Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

PK Manoharan – Dinamani: The accuracy of Statistics

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2007

புள்ளிவிவரங்களின் துல்லியம்

பி.கே. மனோகரன்

தேசிய நிறுவனங்களில் பேரும் புகழும் பெற்றது “இந்திய புள்ளியியல் நிறுவனம்’. இந்நிறுவனம் பேராசிரியர் மகலநோபிஸ் என்பவரால், கோல்கத்தாவில், 1931-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ல் நிறுவப்பட்டது. 1959-ல் இந்திய நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்’ என்ற உயரிய தகுதியைப் பெற்றது.

இதன் தலைமையகம் கோல்கத்தாவிலும், அதன் இரண்டு கூடுதல் மையங்களில், ஒன்று தில்லியிலும் மற்றொன்று பெங்களூரிலும் உள்ளன. புள்ளியியல் மற்றும் அது தொடர்புடைய துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்வதே இதன் முக்கியப் பணியாகும். இதனுடைய அலுவலகங்கள் பல்வேறு நகரங்களில் உள்ளன.

இந்தியாவின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் பி.சி. மகலநோபிஸ். இந்தியாவில் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் இவர்.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட முன்மாதிரியை உருவாக்கியதன் மூலம் நாடறிந்த பொருளாதார மேதையானார். திட்ட முன்மாதிரியை உருவாக்கும் பொறுப்பை அன்றைய பிரதமர் பண்டித நேரு, மகலநோபிஸ்-இடம் ஒப்படைத்தார். அப்போது மகலநோபிஸ் பிரதமரின் புள்ளிவிவர ஆலோசகராகப் பணியாற்றி வந்தார்.

இரண்டு முக்கிய அம்சங்கள் கொண்ட பொருளாதார வளர்ச்சித்திட்ட முன்மாதிரியை மகலநோபிஸ் உருவாக்கினார். ஒன்று தொழில்மயமாவதற்கு முக்கியத்துவம்; மற்றொன்று பெருந்தொழில்களில் அதிக அளவில் அரசு முதலீடின் அவசியம்.

இதன் விளைவாக 2-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் பல கனரக தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.

அகில இந்திய அளவிலான சமூக பொருளாதார புள்ளிவிவரங்களைத் தொகுத்தளிக்கும் நோக்கத்தோடு 1950-ம் ஆண்டு தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பை மகலநோபிஸ் ஏற்படுத்தினார்.

புள்ளிவிவரப் பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் உச்ச நிலையில் விளங்கும் “”மத்திய புள்ளிவிவர அமைப்பை’த் தோற்றுவிக்க உதவினார். புள்ளியியலை பல்கலைக்கழகங்களிலும், “இந்திய புள்ளியியல் நிறுவனத்திலும் முறையாகக் கற்பிக்க காரணமாக இருந்தார்.

புள்ளிவிவரங்களைச் சேகரித்து, அதனைப் பயன்படும் உருவில் அமைத்து, ஆய்வு செய்து, அது கூறும் உண்மைகளை விளக்கிக் கூறுவதே புள்ளியியல் பாடமாகும்.

உற்பத்தி, நுகர்வு, வருமானம், செலவு, சேமிப்பு, மூலதனம், விலை, வேலைவாய்ப்பு, மக்கள்தொகை என்று இவை அனைத்தையும் அறிய அவசியமானது புள்ளிவிவரம்.

திட்டங்களைத் தீட்டுவதற்கும், கொள்கைகளை வகுப்பதற்கும், வரிகளை விதிப்பதற்கும், ஒதுக்கீடுகள் அளிப்பதற்கும், தொலைக்காட்சி, நிலம், காஸ் அடுப்பு போன்ற இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தவும் அடிப்படையாக இருப்பது புள்ளிவிவரங்களே.

புள்ளிவிவரங்களைக் கணக்கிடும்போது எந்தவொன்றையும் விட்டுவிடாமல் முழுமையாக எண்ணியோ, அளந்தோ சொல்வதாக இருந்தால் அது முழுக் கணக்கெடுப்பு முறை எனப்படும்.

முழுமையாகக் கணக்கெடுப்பதற்குப் பதிலாக அதன் ஒரு பகுதியை மட்டும் கணக்கில்கொண்டு புள்ளிவிவரம் சேகரித்தால் அது மாதிரி கணக்கெடுப்பு முறை எனப்படும்.

புள்ளிவிவரங்களை நாமாகத் திரட்டினால் அது முதல்நிலை புள்ளிவிவரம் எனப்படும். ஏற்கெனவே சேகரிக்கப்பட்டு வைத்திருந்தால் அது இரண்டாம் நிலை புள்ளிவிவரம் எனப்படும்.

முக்கியத்துவம் வாய்ந்த இப் புள்ளிவிவரங்களின் துல்லியம், நம்பகத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். இவை நூற்றுக்கு நூறு துல்லியமாக இல்லாது போனாலும் நியாயமான அளவு உடையதாக இருக்க வேண்டும்.

துல்லியத்தின் அளவு ஆய்வின் நோக்கத்தைப் பொறுத்து அமையும். தங்கத்தை எடை போடும் போது ஒரு மி. கிராம் என்பது கூட மிக முக்கியம். ஆனால் விறகை எடைபோடும்போது அது ஒரு பொருட்டல்ல.

துறைதோறும் சரியான புள்ளிவிவரம் சேகரிக்கப்படாமல் உயர்த்தி மதிப்பீடு செய்யப்பட்டாலோ அல்லது குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டாலோ இரண்டுமே ஆபத்தில் முடிந்துவிடும்.

எனவே துல்லியமான புள்ளிவிவரங்களைத் தந்து அரசின் திட்டங்கள் செம்மையாக நிறைவேறத் துணை நிற்க வேண்டும்.

மகத்தான இத்துறையின் பணிகளைச் செம்மைப்படுத்தி, நெறிப்படுத்த வரலாற்றுப் புகழ் மிக்க இந்திய புள்ளியியல் நிறுவனம் கலங்கரை விளக்காக நின்று வழிகாட்டும்.

(கட்டுரையாளர்: இணைப்பேராசிரியர், பொருளியல் துறை, சி.பி.எம். கல்லூரி, கோவை).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: