Lalu Prasad’s in-laws caught taking free ride
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
ரயிலில் ஏசி வகுப்பில் லாலுவின் மாமனார், மாமியார் “ஓசி’ பயணம்
பாட்னா, பிப். 14: பிகாரில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது.
டிக்கெட் இல்லாமல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ததாக லாலுவின் மாமனார் சிவபிரசாத் சௌதுரியும் அவரது மனைவியும் டிக்கெட் பரிசோதகரிடம் பிடிபட்டனர்.
இந்தச் சம்பவம் பற்றி கூறப்படுவதாவது: மத்தியில் ரயில்வேத்துறை அமைச்சராக இருப்பவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ். இவரது மனைவி ராப்ரி தேவி. பிகார் மாநில முதல்வராக இருந்தவர்.
பிகார் மாநிலம் முஸôபர்பூரிலிருந்து புதுதில்லிக்கு சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. சிவான் என்ற இடத்துக்குச் செல்வதற்காக ராப்ரி தேவியின் பெற்றோரும், லாலுவின் மாமனாருமான சிவபிரசாத் சௌதுரியும் அவரது மனைவியும் ஹாஜிபூர் ரயில்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஏசி முதல்வகுப்புப் பெட்டியில் அமர்ந்தனர்.
சாப்ரா ரயில்நிலையம் வந்தபோது கிழக்கு மத்திய ரயில்வேயைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது லாலுவின் மாமனார், மாமியார் இருவரும் டிக்கெட் இல்லாமல் அந்த ரயிலில் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும் இருவரிடமும் டிக்கெட் இல்லா பயணத்துக்காக ரயில்வே விதிகளின்படி அபராதம் வசூலிக்கவும் அவர்களிடம் பணம் பெற்று உரிய டிக்கெட் வழங்கவும் அதிகாரிகள் முடிவு செய்தனர் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
டிக்கெட் இன்றி ரயில் ஏ.சி. வகுப்பில் பயணம்: தனது மாமனார், மாமியாரையே பிடித்த டிக்கெட் பரிசோதகருக்கு லாலு பாராட்டு
புதுதில்லி, பிப். 16: ரயிலில் டிக்கெட் வாங்காமல் தனது மாமனாரும், மாமியாரும் பயணம் செய்தபோது கடமை தவறாமல் நடவடிக்கை எடுத்த டிக்கெட் பரிசோதகருக்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
லாலுவின் மனைவி ராப்ரிதேவியின் பெற்றோர் கடந்த திங்கள்கிழமை தர்பங்கா-புதுதில்லி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் டிக்கெட் வாங்கியதால் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த லாலு, “எனது மாமனார், மாமியார் என்று தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுத்த டிக்கெட் பரிசோதகர் பெருமைக்குரியவர். இது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
எனது மாமனாரும் மாமியாரும்தான் தவறு செய்துள்ளனர். ஆனால் பயணத்துக்கான டிக்கெட்டை உடனடியாக எடுத்துள்ளனர். இருப்பினும் சில பத்திரிகைகள் அதை மோசமாக விவரித்துள்ளன’ என்று கூறினார்.
முன்னதாக இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் பெறும் வசதியை நாடு முழுவதும் உள்ள 125 நகரங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டம் தொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதற்கான விழாவில் லாலு கலந்துகொண்டார்.
மறுமொழியொன்றை இடுங்கள்