Veterinary Medicine Research – Hearts of Creatures
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007
ஆராய்ச்சி: லப்டப்…லவ்டப்!
ஞாயிறு
“இதயங்களோடு “விளையாடும்’ காதலர்கள்’ போல் அல்ல… “இதயங்களோடு உறவாடும்’ பேராசிரியர்கள் சாலமன் விக்டர், ஆர்.ரவீன்! இதயங்களின் காதலர்கள்! இதய ஆராய்ச்சியே இவர்களின் இதயத்துடிப்பு!
மனித இதயம் முதற்கொண்டு மீன், மான், சிறுத்தை, புலி எனச் சகல இதயங்களின் ஆராய்ச்சி! இதற்காக இவர்கள் சேகரித்தது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகளின் இதயங்கள்.
இந்தச் சேகரிப்பை 93-ஆம் ஆண்டு இருவரும் தொடங்கினர். கடந்த ஆண்டு சாலமன் விக்டர் மறைந்துபோக, தற்போது ரவீன் தொடர்கிறார்.
சேகரித்த இதயங்கள் அனைத்தையும் பெரியார் அறிவியல் மையத்திடம் ஒப்படைத்து, அங்கு நிரந்தரக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடு: சாலமன் விக்டர் மனைவியும் எயிட்ஸ் மருத்துவத்தில் இந்தியாவிலேயே முதன்மை மருத்துவருமான சுனிதி சாலமன் விக்டர்.
“”இறந்துபோன விலங்குகள் பற்றிய செய்தி கிடைத்ததும், அந்த இடத்துக்கு ஓடிப் போய் இதயங்களை வெட்டி எடுத்துக்கிட்டு வருவார். சட்டையெல்லாம் ஒரே இரத்தமும் அழுக்குமாக இருக்கும். “உங்களுக்கு இந்த வேலை தேவையா?’என்று கோபமாகக் கேட்பேன். அதற்கு, “நான் செய்கிற வேலையோட அருமை உனக்கு இப்பத் தெரியாது. ஒரு நாளு தெரியும்’ என்று சொல்லிவிட்டு இதய ஆராய்ச்சியில் இறங்கிடுவாரு. உலகத்துல யாருமே செய்யாத காரியத்தைச் செய்துகிட்டு இருந்திருக்காருன்னு இப்போது புரியுது. சேகரித்த இதயங்களை எல்லாம் அமெரிக்காவுல ஒரு பல்கலைக்கழகத்துல விலைக்குக் கேட்டாங்க. கொடுக்கல. இந்தியாவில இருக்கிற மாணவர்கள் படிக்கணும்… குறிப்பா தமிழகத்துல இருக்கிற மாணவர்கள் படிச்சிப் பயன்பெறணும்னு பெரியார் அறிவியல் மையத்திலேயே கண்காட்சியாக வைத்துவிட்டோம். இப்போது ரவீன், அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்கிறார்” என்கிறார் வருத்தத்துடன் சுனிதி சாலமன் விக்டர்.
“”கிறிஸ்துவக் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக இருக்கிறேன். விலங்குகளுடைய இதயங்களைச் சேகரித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது சாலமன் விக்டர் சார்தான்.
93-ம் வருடம். ஒரு செத்த பாம்பை எடுத்துக்கொண்டு என்னைப் பார்க்க காலேஜுக்கு வந்தார். பாம்பினுடைய இதயம் எப்படிச் செயல்படுகிறது. இரத்தம் எப்படி சர்குலேட் ஆகிறது என்று பார்க்க வேண்டும் என்றார். அன்றுதான் எங்கள் இருவருக்குமிடையே இந்த ஆராய்ச்சி தொடர்பான நட்பு ஏற்பட்டது.
மனித இதயங்களுக்கும் பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்குகளின் இதயங்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதே எங்கள் ஆராய்ச்சி.
மனித இதயங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை எல்லா நாடுகளிலும் செய்கிறார்கள். மற்ற விலங்கினங்களின் இதயம் தொடர்பான ஆராய்ச்சி செய்வோர் மிகக்குறைவு.
இந்த ஆய்வுக்காக பல்வேறு விலங்குகளின் இதயங்களைச் சேகரித்துள்ளோம். வண்டலூர் மிருகக்காட்சி சாலை அதிகாரிகளிடம் அனுமதிப் பெற்று உள்ளோம். ஏதாவது விலங்குகள் இறந்தால் அவர்கள் தகவல் கொடுப்பார்கள். நாங்கள் விரைந்து சென்று போஸ்ட்மார்ட்டம் செய்கிறபோது இதயத்தைப் பெற்றுக்கொள்வோம்.
ஒரு விலங்கு இறந்த 2 மணிநேரம் அல்லது 3 மணிநேரத்திற்குள் இதயத்தை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். நேரம் அதிகமாகிவிட்டால் அழுகிப் போய்விடும். கஷ்டப்பட்டு எடுத்தும் பாழ். இதுபோல பல எடுத்து வீணாகப் போயிருக்கின்றன. இப்போது முதலை, திமிங்கலம், யானை, காண்டாமிருகம், நாய், பூனை, சிறுத்தை, குதிரை, குரங்கு, மீன்கள், மான்கள் என நூறு வகைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதயங்களைச் சேகரித்துள்ளோம்.
இதயங்களை வெட்டி எடுத்ததும் ஒரு கண்ணாடிக் குடுவையில் ஃபார்மெலின் சொலியூஷன் ஊற்றி மூடி வைத்துவிடுவோம். இப்படி வைத்துவிட்டால் நூறு ஆண்டுகள் ஆனால்கூட இதயம் கெடாமல் இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறையோ, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையோ சொலியூஷன் மாற்றி வைப்பது நல்லது.
