Veera. Jeeva Prabhakaran: Kerala’s adamant attitude results in 40 acre of grains loss for Tamil Nadu – Mullai Periyar
Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007
பிடிவாதத்தால் கடலுக்குச் சென்றது 4 டி.எம்.சி. தண்ணீர்: 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு?
வீர. ஜீவா பிரபாகரன்
மதுரை, ஜன. 30: பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, நீர்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த கேரள அரசு மறுத்ததால் மதுரை மாவட்டத்தில் தற்போது 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து, கேரள அரசிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப். 27-ல் தீர்ப்பு அளித்தது.
ஆனால், இத்தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்தாமல் காலம் தாழ்த்துவதற்கு ஏற்ற வகையில் கேரள சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
இரு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையின்போதும், உடன்பாடு காண்பதற்கான முயற்சியில் கேரள அரசு சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.
மேலும், பிரச்சினையைத் திசை திருப்பும் வகையில் கேரள முதல்வரின் இணைய தளத்தின் மூலம் பெரியாறு அணை குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கேரள அமைச்சர்களும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர்.
கடலுக்குச் சென்ற தண்ணீர்: பெரியாறு அணையின் இருபோக, ஒருபோக மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியைச் சேர்ந்த 1.45 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு கடந்த அக்டோபர் 23-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
உரிய நேரத்தில் பருவமழை தொடங்கியதாலும் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாலும், இந்த ஆண்டு போதிய பாசன நீர் கிடைக்கும் என்று எதிர்பார்த்து மதுரை மாவட்ட விவசாயிகள் நெல் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டினர்.
விவசாயிகள் எதிர்பார்த்தது போலவே, தொடர் மழையால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. எனினும், 136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால் 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது.
காய்ந்து வரும் நெற்பயிர்: கடந்த அக்.23-ல் தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், நவம்பர் முதல் வாரம் வரை பல்வேறு பகுதியிலும் நடவுப் பணிகள் படிப்படியாக நடைபெற்றன. நெற் பயிர் முழு விளைச்சல் பெற 120 நாள்களுக்குத் தண்ணீர் தேவை.
ஆனால், பெரியாறு, வைகை உள்ளிட்ட அணைகளில் போதிய நீர் இன்மையால் தற்போது பாசனப் பகுதிக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதுவும், பயிருக்குக் கடைசி வரை தண்ணீர் அளிக்க வாய்ப்பில்லை.
இந் நிலையில், மதுரை மாவட்டத்தில் தற்போது நெல் பயிரிட்டுள்ள 1 லட்சத்து 45 ஆயிரம் ஏக்கரில் 40 ஆயிரம் ஏக்கர் போதிய தண்ணீர் இன்றி பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் கேரள அரசின் மீது வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளோம். பெரியாறு அணைப் பிரச்சினை நாட்டின் வளர்ச்சி குறித்த கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை. இப் பிரச்சினை கேரளத்தில் குறுகிய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது’ என்றும் பெரியாறு பாசன ஒருபோக சாகுபடி விவசாயிகள் சங்கத் தலைவர் எம். மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.
குறைந்தது நீர்மட்டம்: பெரியாறு அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 115.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 590 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 130.90 அடியாக இருந்தது.
அரசியலைத் தாண்டிய உறவு:
தமிழகத்தில் 1946-ல் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது குமுளியிலிருந்து கீழகூடலூரில் வந்து விழும் தண்ணீரிலிருந்து மின்சார உற்பத்தி செய்யும் திட்டம் தீட்டப்பட்டது.
அதற்கு, பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை எதிர்ப்புத் தெரிவித்தார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பர் பி. ராமமூர்த்தியை முதல்வர் ராஜாஜி அனுப்பி வைத்தார்.
பேச்சுவார்த்தை நடத்திய ராமமூர்த்தி, கேரளத்திற்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 2 பைசா அளித்தால் அம்மாநில அரசு சம்மதிக்கும் என்ற கருத்தை அறிந்து ராஜாஜியிடம் தெரிவித்து, அதன்படி உடன்பாடு ஏற்பட்டு பெரியாறு மின்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
அன்று, இப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அரசியலைக் கடந்து தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டினர். இன்று அரசியல் ஆதாயமே பிரதானமாகிவிட்டது.
—————————————————————————————–
தொடர்கதையாகிவிட்ட முல்லைப் பெரியாறு பிரச்னை
பா. ஜெகதீசன்
கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1,300 அடி தூரத்தில் ரூ.216 கோடி செலவில் புதிய அணையைக் கட்டுவது தொடர்பான அறிவிப்பை கேரள சட்டப் பேரவையில் அந்த மாநில நீர் ஆதாரத் துறை அமைச்சர் என்.கே. பிரேமசந்திரன் வெளியிட்டுள்ளார்.
மூன்று தலைமுறைகளாக கேரளத்துடன் நீடித்து வரும் இந்த விவகாரத்தை இடியாப்பச் சிக்கலாக்கி, தொடர்கதையாக ஆக்கவே கேரளத்தின் இந்த அறிவிப்பு பயன்படும் என்பது தமிழகப் பாசனத் துறை வல்லுநர்களின் கருத்து.
கேரளத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி கடலில் கலக்கும் பெரியாறு, முல்லை ஆகிய நதிகளுக்கு இடையே அணை கட்டும் பணியை 1874-ல் பிரிட்டனைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் பென்னி குயிக் தொடங்கினார்.
அரசின் நிதி உதவியுடன், அடர்ந்த வனப் பகுதியில் சுமார் 3,500 அடி உயரத்தில் அணை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆரம்பநிலையில் இந்தப் பணி தோல்வி அடைந்தது. எனவே, அரசு தனது நிதி உதவியைத் தொடராமல் நிறுத்தி விட்டது.
எனினும், பென்னி குயிக் தனது சொத்துக்களையும், மனைவியின் நகைகளையும் விற்று, அணை கட்டும் பணியை தொடர்ந்தார்.
1895-ல் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது.
தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட இந்த அணை தற்போதும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் குடிநீர் -பாசன வசதி மேம்பாட்டுக்கு அடித்தளமாகத் திகழ்கிறது.
நூற்றாண்டு கொண்டாடிய இந்த அணையில் கசிவு ஏற்பட்டதாக கேரளத்தில் இருந்து வெளியாகும் சில இதழ்களில் (தவறான) செய்திகள் வெளியாகின.
1979-ல் அணையின் பாதுகாப்பு தொடர்பாக சில அச்சங்களை கேரள அரசு எழுப்பியது.
இதையடுத்து, அணையை மத்திய நீர்வளக் குழுமம் ஆய்வு செய்து, அணையைப் பலப்படுத்த 3 வகையான பணிகளை மேற்கொள்ளும்படி தமிழகத்துக்குப் பரிந்துரைத்தது.
அதன்பேரில் அணையின் நீர்மட்டம் அதன் முழு அளவான 152 அடியில் இருந்து தாற்காலிகமாக 136 அடியாகக் குறைக்கப்பட்டது.
தக்க பாதுகாப்பு -பலப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்து முடித்த பிறகு, நீர்மட்டத்தை 145 அடிக்கு உயர்த்தலாம் எனவும் குழுமம் பரிந்துரைத்தது.
பேபி டேம் எனப்படும் சிற்றணையைப் பலப்படுத்துதல், கைப்பிடிச் சுவற்றை 2 அடி உயர்த்துவது ஆகிய பணிகளைக் கேரள அரசு எதிர்த்ததால், முடிக்க இயலவில்லை.
குழுமம் கூறியபடி அணையைப் பலப்படுத்தும் இதர பணிகளைப் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசு நிறைவேற்றியது.
அதன்பிறகும், அணையின் நீர்த் தேக்கும் அளவை உயர்த்த கேரள அரசு முன்வரவில்லை.
இதுதொடர்பாக பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.
அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த சிலரும், நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என வலியுறுத்தி கேரளத்தைச் சேர்ந்த சிலரும் (கேரளம் மற்றும் சென்னை) உயர் நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
பின்னர் இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்பேரில், 19.5.2000-ல் தமிழக -கேரள முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது.
அந்தக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயவும், தக்க பரிந்துரைகளை அளிக்கவும், வல்லுநர் குழுவை மத்திய அரசு நியமித்தது.
அந்தக் குழு 2001 மார்ச்சில் அரசுக்கு அறிக்கை அளித்தது. “சிற்றணையைப் பலப்படுத்தும் பணி முடிந்த பிறகு, பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி உயரத்துக்கு நீர் மட்டத்தை உயர்த்துவது பற்றி ஆய்வு செய்யலாம்.
அதற்கு முதற்கட்டமாக நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என அந்தக் குழு பரிந்துரை செய்தது. அதை தமிழகம் ஏற்றது.
இந்த நிலையில், அணையில் நீர் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து 2006 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பு இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க பெரிதும் உதவும் என பாசனத் துறை வல்லுநர்கள் கருதினர்; அவர்களைப் போலவே, விவசாயிகளும் நம்பினர்.
அணையில் தேக்கப்படும் 142 அடி நீரில் 104 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை மட்டுமே பாசனத்துக்கு எடுக்க இயலும்.
