Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007
இரட்டை அடுக்கு ரயில்கள் அறிமுகமாகின்றன! 2007-08 பட்ஜெட்டில் அறிவிக்கிறார்- லாலு
புது தில்லி, பிப். 12: பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள மார்க்கங்களில் இரட்டை அடுக்கு ரயில் சேவையை அறிமுகப்படுத்த அமைச்சர் லாலு பிரசாத் திட்டமிட்டிருக்கிறார்.
சரக்கு ரயில்களில், “”உங்கள் பெட்டியைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக, சுற்றுலாத்துறையில் உள்ள தனியார் டூர் ஆபரேட்டர்களும், நிறுவனங்களும் தங்களுக்கென்றே தனியாக பயன்படுத்த “”உங்கள் ரயிலை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறார் லாலு.
அத்துடன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களை ஒரே டூரில் சேர்ந்தார் போல பார்க்கவும் சிறப்பு திட்டங்கள் அமலாகவிருக்கின்றன.
உள்நாட்டு ரயில் பயணிகளும் வெளிநாட்டு ரயில் பயணிகளும் வாய்க்கு ருசியாகவும் சுகாதாரமாகவும் நல்ல தின்பண்டங்கள், சிற்றுண்டி, உணவு ஆகியவற்றைச் சாப்பிட, “பட்ஜெட் ஹோட்டல்களை’ கட்டி, நிர்வகித்து, சிறிதுகாலம் பொறுத்து ரயில்வே வசம் ஒப்படைக்கும் திட்டத்தை சிறந்த தனியார் நிறுவனங்களைக் கொண்டு நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார் லாலு.
இம் மாதம் 26-ம் தேதி 2007-08-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார் லாலு பிரசாத். பட்ஜெட் குறித்து ரயில்வே பவன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
“ரயில்களில் பயணக் கட்டணமோ, சரக்குக் கட்டணமோ, சீசன் கட்டணமோ அதிகரிக்கப்படமாட்டாது. அதே சமயம் சில கட்டண விகிதங்கள் சீரமைக்கப்படலாம்.
சில மார்க்கங்களில் ஆண்டு முழுக்க பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் 24 பெட்டிகளுக்கு மேல் இணைத்து ஓட்ட முடிவதில்லை. எனவே இருக்கும் பெட்டிகளிலேயே படுக்கை, இருக்கை வசதிகளை அதிகப்படுத்த, இரட்டை அடுக்கு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
படுக்கை வசதி கீழ் தளத்திலும், உட்கார்ந்தே பயணம் செய்யும் வசதி (சேர்-கார்) மேல் தளத்திலும் இருக்குமாறு பெட்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பெüத்த தலங்களுக்கு சிறப்பு ரயில்கள்: புத்தர் பிறந்து 2,500 ஆண்டுகள் ஆனதையொட்டி அவர் பிறந்த இடம், அவருடைய வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்த இடம், அவர் புனிதப்பயணம் சென்ற தலங்கள் போன்றவற்றை ஒரு சேர பார்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
வரலாற்று ரீதியான, கலாசார ரீதியான சுற்றுலாப் பயணங்களுக்கென்று தனித்தனி ரயில்கள் விடப்படும். ரயில்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, உள் அலங்காரம், பணியாளர்களின் சீருடைகள் போன்றவை இருக்கும்.
தில்லி-ஆக்ரா, தில்லி-ஜெய்பூர், தில்லி-ஸ்ரீநகர் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படும். உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் உள்ள புத்த தலங்களுக்கு தனி ரயில் விடப்படும். இதில் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ரயில்வேதுறை செயல்படும்.
90 நாள்களுக்கு முன்னதாகவே முன்பதிவு: வெளியூர் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுகிறவர்கள் வசதிக்காக, 90 நாள்களுக்கு முன்னதாகவே டிக்கெட் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் ரயில்வேதுறைக்கு நல்ல வருவாய் கிடைக்கவிருக்கிறது.
