Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 22nd, 2007

Sujatha – Kalki :: Vaaram oru Pasuram

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 22, 2007

தஞ்சைப் பகுதியில் நிலச் சொந்தக் காரர்களையும் குத்தகைக்காரர்களையும் மேல்வாரம் குடிவாரம் என்று இன்றும் சொல்கிறார்கள். திருப்பாணாழ்வாரின் இந்தப் பாடலில் ‘வாரம்’ வருகிறது. விளக்கம் நான் கேட்டதில்லை. முழுசாக இரண்டரை மணி நேரம் ஒரே ஒரு பாசுரம்!

உத்யோகக் கட்டாயங்களினால் நான் என் பெற்றோரைப் பிரிந்து பல ஊர்களுக்குச் சென்று அலைந்து திரிந்து ஸ்ரீரங்கம் வந்து அவசரத்தில் திரும்பும்போது ‘ஸாரிப்பா! உன்னோட அதிகம் பேச முடியல’ என்று மன்னிப்புக் கேட்பேன். அதற்கு அவர் ‘பரவாயில்லை, உனக்கும் எனக்கும் உள்ள உறவு ‘ஒழிக்க ஒழியாது’ என்பார். இந்தச் சொற்றொடர் திருப்பாவை 28ஆம் பாசுரத்தில் வருகிறது.

‘‘கறவைகள் பின்சென்று கானம்
சேர்ந்து (உ)ண்போம்
அறிவொன்றும் இல்லாத
ஆய்க்குலத்து (உ)ன்தன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம்
உடையோம்
குறையொன்றும் இல்லாத கோவிந்தா!
உன் தன்னோ(டு)
உறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம்
அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை ஏலோர்
எம்பாவாய். (திருப்பாவை, 28)
(கறவை – பசு, சிறுபேர் – செல்லப்பெயர்)

பசுக்களின் பின்னால் போய்க் காட்டை அடைந்து கட்டுச்சோறு தின்பவர்கள் நாங்கள். அதிக அறிவில்லாத எங்கள் இடைக் குலத்தில் நீ வந்து பிறக்கும் புண்ணியம் எங்களுக்குக் கிடைத்தது. குறையற்றவனே! கோவிந்தனே! உன்னோடு எங்கள் உறவு ஒழித்தாலும் ஒழியாதது. அறியாத சிறுமிகள் உன்னை அன்பினால் ‘நீ’, ‘வா’ என்றெல்லாம் அழைக்கிறோம். கோபிக்காதே! எங்களுக்கு வேண்டியதைத் தருவாய்.

கல்வியற்றவர்களும் பக்தியால் அவனுடைய அருளைப் பெறலாம். பகவானுக்கும் ஆத்மாக்களுக்கும் உள்ள தொடர்பு ஆரம்பமற்றது; எப்போதும் இருப்பது. அதை பகவானாலும் ஆத்மாக்களாலும் தனியாகவோ சேர்ந்தோ ஒழிக்க முடியாது. ‘என்று நீ அன்று நான்’ என்று தாயுமானவர் சொல்வதுபோல… உண்மையான உறவுகள் அனைத்துமே ஒழிக்க ஒழியாதவை. கணவன்-மனைவி, அப்பா-பிள்ளை, தாய்-மகள், நண்பர்கள்-காதலர்கள் – ஏன், எதிரிகளேகூட ஒழிக்க முடியாது உறவுகள்தாம்!

பாரமாய பழவினை பற்றறுத்து
என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றி
யென்னுள்புகுந்தான்
கோரமாதவம் செய்தனன்
கொலறியேனரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை
யாட்கொண்டதே

‘சுமையாக நின்ற பழைய பாவங்களின் சம்பந்தத்தைத் தொலைத்து என்னைத் தன்னிடத்தில் அன்புடையவனாகப் பண்ணி வைத்தான். அதுமட்டுமல்லாமல் என் இதயத்துக்குள் நுழைந்துவிட்டான். உக்ரமான தவம் ஏதாவது நான் முற்பிறவியில் செய்திருக்க வேண்டும், தெரியவில்லை. திருவரங்கனின் மார்பன்றோ என்னை ஆட்கொண்டது.’

திருப்பாணாழ்வார் திவ்யப் பிரபந்தத்தில் பத்துப் பாடல்களைத்தாம் பாடியுள்ளார். பத்தும் முத்துக்கள்.

