Engineering, Medical Professional courses Entrance Exams – Analysis, Options
Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007
இன்னொரு கோரிக்கை உண்டு
தொழிற்கல்வி படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு உண்டா, இல்லையா என்று குழம்பிக் கொண்டிருந்த மேனிலைப் பள்ளி மாணவர்களை, குறிப்பாக பெற்றோர்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளது குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஒப்புதல்.
பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யும் சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏறக்குறைய இரு மாதங்கள் ஆன பின்பே ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த ஒப்புதல் இன்னும்கூட சற்று முன்னதாகவே கிடைத்திருந்தால் தேவையற்ற மன உளைச்சல் தவிர்க்கப்பட்டிருக்கும்.
இப்போது, நுழைவுத் தேர்வு முறை கிடையாது என்பது சட்டப்பூர்வமாக உறுதியாகிவிட்டது. இனி பொதுப் போட்டியில் வாய்ப்பு இழந்த கிராமப்புற மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை மலரும் நேரத்தில், சில நெருடலான நிகழ்வுகளும் நடக்கவே செய்கின்றன.
பொது நுழைவுத் தேர்வு முறையை அரசு ரத்து செய்துவிட்டாலும் தமிழகத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) நுழைவுத் தேர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 15 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பாடப் பிரிவுகளில் 30 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க முடியும்.
ஒரு மாணவன் எத்தனை தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத் தேர்வு எழுத முடியும்? ஒவ்வொரு நுழைவுத் தேர்வுக்கு அல்லது விண்ணப்பத்துக்கு குறைந்தது ரூ.500 செலவிட்டாக வேண்டும் என்றால், ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு இது எப்படி சாத்தியமாகும்?
இந்த தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழக அரசு வலியுறுத்தும் ஒற்றைச் சாளர முறைக்கு உடன்பட வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில், 2001-ம் ஆண்டு இதே போன்ற பிரச்சினையின்போது, தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் நுழைவுத் தேர்வு முறை ரத்துக்கு ஒப்புக்கொண்டாலும் நிர்வாக ஒதுக்கீட்டில் தங்களை அரசு கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) நோக்கமே மேலும் மேலும் தனியார் (நிகர்நிலை) பல்கலைக்கழகங்களை உருவாக்குவதுதான். ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இத்தகைய தனியார் பல்கலைக்கழகங்கள் பெருகியுள்ளன.
நுழைவுத் தேர்வு முறை அமல் செய்யப்பட்ட காலத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. எனவே, மாணவர்களை வடிகட்டுவதற்கு ஓர் வழிமுறையாக நுழைவுத் தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 250 ஆகிவிட்டது. போதிய அளவு மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகிறது. எனவே, நுழைவுத் தேர்வு முறை தேவையில்லை என்ற கல்வியாளர்களின் கருத்தும் கவனிக்கத் தக்கது.
அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே ஐஐடி, என்ஐடி-யில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 50 சதவீதம் அந்த மாநிலத்து மாணவர்களுக்கும் மீதி 50 சதவீதம் வெளிமாநில மாணவர்களுக்கும் என ஒதுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் இந்தியா முழுவதும் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர வாய்ப்பு உள்ளது.
இதே போன்று தனியார் (நிகர்நிலை) பல்கலைக்கழகங்கள் ஒரே அமைப்பாக, இந்தியா முழுமைக்கும் ஒரேயொரு பொது நுழைவுத் தேர்வை நடத்தினாலும் வரவேற்கக் கூடியதே.
This entry was posted on மார்ச் 7, 2007 இல் 10:33 பிப and is filed under Abdul Kalam, Analysis, Anna University, APJ, Backgrounder, Education, Engineering, Entrance, Exam, History, IIM, IIT, JEE, Kalam, Law, medical, Options, President, professional, REC, Research, solutions, Suggestions, Tamil, Technology, Tests, UGC, University. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்