Sleep disorder – Nighttime bed routines, Snoring, pills: Healthcare
Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007
நலம்: குறட்டையா? ஆபத்தாச்சே!
ந. ஜீவா
என். ராமகிருஷ்ணன்
சிலர் அடித்துப் போட்டது போலத் தூங்குவார்கள். சிலரோ கும்பகர்ணன் போல இரவு பகல் எந்நேரமும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். சிலர் கோழித் தூக்கம் போடுவார்கள். சிலரோ தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து மறுநாள் ஆபிஸில் தூங்கிவழிவார்கள். தூக்கம் என்பது சகல ஜீவராசிகளுக்கும் பொதுவானது. மனிதர்களுக்குத்தான் அது பிரச்சினையாகிவிடுகிறது. தூக்கமின்மைப் பிரச்சினைக்கு மருத்துவமும் ஆலோசனையும் தருகிறார் சென்னையில் “நித்ரா‘ என்கிற ஆலோசனை அமைப்பை நடத்திவரும் டாக்டர் என்.ராமகிருஷ்ணன். அவரிடம் தூக்கமின்மைப் பிரச்சினையைப் பற்றிப் பேசிய போது…,
“”ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம்தான் தூங்க வேண்டும் என்ற வரையறையெல்லாம் கிடையாது. சிலருக்கு ஒரு நாளைக்கு 3 – 4 மணி நேரத் தூக்கமே போதுமானது. சிலருக்கோ 10 மணி நேரத்துக்கு மேல் தூங்க வேண்டும். சராசரியாக ஒருவர் 6 – 8 மணி நேரம் வரை தூங்கினால் போதுமானது.
சிலர் சுவிட்ச் போடும் சப்தம் கேட்டாலே விழித்துவிடுவார்கள். சிலரோ இடியே விழுந்தாலும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பார்கள். பொதுவாக நல்ல தூக்கம் என்பது தூங்கி எழுந்தவுடன் ஃபிரஷ்ஷா இருப்பதுதான்.
இரவில் நல்ல தூக்கம் இல்லாமற் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உடல்ரீதியான காரணங்களைவிட மனரீதியான காரணங்களே தூக்கத்தை அதிகம் பாதிக்கின்றன. மனதில் தோன்றும் எண்ணங்களே தூக்கம் வராததற்குக் காரணம். ஏதேனும் குறிப்பிட்ட நிகழ்ச்சி காரணமாக ஓரிரு நாட்கள் தூக்கம் வராமல் இருப்பது சகஜம். இதுவே தொடர்ந்து இருந்தால் அது தூக்கமின்மை வியாதியாகிறது.
வயதானவர்களுக்கு அவர்களுடைய வயது காரணமாகத் தூக்கம் வராமல் போகலாம். அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்கச் செல்வார்கள்.
பல வயதானவர்கள் தங்களுடைய தனிமையின் காரணமாக தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் தொழில் காரணமாக வேறு ஊர்களுக்குச் சென்றிருப்பார்கள். எவ்வளவு வசதியிருந்தாலும் இந்தத் தனிமையுணர்வு அவர்களுக்கு தூக்கம் வராமல் தடுத்துவிடும்.
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வராது. அடிக்கடி எழுந்து பாத்ரூம் போவார்கள். சில மாத்திரைகள் சாப்பிட்டால் தூக்கம் வராது. சில உடல்ரீதியான பிரச்சினைகளின் காரணமாக சிலருக்குத் தூக்கம் வராது. அவர்களுக்குப் படுக்கையை விட்டு எழுந்து நடந்தால் பெட்டர்ன்னு தோன்றும். இதை ஆங்கிலத்தில் தங்ள்ற்ப்ங்ள்ள் ப்ங்ஞ் என்பார்கள். அவர்களுக்குத் தூக்கம் வராது. எழுந்து நடந்து கொண்டிருப்பார்கள்.
சிலருடைய ஹேபிட்டே அவர்களுடைய தூக்கத்தைக் கெடுத்துவிடும். அவர்கள் தூக்கத்திற்கு உரிய மரியாதையைக் கொடுக்கமாட்டார்கள். கண்ட நேரத்தில் தூங்குவார்கள். கண்ட நேரத்தில் விழிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்குத் தூக்கமின்மைப் பிரச்சினை வரக்கூடும். கரெக்டா தூங்கி ஃபிட்டா எழ முயற்சிக்கமாட்டார்கள்.
