‘Annual income generation from Palm trees is Rs. 5000 Crores’ – Kumari Ananthan
Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007
தமிழகத்தில் பனை மரங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி வருமானம்: குமரி அனந்தன் தகவல்
கன்னியாகுமரி, மார்ச் 8: தமிழகத்தில் பனை மரங்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 5,000 கோடி வருமானம் ஈட்டும் வாய்ப்புள்ளதாக மாநில பனை வாரிய நலத் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தற்போது 4.25 கோடி பனை மரங்கள் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3.50 கோடி பனை மரங்கள் பயன் தராமல் உள்ளன.
இப் பனை மரங்களில் 1.25 கோடி பனை மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் உள்ளன. இருப்பினும், 2.50 கோடி பனை மரங்களை உடனே பயன்படுத்தலாம்.
தற்போது தமிழகத்தில் சுமார் 70 லட்சம் பனை மரங்களில் மட்டுமே பதநீர் இறக்கப்படுகிறது.
இந்நிலையில், 4 லட்சம் பனை ஏறும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தி ரூ.80 கோடியில் அவர்களுக்கு கருவிகள் வழங்கி பயிற்சி கொடுக்கும்பட்சத்தில், ஆண்டுக்கு ஒவ்வொரு பனை மரமும் ரூ. 2,500 வீதம் பலன் தரும். இதன்படி பார்த்தால் ஆண்டுக்குகு ரூ. 5,000 கோடி வருவாய் கிடைக்கும்.
இத் திட்டத்தை விரிவாக ஆராய்ந்து, தமிழக முதல்வரிடம் பனை வாரியம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, அதிகாரிகளும் இதுபற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
நானும் அந்த அதிகாரிகளிடம் எனது கருத்துகளைத் தெரிவித்தேன். இத் திட்டம் செயல் வடிவம் பெற்றதும், தொழிலாளர்கள் தினமும் இறக்கும் பதநீரை அரசே தினமும் கொள்முதல் செய்ய வேண்டும்.
————————————————————————————–
அழிந்துகொண்டிருக்கும் ஆதித் தொழில்
ச.ம. ஸ்டாலின்
இந்தத் தலைமுறை கொஞ்சம் விசித்திரமானது. தனது பாரம்பரிய சொத்துகள் அனைத்தையும் தன் கண் முன்னாலேயே இழந்துகொண்டிருக்கும் ஒரு தலைமுறை இது. இழந்துகொண்டிருக்கும் பட்டியலில் நமது ஆதித் தொழில்களில் ஒன்றான பனைத் தொழிலையும் இப்போது சேர்த்துக்கொள்ளலாம்.
விவசாயத்துடன் இணைந்த தொழில், பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு, மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக்கச் சூழல், ஏற்றுமதி எனப் பல்வேறு வாய்ப்புகளுடையது பனைத் தொழில். நம்முடைய பாரம்பரியத் தொழில்களுல் ஒன்றான இத்தொழிலை மேற்கொள்ள நமக்குள்ள ஆதாரங்கள் உலகில் வேறெங்கும் இல்லை.
உலகளவில் பனை மரங்கள் அதிகளவில் உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. அதிலும் நம் நாட்டிலுள்ள 40% பனை மரங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. தவிர, பருவநிலை சார்ந்து ஆண்டு முழுவதும் பனைத் தொழில் மேற்கொள்வதற்கான சாதக நிலை இங்கு மட்டுமே உள்ளது. முறையாகப் பயன்படுத்தப்பட்டால் தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 5 சதவிகிதத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். ஆண்டுக்கு ரூ. 5,000 கோடி ஈட்டும் தொழிலாக இது மாறும். ஆனாலும், கவனிப்பாரற்று அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது இத்தொழில்.
பனைத் தொழிலுக்கென 1968-ல் உருவாக்கப்பட்டது தமிழ்நாடு பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம். கதர் வாரியத்தின் கீழ் செயல்பட்ட இந்த அமைப்புக்கு மும்பை கதர் ஆணைக் குழு மூலதனக் கடன் வழங்கி வந்தது.
இதுதவிர, மாவட்ட அளவில் 8 சம்மேளனங்கள், 1,511 கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 3.5 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். பனைப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொண்ட இணையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் பெற்றனர்.
நல்ல லாபத்தில் இயங்கி வந்ததால் இணையத்துக்கென பல்வேறு இடங்களில் பனந்தோப்புகள், கட்டடங்கள் என சொத்துகள் வாங்கப்பட்டன. போதிய அக்கறை காட்டியிருந்தால் மாநிலத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனைப் பொருள்களுக்கென ஒரு நிரந்தரச் சந்தையாக இந்த இணையத்தை மாற்றியிருக்க முடியும்.
ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகளின் தவறான கொள்கைகளால் தொடர்ந்து “கண்டுகொள்ளப்படாமல்’ போனதாலும் கூட்டுறவு நிறுவனங்களுக்கே உரிய சீர்கேடுகளாலும் இணையம் சீரழிந்தது.
இந்நிலையில், 1996-ல் மூலதனக் கடன் வழங்குவதை நிறுத்தியது மும்பை கதர் ஆணைக் குழு. பல இடங்களில் விற்பனையகங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டன. இணையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கில் ஊதிய நிலுவை. அந்தத் தொகையே ரூ. 5 கோடியைத் தாண்டுகிறது. இன்று பெயரளவிலான அமைப்பாக மாறிவிட்டது இணையம்.
பனை என்றாலே கள்ளுடன் மட்டுமே தொடர்புபடுத்துவதும் கள் விற்பனை சரியா? தவறா? என்ற விவாதத்தின் பெயரில் இத்தொழிலைப் புறக்கணிப்பதுமே இங்கு அரசியல் வாடிக்கையாகிவிட்டது. கள் அல்ல; பதநீரை வைத்தே இத்தொழிலில் பல வாய்ப்புகளையும் சந்தையில் பெரும் மாற்றத்தையும் உருவாக்க முடியும். தவிர, மதிப்புக் கூட்டப்பட்ட பனைப் பொருள்களுக்கென உலகச் சந்தையில் நல்ல இடம் இருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பனைப் பொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாகச் சந்தைப்படுத்தினால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலையளிக்க முடியும். அதற்கு பனைத் தொழில் தொழில்வழிமயமாக்கப்பட வேண்டும்.
இணையத்தை சுய அதிகாரமிக்க பொது நிறுவனமாக மாற்ற வேண்டும். பால் கொள்முதல் – விநியோக முறை போன்று பனைப் பொருள்களை அந்த நிறுவனம் மூலம் நேரடியாகக் கொள்முதல் – விநியோகம் செய்ய வேண்டும். பாளைச் சீவுதலில் புதிய உத்தி, பதநீர் சளிப்படைதல், பனை வெல்லம் கசிவடைதல் ஆகியவற்றைத் தவிர்ப்பது என நிறைய மாற்று முறைகளைக் கண்டறிய வேண்டும். பனைத் தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஒருபுறம் பனை மரங்கள் வெட்டப்படுவது தொடர்கிறது; மறுபுறம் பனை பயிரிடுவது அருகி வருகிறது. அபாயமிக்க தொழில்களில் ஒன்று பனையேறுதல். இளைய தலைமுறையினர் எவரும் பனையேறுவதில் ஆர்வம் காட்டவில்லை; அதில் அர்த்தமுமில்லை. வாழ்ந்து கொண்டிருப்பது பனையேறிகளின் கடைசித் தலைமுறை. அவர்கள் காலமும் போய்விட்டால் அடுத்த தலைமுறைக்கு எந்தப் பல்கலைக்கழகம் மூலமாக அரசு பனையேறக் கற்றுக் கொடுக்கப் போகிறது?
இதுவரை பனைத் தொழிலை ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த பிரச்னையாகவும் அரசியல் பார்வையுடனும் மட்டுமே அரசு அணுகி வந்திருக்கிறது. கண்துடைப்பு நடவடிக்கைகள் மாற்றங்களுக்கு வழிவகுப்பதில்லை. எத்தனையோ திட்டங்களின் பெயரால் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழிக்கிறது அரசு. அரசு நினைத்தால் பனைத்தொழில் மூலமாக சில கோடிகளில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடியும்; மாற்றங்களை உருவாக்க முடியும். மாற்றம் நிகழுமா?
Vasu Dharmar said
Dear Sir…
I am interesting to know the palm trees usage and its income opportunity. Please send the updations to my mail ID.
Thanks & Regards
Vasu Dharmar B.