பெரியாறு அணையில் கடந்த 25 ஆண்டுகளாக 136 அடிவரை மட்டுமே தேக்க அனுமதிக்கப்பட்டதால் 6 டி.எம்.சி. மட்டுமே நீரைத் தேக்க முடிந்தது. 152 அடிவரை நீரைத் தேக்க அனுமதிக்கப்பட்டால் 10.5 டி.எம்.சி. நீரைத் தேக்க முடியும்.
தற்போது 142 அடி நீரைத் தேக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் கூடுதலாக 1.54 டி.எம்.சி. நீரைத் தேக்க இயலும்.
பெரியாறு அணையின் நீர்த்தேக்கும் அளவை உயர்த்தும் பிரச்னையால் தமிழகத்துக்கு கடந்த 29 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு பயிர் இழப்பும், மின் உற்பத்தி இழப்பும் ஏற்பட்டுள்ளன.
கேரள அரசின் பிடிவாதத்தால் மழைக் காலங்களில் முழுமையாக நீரைத் தேக்க இயலாமல் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 35 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி, கடலில் கலந்தது.
மாநிலங்களுக்கு இடையே முற்றுப் பெறாத தொடர்கதையாக நீடிக்கும் இத்தகைய நதி நீர்ப் பகிர்வுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒரே வழிதான் உள்ளது.
தென்னிந்திய நதிகளை விரைந்து இணைப்பது ஒன்று தான் அந்த வழி.
————————————————————————————————————————————————–
பெரியாறு அணையா? தேசிய ஒருமைப்பாடா?
கடந்த 1979ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 28 ஆண்டுகளாக நீடித்து வரும் பெரியாறு அணைப் பிரச்னை இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
பெரியாற்றின் வடிமுகப் பரப்பில் தமிழ் நாட்டிலும் சில பகுதிகள் உள்ளன. இந்தப் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர். இது பெரியாறு அணையின் மொத்த வடிமுகப் பரப்பில் சுமார் 20 விழுக்காடு ஆகும். பெரி யாறு அணைக்கு வரும் நீரின் அளவில் 88.90 சதவிகிதம் நமது எல்லைக்குள்ளேயே பெய்யும் மழையினால் கிடைக்கிறது.
கேரள அரசு பெரியாற்றில் 16 அணைக ளைக் கட்டியுள்ளது. இந்த அத்தனை அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 9 சதவிகிதம் மட்டுமே பெரியாறு அணை யின் நீரில் பயன்படுத்த நாம் உரிமை பெற் றுள்ளோம். ஆனால் இந்தச் சிறு அளவைக் கூட கேரள அரசியல்வாதிகளால் பொறுக் கமுடியவில்லை.
பெரியாறு அணை உடன்பாட்டின்படி மீன்பிடிக்கும் உரிமையும் சுற்றுலாத் தளமா கப் பயன்படுத்தும் உரிமையும் தமிழகத் துக்கு உண்டு. ஆனால் அந்த உரிமைக ளைத் தமிழக அரசு கேரள அரசுக்கு விட் டுக்கொடுத்தது. இதன் மூலம் ஆண்டுதோ றும் கேரள அரசுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. பெரியாறு அணை கட்டப்படாமல் இருந்தாலோ இந்த உரிமைகளைத் தமிழக அரசு விட்டுக் கொடுக்காமல் இருந்தாலோ இந்த வருமா னம் கேரள அரசுக்குக் கிடைக்காது.
பெரியாறு அணை பலவீனமாக இருப்ப தாகவும், எந்த நேரமும் இடிந்து விழக்கூடும் அபாயம் இருப்பதால் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க வேண்டுமெனவும் கேரளம் பிடிவாதமாக வற்புறுத்தியதன் விளைவாக மத்திய நீர்ப் பாசன ஆணையம் தலையிட்டு அணை யைப் பலப்படுத்தும் வேலைகள் முடிவடை யும் வரை நீர்மட்டத்தைக் குறைக்கும்படி ஆணையிட்டது. இதன் விளைவாக கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாகப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாக இருந்து வருகிறது. இதன் விளைவாகத் தமிழ்நாட்டில் பெரும் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி இல்லாமல் பெரும் பாதிப் புக்கு உள்ளாகின.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்க ளில் பெரியாறு நீரினால் பாசனம் செய்யப் படும் நிலத்தின் பரப்பளவு சுமார் 2 லட்சம் ஏக்கர் ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்ட தன் விளைவாக மேற்கண்ட நிலங்களில் பின்வருமாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தரிசாக மாறிய நிலப்பரப்பு 38,000 ஏக் கர் இருபோக சாகுபடியாக இருந்து ஒரு போக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86,000 ஏக்கர். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்குழாய் கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு – 53,000 ஏக்கர். ஆக மொத்தம் 2 லட்சம் ஏக்கரில் 1 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக விவசாய உற்பத்தியில் இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 55.80 கோடியாகும்.
