம் பகுதி கறவைப் பசுக்களுடன் ஹள்ளிகர் – அம்ரித் மகால் கலப்பினமாக காங்கேயம் உருவானது. ஓங்கோல் கலப்பும் இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உம்பளச்சேரி இனப்பெருக்கத்துக்கு வேலாயுதம்புரையர் என்ற ஜமீன்தார் 435 ஏக்கர் நிலம் வழங்கி 1950-ல் கொற்கைப் பண்ணையை உருவாக்கினார். சரியான தூய உம்பளச்சேரி இனத்திலிருந்து 4 லிட்டர் பால் பெறலாம்.

இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட நல்ல கறவை இனங்களான காங்கிரஜ், நெல்லூர், தார்ப்பார்க்கர், காங்கேயம், புங்கனூர், சிந்தி ஆகியவற்றின் தூய்மை இனம் காப்பாற்றப்படாமல் ஜெர்சி – எச்.எஃப் ப்ரீசியன் சீமை இனங்கள் கொண்டு வந்து நமது நாட்டு மாடுகளுக்குக் கருஊட்டம் செய்தனர்.

சீமை மாடுகளை இந்தியாவில் வளர்க்க குளிர்சாதன அறைகள் வேண்டும். செலவு மிக்கது. நோய்மிக்கது. இப்படி உருவாக்கப்பட்ட கலப்பினத்தில் சீமை இனப் பண்புகள் மாறியதால் சராசரி பால் அளவு 5 லிட்டர்தான் தேறுகிறது. கொடி கோமாரி நோய் தொற்றுகிறது. இம் மாடுகளின் இறப்பு வீதமும் அதிகம். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிப்பதால் வந்த வினை.

இந்திய மாடுகளில் மிகவும் குள்ள ரகத்தை அடையாளம் செய்து வளர்த்தவர் புங்கனூர் ராஜா. சித்தூர் மாவட்டத்தில் இது மதனப்பள்ளி – பாலமனூர் பகுதி என்பதால் சென்னை – வேலூர் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்க வாய்ப்புண்டு. மிகவும் குறைந்த எடையுள்ள இந்த மாட்டில் சராசரி 4 லிட்டர் பால் பெறலாம். வளர்க்கும் செலவு குறைவு.

நமது கால்நடைத்துறையினர் அந்த இனத்தைக் கண்டுபிடித்து, பெருக்கி விவசாயிகளுக்கு அளித்தால் பேருதவியாக இருக்கும் அல்லவா?

Posted in Agriculture, Animal, Animal Husbandry, Biodiversity, Bulls, Chittoor, Chittore, Chittur, Cows, Environment, Farming, milk, organic, Ox, Vet, veterinary | Leave a Comment »