Interview with D Rambabu – Publisher & Editor of English to Telugu to Tamil Dictionary
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007
முகங்கள்: தமிழுக்கு ஒரு புது வரவு!
ந. ஜீவா
சிலர் ஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செய்வார்கள். ஆனால் அது பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்துவிடும். ஆனால் சிலர் செய்யும் செயல்களோ அவர்களே எதிர்பாராத வகையில் சிறப்பாக அமைந்துவிடும். தமிழ் வழிக் கல்வி என்றாலே ஏளனமாகப் பார்க்கும் இக்காலத்தில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் நர்சு பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் ஏன் நோயாளிகளுக்கும் பயன்படும் விதமாக மருத்துவத்துறையில் வழக்கத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஓர் அகராதியைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார், டி.ராம்பாபு. இது ஆங்கிலம் – தெலுங்கு – தமிழ் அகராதியாகும்.
சென்னை விஜயா குரூப் ஆஃப் ஹாஸ்பிட்டலின் நிதி, கணக்குப் பிரிவின் பொது
மேலாளராகப் பணிபுரியும் ராம்பாபு,
தமிழுக்கோ, தெலுங்குக்கோ பெரிய தொண்டு செய்வதாக நினைத்தெல்லாம் இதைச் செய்யவில்லை.
அவரைச் சந்தித்துப் பேசிய போது…
தமிழிலும் தெலுங்கிலும் இப்படியொரு மருத்துவ அகராதியைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?
நான் விஜயா குரூப் ஆப் ஹாஸ்பிட்டலில் 1984 ல் வேலைக்குச் சேர்ந்தேன். நிறைய பேஷன்ட்ஸ் ஆந்திராவிலிருந்து இங்கு வந்து அட்மிட் ஆவார்கள். எனது பூர்வீகம் ஆந்திரா என்பதால் டாக்டர்கள் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்த மருத்துவக் குறிப்புகள் என்னவென்று தெரியாமல் அவர்கள் என்னிடம் வந்து கேட்பார்கள். எனக்குத் தெரிந்த அளவுக்கு த் தெலுங்கில் அவர்களுக்குச் சொல்வேன். ஆனால் பல வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. அதற்காக எத்தனையோ டிக்ஷனரிகளைப் புரட்டியிருக்கிறேன். இருந்தும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது.
ஆங்கிலத்தில் உள்ள மருத்துவத் துறை சொற்களுக்குத் தமிழிலோ, தெலுங்கிலோ பொருள் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று உணர்ந்தேன். எனவே நான் கண்டறிந்த சொற்களுக்கான பொருளைத் தொகுத்து ஓர் அகராதியாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது.
நீங்கள் தயாரித்துள்ள இந்த அகராதி யாருக்குப் பயன்படும்?
சாதாரண மனிதனுக்கே இந்த அகராதி பயன்படும். டாக்டர் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டில் ஏ/பஎன்று போட்டிருப்பார். இதற்கு என்ன அர்த்தம் என்று பேஷன்ட்டுக்குத் தெரியாது. இந்த அகராதியைப் பார்த்தால் ஏ/ப என்றால் ஹைப்பர் டென்சன் என்றும் தமிழில் மிகை ரத்த அழுத்தம் என்றும் தெரிந்து கொள்ளலாம். க்ஷ.ண்.க். என்று மருந்துச் சீட்டில் குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு அர்த்தம் ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று இந்த அகராதியின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு, நர்சிங் பயிலும் மாணவர்களுக்கு இந்த அகராதி பயன்படும். ஆங்கிலத்தில் புரியாத சொற்களுக்கு தமிழில், தெலுங்கில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக நர்ஸ்களுக்கு அதிகம் பயன்படும். டாக்டர் என்ன எழுதியுள்ளார், மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து வேலை செய்ய வேண்டியவர்கள் அவர்கள். அவர்களுக்கு இது அதிகம் பயன்படும்.
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகள் எதற்கு?
தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்குச் சென்று மருத்துவம், நர்சிங் பயிலும் மாணவர்கள் இருக்கின்றனர். அதுபோல ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வந்து பயிலும் மாணவர்களும் உள்ளனர். எனவே இருமொழிக்காரர்களுக்கும் பயன்படும்விதமாக இந்த மருத்துவ அகராதியைத் தயாரித்தேன். மேலும் எனக்குத் தாய்மொழி தெலுங்கு என்பதால் இந்தப் பணி சிரமமாகத் தெரியவில்லை.
மருத்துவ அகராதியைத் தயாரிப்பது என்பது வேறு; புத்தகப் பதிப்புத் துறை என்பது வேறு. அப்படியிருக்க நீங்களே இதை ஏன் வெளியீட்டீர்கள்?
அடிப்படையில் நான் டாக்டர் இல்லை. நான் அக்கவுன்ட்ஸ் படித்தவன். மருத்துவமனையில் நீண்டநாள் பணி புரிந்தாலும் நிறைய மருத்துவர்களுடன் பழக்கம் வைத்திருப்பதாலும் இந்த டிக்ஷனரியைத் தொகுக்க முடிந்தது. மேலும் நீங்கள் நினைப்பது மாதிரி புத்தகப் பதிப்புத் துறை எனக்குப் புதியதல்ல. நான் ஏற்கனவே “அனைத்து தேவதை காயத்ரி மந்திரங்கள்’ என்ற சிறு புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன். அது இப்போது மூன்று பதிப்புகள் வந்துவிட்டது. எனவே எனக்குப் புத்தகத் தயாரிப்பு புதியதல்ல.