மின் உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 75 கோடியாகும். ஆக மொத்தம் தமிழகத் துக்கு இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 130.80 கோடியாகும்.
1980ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டுவரை 28 ஆண்டுகாலமாக மொத்த இழப்பு 3662.40 கோடியாகும்.
1986ஆம் ஆண்டில் அணையைப் பலப்ப டுத்தும் வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற் கும் கேரளம் சம்மதிக்கவில்லை. இது சம் பந்தமாக கேரளம், தமிழகம் ஆகிய மாநி லங்களின் உயர் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக் குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டன. கடந்த 28-4-2000 அன்று இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசும்படி மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதற்கிணங்க 19-5- 2000 அன்று இரு மாநிலப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அணையின் வலிமையை ஆராய்வதற்காக ஒரு குழுவை அமைப்ப தென முடிவு செய்யப்பட்டது.
அதற்கிணங்க அமைக்கப்பட்ட குழு 2001 மார்ச்சில் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் எனப் பரிந் துரை செய்தது. மற்றுமுள்ள வேலைகளை முடித்தபிறகு 152 அடிவரை உயர்த்தலாம் என்று கூறியது. இந்தப் பரிந்துரை உச்ச நீதி மன்றத்திற்கு அளிக்கப்பட்டது. 27-2-2006 அன்று உச்ச நீதிமன்றம் இந்தப் பரிந்து ரையை ஏற்று அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிவரை உயர்த்த லாம் எனத் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த கேரள அரசு 18-3-2006 அன்று கேரள சட்டமன் றத்தில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்து வதற்கு எதிரான சட்டம் ஒன்றை நிறைவேற் றியது. கேரள சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் இந் தச் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட் டது என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
இதற்கு எதிராக தமிழக அரசு 31-3-2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை அளித்தது. கேரள சட்டத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அணை யின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவ தைக் கேரளம் தடுக்கக்கூடாது என்றும் அந்த மனுவில் வேண்டிக் கொண்டது.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேரள அரசின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் 27-7-2006 அன்று தள்ளுபடி செய்தது. அத்துடன் இரு மாநில அரசுகளும் கூடிப்பேச வேண்டும் என்றும் அல்லது இந்திய அரசு தலையிட்டு இப்பிரச்னையைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கேட்டுக்கொண்டது. அதற்கி ணங்க 29-11-2006 அன்று புதுதில்லியில் இரு மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டத்தை மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கூட்டினார். அதில் எந்த முடி வும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பின்னர் 18-12-2006 அன்று இரு மாநில அமைச்சர் கள் கூட்டத்தை அவர் கூட்டினார். இந்த இருகூட்டங்களிலும் எத்தகைய முடிவும் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு மனுவை அளித் திருக்க வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்னையைத் தீர்க்க வழி யில்லை என்பதால் உச்ச நீதிமன்றம் அளித் திருக்கிற தீர்ப்பை உடனடியாக நிறைவேற் றுமாறு மத்திய அரசுக்கும் கேரள அரசுக் கும் ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமி ழக அரசு அந்த மனுவில் வலியுறுத்தியி ருக்க வேண்டும்.
அல்லது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கி ணங்க அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்க வேண்டும். அதை கேரள அரசு தடுத்திருக்குமானால், அந்த அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக் கினை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்க வேண்டும். ஆனால் மேலே கண்ட இரண் டையுமே தமிழக அரசு இதுவரை மேற் கொள்ளவில்லை என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெரியாறு அணை நீரில் தமிழகத்திற்கு உள்ள சட்டப்படியான உரி மைகளை நிலைநாட்ட தமிழக அரசு அடி யோடு தவறிவிட்டது.
தமிழக அரசின் இந்தத் தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் புரிந்துகொண்ட கேர ளம் அடுத்த நடவடிக்கையை மேற்கொள் ளத் திட்டமிட்டது. சட்டப்படியும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவதை ஒருபோதும் தடுக்க முடி யாது என்பதை உணர்ந்துகொண்ட கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டும் என்ற திட்டத்தை வலியுறுத்தத் தொடங்கியது.
ஏற்கெனவே மத்திய நீர்ப்பாசன கமிஷன் அமைத்த நிபுணர் குழுக்களும் உச்ச நீதிமன் றம் அமைத்த நிபுணர் குழுவும், அணை பல மாக உள்ளது. எனவே நீர்மட்டத்தை உயர்த் தலாம் எனப் பரிந்துரைகள் வழங்கிய பிறகு கேரள அரசு தானாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து அணையை ஆய்வுசெய்யும்படி கூறியது. இது சட்டவிரோதமானதாகும்.
