ஏறினால் இறங்குவதில்லை
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பெட்ரோல் விலை ரூ.2-ம் டீசல் விலை ரூ.1-ம் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இதே கோரிக்கையை கூட்டணி அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் முன்வைத்தனர். ஆனால் அப்போது சர்வதேசச் சந்தையில் ஒரு பேரலுக்கு 50 டாலர் விலை குறைந்தால்தான் விலைக் குறைப்பு சாத்தியம் என்று மத்திய அரசு கூறியது. தற்போது சர்வதேசச் சந்தையில் அந்த அளவுக்கு விலைச்சரிவு இல்லை என்றாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதற்கு முழுமுதல் காரணம் இன்றியமையாப் பொருள்களின் விலை உயர்வுதான்.
உத்தரப்பிரதேசம் உள்பட சில மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதும் இந்த விலைக்குறைப்புக்கு ஒரு காரணம் ஆகும். மேலும் விலைஉயர்வு எப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.
சாதாரண நடுத்தர மக்களின் அன்றாடத் தேவைகளான அரிசி, கோதுமை, பருப்பு, தானியம், சமையல் எண்ணெய், பால் ஆகியவற்றின் விலை கடந்த ஒரு மாதத்தில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
அரிசி, கோதுமை, சமையல் எண்ணெயின் விலை 10 சதவீதத்துக்கு மேலாகவும், பருப்பு விலைகள் 22 சதவீதத்துக்கு மேலாகவும் உயர்ந்துள்ளன. மாமிசம், முட்டை ஆகியவற்றின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு ஏற்ப மக்களின் ஊதியம் அல்லது வாங்கும்திறன் உயரவில்லை.
வளரும் நாடுகளில் விரைவான வளர்ச்சிக்கு ஏற்ப விலைகளும் உயரத்தான் செய்யும் என்று ஆளும்கட்சியினர் குறிப்பிட்டாலும், அதில் முழு உண்மை இல்லை என்று இடதுசாரிகள் மறுத்துள்ளனர். இந்தியாவைப் போன்றே வளரும் நாடான சீனாவில் பணவீக்கம் 2 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அந்நிலை இல்லை என்று குறைகூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விலைவாசி உயர்வு-3.98 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த விலை உயர்வு 6.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மத்திய அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
விலைஉயர்வைக் குறைக்கவும், அல்லது மேலும் உயராமல் பார்த்துக் கொள்ளவும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், சுங்கவரித் தளர்வுகள், சலுகைகள், வரிவிலக்குகள் எதுவும் பயனளிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் வேறுவழியில்லாமல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது மத்திய அரசு.
பெட்ரோல், டீசல் விலைக்குறைப்புக்கும் விலைவாசி உயர்வு மட்டுப்படுவதற்கும் தொடர்பு உள்ளது. ஏனெனில் அனைத்துப் பொருள்களும் ரயில்களைவிட அதிக அளவில் லாரிகள் மூலமே இந்தியாவின் பல இடங்களுக்கும் பரவலாகக் கொண்டு செல்லப்படுகின்றன. டீசல் விலை உயர்வு நேரடியாக லாரி வாடகையை உயர்த்துகிறது. லாரி வாடகை உயர்வை ஈடுகட்ட பொருள்களின் விலை கூட்டப்படுகிறது. டீசல் விலை குறைப்பு மூலம் பொருள்களின் விலையும் குறையும் என்பது பொதுவான நம்பிக்கை.
ஆனால், நடைமுறையில், காய்கறிகள் மற்றும் அழுகும் பொருள்களின் விலையைத் தவிர, மற்ற உணவுப் பொருள்களுக்கு உயர்த்தப்பட்ட விலை குறைவதே இல்லை என்பதுதான் வாழ்வின் அனுபவ உண்மை. விலை உயரும் முன்பாகவே அதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம்தான் விலைஉயர்வை உண்மையாகவே கட்டுப்படுத்த முடியும். இந்த விலைக்குறைப்பை முன்பே செய்திருக்கலாம்.
மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.