இந்த உருக்கமான பாடலில் உள்ள ‘வாரம்’ என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. ‘என்னைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்டான். பகவான் என் எஜமானன்; நான் அவரிடம் வாடகைக்கு இருக்கிறேன்’ என்கிற அர்த்தம், கவிதை நயமும் ஆழமும் மிக்கது. ‘பங்காகப் பற்றும் படி செய்தான்’ என்கிற பொருளும் வாரம் என்பதற்கு உண்டு. ‘வாரமாக ஓதுவார்கள்’ என்றால் நிஷ்டையாக நியமமாக ஓதுகிறவர்கள். ‘வாரம் நடப்பது’ என்பது கோயிலுக்குப் பிரார்த்தனை செய்து கொண்டு போவது. ‘வாரமோதல்’ என்பது உருச் சொல்வது. Litany. நியமமாகச் சொல்லுதல். இப்படிப் பல படிமங்கள் கொண்ட சொல்லில் திருப்பாணாழ்வார் சொல்வது எந்த வாரம் என்று நீங்களே தீர்மானிக்கலாம்.

‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற ஒரே ஒரு பிரயோகத்தில் மட்டும் இன்று இந்தச் சொல் முடங்கிக் கிடக்கிறது.

Posted in 4000, Divya Prabhandham, Kalki, Sujata, Sujatha, Thirupaanazhvaar, Thiruppavai, Vaaram oru Pasuram | Leave a Comment »

Pon Vizha – Indra Parthasarathy: Kalki Short Story

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 22, 2007

நந்திதா மணியைப் பார்த்தாள். பன்னிரண்டு! விமான நிலையத்திலிருந்து அவசர அவசரமாய் வெளியே வந்து, அங்கு பார்க் செய்திருந்த தன் காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

ஷிகாகோவில் அவள் பிடித்திருக்க வேண்டிய எட்டு மணி ·ப்ளைட் ரத்தாகி விடவே, அடுத்த விமானத்தைத்தான் பிடிக்க வேண்டியதாயிற்று. ரமேஷ¤க்கு ·போன் செய்து விமானம் ரத்தாகிவிட்ட செய்தியைச் சொன்னாள். மௌனம்தான் அவன் பதில். கோபமாக இருக்கிறான் என்று அர்த்தம். அவளும் ·போனில் வழக்காட விரும்பவில்லை.

கல்யாணத்துக்கு முன் நடந்த சந்திப்பில், அவள் அமெரிக்காவிலும், தொடர்ந்து பத்திரிகைத் தொழிலிலும் இருக்கலாம் என்று சொன்னவனுக்கு, இப்பொழுது அவள் அந்த வேலையில் இருப்பது பிடிக்கவில்லை. ஆனால், நிருபர் வேலை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. சமூகத்திலும், அரசியலிலும் புரையோடிக் கிடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்த ஒரு வாய்ப்பு. தனக்கென்று ஓர் அடையாளம் இருக்கின்றது என்பதை அவள் தனக்குத் தானே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

அவள் அப்பாவும் அம்மாவும் அவளுக்குச் சிறு வயதிலிருந்தே பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். இருவருமே பேராசிரியர்கள். அப்பா அடிக்கடிச் சொல்வார்: ‘உனக்கு எது சரியென்று படுகின்றதோ அதைச் செய்யத் தயங்காதே. அதனால் உனக்குத் தொல்லைகள் வந்தால், அவற்றை எதிர்நோக்கக்கூடிய துணிவு உனக்கு வேண்டும்.’

தில்லியில் அவள் ‘டைம்ஸி’ல் வேலை செய்யும் போதுதான் ரமேஷைச் சந்தித்தாள்.

ஒரு சர்வதேச விஞ்ஞான ‘செமினாரு’க்கு அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இளம் விஞ்ஞானி. ஒரு பிரபல அமெரிக்க விஞ்ஞானியை அவள் நேர்முகம் காண்பதற்கும் அவன், அவளுக்கு உதவி செய்தான். அவன் அவளை மிகவும் விரும்பியதாக அவளுக்குத் தோன்றியது. இதையே காரணமாகக் கொண்டு அவள் அவனைத் திருமணம் செய்துகொள்ள இசைந்தது, ஓர் உணர்ச்சிகரமான முடிவோ என்று அவளுக்கு இப்பொழுது நினைக்கத் தோன்றுகிறது.