ஒரு டாக்டர் அல்லாத நீங்கள் இப்படி ஓர் அகராதியைத் தொகுத்ததற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
இது நூலாக வெளிவரும் முன்பு ஆந்திராவில் உள்ள ஒரு டாக்டரிடம் கையெழுத்துப் பிரதியைக் காட்டினேன். “நீ ஒரு டாக்டரா?’ என்று கேட்டார். “இல்லை’ என்றதும் கையெழுத்துப் பிரதியைப் புரட்டிக் கூடப் பார்க்கவில்லை. ‘சர்ய்-ம்ங்க்ண்ஸ்ரீஹப் – ஆ இருந்துக்கிட்டு எப்படி எழுதுற? நீ மெடிக்கல் ஆள் இல்ல. அதனால பார்க்க மாட்டேன்’ என்று சொன்னார். மூன்று வருடங்களுக்கும் மேலாக இரவு இரண்டு மணி வரை கண்விழித்து செய்த முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பு. ரொம்பவும் மனம் வருத்தப்பட்டேன். ஆனால் சென்னை ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் காலேஜின் டாக்டர் தணிகாசலம் என்னை மிகவும் பாராட்டினார். இதைப் புத்தகமாக வெளியிடணும்
என்று என்கரேஜ் பண்ணினார். “இது மருத்துவத்துறை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலை, நீங்க
பண்ணியிருக்கீங்க’ன்னு புகழ்ந்தார். அது எனக்கு மிகுந்த
தெம்பைக் கொடுத்தது. அப்புறம் எனக்குப் பழக்கமான நிறைய டாக்டர்கள் அகராதியைத் தொகுக்கும் போது ஏற்பட்ட நிறையச் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கத்தினால்தான் இது எனக்குச் சாத்தியமானது.
ஆங்கிலத்தில் உள்ள மருத்துவத் துறை சொற்களுக்கு தமிழில் பொருள் கண்டுபிடிப்பது சிரமமான காரியமாயிற்றே?
இந்த மருத்துவ அகராதியில் உள்ள எல்லாச் சொற்களையும் தொகுத்தது, அதற்கு விளக்கமளித்தது என் வேலையாக இருந்தது. அதை மொழிபெயர்த்தவர் வி.வி.ரத்னஸ்ரீ. என்றாலும் மொழிபெயர்க்கும் போது உடனிருந்து அதிலும் பங்கு பெற்றவன் என்கிற முறையில் அதன் சிரமங்களை அறிவேன். மேலும் இந்த அகராதி தயாரிப்பதற்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என்று மொழிகள் மட்டும் தெரிந்தால் மட்டும் போதாது. மருத்துவத்துறை தொடர்பான அறிவும் அவசியம். இல்லையென்றால் சரியாக மொழிபெயர்க்க முடியாது.
தெலுங்கைவிட தமிழில் மொழிபெயர்க்கச் சிரமப்பட்டோம். காரணம், தெலுங்கில் நிறைய எழுத்துகள் உள்ளன. உதாரணமாக தெலுங்கில் நான்கு “க’ உள்ளது. தமிழிலோ ஒன்றே ஒன்றுதான். அதுபோல ந, ண, ழ, ள, ல போன்றவற்றில் எந்த “ந’ போடுவது, எந்த “ல’ போடுவது என்பது பிரச்சினையாக இருந்தது. இது எங்களுடைய முதல் முயற்சி என்பதால் எங்களுக்கே தெரியாமல் பிழைகள் இருக்கக்கூடும். சுட்டிக்காட்டினால் அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்திக் கொள்வோம்.
இப்போது தமிழ்வழிக் கல்வி கற்பதில் ஆர்வம் குறைவாக உள்ளது. அப்படியிருக்க இந்த அகராதி மாணவர்களுக்கு எப்படி உதவும்?
நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மையிருக்கிறது. என்றாலும் ஆங்கில வழி பயிலும் மாணவர்கள் என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் அதைத் தெரிந்து கொண்டால் சிறப்பாகப் படிக்க முடியும். மேலும் ஆங்கிலத்தில் உள்ள ஒரு மருத்துவம் தொடர்பான சொல்லுக்குத் தமிழில் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள இந்த அகராதி உதவும்.
சினிமாவை ரசிக்கப் புரிந்து கொள்ள மொழியே தேவையில்லை என்றாலும் எத்தனை டப்பிங் திரைப்படங்கள் வருகின்றன? டி.வி.யிலும் கூட டப்பிங் படங்களை ஒளிபரப்புகிறார்களே! எனவே தாய்மொழிக்கெனத் தனிச் சிறப்பு இருக்கவே செய்கிறது.
உங்களுடைய அகராதியில் மருத்துவத் துறை தொடர்பான சொற்களுக்கான பொருள்கள் தவிர வேறென்ன சிறப்பு அம்சம் உள்ளது?
இந்த அகராதியில் நிறைய மருத்துவம் தொடர்பான பொதுவிஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அகராதி மொத்தம் 6 பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது.
முதல் பகுதியில் மனித உடல், உடல்நலன் தொடர்பான பொதுவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு நோய்க்கும் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடுகளுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நான்காம் பகுதியில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் எல்லாவற்றையும் பற்றிய விளக்கம் உள்ளது. ஐந்தாம் பகுதி அகராதி. ஆறாம் பகுதியில் மனித உடலின் பல்வேறு பாகங்களின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
புத்தகத்திற்கு வரவேற்பு?
சாதாரண மனிதனுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கத்தில் தான் இந்த அகராதியைத் தொகுத்து வெளியிட்டேன். ஆனால் அது தமிழுக்குச் செய்த சேவையாகக் கருதப்படுவது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.
மறுமொழியொன்றை இடுங்கள்