Annamalai – The life and the path of Mahathma Gandhi
Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007
காந்தியடிகளின் சத்திய வாழ்க்கை சாத்தியமா?
அண்ணாமலை
எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை என வாழ்ந்து காட்டியவர் காந்தியடிகள். பிரிவினையால் பிளவுபட்டு நின்ற பாரத தேசத்தில் தன்னுடைய இன்னுயிரையே கொடுத்து அமைதியை ஏற்படுத்தி நாம் வாழ வழிகாட்டிச் சென்ற உத்தமர் காந்தியடிகள்.
அவர் நம்மிடைய இருந்து பிரிந்து இன்றோடு 49 ஆண்டுகள். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம். இன்றும் காந்தி என்ற சொல் மந்திரச்சொல் போல் உலக நாடுகளிலெல்லாம் பேசப்படுகிறதே. ஏன்? அவர் வாழ்க்கை அப்படி என்ன சிறப்புப் பண்புகளைக் கொண்டிருந்தது என்பதை அவருடைய நினைவு நாளான இன்று சிந்தித்துப் பார்ப்பது எதிர்காலச் சந்ததியினருக்கு மிகவும் அவசியம்.
போராட்டம் என்றால் ஒன்று வெற்றியாக இருக்கும் அல்லது தோல்வியாக இருக்கும். ஆனால் இரண்டையும் கடந்து நாம் யாரை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறோமோ அவர்களையும் வெற்றியடையச் செய்து நாமும் வெற்றிபெற உன்னத வழியைக் காண்பித்தவர் காந்தியடிகள்.
ஆகவேதான் , உப்புச் சத்தியாகிரகத்தின்போது வைஸ்ராயாக இருந்த லார்டு இர்வின் கூறுகிறார், “”நீங்கள் காந்திஜியை ஒருபோதும் நம்பக்கூடாது என்று என்னிடம் கூறியிருக்கிறார்கள். நான் அறிந்தவரை அவரைக் கட்டாயம் நம்பலாம், நான் நம்பினேன் என்றே சொல்லுவேன். எத்தனையோ தடவைகள் எங்கள் பேச்சுகளுக்கிடையில், நான் சில விஷயங்களை உங்களிடம் சொல்லப் போகிறேன். நீங்கள் உங்கள் மனத்திலேயே இதையெல்லாம் வைத்திருக்க வேண்டும். உங்களை நம்பிச் சொல்லுகிறேன் என்று காந்திஜியிடம் சொல்லியிருக்கிறேன். அப்படிச் சொன்னவைகளில் ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து ஒரு நாளும் எந்த இடத்திலும் வெளிவந்ததில்லை” என்று கூறுகிறார். எதிரியையும் நம்ப வைக்கும் சாதுர்யம் காந்தியடிகளுக்கு எப்படி வந்தது?
இதேபோல் தென்னாப்பிரிக்காவில் 21 ஆண்டுகளாக இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடிய பின்னர் இந்திய நாட்டிற்குத் திரும்பும் செய்தி அறிந்த தென்னாப்பிரிக்க உயர் அதிகாரி, “”எங்களுக்குத் தேவையேற்படும் பொழுதெல்லாம் நீங்கள் எங்கள் உதவிக்கு வருகிறீர்கள். நீங்கள் வன்முறைக்குச் செல்ல மாட்டீர்களா என்று எண்ணுவதுண்டு. ஆனால் கஷ்டங்களையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொண்டு எங்களையல்லவா நிராயுதபாணியாக்கி விட்டீர்கள்,” என்றார் ஜெனரல் ஸ்மட்ஸின் செயலர்.
செயலாளர் இப்படிக் கூறுகிறார்; ஆனால் ஜெனரல் ஸ்மட்ஸ் என்ன சொல்லுகிறார்? தென்னாப்பிரிக்காவின் ஜெனரல் ஸ்மட்ஸýக்கு, தான் சிறையிலிருந்தபோது செய்த செருப்பை விடுதலையாகும்போது பரிசாக வழங்கினார் காந்தி. “”அதை நான் பல நாள் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் இப்பொழுதெல்லாம் அவ்வாறு செய்வதில்லை. அந்த உயர்ந்த மனிதரால் செய்த காலணி மீது நிற்க பொருத்தமானவனா என்று எண்ணுகின்றேன்” என்று கூறி ஜெனரல் ஸ்மட்ஸ் அவற்றை இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி விட்டார். அவை இன்றும் மும்பையிலுள்ள மணிபவனில் உள்ளது.
காந்தியடிகளை நேரில் காணாமலே அவர் மேல் அளவு கடந்த அன்பு செலுத்தியவர் ரொமெய்ன் ரோலண்டு எனும் பிரெஞ்சு நூலாசிரியர். அருமையான வாழ்க்கை வரலாற்றை எழுதி மேலை நாடுகளில் காந்தியடிகளின் புகழ் பரவக் காரணமாக இருந்தவர்.