அவன் தன்னைச் சுற்றி ஒரு குறுகிய வட்டத்தை அமைத்துக் கொண்டு அதுவே சொர்க்கமென்று இருப்பவன். சமூக, அரசியல் அக்கறை எதுவும் அவனுக்குக் கிடையாது. தன் மனைவியும் அப்படி இருக்க வேண்டுமென்று அவன் விரும்பியதால் தான் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்னைகள்.

கேரேஜில் ரமேஷ் காரைச் சரியாக நிறுத்தி வைத்திருக்கவில்லை. தன் காரை அங்கே நிறுத்த முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. வெளியே நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் சென்றாள். சமையல் கூடத்தில், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சாப்பாட்டு மேஜையில் அவளுக்கு உணவு மூடி வைக்கப்பட்டிருந்தது; சைனீஸ் உணவு; கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான்.

அவளுக்குப் பசியில்லை. மேஜையிலிருந்த உணவை ·ப்ரிஜ்ஜில் வைத்தாள்.‘ஓவர்கோட்டை’க் கழற்றி நாற்காலியின் மீது போட்டாள். அவளுக்கு மிகவும் களைப்பாக இருந்து.

மாடி ஏறிச் சென்றாள். படுக்கை அறையில் ரமேஷ் படுத்திருந்தான்.

அவனுடைய கண்கள் மூடியிருந்தனவே தவிர, அவன் தூங்கி விட்டானா இல்லையா என்று அவளுக்குத் தெரியவில்லை.

அவள் உடை மாற்றிக்கொண்டு வந்தபோது, ரமேஷ் படுக்கையில் இல்லை. நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். சண்டைக்கு ஆயத்தம்போல் அவளுக்குப் பட்டது. அவள் ஒன்றும் பேசாமல் படுத்துக் கொண்டாள்.

‘‘சாப்பிடலியா?’’ என்றான் ரமேஷ் நிதானமான குரலில். அவளைப் பார்க்காமலேயே அவன் இந்தக் கேள்வியைக் கேட்டான்.

‘‘பசிக்கலே.’’

‘‘உனக்கு ‘சைனீஸ் ·புட்’ பிடிக்குமேன்னு வாங்கிண்டு வந்தேன்; இதுதான் நீ என் மேலே வச்சிருக்கற மதிப்பா?’’

‘‘சாப்பிடறதுக்கும், மதிப்புக்கும் என்ன சம்பந்தம் ரமேஷ்? ·ப்ரிஜ்லே வச்சிருக்கேன்; நாளைக்குச் சாப்பிடறேன்.’’

சிறிது நேரம் மௌனம். நந்திதா திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

‘‘என்ன, ஷிகாகோவிலே பெரிய ‘பார்ட்டி’யா?’’ என்று கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை.

‘‘என்ன பேசாம இருக்கே?’’

அவள் எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள்.

‘‘உனக்குத் தெரியும், அந்த செனட்டர் விஷயமா விசாரிக்கறதுக்கு நான் ஷிகாகோ போனேன்னு. ‘பார்ட்டியா’ன்னு கேட்டா என்ன அர்த்தம்?’’

‘‘அப்போ இந்த வருஷம் ‘புலிட்சர் ப்ரைஸ்’ உனக்குத் தான்னு சொல்லு. எந்த செனட்டர் யாரோட போறான்னு உலகத்துக்கு உபயோகமான விஷயத்தைப் பத்தியெல்லாம் ஆராய்ச்சி பண்றே இல்லையா?’’ என்று கூறிவிட்டு அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

‘‘என்னோட சண்டை போடறதுன்னு பிடிவாதமாயிருக்கே. எனக்குக் களைப்பா இருக்கு, குட் நைட்’’ என்று கூறிவிட்டு, மறுபடியும் படுத்துக்கொண்டாள். ரமேஷ் எழுந்து, அவளருகில் வந்து உட்கார்ந்தான்.

‘‘லுக் நந்து, உலகத்திலேயே பாதுகாப்பு மிகக் குறைவான நகரம் எது தெரியுமா? நியூயார்க்! நீ இப்படி நேரம் கழிச்சு வரும்போதெல்லாம், நான் வயத்திலே நெருப்பைக் கட்டிண்டிருக்கேன். டோன்ட் யூ அண்டர் ஸ்டாண்ட்?’’

‘‘நாம் பயப்படறதுன்னு ஆரம்பிச்சா எல்லாத்துக்குந்தான் பயப்படணும், வேலைக்கே போக முடியாது…’’

‘‘குட்…நீ எதுக்காக வேலைக்குப் போகணும்? நாம ரெண்டு பேருக்கும் சேர்த்து நான் சம்பாதிக்கிறேன்… கல்யாணம் ஆகி அஞ்சு வருஷமாச்சு, நீயோ குழந்தை வேண்டாம்னு பிடிவாதமா இருக்கே!’’

‘‘வேலைக்குப் போகாம வீட்டிலே உட்கார்ந்துண்டு, குழந்தையைப் பெத்துண்டு, எனக்குன்னு ஒரு அடையாளம் இல்லாம, சும்மா இருக்கணும்; அப்படித்தானே?’’என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள் நந்திதா.

‘‘ ‘இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம்’னு அங்கெ இங்கென்னு இப்படி அலையறது எவ்வளவு பெரிய ‘ரிஸ்க்’னு தெரியுமா உனக்கு? வீணா செத்துப் போறதா உன் அடையாளம்?’’ என்றான் ரமேஷ்.

‘‘ ‘ரிஸ்க்’னு எல்லாரும் சும்மா இருந்துட்டா, அயோக்கியர்கள்தான் நாட்டை ஆளுவாங்க….’’

‘‘அவங்கதான் ஆள்றாங்க, சந்தேகம் என்ன? ஸ்தாபனத்தை எதிர்த்துப் போராடறதுங்கிறது வீண் வேலை…’’ என்று கூறிக்கொண்டே அவளுடைய தோளைப் பரிவுடன் தடவினான் ரமேஷ்.

அவள், அவனுடைய கையைத் தன் தோளிலிருந்து விலக்கினாள்.

‘‘நீ என்ன சொன்னாலும் இந்த மாதிரி ‘ஜர்னலிஸம்’தான் எனக்குப் பிடிச்சிருக்கு’’ என்றாள்.

ரமேஷ் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

‘‘உனக்குப் பிடிச்சிருக்கிறதுக்கெல்லாம் நான் ‘சரி’ன்னு சொல்றேன், இல்லியா? எனக்குப் பிடிச்சதுக்கு மட்டும் நீ பிடிவாதமா முடியாதுன்னு சொல்றியே?’’ என்றான் சில நிமிஷங்களுக்குப் பிறகு.

‘‘உனக்குப் பிடிச்சது என்ன? நான் வேலைக்குப் போகக் கூடாது, அதானே?’’

‘‘அது இல்லே.’’

‘‘பின்னே என்ன?’’

‘‘ஐ வான்ட் அவர் சைல்ட்.’’

நந்திதா ‘சடக்’கென்று எழுந்து உட்கார்ந்தாள்.

‘‘உனக்கு இன்னிக்கு என்ன ஆச்சு?’’ என்றாள் அதிர்ச்சியுடன்.

‘‘ஆகறதுக்கு என்ன இருக்கு இதிலே? நான் உன்னோட புருஷன், நீ என்னோட பொண்டாட்டி. நமக்குக் குழந்தை பொறக்கிறது ‘நார்மல்’தானே? ‘ஷாக்’ ஆனவ மாதிரி எதுக்குப் பேசறே?’’

அவள் அவனையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள்.

‘‘என்ன பாக்கறே?’’ என்றான்.

‘‘ஓ.கே. உனக்குக் குழந்தை வேணும்கிறது ரொம்ப அவசியம்னா, ஒரு குழந்தையை நாம தத்து எடுத்துண்டா என்ன?’’

ரமேஷ் அதிர்ச்சி அடைந்தான். ‘‘ஆர் யூ க்ரேஸி?’’ என்று கத்தினான்.

‘‘வொய் ஷ¤ட் ஐ பி க்ரேஸி? இப்போ ரொம்ப பேர் தத்துதான் எடுத்துக்கிறா. உலகத்திலே எத்தனை அனாதைக் குழந்தைகள் இருக்கு, தெரியுமா? அந்தக் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா வேண்டாமா? டோன்ட் தே டிஸர்வ்?’’ என்றாள் நந்திதா. ரமேஷ் கோபமாக எழுந்தான்.