எடுத்தவற்றிலேயே மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தது, சாதாரணமாகக் கிடைக்காத திமிங்கலத்தின் இதயம். கடலூர் மூர்த்திக்குப்பம் கடற்கரை பகுதியில் திமிங்கலம் இறந்துகிடப்பதாக டிவியில் செய்தி பார்த்தேன். உடனே அங்கு போனேன். திமிங்கலம் கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்திருந்தால் சிரமம் கொஞ்சம் குறைந்திருக்கும். தண்ணீரிலேயே கிடந்தது. தனியாக வேறு போயிருந்தேன். கரையில் எடுத்துப்போட்டுதான் இதயத்தை வெட்டி எடுக்க முடியும். ஊர் மக்களை அழைத்தேன். ஆரம்பத்தில் அவர்கள் ஒத்துழைக்க மறுத்தார்கள். இது ஆராய்ச்சிக்காக. உங்கள் பிள்ளைகள்கூட வருங்காலத்தில் படிக்கலாம் என்று சொன்னேன். ஒத்துக்கொண்டார்கள். பிறகு பெரிய வடக்கயிறு இரண்டு கொண்டு வந்தார்கள். திமிங்கலத்தை இழுத்துக் கட்டினோம். ஒரு வடத்தை 250 பேரும் இன்னொரு வடத்தை 250 பேருமாய் நின்று மூச்சு முட்ட இழுத்தோம். வடக்கயிறு முடிச்சுதான் அறுந்துபோனது. திமிங்கலம் கரையேறியபாடில்லை. தண்ணீரில் கிடப்பதால்தான் இழுக்கமுடியவில்லை என்றனர். கடற்கரையில் அலைகள் 6 மணிநேரத்துக்கொருமுறை நன்றாக பின்வாங்கிப் போவது கடலின் இயல்பு. இதற்காகக் காத்திருந்தோம். எதிர்பார்த்தபடியே அலைகள் பின்வாங்கின. திமிங்கலத்தை “ஏக் தம்’ பிடித்து கரையில் இழுத்துப் போட்டோம். விறகு வெட்டுவதுபோல கோடரி கொண்டு வெட்டினோம். இதயத்தை எடுத்து டிரம்மில் போட்டுக் கொண்டு வந்தேன். இறந்த மூன்று மணிநேரத்தில் எடுக்காவிட்டால் இதயம் அழுகிவிடும். இது தண்ணீரிலேயே கிடந்ததால் அழுகவில்லை. இதை என் அதிர்ஷ்டம் என்றுகூடச் சொல்லலாம்.
ஆராய்ச்சியில் நாங்கள் கண்ட ஒரு விசித்திரம் இது. பொதுவாக பாலூட்டிகளுக்கு சுத்தமான இரத்தம் அசுத்தமான இரத்தம் என்று உண்டு. மனிதர்களுக்கு நான்கு இதய அறைகள். அசுத்தமான இரத்தம் ஓர் இதயறையில் இருந்து நுரையீரலுக்குச் சென்று சுத்திகரிக்கப்பட்டு வேறோர் அறையில் சுத்தமான இரத்தமாகச் செல்லும். அசுத்த இரத்தமும் சுத்த இரத்தமும் ஒரே அறையில் சந்திக்காது.
ஆனால் மீன்களுக்கு விசித்திரமாய் இரண்டு இரத்தமும் ஒரே அறையில் சந்திக்கிறது. மீன்களுக்கு இதயத்தில் இரண்டு அறைகள். இதில் இரண்டிலும் அசுத்த இரத்தமும் ஓடுகிறது சுத்த இரத்தமும் ஓடுகிறது. மீன்களின் இரத்தத்தைச் செதில்கள்தான் சுத்திகரித்து உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகின்றன.
மீன்களைப் போலத்தான் தவளை, பாம்பு, ஆமை, முதலை போன்றவையும். ஆனால் கொஞ்சம் மாறுதல் உடையவை. முதலைக்கு நான்கு அறைகள். மற்றவைக்கு மூன்று அறைகள்.
இதைப் போல பல விசித்திரங்கள் எங்களுடைய ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கின்றன. தொடர்ந்து செய்தால் இன்னும் பல உண்மைகள் புரியவரும். எல்லா விலங்குகளையும் விட சிறுத்தைகள் வேகமாக ஓடுகின்றன. நீர் வாழ்வன நிலத்தில் வாழ்வன என இருக்கின்றன. குரங்குகள் பெரும்பாலும் மரத்திலேயே இருக்கின்றன. இப்படி அவைகளுடைய இயல்பு அமைவதற்கும் இதயத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் ஆராய்கிறோம்.
மனிதர்களைப் போல எல்லாவகையான பாலூட்டிகளுக்கும் இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காட்டில் வாழ்கிற பாலூட்டிகளைவிட வீட்டில் வாழ்கிற பாலூட்டிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இறந்தவர்களை நினைத்து அழுகிறபோது நாம் மாரடித்து அழுவதுபோலெல்லாம் விலங்குகள் அழுவாது. முகப்பாவனைகள் மூலமே அவை தங்கள் அன்பை, வருத்தத்தை வெளிப்படுத்திக்கொள்ளும்” என்கிறார் ரவீன்.
“”இதயமே இல்லாத உயிரினங்கள் இருக்கிறதா?” என்றால் “”வண்ணத்துப்பூச்சி போன்ற பூச்சினங்களுக்கு இதயங்கள் இல்லை” என்கிறார் ரவீன். “ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…’ என டூயட் பாடும் காதலர்களே கவனியுங்கள்!
மறுமொழியொன்றை இடுங்கள்