Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 20th, 2007

DMDK grabs 5 seats – Re-polling details for the Chennai Corporation polls

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

5 இடங்களில் வெற்றிக் கனியை ருசித்த தேமுதிக

சென்னை, பிப். 21: சென்னை மாநகராட்சி மறுதேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில், 3 பேர் திமுகவையும், ஒருவர் பாமகவையும், மற்றொருவர் காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்தி வெற்றிக் கனியை ருசித்துள்ளனர்.

27-வது வார்டில், திமுக வேட்பாளர் ஜெய்னுல் ஆபிதீனை எதிர்த்து, தேமுதிக வேட்பாளர் பி. சர்தார் போட்டியிட்டார். 1,176 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.

இதுகுறித்து சர்தார் கூறுகையில்,””கடந்த அக்டோபரில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலிலும் போட்டியிட்டேன். அப்போது, 2,110 வாக்குகள் பெற்றேன். தற்போது, 3,098 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். இது மகிழ்ச்சியைத் தருகிறது,” என்றார் அவர். மாநகராட்சி மறுதேர்தலில் தேமுதிகவுக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தவர் 35-வது வார்டில் போட்டியிட்ட சேகர். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நெடுமாறனை விட 129 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

“”கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பில் டேவிட் என்பவர் போட்டியிட்டார். மறுதேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் முடிவு சாதகமாக வந்துள்ளது. பணம் பார்க்க சொந்தமாக தொழில் உள்ளது. மக்களுக்கு உரிய முறையில் சேவை ஆற்றுவேன்” என்றார் சேகர். இதேபோன்று, 45-வது வார்டில் பாமக வேட்பாளரை எதிர்த்து களமிறங்கிய உஷா, 2631 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

48-வது வார்டில் நீண்ட நேர இழுபறிக்குப் பின், தேமுதிக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் சங்கரை விட, 210 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

63-வது வார்டில் திமுக வேட்பாளர் மோகன், 514 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் பிரபாகரனிடம் தோல்வி அடைந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தேவகி, 59-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சேகரை 1064 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மறு தேர்தல்: யாருக்கு லாபம் ? யாருக்கு நஷ்டம்?

சென்னை, பிப். 21: சென்னை மாநகராட்சியில் காலியாக இருந்த 100 இடங்களில் 67 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிட்டன.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் கைப்பற்றிய அதே அளவிலேயே 92 இடங்களுடன் தனி பெரும்பான்மையான கட்சியாக திமுக விளங்குகிறது.

மறு தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸின் பலம் 38-லிருந்து 35 ஆகக் குறைந்துள்ளது. 17 இடங்களாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் தற்போது 16-ஆக குறைந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் நடைபெற்ற வரலாறு காணாத வன்முறைச் சம்பவங்களை அடுத்து 61, 71-வது வார்டுகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கட்சி தலைமையின் உத்தரவுப்படி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து 155 வார்டுகளிலும் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் 98 கவுன்சிலர்களும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து ஏற்கெனவே காலியாக உள்ள இடங்கள் மற்றும் இந்த 98 இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் மறு தேர்தலுக்கு மக்களிடம் அதிக ஆர்வம் காணப்படவில்லை. இதனால் 10 மண்டலங்களிலும் சேர்த்து 30 சதவீத அளவுக்கே வாக்குபதிவு நடைபெற்றது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக 58 இடங்களை ராஜிநாமா செய்த திமுக இந்த தேர்தலில் 56 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஏற்கெனவே காலியாக இருந்த 2 இடங்களை வென்றதன் மூலம் இந்த இழப்பை அக் கட்சி ஈடு செய்துள்ளது.

25 இடங்களை ராஜிநாமா செய்த காங்கிரஸ் இந்த தேர்தலில் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

13 இடங்களில் ராஜிநாமா செய்த பாட்டாளி மக்கள் கட்சி இத் தேர்தலில் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கணக்கை தொடங்கிய தேமுதிக: ஓராண்டு முன்னர் தொடங்கப்பட்ட விஜயகாந்தின் தேமுதிக, இத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை மாநகராட்சி மன்றத்தில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.

கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக இத் தேர்தலில் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே இருந்த மாநகராட்சி மன்றத்தில் இனி தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் குரல் முக்கிய விவாதங்களில் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.

பொதுவாக பார்த்தால் இந்த மறு தேர்தல் சிலருக்கு லாபம் என்றால் சிலருக்கு இது சிறிய அளவிலான நஷ்டங்களை அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

Kalki weekly Editorial (04.03.2007)

தேர்தல் கமிஷனின் தனி அதிகாரம்!

தே.மு.தி.க. ஐந்து வார்டுகளில் வென்றது மட்டுமே எதிர்பாராதது. சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலின் இதர முடிவுகள் எவ்வித ஆச்சர்யமும் அளிக்கவில்லை.

கடந்த முறை தேர்தல் நடந்தபோது நிகழ்ந்த வன்முறை பலரை அச்சுறுத்தியிருக்கிறது. அ.தி.மு.க. போட்டியிடாததால்,
எப்படியிருந்தாலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்பது முன்கூட்டியே தெரிந்த முடிவாகிவிட்டது. இவ்விரு காரணங்களினால் மட்டுமின்றி, சமீப காலத்து அரசியல் போக்கினால் விளைந்த சலிப்பு காரணமாகவும் வாக்குப்பதிவு மிகக் குறைவாகவே
நிகழ்ந்திருக்கிறது.

மறு தேர்தல் உணர்த்தும் முக்கியமான பாடம் இதுதான் :

இப்போதுள்ள உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை என்பது சட்டமன்றத் தேர்தலின் மறுவடிவம் போன்றதாகவே இருக்கிறது. கட்சித் தலைமைதான் எங்கே, யார் போட்டியிடலாம் என்று நிர்ணயிக்கிறது. பணபலம், ‘ஆள்’ பலம், ஜாதி போன்றவையும் வேட்பாளரை
நிர்ணயிக்கின்றன. தாங்கள் வோட்டளிக்கப் போகும் நபர் தங்களுள் ஒருவராக – தங்கள் பிரதிநிதியாக – விளங்கி நல்லது செய்வார் என்கிற நம்பிக்கையே வாக்காளர்களுக்கு ஏற்பட வாய்ப்பின்றிப் போய்விட்டது.