போய் நாற்காலியில் உட்கார்ந்தான். அப்பொழுது நிலவிய மௌனச்சுமை இறுக்கமாக இருந்தது.

‘‘நீ கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாம்’’ என்றான் ரமேஷ்.

‘‘என்னன்னு?’’ என்று கேட்டாள் நந்திதா.

‘‘உனக்குக் குழந்தைப் பெத்துக்க இஷ்டமில்லேன்னு…’’

‘‘அப்போ என்ன பண்ணியிருப்பே?’’

‘‘நாம இப்போ இந்த மாதிரி சண்டை போட அவசியமே இருந்திருக்காது, இல்லையா?’’

‘‘நீயும் சொல்லியிருக்கலாமில்லையா ‘எனக்கு வேலைக்குப் போற பொண்டாட்டி வேண்டாம். வீட்டிலே இருந்திண்டு, எனக்குச் சமைச்சுப் போட்டுண்டு, சமத்தா பதினாறு குழந்தைகளைப் பெத்துத் தரத் தயாரா இருக்கிற பொண்டாட்டிதான் வேணும்’னு! ஏன் சொல்லலே?’’

‘‘குழந்தையே பெத்துக்க மாட்டேங்கிறது ஒரு ‘மேஜர் டிஸிஷன்’. டெல் மீ, நந்து, எனக்கு என் குழந்தைதான் வேணும்னு இருக்கிற மாதிரி, உனக்கு உன் குழந்தைதான் வேணும்னு இல்லையா? இதுதான் இயற்கையான மனித சுபாவம். குழந்தையைப் பெத்துக்க முடியாதவங்க தத்து எடுத்துக்கலாம். வொய் ஷ¥ட் வீ?’’ என்று கேட்டான் ரமேஷ்.

‘‘ரமேஷினுடைய ‘ஜீன்ஸ¤க்குத் தொடர்ச்சி இல்லாட்டா மனித வரலாறே ஸ்தம்பித்துப் போயிடுமா?’’ என்றாள் அவள்.

திடீரென்று அவனுக்கு அசாத்திய கோபம் ஏற்பட்டது. அவள் தன்னைக் கிண்டல் செய்கிறாள் என்ற ஆத்திரம். அவன், அவள் அருகில் சென்று அவளுடைய தோள்களைப் பற்றி அவளை உலுக்கினான்.

‘‘என்ன சொன்னே, என்ன சொன்னே? என்னைத் தூக்கி எறிஞ்சா பேசறே?’’ என்று உரத்த குரலில் கத்தினான்.

நந்திதா பயந்து போய்விட்டாள். அவன் இப்படி நடந்து கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, கட்டிலிலிருந்து இறங்கி அறையைவிட்டு வெளியே போகத் தொடங்கினாள்.

‘‘எங்கே போறே?’’ என்றான் அவன்.

அவள் பதில் சொல்லவில்லை.

‘‘உனக்கு அவ்வளவு திமிரா?’’

அவள் ஒன்றும் கூறாமல் இன்னொரு அறைக்குள் சென்றாள்.

அவள் செல்வதைச் சில விநாடிகள் உற்றுப் பார்த்துவிட்டு அவன் நாற்காலியில் உட்கார்ந்து குனிந்து தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.

அந்த இன்னொரு அறையிலிருந்த கட்டிலில் அவள் படுத்துக் கொண்டாள்.

அவனுக்குள் ஏதாவது பூதம் புகுந்து கொண்டு விட்டதா, ஏன் இப்படி ஆவேசத்துடன் கத்துகிறான் என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவள் ‘ஜீன்ஸை’ப் பற்றிச் சொன்னது, அவன் ஆண்மைக்குச் சவால் என்று நினைக்கிறானோ என்று அவளுக்குப் பட் டது. அவள் எப்பொழுது, எவ்வளவு நேரம் தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. திடீரென்று விழிப்பு வந்தது.

கட்டிலில் யாரோ உட்கார்ந்திருப்பது போல் தோன்றியது.

எழுந்து உட்கார்ந்தாள்.

‘‘பயந்து போயிட்டியா?’’ என்றான் ரமேஷ்.

‘‘உனக்கு என்ன வேணும்?’’ என்றாள் நந்திதா.

