Raytheon Offers Frontline Weapons to Indian Armed Forces
Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007
5 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரியஆயுதச் சந்தையாக மாறும்: அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனம் தகவல்
புதுதில்லி, ஜன. 31: உயர் ரக போர் ஆயுதங்களை இந்திய ராணுவத்துக்கு விற்கத் தயாராக இருப்பதாக அமெரிக்காவின் முன்னணி ஆயுத தயாரிப்பு நிறுவனமான ரேதியான் கூறியுள்ளது.
5 ஆண்டுகளில் ரேதியான் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பதற்கான மிகப்பெரிய, மிகமுக்கியமான சந்தையாக இந்தியா மாறும் எனவும் அந் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்ட ஆயுத நிறுவனம் ரேதியான். அந் நிறுவனத்தின் ஆசிய விற்பனைப் பிரிவு தலைவர் அட்மிரல் (ஓய்வு) வால்டர் எஃப் டோரன், தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தட்டுப்பாடின்றி கிடைக்கக் கூடிய உயர் ரக போர்த் தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை. அமெரிக்க ஏவுகணைகள், விண்வெளி சாதனங்கள் மற்றும் பிற முன்னணி தொழில்நுட்பங்களை இந்திய ராணுவத்திற்கு வழங்க ரேதியான் விருப்பம் கொண்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் ரஷிய தொழில்நுட்பங்களே பெருமளவு இடம்பெற்றுள்ளன. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் தயாரிப்பு போர்த் தளவாடங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் மிகப்பிந்தி நுழைந்துள்ள அமெரிக்க நிறுவனங்களால் இந்திய ஆயுதச் சந்தை மிகவும் போட்டி மிகுந்ததாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாற்றமடையும்.
தற்போது ரேதியான் நிறுவனத்தின் இந்திய விற்பனை ரூ.135 கோடி அளவில்தான் உள்ளது. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் எங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறும் என்றார் டோரன். இது குறிப்பாக எந்த அளவு வளர்ச்சி அடையும் என்பதைத் தெரிவிக்க மறுத்த டோரன், பல நூறு கோடி அமெரிக்க டாலர்கள் அளவில் விற்பனை இருக்கும் என வல்லுநர்கள் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
மறுமொழியொன்றை இடுங்கள்