உடலில் வலி பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது. இந்த உடல் வலி காரணமாக ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் போய் விடுகிறது.
நல்ல தூக்கத்திற்கு சுற்றுப்புறச் சூழ்நிலையும் அவசியம். ரூம் டெம்பரேச்சர் அதிகமாக இருக்கக் கூடாது. நல்ல காற்றோட்டமும், உறுத்தாத, வசதியான படுக்கையும் அவசியம். வெளிச்சம், சப்தம் இருக்கக் கூடாது.
இரவில் ஆழ்ந்த தூக்கம் இருக்கும் போதுதான் உடலுக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரக்கின்றன.
சிலர் குறட்டைவிட்டுத் தூங்கினால் அது நல்ல தூக்கம் என்று நினைப்பார்கள். உண்மையில் குறட்டை விடுபவர்கள் நன்றாகத் தூங்குவதில்லை. அவர்களுக்கு மூச்சுக் குழலில் உள்ள அடைப்பின் காரணமாகவே குறட்டை வருகிறது. மூச்சுவிடுவது ஸ்லோ ஆகிவிடுகிறது. அவர்களுடைய மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் காலையில் எழுந்ததும் சோர்வாக உணர்வார்கள். குறட்டைப் பிரச்சினை உள்ளவர்கள் டாக்டரை உடனே அணுகவேண்டும். ஏன் என்றால் அவர்களுக்கு தூங்கும் போது மூச்சுவிடமுடியாமல் போய் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தொழில், வேலை காரணமாகப் பலருக்கு உரிய நேரத்தில் தூங்க முடிவதில்லை. உதாரணமாக பிபிஓ வில் வேலை செய்பவர்கள் ராத்திரி விழித்துப் பகலில் தூங்க வேண்டும். என்னதான் பகலில் தூங்கினாலும் ராத்திரி தூங்குவது போல இல்லை. பிபிஓ, கால்சென்டரில் இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்காக அடிக்கடி டீ, காபி சாப்பிடுவார்கள். கொழுப்புச் சத்து நிறைந்த சிப்ஸ், பீட்ஸô போன்றவற்றைச் சாப்பிடுவார்கள்.
பிபிஓ நடத்துபவர்கள் அவர்களுடைய அலுவலகங்களில் நல்ல பிரகாசமான விளக்குகளைப் போட வேண்டும். அப்போதுதான் அங்கு வேலை செய்பவர்களின் கண்களுக்கு பாதிப்பு இருக்காது.
இப்படி இரவில் வேலை செய்துவிட்டு வந்து பகலில் தூங்குபவர்கள் தலைமாட்டில் செல்போனை வைத்துக் கொண்டு தூங்குவார்கள். இதனால் பகலில் தூங்கும் அந்தத் தூக்கமும் கெட்டுவிடும்.
இப்படித் தூக்கமின்மைப் பிரச்சினை வந்தால் அதற்குரிய ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் போகவேண்டும். பலருக்கு தூக்கத்திற்கென்றே ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் இருக்கின்றனர் என்று தெரியாது.
தூக்கமின்மைப் பிரச்சினைக்கு எல்லாருக்கும் பொருந்தும்படியான பொதுவான தீர்வுகளைச் சொல்ல முடியாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய பிரச்சினைக்கேற்பத்தான் தீர்வு சொல்ல முடியும். சிலருடைய பழக்க வழக்கங்களே அவர்களுடைய தூக்கமின்மைப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம். ஒருவர் பல ஆண்டுகளாக இரவுப் பணி செய்யாதவர். அவருக்கு இரவுப் பணி போட்டுவிட்டார்கள். அவருக்குக் காலையில் வீட்டுக்கு வந்து படுத்தால் தூக்கம் வராமல் போனது. என்னிடம் ஆலோசனை பெற வந்தார். மூன்று மாதங்களுக்கு மேல் மருந்து மாத்திரைகள் கொடுத்துப் பார்த்தும் அவருடைய பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. கடைசியில்தான் தெரிந்தது, அவர் பகல்நேரப் பணி செய்த காலத்தில் இரவு படுக்கப் போகும் முன் என்டிடிவி செய்தியைப் பார்த்துவிட்டுத்தான் படுக்கப் போவார் என்பது. இப்போது அந்தப் பழக்கம் இல்லாததால் தூக்கம் வரவில்லை. இப்போது அவருடைய மனைவி முதல் நாள் இரவில் என்டிடிவி செய்தியை ரிக்கார்ட் செய்து விடுவார். மறுநாள் காலையில் வேலை முடிந்து வந்த அவருடைய கணவர் அந்த செய்தியைப் பார்த்துவிட்டு அருமையாகத் தூங்கிவிடுவார். எனவே தூக்கமின்மைப் பிரச்சினைக்குத் தனிப்பட்ட முறையில்தான் ஆலோசனை, தீர்வு சொல்லமுடியும்.
