Shilpa Shetty Wins Celebrity Big Brother With 67 Percent of Votes
Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007
பிக்பிரதர் நிகழ்ச்சி: ஷில்பா ஷெட்டி அபார வெற்றி
லண்டன், ஜன. 29-
இங்கிலாந்தில் “சானல் 4” தொலைக்காட்சி “பிக்பிரதர்” என்ற வித்தியாசமான டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. தனி அறையில் 26 நாட்களுக்கு 14 பிரபலங்களை தங்க வைத்து, அவர்களது தினசரி நடவடிக்கைகளை ஒளிபரப்பு செய்தனர். இதில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார்.
கடந்த 3-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடு களின் நேயர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. திடீரென இந்த நிகழ்ச்சி டி.வி. நடிகை ஜேக்கூடியால் சர்ச் சைக்குள்ளானது.
நடிகை ஷில்பா ஷெட்டியை ஜேக்கூடி “நாய்” என இன வெறியுடன் திட்டினார். பப்படம், ஆங்கிலம் பேச தெரியாது என்றும் ஷில்பாவை அவர் கிண்டல் செய்தார். இந்த இனவெறி பேச்சுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
ஜேக்கூடியை கண்டித்து சுமார் 45 ஆயிரம் பேர் புகார் செய்தனர். இந்த நிலை யில் போட்டி விதிகளின் படி நேயர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
குறைந்த ஓட்டு பெறுபவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டனர்.
ஷில்பா ஷெட்டியை திட்டிய காரணத்தால் நேயர்களிடம் வெறுப்பை சம்பாதித்திருந்த ஜேக்கூடிக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இதனால் நடிகை ஜேக்கூடி “பிக்பிரதர்” நிகழ்ச்சியில் இருந்து வெளி யேற்றப்பட்டார்.
ஜேக் கூடியுடன் சேர்ந்து ஷில்பா ஷெட்டியை கிண்டல் செய்த ஜோ ஓமிரா, டேனிலி லாயிட் ஆகியோரும் அடுத்தடுத்து நேயர்களிடம் ஆதரவு பெற இயலாமல் வெளியேற்றினர். இதனால் நடிகை ஷில்பா ஷெட்டி மிக, மிக எளிதாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
14 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு 6 பேர் தகுதி பெற்றனர். நடிகை ஷில்பா ஷெட்டி, ஜெர்மையன் ஜாக்சன், டிர்க்பெனடிக், இயன் எச்.வாட்கின்ஸ், டேனிலி லாயிட், ஜேக்டுவிட் ஆகியோர் அந்த 6 பேராகும். இவர்களில் இயன் எச்.வாட்கின்ஸ், டேனிலி லாயட், ஜேக்டுவிட் ஆகிய மூவரும் சனிக்கிழமை நீக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி, ஜெர்மைன் ஜாக்சன், டிர்க் பெனடிக் ஆகிய மூவரிடமும் பலத்த போட்டி நிலவியது. இவர்களில் இங்கிலாந்து நேயர்களிடம் அதிக ஓட்டு பெறப்போவது யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவியது.
பெரும்பாலானவர்கள் டிர்க் பெனடிக் இறுதிச் சுற்றில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதினார்கள். ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் ஆசிய நாட்டுக்காரர்களும், இங்கிலாந்து நாட்டுக்காரர்களும் ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு அவரை வெற்றி பெறச் செய்தனர்.
`பிக்பிரதர்’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் ஒவ்வொரு வருக்கும் கிடைத்த ஓட்டுகள் விவரம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டி 63சதவீத ஓட்டுக் கள் பெற்று பிக்பிரதர் நிகழ்ச் சியில் முதல் இடத்தைப் பிடித்து அபார வெற்றி பெற்றார்.
இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் இந்த கவுரவத்தை பெறுவது இதுவே முதல் தடவையாகும். 2-வது இடத்தை ஜெர்மைன் ஜாக்சன் பிடித்தார். இவர் பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஆவார்.
3-வது இடத்தை டிர்க் பெனடிக் பெற்றார். போட்டி யில் வெல்வார் என்று எதிர் பார்க்கப்பட்ட இவரை மக் கள் 3-வது இடத்துக்கு தள்ளி விட்டனர். ஷில்பா ஷெட் டியுடன் ஒப்பிடுகையில் 2-வது, 3-வது இடத்தை பிடித்தவர்களுக்கு மிக, மிக குறைவான வாக்குகளே கிடைத்திருந்தன.
தோல்வி அடைந்த இயன் வாட்கின்ஸ் 5.3 சதவீதம், டேனிலி லாயிட் 3.3 சதவீதம், ஜேக் டூவிட் 3.2 சதவீதம் ஓட் டுக்களையே பெற முடிந்தது.
63 சதவீத ஓட்டுக்களுடன் ஷில்பா முதல் இடத்தைப் பிடித்து இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் ஷில்பா `ஓ’ என்று ஆச்சரியத்தில் குரல் எழுப்பியபடி கைக்கூப்பி வணங்கினார்.
“சிக்கன் கறி வென்று விட்டது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று உணர்ச்சிப் பொங்க கூறினார்.
அவர் கண் களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது. ஜெர்மைன் ஜாக்சனும், டிர்க் பெனடிக்கும் ஷில்பாவை கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதையடுத்து ஷில்பா ஷெட்டி 26 நாட்களுக்குப் பிறகு தன் வீட்டு அறைக்குள் இருந்து வெளியில் வந்தார். ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு நின்று ஷில்பாவை வரவேற்றனர். இவை அனைத்தும் சானல்-4ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
`பிக்பிரதர்’ டி.வி. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஷில்பா ஷெட்டிக்கு பரிசுத் தொகையாக ரூ.3 கோடி (300,000 pounds (600,000 dollars)) வழங்கப்படுகிறது. இது தவிர அவருக்கு ஏராளமான நிறுவனங்கள் பரிசுகளை வாரி வழங்குகின்றன. புதிய ஒப்பந்தங்களும் ஷில்பாவுக்கு கிடைக்கும். குறைந்த பட்சம் ரூ.40 கோடி அளவுக்கு அவருக்கு பரிசுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஷில்பாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும் குவிந்தபடி உள்ளன. இது அவரை திக்குமுக்காட வைத்துள்ளது.
பிக்பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது குறித்து ஷில்பா ஷெட்டி டயரி ரூமில் அமர்ந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் நாடு (இந்தியா) பெரு மைப்படும் வகையில் வெற்றிக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி.
இந்த போட்டி உண்மையில் ராட்டினத்தில் பயணம் செய்வது போல இருந்தது. உயர்வும், தாழ்வும் எனக்கு பல விஷயங்களை உணர்த்தின. நான் ஏதோ பிரச்சினையை ஏற்படுத்தி விட்டதாக இங்குள்ளவர்கள் கருதக்கூடாது.
என்னை ஜேக்கூடி இன வெறியுடன் திட்டியதாக கூறியது தவறு. அவர் இன வெறி பிடித்தவர் அல்ல. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
ஜேக்கூடி சற்று ஆவேசமாக பேசக்கூடியவர். எளிதில் கோபப்படுபவர். அதுதான் அவருக்கு எதிராக பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது. இதை இனி அனைவரும் மறந்து விட விரும்புகிறேன்.
எவ்வளவு தான் பிரபல மானவராக இருந்தாலும் தவறு செய்வது சகஜம்தான். எல்லோரும் மனிதர்கள் தானே. நாம் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். எனவே ஜேக்கூடியை குறை சொல்லக்கூடாது.
இங்கிலாந்தில் உள்ள எந்த ஒரு நபருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு நான் என் நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை.
இவ்வாறு நடிகை ஷில்பா ஷெட்டி கூறினார்.
மறுமொழியொன்றை இடுங்கள்