இந்த நிபுணர் குழு ஆய்வு செய்வதற்குத் தடைவிதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை தமி ழக அரசு அணுகியிருக்க வேண்டும். அவ் வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.
பெரியாறு அணையில் கசிவு அதிகமாக இருக்கிறது என கேரள அரசு நியமித்த நிபு ணர் குழு கூறுவது முற்றிலும் பொய்யான தகவலாகும். கேரள மாநிலத்தில் பல்வேறு அணைகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் கசிவு நீரின் அளவு குறித்து கேரள மாநில அரசினால் அமைக்கப்பட்டுள்ள நீராதார வளர்ச்சி மற்றும் நிர்வாகம் குறித்த மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வருமாறு: 1895ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெரி யாறு அணையில் அதிகப்பட்ச கசிவு நிமி டத்திற்கு 89.371 லிட்டர் ஆகும். 112 ஆண் டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான அணையில் இந்த அளவுதான் கசிவு ஆகி றது.
1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட குட்டி யாடி அணையில் நிமிடத்திற்கு 249.77 லிட் டர் அளவுக்குக் கசிவு ஏற்படுகிறது. அதா வது 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புதிய அணையில் இவ்வளவு அதிகமான கசிவு ஏற்படுகிறது.
1966ஆம் ஆண்டு கட்டப்பட்ட பம்பா அணையில் நிமிடத்திற்கு 96.00 லிட்டர் அளவுக்குக் கசிவு ஏற்படுகிறது. அதாவது 41 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அணை கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியாறு அணைக்குப் பிறகு கேரள மாநிலத்தில் கட்டப்பட்ட அணைகளில் இவ்வளவு அதிகமான அளவில் கசிவு ஏற்ப டும்போது அந்த அணைகளை இடிக்க வேண்டும் என்று கேரள அரசு கூறவில்லை.
மாறாக மேற்கண்ட அணைகளைவிட மிகக்குறைந்த அளவுக்கே கசியும் பெரி யாறு அணையை இடிக்க வேண்டும் என்று கூசாமல் கூறுகிறது.
கேரள அரசு அமைத்த நிபுணர் குழு எதிர்பார்த்ததுபோல அணை பலவீனமாக இருக்கிறது. அணையில் கசிவு அதிகமாகி யிருக்கிறது. எனவே இந்த அணையை முற் றிலுமாக இடித்துவிட்டு புதிய அணை கட் டவேண்டும் எனப் பரிந்துரை செய்துள் ளது. இந்தப் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக்கொண்ட கேரள அரசு அணை கட் டுவதற்கான அலுவலகத்தையும் திறந்துவிட் டது. இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? புதிய அணை கட்டுவதற்கு கேரள அர சுக்குச் சட்டப்படி உரிமை உண்டு. ஆனால் பழைய அணையும் இரு மாநிலங்களுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட 999 ஆண்டுகால உடன்பாடும் அதன்படி நமக் குள்ள சட்டப்பூர்வமான உரிமைகளும் நீடிக்கிறது என்ற நிலைப்பாட்டை வற்புறுத் தும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் ஏக மனதாகத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண் டும். இதில் தமிழகத்தில் உள்ள சகல கட்சிக ளும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும்.
பெரியாறு அணைக்குக் கீழே இடுக்கி அணைக்கு மேலே எந்த இடமும் புதிய அணை கட்டுவதற்கு ஏற்றதல்ல. ஏற்கெ னவே கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் எத்தகைய கட்டட வேலையும் 3 ஆண்டுக ளுக்கு மேற்கொள்ளக்கூடாது என அர சாணை பிறப்பித்துள்ளது. தானே பிறப் பித்த இந்த ஆணையை மீறி அணை கட்ட முடியாது. இது கேரள அரசுக்கு நன்கு தெரியும். இருந்தாலும் வேண்டுமென்றே புதிய அணை கட்டப்போவதாக அறிவித்து கேரள மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி நடைபெறுகிறது.
புதிய அணை கட்டப்படுவதற்கு கேரள அரசு தேர்ந்தெடுத்த இடம் வனப்பகுதிக் குள் அமைந்துள்ளது. அப்பகுதியில் அணை கட்டவோ அதற்கான ஆய்வு நடத் தவோ மத்திய வன அமைச்சகத்திடம் அனு மதி பெற வேண்டும். இதற்காக கேரள அரசு கேரள வனத்துறை மூலம் மத்திய வனத்துறை அமைச்சகத்திற்கு அனுமதி வேண்டி நவம்பர் முதல் வாரத்தில் கடிதம் அனுப்பியிருந்தது. மத்திய வனத்துறை அமைச்சகம் அளித்த பதிலில் “”புதிய அணை கட்டுவதற்குத் தேர்வு செய்யப் பட்ட இடம் வனவிலங்கு சரணாலயமாக உள்ளது. வனவிலங்கு சரணாலயத்தில் அணை கட்ட அனுமதிக்க முடியாது.