“தூக்கத்திற்கு என டாக்டரிடம் போனால் என்ன, தூக்கமாத்திரை கொடுப்பார்கள். இதை நாமே நேரடியாக மருந்துக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளலாமே?’ எனப் பலர் நினைக்கிறார்கள். இது தவறு. டாக்டர்கள் மாத்திரை மட்டும் கொடுப்பதில்லை.
தூக்க வராமல் இருப்பதற்கு முக்கியக் காரணமான மன இறுக்கத்தைத் தவிர்க்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். அதுவும் கூட தனிநபர்களைப் பொறுத்த விஷயம்தான். சிலருக்கு மெல்லிதான பாட்டைக் கேட்டால் தூக்கம் வந்துவிடும். சிலருக்கோ பாட்டைக் கேட்டவுடன் தூக்கம் போய்விடும். எனவே ஒவ்வொருவருக்கும் அவருடைய மனநிலை, பழக்க வழக்கம், உடல் நிலை ஆகியவற்றிற்கேற்பத் தனித்தனியான ஆலோசனைகளைக் கொடுக்கிறோம். கடையில் தூக்க மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதால் ஆரம்பத்தில் தூக்கம் வரும். பின் அதே பழக்கமாகி தூக்க மாத்திரை சாப்பிடாவிட்டால் தூக்கம் வராத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இன்னும் கொஞ்ச நாள் கழித்து வழக்கமாகச் சாப்பிடும் தூக்க மாத்திரையின் அளவு போதாமல் போய்விடும். இது பல உடல்நலக் கேடுகளை உருவாக்கிவிடும்.
உடம்பின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் வலி காரணமாகத் தூக்கம் இல்லையென்றால், வலி எதனால் ஏற்படுகிறது என்று பார்த்து அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
படுக்கும் போது எப்படிப் படுக்க வேண்டும்? என்பது பலருக்குச் சந்தேகம். மல்லாந்து படுப்பதே போதுமானது. கர்ப்பிணிப் பெண்கள் இடதுபுறம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். குறட்டை விடுபவர்கள் மல்லாக்கப் படுக்கக் கூடாது.
மதிய உணவுக்குப் பின் பலருக்குத் தூக்கம் வருவது இயற்கை. மதிய உணவுக்குப் பின் ஒரு மணிநேரம் தூங்கினால் உடல் ஃபிரஷ்ஷாக இருக்கும். ஆனால் பிராக்டிகலாக இது சாத்தியப்படாது. மேலும் மதியத்தில் ஒரு மணி நேரம் தூங்கினால் ராத்திரி தூக்கத்தை இது பாதிக்கும்.
சில லாரி டிரைவர்கள் தொடர்ந்து இரண்டுநாள் மூன்றுநாள் கண்விழித்து ஓட்டுவார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட தொலைதூரப் பயணங்களில் இரண்டு டிரைவர்கள் இருப்பது நல்லது.
மனதில் அமைதியில்லாமல் தூக்கத்தை இழந்தவர்கள் அதிகம். இதில் இன்னொரு உண்மையென்னவென்றால் நன்றாகத் தூங்கினால் மனதில் அமைதி பிறக்கும். உடலில் புத்துணர்வு ஏற்படும்.
மனம் இறுக்கமில்லாமல், உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருப்பவர்களுக்கும், தூக்கத்தை ஒரு பொருட்டாக மதித்து குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் விழிக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் தூக்கமின்மைப் பிரச்சினை வர வாய்ப்பே இல்லை.”
citra said
Sir,
எனக்கு குறட்டை மிகுந்த தொல்லையைக் கொடுத்து வருகிறது. இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?