Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Ma Aranganathan – A Short film by Ravi Subramanian: Interview

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

லைட்ஸ்-ஆன்: மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்…

எம்.கே. மனோஜ்

அனுதினமும் அல்லல்களால் அலைக்கழிக்கப்பட்டு ஆறுதல் தேடி அலையும் மனிதர்களுக்கு தாய்மடியாய்த் திகழ்வது கலைகளே. அக்கலைகள் பல வடிவங்களில் வாழ்ந்துகொண்டிப்பதற்குக் காரணம் கலைஞர்களே. அத்தகைய கலைஞர்களில், பெரும்பாலான மக்களால் அதிகம் அறியப்படாதவர்களும் உண்டு. வெகுஜனங்களின் பார்வையையும், விளம்பர வெளிச்சத்தையும் அதிகம் பொருட்படுத்தாத மனிதர்களைப் பொருட்படுத்தும் நோக்கில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

சதா நேரமும் பொருள் தேடவும், தன்னையும் தன் சுற்றத்தையும் மட்டுமே பிரதானப்படுத்திக்கொள்ள முயலும் மனிதர்கள் மத்தியில், அதிக கவனத்துக்குள்ளாகாத எழுத்தாளர் மா.அரங்கநாதன்!

இந்த ஆச்சரியமான மனிதரை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தன் கைப்பொருளை வைத்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்ரமணியன். நாற்பது நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த ஆவணப்படத்தின் பெயர் “மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்’.

மா. அரங்கநாதன் “வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும், “பஃறுளியாற்று மாந்தர்’ என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். “முன்றில்‘ இலக்கிய இதழை நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. தற்போது ஒரு மாத இதழில் வெளிவந்த இவரின் “தேட்டை’ என்ற சிறுகதையும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

திரைப்படங்களில் நல்ல படைப்புகள் குறைந்து வரும் சூழலில், ரசிகர்களுக்கு அவ்வப்போது ஆறுதல் அளிப்பவை ஆவணப்படங்களும், குறும்படங்களும்தான் என்பது இப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய உலகுக்கு அதிக எண்ணிக்கையில் பெண் கவிஞர்களும், எழுத்தாளர்களும் வர வேண்டியதன் அவசியம், பெண்கள் ஆபாசமாக எழுதுவதைப் பற்றிய தனது கருத்து, ஓர் எழுத்தாளனுக்கு அரசியல் தேவையா? தான் சார்ந்துள்ள இயக்கத்துக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக எழுதுவது, பக்தி இலக்கியப் பாடல்கள் மீதான அவரது வித்தியாசமான பார்வை.. எனப் பல விஷயங்களைப் பற்றி மா.அரங்கநாதன் இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரவிசுப்ரமணியன் தமிழின் குறிப்பிடத்தக்க ஆவணப்பட இயக்குநர்களில் ஒருவர். கவிதைகளும், கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வரும் இவர், கவிதைகளுக்காக தமிழக அரசு விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர். தற்போது சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கிறார். இவருடைய கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். கர்நாடக இசையிலும் நல்ல புலமை பெற்றிருக்கும் ரவிசுப்ரமணியத்தைச் சந்தித்தபோது…

எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்க ஏன் மா.அரங்கநாதன்?

அதற்குக் காரணம் அவருடைய படைப்புகளே. அவர் எழுதியது சொற்பம்தான் என்றாலும் அவை ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். கவிஞர் அல்லாமல் கவிதையியல் தொடர்பாக புதிய சிந்தனைகளை வாசகர்களிடம் புகுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணிபுரிந்த அரங்கநாதன், தன்னுடைய வருமானத்தில் 1986 முதல் 1996 வரை “முன்றில்’ என்ற இலக்கிய இதழை நடத்தி வந்தார். இதுவரை அவருக்கு சொந்த வீடு கூட கிடையாது. அவர் போன்றவர்களை மரியாதை செய்வதற்கான ஒரு முயற்சிதான் என்னுடைய படம். அரங்கநாதனைப் பற்றிய ஆவணப்படம் என்பதால் மற்ற எழுத்தாளர்களைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று பொருள் அல்ல.

அவருடைய படைப்புகளின் தனித்தன்மையாகத் தாங்கள் கருதுவது?

தமிழ் வாழ்வின் அடையாளங்கள்; வாழ்க்கை பற்றிய விசாரணை; ஒரு மாயத்தன்மையோடு கூடிய மெல்லிய தத்துவச் சரடு; படைப்பினை வளர்த்தெடுக்கும் விமர்சனப் போக்கு; சைவ இலக்கிய பரிச்சயம்; மரபின் மீதான காதல்; நவீனத்துவத்தை முணுமுணுக்காமல் ஆதரிக்கும் விதம் போன்றவற்றைக் கூறலாம்.

இதுபோன்ற படங்களால் இலக்கிய ஆர்வத்தையோ மா.அரங்கநாதன் போன்றவர்களையோ மக்களிடையே கொண்டு செல்ல முடியுமா?

நிச்சயமாக முடியும். பணத்தை எதிர்பார்த்தால்தான் தவறு. மக்களின் ரசனைத் திறனில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படும் முயற்சிகள் தோற்பதில்லை என்பதே என் கருத்து. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சதானந்தம், ஒளிப்பதிவாளர் வடக்கரா மோகன்தாஸ், படத்தொகுப்பாளர் லெனின் ஆகியோர் ஒரு சிறு தொகை கூட வாங்காமல் பணியாற்றியிருக்கிறார்கள் எனும்போது எங்கள் முயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் ஓர் எழுத்தாளரின் மொத்த படைப்புகளைப் பற்றிய விவரங்களை ஓர் ஆவணப்படத்தில் எளிதாகக் கூற வாய்ப்பு இருக்கிறது. இதனால் இதுபோன்ற படங்களைப் பார்ப்பவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் படைப்புகளைப் படிக்கும் எண்ணம் ஏற்படும்.

மேலும் திரைப்பட இயக்குநரை விட ஆவணப்பட இயக்குநர்களின் வேலை சிரமமானது என்பது என் கருத்து. ஆவணப்பட இயக்குநர் ஆதாரங்களைத் தேடித் தொகுக்கும் துப்பறிவாளராகவும் இருக்க வேண்டும். தேடிய ஆதாரங்களை அப்படியே காட்டவும் முடியாது. எழுத்தாளரைப் பேச வைத்துக்கொண்டே இருக்கவும் முடியாது. அவருடைய எழுத்துலகம் காட்சிப்படுத்தப்படும் விதம் முக்கியம். அந்த வகையில் நான் சரியாகவே செய்திருக்கிறேன் என்ற திருப்தி உள்ளது.

– வெகுஜன வாசகர்கள் பெரும்பாலும் அறியாத மா. அரங்கநாதன் போன்றவர்களை, ஆவணப்படத்தின் மூலம் கெüரவிப்பதும் ஒரு சேவைதான். ரவிசுப்ரமணியத்தின் இந்தச் சேவைக்கு இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: