Mooligai Corner: Herbs & Naturotherapy : Nannari
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007
மூலிகை மூலை: நரை போக்கும் நன்னாரி!
விஜயராஜன்
இதன் இலைகள் அகலமும் தடிப்பும் இல்லாமல் ஒரு சோகை போன்றே நீண்டு இருக்கும். ஆனால் சோகையில் இது சேராத ஒரு நார் போன்றது. எதிர் அடுக்குகளில் அமைந்த குறுகி நீண்ட இலைகளை உடையது. இலைகள் கம்பி போலவும் நீண்டு இருக்கும் கொடி இனமாகும். இதன் வேர்கள் நல்ல நறுமணத்தைக் கொடுக்கும். மருத்துவக் குணம் உடையது. இதன் வேர்கள் நல்ல நாற்றத்தைக் (வாசனையை) கொடுப்பதால் நன்னாரி என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். தாது வெப்பத்தை அகற்றும், வியர்வை, சிறுநீரைப் பெருக்கும் குணம் உள்ளது. நோய்களை அகற்றி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும் குணம் உடையது. தமிழ் நாடெங்கும் எல்லா வகையான மண்ணிலும் பரவலாகத் தானாகவே வளரக் கூடியது.
வேறு பெயர்கள்: அனந்தம், இந்திரி, இந்திரக அந்தம், நறுக்கு மூலம், நறு நீண்டி, பரகோம வல்லி.
ஆங்கிலத்தில்: (Hemidesmus indicus, Anclepiadaceae)
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்:
வெயில் காலங்களில் நன்னாரி வேரை நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திக் காயவைத்தோ மண்பானையில் போட்டு சுத்தமான நீரை அதில் ஊற்றி வைத்திருந்து அந்த நீரைக் குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.
பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.
நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்