மெர்க்கண்டைல் வங்கி பங்கு மோசடி: பா.ராமச்சந்திர ஆதித்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா?- ஒரு வார காலத்துக்குள் தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை, பிப்.5-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் கே.பி.கணேசன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நாடார் சமுதாய மக்களுக்கு சொந்தமான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி எஸ்ஸார் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்திடம் இருந்து வங்கியை மீட்பதற்காக பங்குகளை வாங்க வேண்டும் என்று கூறிய நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர் மன்ற தலைவரான ராமச்சந்திர ஆதித்தன் எனது புகாரில் முதல் குற்றவாளியாக உள்ளார்.
இந்த சமுதாயத்தை சேர்ந்த நான் பங்குகளை வாங்குவதற்காக ராமச்சந்திர ஆதித்தன் விடுத்த விளம்பரத்தை பார்த்து சில பங்குகளை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராமச்சந்திர ஆதித்தனை அணுகினேன். அவர் ஒரு பங்கின் விலை ரூ.5,500 என்றும் இது தொடர்பாக மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தலைவர் மற்றும் செயலாளரை அணுகலாம். மற்றும் பிராந்திய மேலாளர், மேலாளர் ஆகியோரையும் அணுகலாம் என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நான் அந்த அதிகாரிகளையும் அணுகினேன். அவர்களும் இதே கருத்தை தெரிவித்து விளக்கம் அளித்தனர்.
நான் 23.4.97 அன்று ராமச்சந்திர ஆதித்தன் தலைவராக உள்ள நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர் மன்றத்தின் பெயரில் 27 ஆயிரத்து 500 ரூபாய்க்கு டிமாண்ட் டிராப்டு எடுத்து எனக்கு 5 பங்குகள் அனுப்பும்படி கோரியிருந்தேன். என்றாலும் 2000 ஆண்டு வரை எனக்கு பங்கு பத்திரம் தரவும் இல்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை.
இதன் பிறகு நான் உசிலம்பட்டியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளையின் மேலாளரிடம், எனக்கு வீட்டுக்கடனாக ஒரு லட்ச ரூபாய் வழங்கும்படி கூறினேன்.
29.12.2000 அன்று இந்த கடன் தொகை ஒரு லட்ச ரூபாயை எனது வங்கி கணக்கில் சேர்த்து, அதே நாளில் எனது ஒப்புதல் இல்லாமல் 82 ஆயிரத்து 500 ரூபாயை பங்குகள் வாங்குவதற்காக நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர்கள் கணக்குக்கு மாற்றிவிட்டார்.
நான் ஏற்கனவே நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர்கள் மன்றத்துக்கு 23.4.1997 அன்று கொடுத்த பணத்துக்காக இதுவரையில் எந்தவித பங்கு பத்திரங்களும் வழங்கப்படவில்லை. இப்போது மேலும் எனது கணக்கிலிருந்து 82 ஆயிரத்து 500 ரூபாயை அந்த மன்ற கணக்குக்கு மாற்றிவிட்டார். இதன் பின்னர் நான் எத்தனையோ முறை வங்கி அதிகாரிகளை சந்தித்து எனது பணத்துக்கு பங்கு பத்திரங்களை வழங்க வேண்டும் அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினேன்.
நான் 2000-ம் ஆண்டிலேயே பணத்தை கொடுத்திருந்தும் 2003-ம் ஆண்டுதான் வாங்கியது போல 18.9.2003 அன்று, 10 பங்குகளை கொடுத்தனர். இதனால் நான், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை அணுகி என்னை அவர்கள் வேண்டுமென்றே ஏமாற்றி மோசடி செய்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்கள் என்பதால் இந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கினார்.
இதனால் வேறு வழியில்லாமல் நான் மதுரையில் உள்ள 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தேன். நான் கொடுத்த புகாரை குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து புலனாய்வு செய்து அந்த அறிக்கையை 16.1.2005-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
மதுரை 1-வது மாஜிஸ்திரேட்டு தெளிவாக உத்தரவு பிறப்பித்தும் இந்த நாள் வரை குற்றப்பிரிவு போலீசாரால் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. முறையான நடவடிக்கைகள் எதுவும் குற்றப்பிரிவு போலீசாரால் எடுக்கப்படவும் இல்லை.
எனவே மதுரை 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவின்படி எனது புகாரின் அடிப்படையில் மதுரை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர ஐகோர்ட்டு உத்தரவிட்டு எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கணேசன் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
கீழ்கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டு இருப்பதால் கண்டிப்பாக போலீசார் மனுதாரர் கொடுத்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டும். அரசு வக்கீலும் இதை ஏற்றுக் கொள்கிறார். இது சம்பந்தமாக விவரங்களை பெற அரசு வக்கீல் கால அவகாசம் கேட்டுள்ளார். எனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதா? என்ற விவரத்தை ஒரு வாரத்துக்குள் அரசு வக்கீல் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
======================================================
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 33 சதவீத பங்குகளை வெளிநாட்டினருக்கு விற்க திட்டம்; சிவசங்கரன், பா.ராமச்சந்திர ஆதித்தனின் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும்: கருணாநிதியை நேரில் சந்தித்து நாடார் சங்கத்தினர் மனு
சென்னை, மார்ச்.18-
முதல்-அமைச்சர்கருணா நிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாடார் சங்ககளின் பிரதிநிதிகள் சந்தித்து மனு கொடுத்தார்கள். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாடார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை ஸ்டெர்லிங் நிறுவன அதிபர் சி.சிவசங்கரனிடமிருந்து மீட்பதற்காக வங்கி மீட்புக் குழு 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு பா.ராமச்சந்திர ஆதித்தன் தலைமை தாங்கினார். வங்கிக்கான பங்குகளை மீட்க உலகமெங்கும் உள்ள நாடார் சமுதாய மக்களிடம் பணம் திரட்டப்பட்டது.
