Solutions – K Loganathan: Strategy & Planning required for improvement in Village Life
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007
தேவை கிராமப்புற வாழ்விட கொள்கை
கே. லோகநாதன்
ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பது அனைத்துத் தரப்பு மக்களின், குறிப்பாக, அடித்தள ஏழை மக்களின் முன்னேற்றத்தை வைத்தே மதிப்பிடப்படும்.
11 ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றியும்கூட, கிராமப்புறங்களில் வாழ்விட வசதி என்பது பெயரளவில்தான் உள்ளது.
நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் கிராமப்புறங்களில்தான் வசிக்கின்றனர். ஆனால் அவர்களின் முன்னேற்றத்தில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.
ஐந்தாண்டுத் திட்டங்களில் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தொழிற்துறை வளர்ச்சியை மட்டுமே பிரதான குறிக்கோளாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இந்தியாவைப் பொறுத்தமட்டில், வாழ்விட முன்னேற்றம் என்பது மக்களின் நடவடிக்கையாகவே இருந்து வருகிறது. பழைய வீடுகளை பழுதுபார்த்தலும் விரிவுபடுத்துதலும் நடைபெற்று வருகின்றன. பணவசதி இருப்பவர்கள் மட்டுமே புதிய வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். நகர்ப்புறங்களில் உள்ளதைப் போன்று அரசுத் தரப்பில் கிராமப்புறங்களில் வாழ்விட முன்னேற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. இதனால் கிராமமக்கள் குடிசைகளிலும் அடிப்படை வசதியற்ற வீடுகளிலும் வாழ வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர்.
ஆனால் செல்வந்த நாடுகளிலும் வளர்ச்சி பெற்றுவரும் நாடுகளிலும் கிராமப்புற வாழ்விட முன்னேற்றத்தில் அரசுகளின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வாழ்விட முன்னேற்றத்துக்கும் நேரடியான தொடர்பு உண்டு. இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
நமது நாட்டில் வீடற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப வாழ்விட கொள்கைத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
கிராமப்புறங்களில் வீட்டுவசதி பற்றாக்குறை 65 சதவீதமாக உள்ளது. வாழ்வாதாரமான வாழ்விட கொள்கைத் திட்டம் குறித்து பரந்த அளவிலான கண்ணோட்டம் அரசிடம் இல்லை. 1998-ல் தேசிய வாழ்விட கொள்கை வெளியிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் இதிலும் கூட கிராமப்புறங்களின் தனித்தன்மை மற்றும் அங்குள்ள மக்களின் தேவைகள் குறித்து தெளிவாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.
கிராமங்களில் ஏழ்மை தாண்டவமாடுவதற்கு விவசாயப் பொருளாதாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டதே முக்கியக் காரணம். இதன் விளைவாக கிராமங்களில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. கிராமமக்கள் வேலைவாய்ப்பு தேடி நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்வது அதிகரித்துவிட்டது. இதனால் பெருநகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகரித்து வருகிறது.
இதற்குத் தீர்வுதான் என்ன?
கிராமப்புறப் பொருளாதாரத்தை முன்னேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும். வாழ்விட கொள்கை என்பதை வெறும் கட்டுமான நடவடிக்கையாக கருதிவிடக்கூடாது. வாழ்விட கொள்கைக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் நேரடித் தொடர்பு உண்டு. வீடு கட்டும் தொழில் மறைமுக வேலை வாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கும்.
கட்டுமானத் துறையில் மட்டும் நாட்டின் 16 சதவீத தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதனைக் கொண்டே “வீடு கட்டுதல்’ என்பது நாட்டின் முன்னேற்றத்தோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை அறியலாம். கிராமப்புறங்களில் 22 சதவீத மக்களுக்குக் குடிநீர் வசதி இல்லை. சுமார் 67 சதவீத மக்களுக்கு சுகாதார வசதி இல்லை. எனவே, கிராமப்புறங்களுக்கென பிரத்தியேக வாழ்விட கொள்கை தேவை.
மத்திய, மாநில அரசுகள், கிராமப் பஞ்சாயத்துகள், பொதுநல அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், நிதியுதவி நிறுவனங்கள், தொழில்நுட்ப மையங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் விதத்தில் தேசிய கிராமப்புற வாழ்விடக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.
வாழ்விடம் (இருப்பிடம்) என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். இதற்கேற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசின் முக்கியக் கடமையாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்