கட்சி அடிப்படையில் வோட்டுப் போட வேண்டியிருக்கிறபோது, சட்டமன்றத்தில் அதிகார பலம் கொண்ட கட்சியையே உள்ளாட்சி அமைப்பிலும் தேர்ந்தெடுத்தால்தான் உள்ளாட்சி மன்றத்துக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் நிதி ஒதுக்கீடும் சிரமமின்றிக் கிடைக்கும் என்கிற அவல நிலை வேறு! ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியின் ஆதிக்கத்தில், உள்ளாட்சித் தேர்தல்களின்போது வன்முறையும் கள்ளவாக்குப் பதிவும்கூட நடைபெறுகின்றன. மறுதேர்தல்
அறிவித்தால், அந்த மறுதேர்தலிலும் சிறிய அளவிலேனும் சில வார்டுகளில் கள்ள வோட்டு, வன்முறை, கலாட்டா!

கட்சி அரசியலில் ஆதிக்கம் மட்டும் இல்லாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல்களில் இத்தனை வன்முறையும் அராஜகமும் நுழையவே
வாய்ப்பிராது என்பதுடன் சமுதாய நோக்கும் பரந்த சிந்தனையும் உள்ளவர்கள் தேர்தலில் வேட்பாளராக நிற்க முன்வருவார்கள்.
சுயநலமின்றியும் கட்சி சார்பின்றியும் பொதுப்பணிகள் நடக்கும். ஆனால் இன்றோ, உள்ளாட்சி தேர்தல் அரசியல் மயமானதுடன் மாநில தேர்தல் கமிஷனும் நடுநிலையும் சுதந்திரமும் இழந்து ஆளுங்கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்கு உட்பட்டுப் போயிருக்கிறது.

‘‘மாநிலத் தேர்தல் அதிகாரி தமது பொறுப்பை ஒழுங்காக
நிறைவேற்றவில்லை. சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, எதுவுமே நடவாதது போல் பாசாங்கு செய்திருக்கிறார்’’ என்று பொது நல வழக்கில் தீர்ப்பு கூறிய மூன்றாவது நீதிபதி பி.கே. மிச்ரா விளாசித் தள்ளியிருக்கிறார். இவ்வழக்கின் முதல் தீர்ப்பில் இரு நீதிபதிகள் கருத்து வேறுபட்டபோதிலும் நீதிபதி கலீ·புல்லாவும் தேர்தல்
கமிஷனின் அசிரத்தையைச் சுட்டிக் காட்டியுள்ளார். தேர்தல் கமிஷனர் சந்திரசேகர் பதவி விலக வேண்டும் என்று கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சி குரலெழுப்பியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலையில், ராஜினாமா செய்ய மட்டும் மறுத்துவிட்டார் தேர்தல் கமிஷனர்! தனது தனி அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்று மாநில தேர்தல் கமிஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உத்தேசித்துள்ளது. இது பிரச்னையை திசை திருப்பும் முயற்சியே!

தேர்தல்கள் நியாயமாகவும் முறைப்படியும் நடக்கவேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷனுக்குத் தனி அதிகாரம் தரப்பட்டதுள்ளது உண்மைதான். அந்த உரிமை பதவிக்குத்தானே தவிர, அந்தப் பதவியை நாணயமற்ற ஒருவரோ திறமையற்ற ஒருவரோ வகிக்கிறபோது, அந்த நபருக்கும் தனி அதிகாரம் வழங்கப்பட்டதாகக் கருதவே முடியாது!

Posted in ADMK, BJP, Chennai, Congress, Corporation, DMDK, DMK, Elections, Electorate, Kalki, Madras, MDMK, Municpality, PMK, Polls, Ramadoss, Re-poll, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth, Violence, Vote, voter | 2 Comments »

Madurai Collector T Udayachandran transfer & impact on Paappapatti, Keeripatti

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

மதுரை ஆட்சியர் மாற்றம் எதிரொலி: கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர்கள் ராஜிநாமா?

மதுரை, பிப். 21: மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரனின் பணியிட மாற்றம், மாவட்ட அளவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பத்து ஆண்டுகளாக ஜனநாயகப் பாதைக்கு வராமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தி அவர் சாதனை படைத்தார்.

தற்போது அவர், ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி மாறுதல் செய்யப்பட்டதை அடுத்து, அந்த மூன்று ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து பதவி விலகவுள்ளதாக, உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியராக த. உதயச்சந்திரன் பதவி ஏற்றபின் கிராமப்புற மேம்பாட்டிலும், சுகாதார மேம்பாட்டிலும் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார்.

இந் நிலையில் அவரது பணி மாற்றம் அந்த கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தொடருமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஊராட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

மதுரை ஆட்சியர் மாற்றம்; தொடரும் சிக்கல்: விடுப்பில் சென்றார் புதிய ஆட்சியர்

மதுரை, மார்ச் 1: மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் மாற்றத்தை அடுத்து புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற டி. கார்த்திகேயன் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜாமணி, மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த த.உதயச்சந்திரன் கடந்த 20-ம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி இடமாறுதல் செய்யப்பட்டார்.

அவரது மாறுதலைக் கண்டித்து பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். உசிலம்பட்டி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் மாற்றப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் பி.மோகன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கண்டித்திருந்தனர்.

இந்நிலையில், மாறுதல் வெளியான மறுதினமே புதிய ஆட்சியராக டி.கார்த்திகேயன் பதவியேற்றார். பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகள் அளித்து அவர்களது போராட்டத்தைக் கைவிடுமாறு சமரசம் செய்யப்பட்டது.

இக் கிராமங்களுக்கு புதிய ஆட்சியர் நேரில் சென்று கிராம மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து, 5 நாள் விடுப்பில் சென்ற அவர், தற்போது தமது விடுப்புக் காலத்தை மேலும் 15 நாள் நீட்டிப்பு செய்துள்ளார். இதை அரசு ஏற்றுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியராக கார்த்திகேயன் நீடிப்பாரா என்ற சந்தேகம் மாவட்ட நிர்வாகத்தில் எழுந்துள்ளது.

Posted in B Mohan, BJP, Civic, Collector, Communist, CPI(M), D Karithikeyan, D Karthigeyan, D Karthikeyan, Dalit, District Collector, DMK, Erode, Government, Karithigeyan, Keeripatti, Leaders, Local Body, Madurai, Madurai Collector, Marxist, MDMK, Municipality, Naattarmanagalam, Nattarmanagalam, Officials, Paappapatti, Pappapatti, Politics, Rajamani, T Karithikeyan, T Karthikeyan, T Udayachandran, VaiKo | Leave a Comment »

Pakistan woman minister shot dead – Provincial minister Zill-e-Huma Usman

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

பாகிஸ்தானில் பெண் அமைச்சர் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் வரைப்படம்
பாகிஸ்தான் வரைப்படம்

பாகிஸ்தானில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு எதிரான, சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய தீவிரவாதிகள், அங்கு பஞ்சாப் மாகாணத்தில் பெண் அமைச்சர் ஒருவரைச் சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

பஞ்சாப் மாகாண அரசின், சமூக நல அபிவிருத்தி அமைச்சர், ஷில் இ ஹுமா உஸ்மான் அவர்கள், தனது கட்சி அலுவலகத்தில் உரையாற்றத் தயாரான வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சந்தேக நபர் ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் இஸ்லாமிய குழுவைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவர் விசாரணைகளின் போது, தான், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு எதிரானவர் என்று கூறியதாகவும் பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.

Posted in Assassination, Female, Gujranwala, Islam, Lady, Minister, Muslim, Muslim League, Pakistan, Politics, Punjab, Religion, Social Welfare, Terrorism, Women, Zill-e-Huma Usman | Leave a Comment »

‘Sivaji’ the boss – Audio Launch details

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

`சிவாஜி’ படம் மே 8-ல் ரிலீஸ்: பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியீடு

சென்னை, பிப். 20-

ரஜினியின் `சிவாஜி’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி யுள்ளது. படப்பிடிப்பு 2005 டிசம்பர் 13-ந்தேதி தொடங் கியது. இறுதி கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அமெரிக்க இந்தியர்கள் பலர் ரஜினியுடன் நடித்தனர். படப் பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

சிவாஜி படம் தமிழ் புத் தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் ரிலீசாகும் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் பரீட்சை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் மார்ச் 13-ல் தொடங்கி ஏப்ரல் 28-ல் முடிகிறது. பள்ளி தேர்வுகளும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. அவை முடிந்த பிறகு `சிவாஜி’யை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

`சிவாஜி’ பாடல் கேசட் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படுகிறது.

`சிவாஜி’ படம் அதிக தியேட்டர்களில் ரிலீசாகும் என்பதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் போகலாம் என்ற தவிப்பு பட அதிபர்களுக்கு இருக்கிறது. எனவே சிவாஜி ரிலீசுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவோ அல்லது ரிலீசாகி சில மாதங் கள் கழித்தோ இதர படங்களை ரிலீஸ் செய்ய சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் திட்டமிட் டுள்ளனர்.

`சிவாஜி’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நாளில் ரிசீலாகிறது. இதற் காக 500 பிரிண்ட்கள் போடப் படுகின்றன.

மலையாள முன்னணி நடிகர்களின் படங்கள் `சிவாஜி’ யால் பாதிக்கும் என்பதால் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் அதே தேதியில் கேரளாவில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று அங்குள்ள விநியோகஸ்தர் சங்கங்கள் வற்புறுத்தியுள்ளன. கேரளாவில் `சிவாஜி’ படம் ரூ. 3.10 கோடிக்கு விற் பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாநில சூப்பர் ஸ்டார் களான மம்முட்டி, மோகன் லால், படங்கள் விலைபோகும் தொகையை விட இது அதிகம்.

Posted in AR Rehman, ARR, Audio, Malayalam, music, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rehman, Shankar, Shivaji, Shivaji the boss, Sivaji, Sivaji the Boss, Songs, Tamil Films, Tamil Movies, Telugu | Leave a Comment »

Malavika is getting married on March 7 to Sumesh

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு: அடுத்த மாதம் 7-ந் தேதி மாளவிகா திருமணம்

நடிகை மாளவிகாவுக்கும் கேரளாவை சேர்ந்த சுமேசுக் கும் திருமணம் நிச்சய மானது.

திருமண தேதியை அறிவிப் பதற்காக மாளவிகா இன்று காலை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிருபர் களை சந்தித்தார். திருமண அழைப்பிதழை தன்கைப்பட நிருபர்களுக்கு வழங்கி அழைத்தார்.

அப்போது மாளவிகா அளித்த பேட்டி வருமாறு:-

எனக்கும் சுமேசுக்கும் மார்ச் 7-ந் தேதி பெங்களூரில் திருமணம் நடக்கிறது. பகல் 12.05 மணிக்கு கோவிலில் முகர்த்தம் நடைபெறும். இரவு 8.00 மணிக்கு திருமண வரவேற்பு நடைபெறும்.

நிறைய நடிகர், நடிகை களை திருமணத்துக்கு அழைத்துள்ளேன். சென்னை யில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

மாப்பிள்ளை சுமேஷ் கேரளாவை சேர்ந்தவர் ஒரு நண்பர் மூலம் எங்களுக்குள் முதல் அறிமுகம் நடந்தது. அப்போது காதலிக்கவில்லை பிறகு அவ்வப்போது விருந்துகளில் சந்தித்தோம் கொஞ்சம் கொஞ்சமாக காதல் துளிர்விட்டது. இரு வீட்டு பெற்றொரும் எங்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

தேனிலவுக்கு எங்கே போவது என்று முடிவு செய்ய வில்லை. எனக்கு பிடித்த நாடு ஐரோப்பா. திருமணத்துக்கு பின் பொருத்தமான பாத்தி ரங்களில் நடிப்பேன். முத்தக் காட்சியில் இது வரை நடிக்க வில்லை. கவர்ச்சியாகவும் நடிக்க வில்லை திருமணத்துக்கு பிறகும் அது மாதிரி நடிக்க மாட்டேன்.

இந்தியில் பல நடிகை கள் திருமணத்துக்கு பிறகும் கதாநாயகிகளாக நடித்து ஜெயித்துள்ளனர் கட்டுவிரியன் என்ற படத்தில் அம்மா, மகள் ஆகிய இரு கேரக்டர்களில் நடிக்கிறேன்.

என்னைப் பற்றி சில கிசு கிசுக்கள் பரவின. அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

நடிகைகளில் ரஞ்சிதா, ஜோதிகா, ரீமாசென் ஆகியோர் எனக்கு நெருங்கிய தோழிகள் நடிகர்களில் அப்பாஸ், ஷாம், சிம்பு, நெருக்கமானவர்கள்.

சுமேசுக்கு ஆந்திராவில் வீடு இருக்கிறது. திருமணத்துக்கு பின் அங்கு குடியேறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலத்தீவில் மாளவிகா தேனிலவு

சென்னை, மார்ச்1-

வெற்றிகொடி கட்டு, திருட்டுப்பயலே, உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மாளவிகா. சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் மூலம் மேலும் பிரபலமானவர்.

மாளவிகாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் பெயர் சுரேஷ், மும்பை தொழில் அதிபர். இவர்கள் திருமணம் வருகிற 7ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.

திருமண அழைப்பிதழ்களை மாளவிகா நேரில் கொடுத்து அழைத்து வருகிறார். ஜோதிகா, ரீமாசென், சிம்பு, ரஞ்சிதா, ஷாம் ஆகியோருக்கு அழைப்பிதழை வீட்டில் கொண்டு கொடுத்தார்.

தேனிலவு கொண்டாட மாளவிகா மாலத்தீவு செல்கிறார்.

திருமணத்துக்கு பின் தொடர்ந்து நடிப்பேன் என்று மாளவிகா அறிவித்துள்ளார். தொடர்ந்து நடிக்க சுரேஷ் அனுமதி கொடுத்துள்ளார். அதிக கவர்ச்சி காட்டாமல் நடிப்பது என்று முடிவெடுத்துள்ளார்.

நடிகை மாளவிகா-சுமேஷ் திருமணம் பெங்களூரில் நடந்தது

பெங்களூர், மார்ச் 8: நடிகை மாளவிகாவுக்கும், கேரளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுமேஷுக்கும் பெங்களூரில் புதன்கிழமை திருமணம் நடந்தது.

வெற்றிக் கொடி கட்டு, திருட்டுப்பயலே உள்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் மாளவிகா. கேரளத்தைச் சேர்ந்த சுமேஷ் என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார். சுமேஷ் மும்பையில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர்களது காதல் திருமணத்துக்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் மாளவிகா தனது திருமணத் தேதியை கடந்த பிப்ரவரி 20-ம் தேதி சென்னையில் நிருபர்களிடையே அறிவித்தார்.

அதன்படி பெங்களூர் ராணுவ பயிற்சி மையத்தில் (ஏஎஸ்சி) உள்ள கோயிலில் அவர்களது கலாசார முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் கன்னட திரைப்படத் துறையினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருமணத்துக்கு பின்னரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் ஆந்திரத்தில் உள்ள கணவர் சுமேஷுக்கு சொந்தமான வீட்டில் குடியேறவுள்ளதாகவும் மாளவிகா ஏற்கெனவே கூறியிருந்தார்.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Kerala, Maalavika, Malaiviga, Malaviga, Malavika, Marriage, Reception, Rumour, Sumesh, Tamil Actress, Tamil Cinema, Tamil Movies, Wedding | Leave a Comment »

Kanimozhi presents ‘Chennai Sangamam’ – Tamil Sangamam

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

கலை, பண்பாட்டை மக்களிடம் சேர்க்கும் முயற்சியே “சென்னை சங்கமம்’: கனிமொழி

சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள “சென்னை சங்கமம்’ கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிக்கான “ஆடியோ சிடி’யை, திங்கள்கிழமை வெளியிட்டார் எழுத்தாளர் சுஜாதா. உடன் (இடமிருந்து) சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி, திரைப்பட இயக்குநர் வசந்த், தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் கஸ்பர் ராஜ்.

சென்னை, பிப். 20: தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை மக்களிடம் சேர்க்கும் முயற்சியாக “சென்னை சங்கமம்’ திருவிழா நடத்தப்படுவதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி தெரிவித்தார்.

சென்னையில் பிப். 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை “சென்னை சங்கமம்’ திருவிழா நடைபெறவுள்ளது. இதன் அங்கமாக “தமிழ்ச் சங்கமம்’ என்ற விழா பிப். 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:

“சென்னை சங்கமம்’ சென்னை நகரத்துக்கான விழா. இதன் மூலம் தமிழ்ப் பாரம்பரிய கிராமிய இசை, நடனக் கலை, நாடகம் ஆகியவை சென்னை நகரின் தெருக்களிலும், திறந்த வெளியிலும் நடத்தப்படவுள்ளன.

இதில் 700 கலைஞர்கள் கலந்துகொண்டு 37 கலை வடிவங்களை சென்னை நகரின் பல பகுதிகளில் நிகழ்த்தவுள்ளனர். இந்த அரிய கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்க வேண்டும்.

புதன்கிழமை ஒன்றரை மணி நேர பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி பிலிம் சேம்பர் திரை அரங்கில் நடைபெறும். இது முதல் ஆண்டு என்பதால் சில தவறுகள் இருக்கலாம். அடுத்த ஆண்டு அவை திருத்தப்பட்டு பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படும். மேலும் இது விரிவடைந்து தமிழக விழாவாக மாற்றவும் முயற்சி எடுக்கப்படும் என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழ் மையம், பொது நூலகத்துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. நாட்டுப்புற இசை, நாட்டியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. நூலகத்துறை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே நூலகத்துறை இவ்விழாவை ஏற்பாடு செய்வதில் அங்கமாகத் திகழ்கிறது என்றார்.

அண்ணா நகர், மயிலாப்பூர், ராயபுரம் பூங்காக்களில் தப்பாட்டம்: நையாண்டி மேளம் நிகழ்ச்சிகள் இலவசமாக கண்டு களிக்கலாம்

சென்னை, பிப். 20-

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை பிரபலப்படுத்தும் முயற்சியாக “சென்னை சங்கமம்” என்ற கலை விழாவை தமிழ் மையம் என்ற அமைப்பு நடத்துகிறது. கிரா மிய கலைஞர்களுக்கும் மக்க ளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் இந்த கலாச்சார நிகழ்ச்சிகளில் 1300 பேர் பங் கேற்கிறார்கள்.

மக்கள் அதிகம் கூடும்

  • அண்ணா நகர் டவர் பூங்கா,
  • மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா,
  • தி.நகர் நடேசன் பூங்கா,
  • கே.கே.நகர் சிவன் பூங்கா,
  • ராயபுரம் ராபின்சன் பூங்கா,
  • மாட வீதி,
  • பிலிம் சேம்பர்,
  • பெசன்ட் கடற்கரை,
  • கோட்டூர்புரம் பூங்கா,
  • நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம்,
  • கலைவாணர் அரங்கம்,
  • மிïசிக் அகாடமி,
  • ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அரங்கம்,
  • தியாகராய ஹால்,
  • பாரதி இல்லம் உள்பட பல இடங்களில் நிகழ்ச்சி நடக் கிறது.
  • கர்நாடக சங்கீதம்,
  • மயி லாட்டம்,
  • ஒயிலாட்டம்,
  • தப்பாட்டம்,
  • நையாண்டி மேளம்,
  • பாவைக் கூத்து,
  • காவடி ஆட்டம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடக்கும் இந்த பிரமாண்ட கலை-பண்பாடு, இலக்கியத் திருவிழாவை இன்று (செவ்வாய்) மாலை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இந்த கலை விழா நாளை முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.

நாளை (புதன்) நடக்கும் கலை நிகழ்ச்சிகள், இடம் நேரம் விபரம் வருமாறு:-

மிïசிக் அகாடமி-சிம் போனி இசை (மாலை 6.30)

தியாகராய ஹால்-இறை யன் கூத்து, இஸ்லாமிய இசை. மற்றும் நாடகம் (மாலை 6.30)

தி.நகர் நடேசன் பூங்கா: காலை 6 மணி-நாதசுரம், 6.30-கே.காயத்ரி வாய்ப் பாட்டு

மாலை 5.10: கட்டை கால் ஆட்டல்

6.15: சென்னை இளைஞர் குழு இசை

இரவு 7.00: சுதா ரகுநாதன் பாட்டு

புஷ்பவனம் குப்புசாமி

கே.கே.நகர் சிவன் பூங்கா:

காலை 6.00: தேவார திருப் புகழ்

6.30: வாலிவலம் வெங்கட் ராமன் பாட்டு

மாலை 5.00: தப்பாட்டம், காவடி ஆட்டம்

6.30: புஷ்பவனம் குப்புசாமி பாடும் கிராமிய பாடல்கள்

ராயபுரம் ராபின்சன் பூங்கா:- மாலை 5.00: குதிரை ஆட்டம், கானா பாடல்கள்

6.30: கிரேஸ் குழுவின் இசை கச்சேரி

கோட்டூர்புரம் பூங்கா:

மாலை 5.00: காளியாட்டம், மாடட்டம், மயிலாட்டம்

மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா:-

காலை 6.00: நாதசுரம்

6.30: அக்கரை சகோதரிகள் வயலின் இசை நிகழ்ச்சி.

நையாண்டி மேளம்

மாலை 5.00:- நையாண்டி மேளம், பாவைக் கூத்து.

6.30: டி.எம்.கிருஷ்ணா வாய்ப்பாட்டு

அண்ணா நகர் டவர் பூங்கா:-

காலை: நாதசுரம்,

6.30: மகதி வாய்ப்பாட்டு

மாலை 5.00: புலியாட்டம் மண்ணின் பாடல்

6.30: சாருமதி ராமச்சந்திரன் சுபஸ்ரீ ராமச்சந்திரன், வாய்ப்பாட்டு

பிலிம் சேம்பர்:-

மாலை 5.00:- பாப்பம்பாடி ஜமா குழுவினரின் பறையாட் டம்

6.00: பட்டிமன்றம், நடுவர்: சாரதா நம்பி ஆரூரான்.

Posted in Artistes, Arts, Attraction, Books, Carnatic, Casper Raj, Chennai, Chennai Sangamam, Culture, Dance, Drama, Events, Folk, Gasper Raj, Gasperraj, Heritage, Kaavadi, Kanimozhi, Kavadi Aattam, Madras, Mayilattam, music, Naiyandi Melam, Native, Oyilattam, Paavai Koothu, Pattimanram, Sujatha, Tamil Sangamam, Thamizh, Thangam Thennarasu, Thappaattam, Theater, Tourist, Vasanth | 3 Comments »

Mulayam Singh Yadav – UP Political Calculations : Congress, Mayavathy, BJP, BSP MLAs

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

முலாயம் ஆட்சியைக் கவிழ்ப்பது நல்லதா, கெட்டதா?

நீரஜா செüத்ரி

உத்தரப் பிரதேசத்தை யாருடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பதற்கான போர் தொடங்கிவிட்டது. காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய மூன்றுமே குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்கின்றன.

உ.பி. சட்டப் பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும்போது, மாநிலத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பதில்தான் இப்போது கடும் போட்டி.

ஏப்ரலில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடக்கும்போது மாநிலம் நம் கையில் இருக்க வேண்டும் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும், காங்கிரஸýம் நினைக்கின்றன.

பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி முலாயம் சிங்கை ஆதரித்த 13 சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது; எனவே முலாயம் சிங் அரசே அரசியல் சட்டத்துக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் பதவியில் இருக்கிறது என்பது காங்கிரஸ் கட்சியின் வாதம்.

முதல்வர் பதவியிலிருந்து மாயாவதி ராஜிநாமா செய்ததும், அவருடைய கட்சியிலிருந்து முதலில் வெளியேறிய இந்த 13 உறுப்பினர்களின் ஆதரவை பேரவைத் தலைவர் செல்லும் என ஏற்றுக்கொண்டதால்தான், முலாயம் சிங்கால் மாற்று ஆட்சியை அமைக்க முடிந்தது என்று சுட்டிக்காட்டுகிறது காங்கிரஸ்.

இதே அடிப்படையில், பிறகு சேர்ந்த 24 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது. இந்த 37 பேரையும் ஒரே தொகுதியாக உச்ச நீதிமன்றம் கருதவில்லை. மாயாவதி ஆட்சியில் இருந்தபோது பேரவையில் அக்கட்சிக்கு மொத்தம் 109 உறுப்பினர்கள் இருந்தனர். 37 பேரும் ஒரே சமயத்தில் கட்சியிலிருந்து விலகி வந்திருந்தால் அதை “”மூன்றில் ஒருபங்காக”க் கருதியிருக்க முடியும், எனவே இதை கட்சிப்பிளவு இல்லை, தாவல்தான் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.

எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பு, உத்தரப் பிரதேசத்துக்கு பொருந்தவே பொருந்தாது என்கிறார் மத்திய அமைச்சரும் சட்ட நிபுணருமான கபில் சிபல். ஓர் அரசுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறதா இல்லையா என்பதை சட்டப் பேரவையிலும் மக்களவையிலும்தான் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஆனால் முலாயம் அரசோ, பதவிக்கு வந்த முதல் நாளிலிருந்தே சட்டவிரோத அரசாகத் திகழ்கிறது என்கிறார் கபில் சிபல்.

உச்ச நீதிமன்றம் 24 எம்.எல்.ஏ.க்கள் பதவிபறிப்பு குறித்து ஏதும் கூறவில்லை; உத்தரப் பிரதேச அரசு சட்டவிரோதமாகப் பதவி வகிக்கிறது. அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும் கூறவில்லை. எனவே பேரவையில்தான் வலுவை நிரூபிக்குமாறு கூற வேண்டும் என்று சமாஜவாதி கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் வலியுறுத்துகின்றன.

உ.பி. ஆளுநர் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார். ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டு வருமாறு அவர் பரிந்துரை செய்துள்ளார் என்று தில்லியில் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது முடிவு மத்திய அரசின் கையில் இருக்கிறது.

முலாயம் சிங் ஆட்சியில் நீடித்தால் சட்டப் பேரவைத் தேர்தல் முறையாக நடக்காது என்பது காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கருத்தாகும்.

குடியரசுத் தலைவர் ஆட்சியில் தேர்தல் நடந்தால் காங்கிரஸýக்கு 50 முதல் 60 இடங்கள் வரை கிடைக்கும், அதைக்கொண்டு மாயாவதியுடன் கூட்டு சேர்ந்து உ.பி.யில் மீண்டும் கால் ஊன்றலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் முலாயம் சிங். ஆனால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்தால், காங்கிரஸ் கட்சிக்கு அது ஆபத்தாகவும் முடியலாம். மக்களின் கோபத்துக்கு உள்ளாகவும் நேரிடலாம். காங்கிரஸ் கட்சியை வெளியிலிருந்து ஆதரிக்கும் திமுக, லாலு கட்சி போன்றவையும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை ஆதரிக்காமல் போகக்கூடும்.

மக்களவையில் இடதுசாரிகளுக்கு 61 இடங்களும் முலாயம் கட்சிக்கு 40 இடங்களும் உள்ளன. காங்கிரஸின் செயலால் கோபம் அடைந்து இவர்கள் இணைந்தால் மக்களவையில் மூன்றாவது அணி ஏற்பட்டுவிடக்கூடும். அது காங்கிரஸýக்கு நல்லதல்ல.

எல்லாவற்றையும்விட முக்கியம், முஸ்லிம் வாக்காளர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? “”பாஜகவும் காங்கிரஸýம் ரகசியமாக கைகோர்த்து என்னைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டன, நான் முஸ்லிம்களுக்கு நண்பன் என்பதால்தான் இந்தத் தண்டனை” என்று முலாயம் பிரசாரம் செய்யக்கூடும். அது ஒருவேளை எடுபட்டால், காங்கிரஸýக்கு முஸ்லிம்களிடையே உள்ள ஆதரவும் போய்விடும்.

முலாயம் சிங் ஆட்சியை இழந்துவிட்டால் அவர் மீது அனுதாபம் பொங்கலாம். அதையே அவர் பயன்படுத்தி மீண்டும் தேர்தலில் வென்று இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம். மாநில அரசைக் கவிழ்த்த பிறகு கெட்ட பெயர் மட்டும்தான் காங்கிரஸýக்கு மிஞ்சும் என்றால் அதனால் என்ன பயன்?

ஆட்சியைப் பிடிப்பதற்காக முலாயம் சிங் செய்ததும், காங்கிரஸ் கட்சி செய்ய நினைப்பதும் நமது ஜனநாயகத்தை மேலும் பலவீனப்படுத்தத்தான் உதவும் என்பதை மறுக்க முடியாது; நமக்கு ஜனநாயக அமைப்புகள் மீதே நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

தமிழில்: சாரி.

முலாயம் அரசுக்கு நெருக்கடி

உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கூடும் என கடந்த சில நாள்களாகச் செய்திகள் அடிபடுகின்றன.

மாநில ஆளுநர் இதற்குச் சாதகமாக ஏற்கெனவே மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். தங்களுக்குப் பிடிக்காத அரசை டிஸ்மிஸ் செய்வது என்பது காங்கிரஸ் கட்சிக்கு கைவந்த கலை. மத்தியில் காங்கிரஸýக்கு தனிப் பெரும்பான்மை பலம் இருந்த காலத்தில் இந்த ஆயுதம் பல தடவைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் மத்தியில் இப்போது காங்கிரஸýக்குப் பெரும்பான்மை பலம் இல்லை. அந்த நிலையில் முலாயம் சிங் அரசை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி பகிரங்கமாகவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தனது சுருதியை மாற்றிக் கொண்டு முலாயம் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்று கோர ஆரம்பித்துள்ளது. கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உ.பி. சட்டமன்றத்தில் முலாயம் சிங் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டார் என வாதிக்க முற்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டிலிருந்து முலாயம் சிங் அரசு சட்டவிரோதமாக ஆட்சியில் இருந்து வந்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது.

“தைரியமிருந்தால் என்னை டிஸ்மிஸ் செய்து பாருங்கள்’ என முலாயம் சிங் சவால் விடுத்துள்ளார். வருகிற 26-ம் தேதி சட்டமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஓராண்டில் அவர் ஆறு தடவை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பின்போது முலாயம் சிங் அரசுக்கு அவரது கூட்டணியின் உண்மையான பலத்தைவிட கூடுதலாகவே வாக்குகள் கிடைத்தன. ஆகவே வருகிற 26-ம் தேதியன்று வாக்கெடுப்பில் அவர் வென்றாலும் வியப்பில்லை.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஓரிரு மாதங்களில் உ.பி. சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்குள் எப்படியாவது முலாயம் சிங் தலைமையிலான அரசை அகற்றி விட வேண்டும் என்பது காங்கிரஸின் நோக்கம். தேர்தலின்போது முலாயம் சிங் அரசு பதவியில் நீடித்தால் அதிகாரிகள் மாற்றம் உள்பட பல வகைகளிலும் அவர் தமது கட்சிக்கான சாதக நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால் தேர்தலின்போது ஆளுநர் மூலமாக காங்கிரஸ் அதே வழிகளைப் பின்பற்ற முயலும்.

முலாயம் சிங் அரசை பதவிநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜகவும் கூறுகிறது. இது தொடர்பாக பின்னர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும்போது அதை ஆதரித்து வாக்களிக்கவும் தயார் என பாஜக கூறுகிறது. தோழமைக் கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியான பாஜகவின் ஆதரவு இருக்கிறது என்ற நினைப்பில் காங்கிரஸ் ஒருவேளை முலாயம் சிங் அரசை டிஸ்மிஸ் செய்யத் துணியலாம்.

முலாயம் சிங் மீது இப்போது மிகத் தீவிரமாகக் குறி வைக்கிற இதே காங்கிரஸ் கட்சிதான் கடந்த மாதம் வரை அவரது அரசுக்கு முட்டுக்கொடுத்து நின்றது என்பதை மறந்துவிடலாகாது. தவிர கடந்த தேர்தலில் நான்காவது இடத்தைப் பிடித்த காங்கிரஸôல் வரப்போகிற தேர்தலில் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் முலாயம் சிங் அரசை அகற்றுவதன் மூலம் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ள காங்கிரஸ் ஏன் விரும்புகிறது என்பது புரியவில்லை.

புதிது புதிதாகப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்குப் பதில் 26-ம் தேதி உ.பி. சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடைபெற அனுமதிப்பதே ஜனநாயக முறையாகும்.

 Dinamani Editorial (Feb 23, 2007)

முந்தியது தேர்தல்

உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்று கடந்த சில நாள்களாக நீடித்து வந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது தேர்தல் கமிஷனின் அறிவிப்பு.

முலாயம் சிங்குக்கு ஆதரவு அளித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்களின் பதவியை கட்சி மாறல் தடைச் சட்டத்தின் கீழ் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து முலாயம் சிங் பதவியில் நீடிக்கும் தார்மிக உரிமையை இழந்து விட்டார்; அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பாரதீய ஜனதாவும் இதற்கு ஆதரவு அளித்தன. ஆனால் மத்தியில் கூட்டணி அரசுக்கு ஆதரவாக உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரிகளை இணங்க வைக்க காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கவில்லை.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 14ம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 7 தொடங்கி மே 8 வரை ஏறக்குறைய ஒரு மாதம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான இங்கு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. எனவே, தேர்தல் நடத்த நீண்ட அவகாசம் தேவைப்படுகிறது என்று தேர்தல் கமிஷன் விளக்கியுள்ளது.

மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி அதன் மூலம் ஆளுநர் செல்வாக்கால் தனக்குச் சாதகமாக முடிவை மாற்ற காங்கிரஸ் முயற்சி செய்வதாகக் கூறிவந்தார் முதல்வர் முலாயம் சிங். இதற்கிடையில், தமது அரசைக் கலைக்க பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்துச் செல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு தாம் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக புதன்கிழமை அதிரடியாக அறிவித்தார். சமாஜவாதி கட்சிக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 16 பேரும் உள்ளனர். ஆதரவு வாபஸ் காரணமாக மத்திய அரசுக்கு ஆபத்து இல்லையென்றாலும் காங்கிரஸின் போக்குக்குப் பதிலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வரும் 26ம் தேதி பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரப்போவதாக அவர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இச் சூழ்நிலையில் பேரவையைக் கலைத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு நீதிமன்றம் செல்லும் சூழ்நிலை ஏற்படும். பெரும்பான்மையை நிரூபிக்க பேரவைதான் சரியான இடம் என்று ஏற்கெனவே எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல்சாசன பெஞ்ச் தீர்ப்பளித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது முறையாக இருக்காது என்று பல்வேறு தரப்புகளிலும் கருத்து கூறப்பட்டது.

ஆட்சியில் முலாயம் தொடர்ந்தால் அரசின் சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இனி நிர்வாகத்தில் எத்தகைய மாற்றங்களையும் அவர் செய்ய இயலாது. மேலும், மக்களைக் கவரப் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது.

தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இத்தகைய தேவையற்ற சர்ச்சைகளைக் கட்சிகள் தவிர்த்திருக்கலாம். சில மாதங்களில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களுக்குச் சாதகமான ஒருவரைத் தேர்வு செய்ய உ.பி. ஆதரவு தேவை என்பதால் அங்கு ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ் கண்ணும் கருத்துமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

மக்கள் நலனே தங்களின் குறிக்கோள் என்று கூறும் அரசியல் கட்சிகள் மறைமுக வழிகளில் தங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் போக்குக்கு முடிவு கட்ட வேண்டும். எத்தகைய தீர்வையும் மக்கள் மன்றத்திடமே விட்டுவிட வேண்டும். இதுவே ஆரோக்கியமான ஜனநாயக வழிமுறையாகும்.

Posted in Amar Singh, Amitabh, BJP, BSP, CM, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Elections, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Mulayam, Mulayam Singh, Mulayam Singh Yadav, Neeraja Chowdhry, Polls, UP, Uttar Pradesh | Leave a Comment »

Alexandrian laurel – Alternate Fuel & Bio-energy sources

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

“அன்னை கூறிய புன்னையின் சிறப்பு’

மு. பாலசுப்பிரமணியன்

இன்றைய உலகை ஆட்டுவிக்கும் அல்லது இயக்கும் ஆற்றலான பெட்ரோலியப் பொருள்கள் இன்னும் கொஞ்ச நாளில் படிப்படியாக மறைந்து போகும் என்பதை அனைவரும் அறிவர்.

இதற்கு மாற்று எரிபொருள்களைத் தேடுவதில் உலக நாடுகள் அனைத்தும் போட்டி போடுகின்றன. நீடித்த, சுற்றுச்சூழலைக் கெடுக்காத ஆற்றல் வளங்கள் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில் ஒன்றான செடியின எரிபொருள்களைத் தேடுவதில் அறிவியல் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் செடியின எரிபொருள்கள்தாம் உண்மையில் பண்டைய எரிபொருள்கள் ஆகும்.

வீட்டு விளக்குகளிலும், விளக்குத் தூண்களிலும் ஏன் கலங்கரை விளக்கங்களிலும் இவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்தப் பயிரின எண்ணெய்கள் அந்தந்தப் பண்பாட்டு, சூழல் வாய்ப்புகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்பே காவிரிப்பூம்பட்டினம், மதுரை, கொற்கை போன்ற பெருநகரங்களின் தெருவிளக்குத் தூண்களிலும், கோயிலின் தூண்டாமணி விளக்குகளிலும் இந்த எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென்று பல்வேறு எண்ணெய் தரும் பயிரினங்கள் கண்டறியப்பட்டன.

குறிப்பாக புன்னை, இலுப்பை, ஆமணக்கு போன்றவை எரிபொருளுக்காகவே பயன்படுத்தப்பட்டன. இவை “உண்ணா எண்ணெய்’ என்ற பிரிவைச் சாரும். உண்ணும் எண்ணெய் வகைகளான எள், தென்னை போன்றவை தனி.

ஆழிப்பேரலையின் ஊழிக் கூத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி நாகைக் கடற்கரை. அங்கு எந்தவிதப் பாதிப்பும் இன்றி செழித்து நின்றது புன்னை மரம்.

புன்னை இலக்கியவாணர்களின் ஓர் இனிய பயிர். சங்க இலக்கியங்களில் பெரிதும் பேசப்படும் மரமும் இதுவே. குறிப்பாக நெய்தல் பற்றிப் பாட முனையும் புலவன் புன்னையைத் தொடாமல் போவதில்லை. இந்தப் புன்னை மரத்தில் காய்த்துக் கொட்டுபவைதான் புன்னங் கொட்டைகள்.

பண்டைத் தமிழ்ச் சமூகம், மரங்களையும் உடன் பிறந்தவர்களாகப் பாவித்து வந்தனர். அவ்வகையில் புன்னை மரமும் அவர்களது வாழக்கையின் அங்கமாக இருந்து வந்தது.

ஒப்பீட்டளவில் மற்ற எரிபொருள் மரங்களைவிட அதிகப் பயன் தருவதாக புன்னை மரம் உள்ளது. இதன் பொருளியல் மதிப்பைப் பார்ப்போம்.

புன்னை விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெயை நேரடியாக மோட்டார்களில் பயன்படுத்த முடியும். வெளியாகும் புகையின் அளவும் குறைவாக இருக்கும். எண்ணெயின் தேவையும் டீசலை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. அதாவது ஒரு மணி நேரம் இயங்குவதற்கு 900 முதல் 1000 மிலி டீசல் தேவை எனில் அதுவே புன்னை எண்ணெய் 600 மிலி என்ற அளவே போதுமானதாக இருக்கிறது. அத்துடன் கரும்புகையின் அளவு டீசலில் அதிகமாக இருப்பதுடன் மிக எரிச்சலூட்டும் நெடியும் இருக்கும். ஆனால் புன்னை எண்ணெயைப் பயன்படுத்தும்போது புகை குறைவாக வரும். அத்துடன் விரும்பத்தக்க மணமும் இருக்கும்.

அதாவது ஒரு கோயிலினுள் இருக்கின்ற உணர்வு ஏற்படும். எந்திரத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்பது அதைவிட கூடுதல் பயன்.

எடுத்துக்காட்டாக டீசல் விலை லிட்டருக்கு 33 ரூபாய். அதேசமயம் சந்தையில் புன்னை எண்ணெயின் விலை லிட்டருக்கு 40 ரூபாய். ஆனால் ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 600 மிலி புன்னை எண்ணெய் போதுமானது. எனவே இதன் உண்மையான விலை 24 ரூபாய் மட்டுமே!

ஒரு பண்ணையாளர் தமக்குத் தேவையான அனைத்து ஆற்றல் தேவைகளுக்கும் தனது பண்ணையில் வளரும் புன்னை மரத்தைக் கொண்டே நிறைவு செய்து கொள்ள முடியும். அவர் பிற மின்சாரத் தேவைகளுக்குக்கூட அரசு நிறுவனங்களையோ தனியார் நிறுவனங்களையோ அண்டியிருக்க வேண்டியதில்லாத சுயசார்பு உள்ளவராக மாற முடியும்.

முந்தைய காலங்களில் வண்டிகள் செய்வதற்கு இந்த புன்னை மரத்தையே பயன்படுத்தி உள்ளனர். இது கனமற்ற ஒரு மரம். அத்துடன் இதில் உள்ள எண்ணெய்ச் சாரம் பூச்சிகள், கரையான்கள் இவற்றின் தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்கும் தன்மை கொண்டது.

இப்போது மண்வெட்டி போன்ற வேளாண்மைக் கருவிகளுக்கு கைப்பிடிகளாக புன்னை மரம் பயன்படுகிறது.

இம்மரம் வளரும் இடங்களில் நிலத்தடி நீர் வளம் அருகில் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்குமெனில் இதற்கு நீர் எடுத்து ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. நிலத்தடி நீர் வளம் குறைவான இடங்களில் நீர் எடுத்து ஊற்றி வளர்க்க வேண்டும்.

இம்மரம் பசுமைமாறா மரவகையைச் சேர்ந்தது. எனவே எப்போதும் இது பச்சை இலைகளோடு காணப்படும். இலைகள், காம்புகளில் பால் வடியும் தன்மை உள்ளது. அதனாலேயே வளப்பான பச்சையம் பெற்றிருக்கிறது. அதிக அளவிற்கு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது.

இந்த மரத்தில் எப்போதும் பூக்கள் இருக்கின்றன, காய்களும் இருக்கின்றன. காட்டாமணக்கு, புங்கை போன்று அல்லாமல் எல்லாக் காலத்திலும் காய்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதன் அறிவியல் பெயர் “கோலோபில்லம் ஐனோபில்லம்’.

தமிழ்நாட்டின் சிறப்புப் பயிரான இம் மரத்தை அதிக அளவில் பெருக்கினால் நாட்டின் மாற்று எரிபொருள் தேவையை நிறைவு செய்து விடலாம். கோடிக்கணக்கில் பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்யும் செலவும் மிச்சமாகும்.

புன்னை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதன் முலம் நல்ல வளமான காடுகளையும் உருவாக்கிவிடலாம். இது சுனாமி போன்ற கடலோரப் பேரழிவைத் தடுக்கும் அரணாகவும் விளங்கும். தமிழகத்தின் 700 கி.மீ. தொலைவு நல்ல கடலரண் ஒன்று கிடைக்கும்.

அன்றைய சங்கத் தமிழ்த்தாய் சொன்ன புன்னையின் சிறப்பை இன்று நாம் உணர்ந்து பயன்படுத்துவோம்.

Posted in Al Gore, Alexandrian laurel, Alternate, Bio-energy, Diesel, Fuel, Gas, Naga Maram, natural gas, Petrol, Petroleum, Punnai | Leave a Comment »