இவ்வாறு ஒரு கோடியே 6 ஆயிரம் பங்குகளை மீட்க சுமார் ரூ.90 கோடி வசூல் செய்யப்பட்டு அதில் ரூ.80 கோடியே 75 லட்சம் மட்டும் ஸ்டெர்லிங் குழுமத் தலைவர் சி.சிவசங்கரன் வசம் கொடுக்கப்பட்டு சுமார் 96 ஆயிரம் பங்குகள் நாடார் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டது. வசூல் செய்த பணத்தில் சுமார் ரூ.9 கோடியே 25 லட்சம் தொகைக்கு உண்டான சுமார் 10 ஆயிரம் பங்குகளை நாடார் சமுதாய மக்களுக்கு கொடுக்காமல் பா.ராமச்சந்திர ஆதித்தன் மோசடி செய்து விட்டார்.
இதுகுறித்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவிற்கிணங்க மதுரை குற்றப்பிரிவில் (இந்திய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மத்திய குற்றப்பிரிவில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
மீட்புக்குழு தொடங்கி இதுநாள் வரை பா.ராமச்சந்திர ஆதித்தன் எந்தவித மான கணக்குகளும் முதலீட்டாளர்களுக்கோ, மன்ற உறுப்பினர்களுக்கோ கொடுக்கவில்லை. ஆகவே, தற்போது கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு மீட்புக்குழு அலு வலகத்திலுள்ள கணக்குகள் அடங்கிய நான்கு கணினிகளின் இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
தங்களது குடும்பத்தினரே தொடர்ந்து வங்கியின் இயக் குனர் பதவியை வகிப்பதற்கு சிவசங்கரன் வசமுள்ள 33 சதவீத பங்குகளின் ஓட்டுரிமை தேவைப்படுவதால் சிவசங்கரனின் கைப்பாவை யாக மாறி நாடார் சமுதாயத்தை அடகு வைத்து, நாடார் மஹாஜன வங்கி முதலீட்டாளர் மன்றத்தின் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக ஸ்டெர்லிங் நிறுவனத்துடன் புதிய புதிய ஒப்பந்தங்களை பெருந்தொகைக்கு ஏற்படுத்தி கொண்டார். அந்த ஒப்பந்தத் தின்படி அவர் பணம் செலுத்தவில்லை. ஆனால் சிவசங்கரன் வசமுள்ள 95 ஆயிரத்து 418 (33 சதவீதம்) பங்குகளின் மதிப்பு ரூ.74 கோடியே 25 லட்சம் ஆகும். ஆனால் பா.ராமச்சந்திர ஆதித்தன் மற்றும் எம்.ஜி.எம். மாறனும், ஸ்டெர்லிங் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு நாடார் மஹாஜன வங்கி பங்கு முதலீட்டாளர் மன்றத்திற்கு தெரியாமல் ரகசியமாக 10.3.2006 அன்று 95 ஆயிரத்து 418 (33 சதவீதம்) பங்குகளை சுமார் 166 கோடியே 5 லட்சம் ரூபாய் என்று ஒரு போலியான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் சிவசங்கரனிடம் கூட்டுச் சேர்ந்து 33 சதவீத வங்கியின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்ட திட்டமிட்டுள்ளனர். ஆகவே, தாங்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஸ்டெர்லிங் நிறுவனத்திடம் மீதமுள்ள 33 சதவீத பங்கு களை நாடார் மஹாஜன வங்கி பங்கு முதலீட்டாளர்கள் மன்றம் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தத்தின்படி நாடார் சமுதாய மக்களுக்கே கிடைக்க வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பா.ராமச்சந்திர ஆதித்தனும், அவருடைய குடும்பத்தினர் மட்டுமே இயக்குனர்களாக உள்ளனர். இந்த பதவியை தவறாக பயன்படுத்தி கமிஷன் பெற்றுக்கொண்டு வங்கி கடன் வழங்குகிறார்கள். அதுமட்டுமின்றி கடன் வாங்கியவர்களிடமிருந்து ஒன் டைம் செட்டில்மெண்ட் மூலம் தீர்வு செய்வதிலும் கமிஷன் பெறுகிறார்கள்.
சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரை இந்த விசாரணையில் வேகம் காட்ட உத்தரவிட வேண்டுகிறோம். முதல்-அமைச்சர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் பங்குகள் மாற்றம் செய்யும் விஷயத்தில் தலை யிட்டு வங்கியின் பங்குகளை நாடார் இன மக்களுக்கே கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். பா.ராமச்சந்திர ஆதித்தனிடமிருந்து சுமார் ரூ.9 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள சுமார் 10 ஆயிரம் வங்கியின் பங்கு பத்திரங்களையும், பணம் செலுத்தியும் பங்குகள் கிடைக்காத நாடார் சமுதாய மக்களுக்கு கிடைக்க ஆவன செய்யவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.
இதன்பின்பு அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது:-
சிவசங் கரனின் ஸ்டெர்லிங் குழுமத் திடம் இருக்கின்ற 33 சதவீத வங்கிப் பங்குகளை வெளிநாட்டினருக்கோ அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கோ விற்பதற்கு, எங்களது நண்பராக இருந்த பா.ராமச்சந்திர ஆதித்தன் முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறார். அதைத் தடுக்க வேண்டும் என்பது எங்களின் முதல் கோரிக்கை.
மேலும் ஸ்டெர்லிங் குழுமத்திடம் உள்ள 33 சதவீத பங்குகளும் நாடார் களுக்குத்தான் வர வேண்டும். நாடார்களும் அனைவரும் நாடார் சங்கங்களும் அதை வாங்கத் தயாராக இருக்கிறோம்.
பா.ராமச்சந்திர ஆதித்தன் பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார். ஒரு மாத காலத் துக்குள் யாரிடமாவது இருந்து வாங்கித் தந்து விடுவேன் என்று கூறி இருந்தார். ஆனால் சிவசங்கரனிடம் இருந்துதான் 10 ஆயிரம் பங்குகளை வாங்குவதற்கு நாடார் சங்கங்கள் பணம் கொடுத்தன.
பணம் போய் சேர்ந்து விட்டது. ஆனால் அதற்கான பங்கு பத்திரங்கள் யாருக்குப் போனது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இது பெரிய மோசடி. பாதிக்கப்பட்ட நாடார்களுக்கு பங்கு பத்திரங்களை வாங்கித் தர வேண்டும் என்பதை 2-வது கோரிக்கையாக முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் வைத்தோம்.
முழுமையான ஈவுத் தொகை (டிவிடன்ட்), உரிமைப் பங்கு ஆகியவற்றை தருவதாகக் கூறிதான் நாடார்களிடம் பணம் வசூல் செய்தோம். அதைத் தருவதற்கும் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதையும் 3-வது கோரிக்கையாக முதல்-அமைச்சரின் கவனத் துக்கு கொண்டு சென்றோம்.
மெர்க்கண்டைல் வங்கி லாபத்தில் ரிசர்வ் வங்கி ஆணைஇல்லாமலேயே ரூ.1000 டிவிடெண்ட் தரமுடியும். அதை கூட தரவில்லை. ஏனென்றால் சிவசங்கரனின் ஆணைப்படி நடக்கிறார்.
பங்குகளை நாங்களே வாங்க தயாராக இருந்த நேரத்தில் மீட்பு குழுவினரை கலந்து பேசாமல் தன்னிச்சையாக ரூ.74 கோடி மதிப்புள்ள பங்குகளை ரூ.130 கோடி என்றும் அதன் பின்னால் அதை ரூ.166 கோடி என்றும், ஒவ்வொரு பொதுக்குழுவின்போதும் 33 சதவீத பங்குகளுக்கான ஓட்டு உரிமையை வாங்குவதற்காக இவ்வாறு உயர்த்தி சமு தாயத்தை கடனாளியாக ஆக்கிவிட்டனர்.
நாடார்களின் உரிமையான இந்தப் பங்குகள், வெளி நாட்டவருக்கோ அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கோ போகக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். அதற்காக இன்னும் எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
முதல் அமைச்சர் கருணாநிதியிடம் மனு கொடுத்தவர்கள் விவரம்:
மதுரை நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ், திருநெல் வேலி தட்சணமாற நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.ஆர்.சபாபதி நாடார், தூத்துக்குடி நாடார் மகமை தலைவர் எம்.எஸ்.ஏ.பீட்டர் ஜெபராஜ், இந்திய நாடார்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வெ.த. பத்மநாபன், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க செயலாளர் ஆர்.சந்திரன் ஜெயபால், எம்.மாரித்தங்கம், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜ்குமார் நாடார், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார், மதுரை நாடார் மஹாஜன வங்கி பங்கு முதலீட்டாளர் மன்ற அறங்காவலர்கள் வி.எம்.ஜி.ராஜசேகரன், எஸ்.ஜி.சேகர், டி.பி.எஸ்.பொன்குமார், பல்லாவரம் வட்டார நாடார் கள் சங்க செயலாளர் சிற்றம்பல பாண்டியன், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், சென்னை வாழ்நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்கு னர்கள் பி.எஸ்.சத்தியசீலன், ஆர்.தமிழரசன், தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், கீழ்கடலோர நாடார் சங்க நிர்வாகிகள் டி.ராமச்சந்திரன், கே.சிவராமன்.