உபரி ரூ.20,000 கோடி: ரயில்வேயின் வருவாய் பெருகியதால் ரூ.20,000 கோடிக்கு உபரி இருக்கிறது. இது மார்ச் 31-ம் தேதிவரை நீடிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரயில் ஊழியர்களுக்கு ரூ.37 கோடி பரிசு
பாட்னா, மார்ச் 2: இருபதாயிரம் கோடி ரூபாய் உபரி வருமானம் பெற உதவிய ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி அமைச்சர் லாலு பிரசாத் ஹோலிப் பரிசாக ரூ.37 கோடியை வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.
நாலாவது பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு தலா 400 ரூபாய் ரொக்கம் தரப்படும். அவர்களுடைய நல நிதியில் (ஸ்டாஃப் பெனிஃபிட் பண்ட்) தலா ரூ.100 சேர்க்கப்படும். இதர அலுவலர்களுக்கும் ரொக்கப் பரிசு உண்டு.
ரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை நிறுவ நடவடிக்கை
புதுதில்லி, மார்ச் 2: சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை ரயில்களில் நிறுவ உள்ளது ரயில்வே. இதற்காக தற்போதைக்கு ரூ.3 கோடியில் 80 கழிப்பறைகள் நிறுவப்பட உள்ளன. அதற்குரிய ஆர்டர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.
மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே துணை அமைச்சர் ஆர்.வேலு இதனைத் தெரிவித்தார்.
================================================
முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக பயணிகள் ரயில் சேவை: ரயில்வே துறை திட்டம்
புதுதில்லி, ஏப். 2: முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான நகரப்பகுதிகளை இணைப்பதில் இந்திய ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது. 600 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்தை இரண்டரை முதல் நான்கு மணி நேரங்களில் கடக்கும் வகையில் அதிக வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்திட்டத்தை அரசும் தனியாரும் இணைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.
சரக்குப் போக்குவரத்துக்கென முக்கியமான 4 வழித்தடங்களான தில்லி-மும்பை, தில்லி-கோல்கத்தா, சென்னை-கோல்கத்தா, மும்பை-சென்னை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தனி ரயில்பாதைகளை அமைக்க ரயில்வே ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அவற்றில் தில்லி-மும்பை, தில்லி-சென்னை ஆகிய தனி சரக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த திட்டங்களுக்கு ஜப்பான் கடனுதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், அரசும் தனியாரும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக்கூறும் உள்ளது.
ரயிலுக்கு தேவையான என்ஜின்கள், பெட்டிகள், சரக்கு வேகன்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில் பெட்டிகளின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்கும் வகையில் சென்னை பெரம்பூரில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகிய நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். மேலும் அரசும் தனியாரும் இணைந்து புதிய ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்படும்.
ஏப்.06 முதல் பிப். 07 இடைப்பட்ட காலத்தில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இலக்கைக் காட்டிலும் 24 பெட்டிகள் கூடுதலாக 1,110 பெட்டிகளும், கபூர்தலாவில் 4 பெட்டிகள் கூடுதலாக 1,164 பெட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.
11வது திட்ட காலத்தில் மின்சாரம், டீசலில் இயங்கும் என்ஜின்களின் தேவை 1,800 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 360 என்ஜின்கள் தேவை.
ஆனால் தற்போது ஆண்டுக்கு 150 என்ஜின்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதை 200 ஆக அதிகரிக்க முடியும். எஞ்சியுள்ள தேவையை பூர்த்தி செய்ய புதிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டியது அவசியம்.
கடந்த ஆண்டு டீசல் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் 175 என்ஜின்களும், சித்தரஞ்சனில் உள்ள மின்சார ரயில் என்ஜின் உற்பத்தி நிறுவனத்தில் 133 ரயில் என்ஜின்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
Railway Budget: India to invest billions in rail revamp - Fares slashed, freight untouched as profits rise « Tamil News said
[…] பதிந்தவர் bsubra மேல் பெப்ரவரி 27, 2008 சென்ற வருடம்: Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion « Tamil News Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely « Tamil News […]