மேடம் ஸ்லேடு (மீரா பென்) என்ற பெண்மணியை காந்தியடிகளிடம் அனுப்பிய பெருமையும் இவரையே சாரும். வட்டமேஜை மாநாடு முடிந்து சுவிட்சர்லாந்தில் ரொமெய்ன் ரோலண்டை காந்தியடிகள் சந்திக்கிறார். காந்தியடிகளை முதன் முதலாகப் பார்க்கும்போது அப்படியே ஆரத்தழுவிக் கொண்டனர் இருவரும். அதைப்பற்றி கூறும்போது ஏதோ புனிதர் பிரான்சிஸ் ஆப் அசிசியையே தழுவிக் கொண்ட உணர்வு ஏற்பட்டது என்கிறார் ரொமெய்ன் ரோலண்டு.
வன்முறைக்குப் பெயர்பெற்ற பத்தானியர் பிரிவைச் சேர்ந்தவர் கான்அப்துல் கபார்கான். சிலர் அவரிடம் நீ ஓர் இஸ்லாமியராக இருந்து கொண்டு காந்தியடிகளுடன் இருக்கலாமா என்று கேட்கிறார்கள். “உணவு இல்லாதவர்களுக்கு உணவும் உடை இல்லாதவர்களுக்கு உடையும் கொடுக்கச் சொன்னார் நபிகள் பெருமான். காந்தியடிகளும் அதைத்தானே செய்கிறார்’ என்று கூறுகிறார் கபார்கான். எத்தனை ஆழமான தெளிவான பதில்!
காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டத்தில் ரகசியத்திற்கு இடமேயில்லை. உப்புச்சத்தியாகிரகம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு மைல்கல். உப்புச் சத்தியாகிரகத்தை எப்படி நடத்துவது என்ற திட்டமிடும் கூட்டம். ரகசிய போலீஸôர் சபர்மதி ஆசிரமத்தைச் சுற்றி வருகிறார்கள்.
காந்தியடிகள் அவர்களையும் அழைத்துத் திட்டமிடும் கூட்டத்தில் அமர்த்தி, குறிப்பையும் எடுக்கச் சொல்லி விடுகிறார். உப்புச் சத்தியாகிரகத்தில் யார் யார் கலந்து கொள்கிறார்கள், எந்த வழியில் யார் ஏற்பாட்டில் நடக்கிறது, யார் யார் பொறுப்பாளர்கள் என்று அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் எந்த ஒரு ரகசியமும் இல்லாமல் தெரிவித்துவிட்டார். இனிமேல் எதிராளி என்ன செய்வார்? காந்தியடிகளை நம்பித்தானே ஆக வேண்டும். நம்முடைய வாழ்க்கை எந்தவோர் ஒளிவு மறைவுமின்றி இருந்துவிட்டால் பரஸ்பர நம்பிக்கை வளரத்தானே செய்யும்?
வன்முறைக்கு முக்கியக் காரணம் நம் அடிமனத்திலிருக்கும் பய உணர்ச்சியே. காந்தியடிகளின் வாழ்க்கை இந்தியர்களுக்குக் கொடுத்த கொடை எது என்றால் அது நிச்சயமாக ஓர் அச்சமற்ற வாழ்க்கையைத்தான் என்று சொல்லலாம்.
ஜனவரி 30-ல் சுடப்பட்டு இறப்பதற்கு 10 நாள்களுக்கு முன்னர் சிலர் கையெறி குண்டு வீசி காந்தியடிகளைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். குண்டு வெடிக்கிறது. அந்தச் சத்தம் கேட்கிறது. மக்களைப் பார்த்து அமைதியாய் இருங்கள், அமைதியாய் இருங்கள் என்று காந்தியடிகள் கூறுகிறார். மக்களும் அமைதியாகக் குண்டு வெடித்த இடத்திலேயே அமர்ந்து அவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
“”காந்தியடிகள் துவேஷமோ பகையோ பாராட்டாதவர். அவருக்கு வெறுப்புணர்ச்சியும் இல்லை. பிறரை வெறுக்கவே அவரால் முடியாது” என்று அறிஞர் லூயி பிஷர் கூறுகிறார். எதிரியையும் நேசி என்ற சொல்லாக்கத்தையும் தாண்டி எதிரியாகவே யாரையும் எண்ணாதவர்தான் காந்தி.
இந்திய சமூகம் ஒற்றுமையாக வாழ வேண்டும், அனைத்துச் சமூகப் பிரிவினரும் எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இன்றி வாழ வேண்டும் என்று அனுதினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர் காந்தியடிகள். மானுட சமுதாயம் ஓர் எல்லையில்லா பேரின்பத்தை அடைய வழிகாட்டியவர்.
இன்றைய இளைஞர்கள் காந்தியடிகளின் நற்கருத்துகளை கவனத்துடன் தெரிந்துகொண்டு, தன்னலமற்ற சேவைக்கு அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.
(கட்டுரையாளர்: இயக்குநர், காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், தி.நகர், சென்னை).
மறுமொழியொன்றை இடுங்கள்