வனப்பகுதியில் ஆழமாகக் குழிதோண்டி ஆய்வு நடத்தவும் அனுமதிக்க முடியாது” எனத் திட்டவட்டமான பதிலை அனுப்பி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தச் செய்தியை அடியோடு மறைத்து கேரள அரசு புதிய அணை கட்டு வதற்கான அலுவலகத்தைத் திறந்து நாட கம் ஆடியுள்ளது.
இதன் மூலம் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுப்பதற்குத் திட்டமிட்டு கேரள அரசு செயல்படுகிறது.
இதைத் தமிழக அரசும் அனைத்து அரசி யல் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று முறிய டிக்க வேண்டும்.
புதிய அணை கட்டுவதை கேரளம் தொடர்ந்து வற்புறுத்துமானால் பரம்பிக்கு ளம் ஆழியாறு திட்டத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 8 அணைகளுக்கு மேலாக மேலும் 2 அணைகளைக் கட்டும் வேலை யில் தமிழக அரசு ஈடுபடப்போவதாக அறி விக்கவேண்டும். இப்படிப் பதிலடி கொடுப் பதன் மூலம்தான் நாம் கேரளத்தின் தீய நோக்கத்தை முறியடிக்க முடியும்.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரள மாநி லத்தில் ஓடும் நதிகளுக்குத் தமிழகம் 93 டி.எம்.சி. நீரை அளிக்கிறது. இதற்குப் பதி லாக கேரளத்தில் உற்பத்தியாகி தமிழகத் திற்கு அளிக்கப்படும் நீரின் அளவு கீழே குறிக்கப்பட்டுள்ளது.
பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக் கப்பட்டால் நமக்கு 10.6 டி.எம்.சி. நீர் மட் டுமே கிடைக்கும்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டப்படி நமக்கு 32.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கி றது.
bsubra said
மதுரையில் நெடுமாறன் தலைமையில் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் மாநாடு: டாக்டர் ராமதாஸ், வைகோ- திருமாவளவன் பங்கேற்பு
மதுரை, மார்ச் 29-
தமிழ் தேசிய இயக்க தலைவரும், முல்லை பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப் பாளருமான பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் கோடை காலங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படுவதோடு, தென்னை மற்றும் விவசாய பயிர்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இம்மாவட்டங்கள் வறண்டு வருவதால் பிழைப்புக்காக வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் குடிபெயரும் நிலை ஏற்படும். எனவே முல்லை பெரியாறு பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெரியாறு அணை பிரச்சினையில் நமக்குள்ள நியாய மான உரிமையை நிலை நாட்ட பொறுப்பு இருந்தும் மத்திய அரசு அதை செய்ய தவறி விட்டது. தேசிய ஒருமைப் பாட்டை மதிக்கும் வகையில் கேரள அரசின் நடவடிக்கை இல்லை.
அரபி கடலில் சுமார் 2 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக கலக் கிறது. அதில் 200 மில்லியன் கன அடி தண்ணீர்தான் கேட் கிறோம். அதை தருவதற்கு கேரள அரசுக்கு மனமில்லை. இந்த பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த உட னேயே அதை தமிழக அரசு அமுல்படுத்த முயன்று இருக்க வேண்டும். அல்லது கோர்ட்டு அவமதிப்பு வழக்காவது தொடர்ந்திருக்க வேண்டும். இதை செய்ய தமிழக அரசு தவறி விட்டது.
தமிழகத்தில் 70 சதவீதம் நிலங்கள் ஆற்று பாசனம் மூலம் பாசன வசதி பெறு கிறது. எனவே நமக்கு உரிய தண்ணீர் தராவிட்டால் வருங் காலங்களில் தமிழகம் வறண்ட பூமியாகி உணவு பற்றாக் குறைக்கு தள்ளப்படும்.
எனவே முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்ப தற்காக வைகை-முல்லை பெரியாறு பாசன விவசாயி களின் வாழ்வுரிமை மாநாடு நடத்த இருக்கிறோம். இம் மாநாடு மதுரை வடக்கு மாசி, மேலமாசிவீதி சந்திப்பில் நாளை மறுதினம் (31-ந்தேதி) மாலையில் நடக்கிறது.