‘‘நீ’’ என்றான் அவன்.

‘‘கெட் அவுட்’’ என்று அவள் கோபத்தில் கத்தினாள். மிகவும் களைப்படைந்திருந்த அவளால் அதற்கு மேல் அவனுடன் போராட முடியவில்லை. அவன் எழுந்து போன பிறகு அவளால் அழத்தான் முடிந்தது.

அவள் குளித்துவிட்டுக் கீழே வந்தாள்.

ரமேஷ் ‘ப்ரேக் ·பஸ்ட்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

‘‘ஹலோ நந்து, குட் மார்னிங். உனக்கும் டோஸ்ட் பண்ணியிருக்கேன். டோஸ்டர் லேந்து எடுத்துக்கோ, ‘லேட்’ ஆயிடுத்துல்லே?’’ என்றான்.

அவள் பதில் கூறவில்லை.

மௌனமாகக் காபியை மட்டும் எடுத்துக் கொண்டு அவன் எதிரே உட்கார்ந்தாள்.

‘‘நேத்து ராத்திரி அப்படி நடந்ததுக்கு, ஐ ஆம் ஸாரி’’ என்றான்.

‘‘தொடர்ந்து நாம புருஷன் – பொண்டாட்டி விளையாட்டு விளையாட வேண்டாம்னு எனக்குத் தோண்றது. நீ இப்படி ஒரு மிருகம் மாதிரி நடந்துப்பேன்னு நான் எதிர்பாக்கலே. நாம விலகிக்கிறதுதான் நல்லது’’ என்றாள் நந்திதா.

‘‘என்ன மிருகம் மாதிரி! நமக்குக் கல்யாணம் ஆயிடுத்து, நந்து.’’

‘‘நான் அதைப் பத்திப் பேச விரும்பலே. விலகிக்கிறதுதான் ரெண்டு பேருக்குமே நல்லது. நன்னா யோசிச்சுத்தான் இந்தத் தீர்மானத்துக்கு வந்திருக்கேன்’’ என்றாள் நந்திதா.

திடீரென்று ரமேஷ் அவளுடைய தோள்களை இறுகப் பற்றி, ‘‘ப்ளீஸ், நந்து, ஐ ஆம் ஸாரி ·பர் வாட் ஹாப்பென்ட் லாஸ்ட் நைட். ஐ லவ் யூ. ஐ லவ் யூ. இதை நீ புரிஞ்சுக்கவே மாட்டியா?’’ என்று அழ மாட்டாத குரலில் இறைஞ்சினான்.

டெலி·போன் ஒலித்தது. சில விநாடிகள் அதை உற்றுப் பார்த்துவிட்டு, பிறகு அதை எடுக்கப் போனான் ரமேஷ்.

‘‘ஓ, நீங்களா? எப்படி இருக்கீங்க? ஓ! அப்படியா? ‘எ குட் டிஸிஷன்’! நான் எல்லா ஏற்பாடும் செய்யறேன். நந்து நிச்சயமா சந்தோஷப்படுவா உங்க முடிவுக்கு. நந்து பாத்ரூம்லே இருக்கா… வந்தவுடனே ·போன் பண்ணச் சொல்றேன்’’ என்றான் ரமேஷ்.

‘‘எதுக்குப் பொய் சொன்னே? யாரு, என்னோட அப்பாதானே ·போன் பண்ணது?’’ என்றாள் நந்திதா கோபத்துடன்.

‘‘கோபப்படாதே, உன்னோட அப்பா தான்! நான் சொல்றத முழுசாக் கேளு… உன்னோட அப்பா – அம்மாவோட கல்யாணப் பொன்விழாவை இங்கே வந்து நம்மளோட கொண்டாடலாம்னுருக்காளாம்… புரியறதா, ஐம்பதாவது வருஷக் கல்யாண நாள்! நாம இங்கே கல்யாணமாகி அஞ்சு வருஷத்திலே பிரியப் போறோம்னு சொல்லச் சொல்றியா! மை காட்! என்ன ‘ஐர்னி’!’’ என்றான் ரமேஷ்.

நந்திதா இந்தச் செய்தியைக் கேட்டுச் சற்றுத் திடுக்கிட்டாள்.

