Mooligai Corner: Herbs & Naturotherapy – Naaiuruvi
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007
மூலிகை மூலை: தேள் கடிக்கு நாயுருவி
விஜயராஜன்
எதிர் அடுக்குகளில் அமைந்த காம்புள்ள முழுமையான இலைகளையும் நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி இனமாகும். இது இரண்டு அடி வரை வளரக் கூடியது. இதன் தண்டு, காம்பு செந்நிறம் உடையதாக இருக்கும். இதன் எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் உடையவை. சிறுநீர் பெருக்கவும், நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தவும், சதை, நரம்புகளைச் சுருங்கவும் செய்யும் மருத்துவக் குணம் உண்டு. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் தானாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள்: அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி.
வகைகள்: செந்நாயுருவி என்னும் இந்தவகையின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும். மருத்துவக் குணம் பெரும்பாலும் இதற்கு அதிகமாகவே காணப்படுகின்றது. ஆங்கிலத்தில் இதை Achyranthes aspera, Amarantaceze
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். நாயுருவி இலைகளில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல், பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.
நாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும்.
நாயுருவி இலை, பனம்பாளை ஆண் இனம், பிரண்டையில் ஆண் இனம் இவற்றை நிழலில் காயவைத்து சம அளவாக எடுத்துக் கலந்து ஒரு தூய்மையான இடத்தில் அதை கொட்டி நெருப்பு வைத்து கொளுத்தி சாம்பலாக்க வேண்டும். இந்தச் சாம்பலுக்குத் தக்கவாறு கிணற்று நீரை ஊற்றி அலசி 3 தடவை களிம்பு நீக்கிய பாத்திரத்தில் ஊற்றி அசையாமல் 24 மணி நேரம் வைத்திருந்தால் வடிகட்டிய நீர் நன்றாகத் தெளிந்து இருக்கும். இந்த நீரை ஒரே வகையான விறகால் பதமாகக் காய்ச்சினால் உப்பு கடைசியில் கிடைக்கும். இந்த உப்பை நல்ல தடிப்பான தென்னம் மர சீமாரின் நுனியில் 2 முறை தொட்டு தேனிலோ அல்லது மோரில் கலந்து 2 வேளை கொடுத்து வர இரைப்பிருமல்(ஆஸ்துமா), பித்தம், எலும்புருக்கி நோய் நல்ல குணமாகும். தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதொடை இவற்றின் குடிநீர்களை துணை மருந்தாகக் குடிக்கலாம்.
நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.
நாயுருவி இலையோடு குப்பை மேனி இலையையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு கடிபட்ட வாயில் தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் இறங்கிவிடும்.
நாயுருவி வேர்ப்பட்டை, மிளகு சம அளவாக எடுத்துப் பொடி செய்து 1/4 கிராம் எடுத்து சிறிது தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். நாயுருவி விதையை 10 கிராம் எடுத்து அரைத்து 2 வேளை 2 நாட்கள் சாப்பிட்டு வர பேதி நிற்கும்.
நாயுருவி விதையை நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 20 கிராம் எடுத்து, துத்திக் கீரையை வதக்கும் போது சேர்த்து உணவுடன் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூலமும் குணமாகும். நாயுருவி விதையைச் சோறு போல சமைத்து உண்ண பசி எடுக்காது. ஒரு வாரம் ஆயாசம் இல்லாமல் இருக்கலாம். பின்னர் மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்க பசி உண்டாகும்.
நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கப் பல் தூய்மையாகி முகம் வசீகரம் ஆகும். நாயுருவி சமூலமும், வாழைச் சருகும், மூங்கில் குருத்தும் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு 400 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 200 மில்லியளவு 2 வேளை குடிக்க, பெண்களின் வயிற்றிலுள்ள அழுத்தத்தை வெளியேற்றும். நாவறட்சி நீங்கும்.
a.kamal said
sir stemcells muulam mental disease ai cure panna mudiyuma engu sendru cure pandrathu pls mail pannunga.mkkamaludeen@gmail.com