The Quattrocchi fallout: Sonia’s gift to India?
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007
குவாத்ரோச்சி சிக்குவாரா?
போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான குவாத்ரோச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென மத்திய அரசை பாஜகவும் இடதுசாரிக் கட்சிகளும் வற்புறுத்தியுள்ளன.
மோசடி, ஏமாற்று வேலை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தென்அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவில் சர்வதேச போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ள குவாத்ரோச்சி இப்போது அந்நாட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது இரண்டு அம்சங்களைப் பொறுத்தது. முதலாவதாக, இந்திய அரசு இதில் தீவிர முனைப்புக் காட்டியாக வேண்டும். இரண்டாவதாக, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய அளவுக்கு குவாத்ரோச்சி குற்றங்களைப் புரிந்துள்ளதாக ஆர்ஜென்டீனா திருப்தி அடைந்தாக வேண்டும்.
இந்தியாவை உலுக்கிய ஊழல் விவகாரங்களில் போபர்ஸ் விவகாரம் மிகப் பிரபலமானது. 1980களில் இந்திய அரசு சுவீடனைச் சேர்ந்த போபர்ஸ் என்னும் நிறுவனத்திடமிருந்து பெரிய பீரங்கிகளை வாங்கியது. இந்தப் பீரங்கிகளை வாங்கும்படி செய்ய இந்திய அரசியல்வாதிகளுக்கு ரூ. 64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சுவீடனின் வானொலி 1987ல் செய்தி ஒலிபரப்பியபோது இந்த விவகாரம் வெடித்தது. இதில் சிலர் இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.
போபர்ஸ் விவகாரத்தின் விளைவாக 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது. இந்த ஊழலில், யார் யார் பணம் பெற்றார்கள் என்பது தொடர்பாகப் பலரின் பெயர்கள் அடிபட்டன. வழக்குகளும் போடப்பட்டன. ராஜீவ் காந்தியின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என வர்ணிக்கப்பட்ட இத்தாலியரான குவாத்ரோச்சி அந்த இடைத்தரகர்களில் ஒருவர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் கடந்த பல ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர். சிலர் காலமாகிவிட்டனர். எஞ்சி நிற்கிற ஒருவர் குவாத்ரோச்சியே.
குவாத்ரோச்சி இந்தியாவில் இருந்தபோதே அவரைக் கைது செய்திருக்க முடியும். ஆனால் 1993 ஜூலையில் அவர் இந்தியாவிலிருந்து மலேசியாவுக்குத் தப்பினார். வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடித்து ஒப்படைக்க நாடுகள் இடையே பரஸ்பர உடன்பாடுகள் செய்து கொள்வது உண்டு. மலேசியாவுடன் இந்தியாவுக்கு அப்போது அவ்வித உடன்பாடு இல்லை. இப்போது ஆர்ஜென்டீனாவுடனும் இந்தியாவுக்கு அப்படிப்பட்ட உடன்பாடு கிடையாது.
குவாத்ரோச்சியை பிடித்து ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கை மலேசிய உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இந்திய அரசு தகுந்த ஆதாரங்களை அளிக்கவில்லை என்று அது கூறியது. இத் தீர்ப்பின் மீது இந்திய அரசு மேல் முறையீடு செய்ய இருந்த சமயத்தில் குவாத்ரோச்சி அங்கிருந்தும் தப்பினார்.
இது ஒருபுறமிருக்க, பிரிட்டிஷ் வங்கிகளில் குவாத்ரோச்சி போட்டிருந்த ரூ. 21 கோடி பணத்தை இந்திய அரசு கோரியதன் பேரில் பிரிட்டிஷ் அரசு முடக்கி வைத்தது. ஆனால் வேடிக்கையான வகையில் இப் பணம் போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய பணம் என்று நிரூபிக்க ஆதாரம் இல்லையென இந்திய அரசு கடந்த ஆண்டில் தெரிவித்ததன் பேரில் குவாத்ரோச்சியின் பணம் விடுவிக்கப்பட்டது.
குவாத்ரோச்சி ஆர்ஜென்டீனாவில் இம்மாதம் 6-ம் தேதி பிடிபட்டார். இருந்தாலும் இந்திய ஊடகங்கள் இதுபற்றி பெரிதாகச் செய்தி வெளியிட்டதற்குப் பிறகே இந்திய அரசு அதுபற்றி வாய் திறந்துள்ளது. மார்ச் 5-ம் தேதிக்குள் ஆர்ஜென்டீனா அரசிடம் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றால் குவாத்ரோச்சி விடுதலை செய்யப்படுவார் என்பதுதான் இப்போதுள்ள நிலைமையாகும்.
“சட்டம் தனது கடமையைச் செய்யும்’ என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குவாத்ரோச்சி விஷயத்தில் இதுவரை நடந்துள்ளவை அவ்விதமாக இல்லை என்றே கூறியாக வேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்