அவர்களை இப்பொழுது ‘வர வேண்டாம்’ என்று சொல்ல முடியுமா? ஐம்பது வருஷங்கள் அவர்கள் ஒன்றாக இருந்திருக்கிறார்கள்! பல சமயங்களில் பல விஷயங்களில் அவர்களுக்கிடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று அவளுக்குத் தெரியாமலில்லை. அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்?

‘‘நந்து, ப்ளீஸ், அவர்கள் வந்துட்டுப் போகிற வரைக்கும் நமக்குள்ளே இருக்கிற பிரச்னையை ஆறப் போடுவோம். அப்புறம் இதைப் பத்தி யோசிப்போம்… ஓ.கே?’’ என்றான் ரமேஷ்.

நந்திதா பதில் கூறாமல் காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

Posted in Indhira Parthasarathy, Indira Parthasarathy, Indra Parthasarathy, Kalki, Short Story | Leave a Comment »

The whys behind Vivatham – Kalki

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 22, 2007

விவாதம் ஏன் ஏற்படுகிறது? அபிப்ராய பேதத்தினால். ‘‘சென்ற வருஷத்தைவிட இவ்வருஷம் வெயில் கடுமை’’ என்று நான்
அபிப்ராயப்படுகிறேன். ‘‘ஆமாம், வெயில் கடுமை தான்’’ என்று நீரும் அபிப்ராயப்படுகிறீர். நமக்குள் விவாதம் இல்லை. ‘‘இந்தக் கட்டுரை நன்றாயிருக்கிறது’’ என்று நான் அபிப்ராயப்படுகிறேன்.
‘‘நன்றாயில்லை’’ என்று நீர் அபிப்ராயப்படுகிறீர். நமக்குள் விவாதம் எழுகின்றது. ஆதலின், விவாதத்துக்கு அடிப்படை அபிப்ராய பேதம் என்று ஏற்படுகிறது.

இரண்டு பேர் சண்டை போட்டால், அவர்கள் எதற்காகச் சண்டை
பிடிக்கிறார்களோ, அது சண்டை பிடிக்கும் படியான யோக்யதை உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஆறறிவுள்ள மனிதனுக்கும், ஐந்தே அறிவுள்ள பிராணிகளுக்கும் வித்தியாசம் இதுதான்.  ஒரு நாய், ஒரு தெருவில் வாசம் செய்கின்றது. இன்னொரு நாய் தனது தேச
யாத்திரையினிடையே அந்தத் தெருவின் வழியே போக நேர்கின்றது. ‘‘என் தெருவில் நீ எப்படி வரலாம்?’’ என்று ஊர் நாய் கேட்கிறது. ‘‘உன் அப்பன் வீட்டுத் தெருவோ? பொதுச் சாலையில் போவதற்கு நீ என்ன கேட்கிறது?’’ என்று அசலூர் நாய் சொல்லுகிறது. இதிலிருந்து அவற்றுக்குள் விவாதம் எழுகிறது. ‘‘அட முட்டாள் நாய்களா!’’ என்று நாம் சொல்லுவோம்.

‘எந்த நாய் தெருவோடு போனால் எனக்கென்ன?’ என்று ஊர் நாய் சும்மா இருந்திருக்கலாம். ‘உன் தெருவும் ஆச்சு, உன் மூஞ்சியும் ஆச்சு’ என்று அயலூர் நாய் வேறு வழியாய்ப் போயிருக்கலாம்.

ஆகவே, ஆறறிவுடைய மனிதர்களாகிய நாம் விவாதம் தொடங்குவதற்கு முன்னால், விவாதிப்பதற்குரிய விஷயம் தக்க பெறுமானமுள்ளதா என்று பார்த்தல் அவசியம். விவாதம் என்பது அபிப்ராயத்துக்காகத்தான்
எழுகின்றது என்று முன்னமே பார்த்தோம். எனவே, அபிப்ராயத்தின் பெறுமானம் என்னவென்பதை ஆராய வேண்டும். இது விஷயமாக நான் தீவிர ஆராய்ச்சி நடத்தி, மனிதர்களுடைய அபிப்ராயத்தின் பெறுமானம் என்னவென்பதை ஐயந் திரிபறக் கண்டுபிடித்திருக்கிறேன்.

– ‘கல்கி களஞ்சியம்’ வானதி வெளியிடு

Posted in Essay, Kalki, Vanathi, Vanathy | Leave a Comment »