Heritage & Culture city – Thirumayam
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 13, 2007
மரபுரிமை பண்பாட்டு நகரமாகிறது திருமயம்
திருமயம், பிப். 13: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமயத்தை மரபுரிமை பண்பாட்டு நகரமாக (புராதன நகரமாக) தமிழக அரசு அறிவித்துள்ளது.
வரலாற்று சிறப்பும் பழம் பெருமை வாய்ந்த ஊர் திருமயம். இவ்வூரின் மையப் பகுதியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஊமையன் கோட்டை எனப்படும் கற்கோட்டை.
இக்கோட்டை கிபி 8 மற்றும் 9-வது நூற்றாண்டுகளில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இலக்கியங்களும் கட்டடக் கலை நூல்கள் கூறும் இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக இக்கோட்டை வடிவமைக்கப் பட்டுள்ளது.
கோட்டையினுள் குடவரையில் சிவன், விஷ்ணு கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. சத்தியகிரீசுவரர் மற்றும் சத்தியமூர்த்திபெருமாள் ஆகிய தெய்வங்கள் இங்கு வீற்றிருக்கின்றன.
இதில் வைணவப் பிரிவினரின் முக்கியமான தலமாக விளங்குவது சத்தியமூர்த்தி கோயிலாகும். இக்கோயில் ஆதிரங்கம் என அழைக்கப்படுவதுடன், திருச்சி திருவரங்கம் வைணவக் கோயிலைவிட காலத்தில் முந்தியது. தென்பாண்டி மண்டலத்து 18 பதிகளில் இதுவும் ஒன்றாகும்.
இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த திருமயத்தை மத்திய அரசின் சுற்றுலாத் தலமாக ஆக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இது குறித்து 3-9-2006 -ல் “தினமணியில்’ படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் தமிழக அரசு புராதன நகராக தற்போது அறிவித்துள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்