தமிழக சில்லறை வர்த்தகத்தில் ரூ.2,500 கோடி முதலீடு: ரிலையன்ஸ் திட்டம்
பா. ஜெகதீசன்
சென்னை, பிப். 25: தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ரூ.2,500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தங்களது சில்லறை வர்த்தகத்தின் மூலம் 40 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மேலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்க அந்நிறுவனம் உத்தேசித்துள்ளது.
விவசாயிகள், சிறு வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோர் பலன் பெறும் வகையில் தங்களது சில்லறை வர்த்தகம் நடைபெறும் என அந்நிறுவன வட்டாரங்கள் உறுதி கூறின.
தற்போது சென்னையில் 12 இடங்களில் “ரிலையன்ஸ் ஃப்ரெஷ்’ என்கிற பெயரில் காய்கறிகள் -பழங்கள் -அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
எந்தெந்த இடங்களில்…:
- அண்ணா நகரில்
- 2 இடங்களிலும்,
- முகப்பேர்,
- புரசைவாக்கம்,
- அசோக் நகர்,
- தியாகராய நகர்,
- திருவான்மியூர்,
- அடையாறு
- நந்தனம் சேமியர்ஸ் சாலை,
- தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை,
- வளசரவாக்கம்,
- சூளைமேடு ஆகிய பகுதிகளில் தலா ஓர் இடத்திலுமாக இந்த 12 நிலையங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையங்களால் சிறு வியாபாரிகள் எவ்வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என ரிலையன்ஸ் நிறுவன வட்டாரங்கள் கூறின.
விவசாயிகளுக்கு உதவி: விவசாயிகள் வாழும் பகுதிகளிலேயே ரிலையன்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கொள்முதல் மையங்களுக்குக் கொண்டு செல்ல ஆகும் வண்டிச் செலவு, விளைபொருள்களைச் சுத்தப்படுத்தி, பதப்படுத்த ஆகும் செலவு போன்றவை தவிர்க்கப்படும்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20 சதவீத லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைத்தரகர்களின் மூலம் விற்கும்போது பல இடங்களில் பணம் உடனடியாக விவசாயிகளுக்குக் கிடைக்காத நிலை இருந்து வந்தது.
விவசாயிகள் எந்தெந்த காலகட்டங்களில் எத்தகைய காய்கறிகளைப் பயிரிடலாம்? எத்தகைய விதைகள், இதர இடுபொருள்களைப் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் கிடைக்கும்? மக்கள் அதிகமாக விரும்பும் காய்கறிகள் எவை என்பன போன்ற விவரங்களை விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் ஃரெஷ் அவ்வப்போது தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுகிறது.
நுகர்வோருக்கு நியாய விலை: விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதால், அதிக லாபம் வைத்து விற்க வேண்டிய அவசியம் இல்லை. நியாயமான விலைக்கு விற்க எங்களால் முடிகிறது என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னையில் உள்ள 12 ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில் 761 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களைத் தவிர, கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் 411 பேர் வேலை செய்கின்றனர். புழலில் உள்ள விநியோக மையத்தில் 447 பேரும், 10 இடங்களில் உள்ள சேகரிப்பு மையங்களில் 65 பேரும் பணியாற்றுகின்றனர்.
யாருக்கும் போட்டி இல்லை
சென்னை, பிப். 25: ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகள் யாருக்கும் போட்டி இல்லை என ரிலையன்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
சென்னையில் சுமார் 70 லட்சம் பேர் வசிக்கின்றனர். கடந்த 15 நாள்களில் சராசரியாக நாள்தோறும் 13 ஆயிரம் பேர் தான் எங்களின் 12 கடைகளிலும் பொருள்களை வாங்கி உள்ளனர். இதில் இருந்தே எங்கள் கடைகள் யாருக்கும் போட்டி இல்லை. எவருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகும் என்றனர் அவர்கள்.
ரிலையன்ஸ் ஃப்ரெஷ் விற்பனை நிலையங்களைப் போலவே ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்கள் ஆங்காங்கே விற்பனையகங்களை நடத்துகின்றன. அந்நிறுவனங்களைப் போலவே, நாங்களும் யாருடைய தொழிலையும் பாதிக்கவில்லை என அவர்கள் கூறினர்.
================================================================
சலுகை விலையில் பொருள்களை கொள்முதல் செய்ய ரிலையன்ஸ்-நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ரகசிய உடன்பாடு
சென்னை, மார்ச் 29: நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:
ரிலையன்ஸ் நிறுவனம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட 40 சதவீதம் சலுகை விலையில், குறைவான விலைக்கு பொருள்களை கொள்முதல் செய்கிறது. இதற்காக, சில நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் புறக்கணிப்போம்.
ரிலையன்ஸ் நிறுவனம் சென்னையில் 14 சில்லறை காய்கறிக் கடைகளைத் திறந்து உள்ளது. மேலும், ஏதாவது கடையைத் திறந்தால் அப்பகுதி வியாபாரிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.
மே 5-ல் வணிகர் மாநாடு: மே மாதம் 5-ம் தேதி வணிகர் தின மாநாட்டை சேலத்தில் நடத்துகிறோம்.
ஆன்-லைன் வர்த்தகம், மதிப்புக் கூட்டு வரி ஆகியவை விலைவாசி உயர்வுக்குக் காரணம். எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும். சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய போராட்டங்களை செப்டம்பர் இறுதியில் மேற்கொள்வோம் என்றார் வெள்ளையன்.