Ayurvedha Solutions for Dental Hygiene – Prof. S Swaminathan
Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாய் சுத்தம்…வயிறு சுத்தம்… பல் சுத்தம்!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
என் வயது 40. எனக்குக் கடந்த ஐந்து வருடங்களாக பல் இடுக்குகளில் நோய்த் தொற்று ஏற்படுகிறது. இதனால் இரண்டு பற்கள் எடுக்கப்பட்டு விட்டன. இந்நோய் பயோரியா எனப்படும் ஒருவகை ஈறுநோய். பல்லில் எந்தவிதமான சேதங்களும் இல்லை, ஆனால் பல்வலி ஏற்படுகிறது. மாத்திரைகள் சாப்பிட்டால் வயிற்றில் புண் ஏற்படுகிறது. இந்நோய் மாற ஆயுர்வேதம் கூறும் வழிகள் என்ன?
சி. தமிழ்ச்செல்வி, மன்னார்குடி.
பற்கள் சுத்தமாக இருக்க வாய் சுத்தமாக இருக்கவேண்டும். இரைப்பை சுத்தமாகவும் நோயற்றுமிருந்தால் வாய் சுத்தமாக இருக்கும். பற்களின் ஆரோக்கியத்திற்கு பற்களை மட்டும் தேய்த்து அலம்பினால் போதாது. வாயையும் வயிற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். கசப்பு, துவர்ப்பு, காரம் இந்த மூன்று சுவைகளும் வாயில் கிருமிகளை வளர அனுமதிப்பதில்லை. பற்களின் இடுக்குகளில் தேங்கும் பிசுபிசுப்பைத் தடுப்பதால் ஊத்தை அதிகமாவதில்லை; காரை பிடிப்பதில்லை. மேலும் வாய்ப்புண்ணை ஆற்றுவதில் கசப்புக்கும் துவர்ப்புச் சுவைக்கும் ஈடாக எதையும் குறிப்பிடமுடியாது. சிலர் எப்போதும் எதையும் வாயில் போட்டு கொறித்துக் கொண்டிருப்பார்கள். இதன் சிறு துணுக்குகள் பற்களிடையே தங்கும். எதைச் சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு இதனால் எந்தத் தொந்தரவும் இல்லை. பலருக்கும் இந்தப் பழக்கம் இருப்பதில்லை. உணவு செரிக்கும் நிலையில் வயிற்றில் சுரக்கும் புளிப்பின் வாடை எகிறுகளின் இறுக்கத்தைத் தளர்த்தி விடும். பற்களுக்கும் எகிறுக்கும் நடுவே உள்ள இடைவெளி விரிந்து அதில் வாயிலுள்ள பொருள் தேங்கி அழுகும். எகிறுகளில் அழற்சி உண்டாக்கும். அழற்சியும் இடைவெளியும் அதிகமாகி காரைபடியும். காரையை அகற்றினால் ரத்தக் கசிவும் பற்களின் ஆட்டமும் அதிகமாகும். கரும்பை நன்றாகக் கடித்துச் சாப்பிட பற்கள் அழுக்கு நீங்கி பளபளப்புடன் இருக்கும். ஆனால் இன்று பலரும் ஜுஸôக்கிச் சாப்பிடுவதையே விரும்புகின்றனர். இது தவறாகும். முற்றிய தேங்காய்த் துண்டை மெல்ல, சாவகாசமாக மென்று சுவைத்துக் கொண்டே இருக்க, வாய்ப்புண், எகிறு அழற்சி ஆகியவை நீங்கும். வாயில் பற்பல நோய்க்கிருமிகள் தங்க இடமுண்டு. உணவுப் பகுதிகள் பற்களின் இடுக்குகளில் சேரும்போது அவற்றை இந்தக் கிருமிகள் உணவாக்கிக் கொள்கின்றன. பற்களின் மேல் கவசமாக விளங்கும் எனாமலை அரித்துவிடும். பற்களைச் சொத்தையாக்கும். கிருமிகள், பல் இடுக்கில் உள்ள உணவை உண்ணும்போது ஏற்படும் அமிலம் எனாமலிலுள்ள சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து ஏற்படும் புதிய கலவையே காரை. சுண்ணாம்புச்சத்து பற்களில் குறைந்துவிட்டால் பற்கள் நொறுங்கி விடுகின்றன. இதுபோல நேராமல் வாயைத் தூய்மையாக்கும் பணியை உமிழ் நீர் செய்கிறது. இந்த உபாதை நீங்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சிகளும், மருந்துகளும்… *வாயைச் சுத்தமாக்கி, உமிழ் நீர் சுரக்கும் கோளங்களுக்குச் சுறுசுறுப்பு தரவும் புத்துயிர் அளிப்பதற்கும், பற்களின் இடுக்குகளில் காரை படியாதிருக்கவும் நல்லெண்ணெய்யை காலையில் வாயில் விட்டுக் கொப்பளிக்கவும். நல்லெண்ணெய் வாயில் அழுக்கைத் தங்கவிடாது. காரையைக் கரைக்கும். புளிப்பை மாற்றும். உமிழ் நீரைச் சுத்தப்படுத்தும். எள்ளை மென்று வெகுநேரம் வாயில் வைத்திருந்து பிறகு கொப்பளித்துத் துப்புவதும் நல்லதே. * வாலுளுவை 50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 2 கிராம், இந்துப்பு 2 கிராம் இவற்றை நுண்ணிய தூளாக்கிக் கொள்ளவும். தேன் 15 மி.லி., நல்லெண்ணெய் 15 மி.லி. அளவு கலந்து குழப்பிக் கொள்ளவும். இந்தப் பற்பசையைக் கொண்டு விரல்களில் தோய்த்துப் பற்களைத் துலக்கவும். முன் பற்களை நடுவிரல், மோதிர விரல்களாலும், கடை வாய்ப் பற்களைக் கட்டை விரலாலும் தேய்ப்பது நல்லது. ஆள்காட்டி விரல் நல்லதல்ல என்று சில ஆசார நூல்கள் கூறுகின்றன. குறுக்காக விரலை விட்டுத் தேய்ப்பதை விட மேலும் கீழுமாகத் தேய்ப்பதுதான் நல்லது என்பது அறிஞர்களின் அறிவுரை. * ஆயுர்வேத மருந்தாகிய அரிமேதஸ் தைலம் 5 மிலி(1 ஸ்பூன்) அளவு வாயிலிட்டு இரவில் படுக்கும் முன் நன்கு கொப்பளிக்கவும். வாயில் உமிழ் நீர் நிரம்பியதும் துப்பிவிடவும். பிறகு வெந்நீர் விட்டுக் கொப்பளிக்கவும். வாயில் நாற்றம், சீழ், எகிறு வீக்கம், காரை, பல் கூச்சம், நாக்குப் புண், அண்ணத்தில் புண் இவை ஆறும். தாடைப் பூட்டுகளுக்கு வலிவு ஏற்படும். குரல் தெளிவாக மென்மையுடன் இருக்கும். கன்னங்கள் பூரித்து முகம் உருண்டையாகப் புஷ்டியுடன் இருக்கும். உணவில் ருசி ஏற்படும். உதடு வெடிக்காது, தொண்டை, வாய் உலராது. பற்களின் வேர் கெட்டிப்படும். கடினமான பொருளைக் கூட கடித்து மெல்லலாம். பற்களில் காரை படியாது.(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
raj said
i am raj. often i have bad smeel problem in mouth.after finish my food that smell has start.i have recover from problem. pl give usefull information to me