இதற்கு நான் தலைமை தாங்குகிறேன். பெரியாறு -வைகை ஒரு போக சாகுபடி விவசாயிகள் சங்க தலைவர் சீமான் மீனாட்சிசுந்தரம், 5 மாவட்ட வைகை-பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாநாட்டை பா.ம.க. நிறு வனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைக்கிறார். வைகோ, திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சி தலை வர்கள் கலந்து கொண்டு பேசு கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தமிழ் தேசிய இயக்க மாநில பொதுச் செயலாளர்கள் பரந்தாமன், அழகிரிசாமி, பொருளாளர் எம்.ஆர்.மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
bsubra said
தேவை தோழமை உணர்வு – தொலை நோக்குப் பார்வை
பழ. நெடுமாறன்
கடந்த 1-4-07 அன்று மதுரையில் நடைபெற்ற வைகை – முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளின் மாநாடு தமிழக வரலாற்றில் ஒரு புதிய வரவேற்கத்தக்க அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது.
தமிழக மக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரச்சினையொன்றில் எதிர் எதிர் அணிகளில் இருக்கக்கூடிய கட்சிகள் ஒன்று கூடிய காட்சியை முதன்முறையாக இம்மாநாட்டின் மூலம் கண்டு தமிழகம் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அடைந்தது.
பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த விவசாயிகளும் மற்றும் பொதுமக்களும் இம்மாநாட்டின் மூலம் புதிய நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.
பாசனத்திற்கு மட்டும் பயன்பட்டுக் கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணை நீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்த அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை கேரளத்துக்கு அனுப்பி திருவாங்கூர் – கொச்சி முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுபிள்ளையுடன் பேச வைத்தார். இதன் விளைவாக சுமுக உடன்பாடு கையெழுத்தாயிற்று.
இவ்வளவுக்கும் 1952 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜி பொறுப்பேற்றபோது “கம்யூனிஸ்டுகள்தான் எனது முதல் எதிரிகள்’ எனப் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பிரச்சினையில் அதே கம்யூனிஸ்ட் தலைவரான பி. இராமமூர்த்தியின் தொண்டினைப் பயன்படுத்திக் கொள்ள அவர் தயங்கவில்லை.
தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களிடையே அன்று நிலவிய கட்சிக்கு அப்பாற்பட்ட தோழமை உணர்வும் பொதுப்பிரச்சினைகளில் ஒன்றுபட்டுச் செயல்படக்கூடிய தொலைநோக்குப் பார்வையும் தமிழகத்திற்கு பல நலன்களைத் தேடித் தந்தன.
ஆனால் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களிடம் அத்தகைய நற்பண்புகள் இல்லாத காரணத்தினாலும் எதிரும் புதிருமாக ஒருவரை ஒருவர் அழிக்கும் உணர்வுடன் செயல்படுவதன் விளைவாகவும் தமிழகத்தின் நலன்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. அத்தகைய பிரச்சினைகளில் ஒன்றுதான் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையாகும். கடந்த 26 ஆண்டுகாலமாக இந்தப் பிரச்சினை இழுபறியாக இருந்து வருகிறது.
பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் அது இடிந்தால் 30 லட்சம் பேர் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் கேரள அரசியல்வாதிகள் பொய்யான புகார்களை எழுப்பி அணையின் நீர்த்தேக்க அளவை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துவிட்டனர். சுமார் 15 கோடி ரூபாய் செலவில் அணையைப் பலப்படுத்தும் வேலைகள் முடிவடைந்த பிறகும் நீர்த்தேக்க அளவை உயர்த்த அவர்கள் சம்மதிக்கவில்லை. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையை ஆராயும்படி ஆணையிட்டது. இதற்கு முன்னரே மத்திய நீர்ப்பாசனக் குழுவின் சார்பில் நான்கு குழுக்கள் ஆய்வு நடத்தி அணை பலமாக இருக்கிறது என உறுதி செய்த பின்னால் கேரளத்தின் வற்புறுத்தலையொட்டி இந்தப் புதிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
அணையின் நீர்த்தேக்க அளவை உயர்த்தக்கூடாது என்பதற்கு 12 காரணங்களை கேரள அரசு இந்த வல்லுநர் குழுவிடம் கூறியது. ஒவ்வொரு காரணமாக எடுத்து ஆராய்ந்த வல்லுநர் குழு அவற்றில் உண்மை சிறிதளவு கூட இல்லை என்பதை உணர்ந்து அணையின் நீர்த்தேக்க அளவை உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் கூறியது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அணையின் நீர்த்தேக்க அளவை 142 அடியாக உயர்த்தலாம் என்று 27-2-06 அன்று தீர்ப்புக் கூறியது.
ஆனால் கேரள முதல்வர் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சியினரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுத்ததோடு மட்டுமல்ல; அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றினர். கேரள அரசியல்வாதிகள் தங்களது முயற்சிகள் அனைத்தும் தோற்ற பிறகு இப்போது புதிய அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை எழுப்புகின்றனர்.
புதிய அணை கட்டுவது என்ற பெயரால் இந்தப் பிரச்சினையை இன்னும் நீண்ட காலத்திற்கு இழுத்தடிப்பதே அவர்களின் நோக்கமாகும். மேலும் 999 ஆண்டு கால உடன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதும், தங்கள் நிபந்தனைகளுக்குட்பட்ட புதிய உடன்பாட்டைச் செய்வதும் அவர்களின் உள்நோக்கங்களாகும்.
ஏற்கெனவே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பெரியாறு நீரால் பாசனம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு 2 லட்சம் ஏக்கர் ஆகும். அணையின் நீர்த்தேக்க அளவு 136 அடியாகக் குறைக்கப்பட்டதன் விளைவாக மேற்கண்ட நிலத்தில் தரிசாக மாறிய நிலப்பரப்பு 38 ஆயிரம் ஏக்கர் ஆகும். இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.
இந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இதன் விளைவாக ஆண்டுதோறும் 56 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மின் உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக ஆண்டுதோறும் மொத்த இழப்பு ரூ.131 கோடியாகும். கடந்த 26 ஆண்டு காலமாக ஏற்பட்டிருக்கிற இழப்பு ரூ.3,532 கோடியாகும். இதன் விளைவாக இம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் வாங்குவதற்கு ஆள்தான் இல்லை.
இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளிகள் வேறு மாவட்டங்களுக்குக் குடிபெயர்ந்து செல்லத் தொடங்கியுள்ளனர். விவசாய உற்பத்திப் பொருள்களின் விற்பனைக்கான சந்தை நகரங்களாகத் திகழும் தேனி, திண்டுக்கல், மதுரை போன்றவை தூங்கி வழிகின்றன.
இந்த ஐந்து மாவட்டங்களில் உள்ள பெரிய நகரங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, பெரியகுளம், கம்பம், போடி, உசிலம்பட்டி, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் போன்ற நகரங்களிலும் வைகை நதியின் கரை நெடுகிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஊர்களிலும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் இடம்பெயரக்கூடிய அபாயம் உருவாகிவிட்டது.
மதுரை, பரமக்குடி, வடுகபட்டி ஆகிய ஊர்களில் தண்ணீர்ப் பஞ்சத்தின் விளைவாக கைத்தறித் தொழில் நசித்துப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறந்ததன் விளைவாக ஏராளமானவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர் பிரச்சினையால் தெற்கே ஐந்து மாவட்டங்களும், பாலாற்றுப் பிரச்சினையால் வடக்கே சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களும், காவிரி நதிநீர் பிரச்சினையால் தமிழ்நாட்டின் மத்தியிலும் மேற்கிலும் 10 மாவட்டங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தமிழ்நாட்டில் ஆற்றுப்பாசன நிலத்தில் 70 சதவீத நிலம் இந்த மூன்று ஆறுகளையும் நம்பியுள்ளது. இந்த மூன்று பிரச்சினைகளும் தீர்க்க முடியாத பிரச்சினைகளாக உருவெடுத்து நிற்பது பெரும் கவலைக்குரியதாகும்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கியிருக்கும்போது அதைப்பற்றிய கவலை பலருக்கு இல்லை. இந்த மூன்று பிரச்சினைகளும் எந்தக் கட்சிக்கும் சொந்தமான பிரச்சினை அல்ல. ஆறு கோடி தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பாதித்துக் கொண்டிருக்கும் முக்கியப் பிரச்சினைகள் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு நமது உரிமையை நிலைநாட்டும் பக்குவம் இன்னும் பல கட்சிகளுக்கு வரவில்லை.
இந்தியாவில் தமிழகம் ஒரு மாநிலம் என்பதையும் ஆறு கோடி தமிழ் மக்களும் இந்திய நாட்டின் குடிமக்கள் என்பதையும் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவை ஏற்றுக்கொள்ளாத வகையில் நடந்து கொள்கின்றன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், நடுவர் மன்றம் தீர்ப்பளித்தாலும் அவற்றை மதித்து நடக்க அவர்கள் தயாராக இல்லை. தங்கள் தேவைக்கு மட்டுமே இந்த ஆறுகள் உள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள். அவர்களின் இந்தப் போக்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கும் என்பது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை.
இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதில் அக்கறை காட்டாதவர்கள் கங்கை – காவிரி இணைப்பைப் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள்.
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தைக் கீறி வைகுந்தத்துக்கு வழிகாட்டப் போவதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
(கட்டுரையாளர்: தலைவர், தமிழர் தேசிய இயக்கம்).