Padma Vibooshan, Padma Bhooshan, Padmashree awards announced
Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007
பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்; கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது
சென்னை, ஜன. 26-
இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். 2007-ம் ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படவில்லை.
பத்ம விபூஷன் விருது 10 பேருக்கு வழங்கப்படுகிறது. பத்மபூஷன் விருதுக்கு 32 பேரும் பத்மஸ்ரீ விருதுக்கு 79 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
பத்மவிபூஷன்
பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வான 10 பேர் விபரம் வருமாறு:-
- பாலுசங்கரன் (மருத்துவம்),
- நாரிமன் (பொது விவகாரம்),
- குஷ்வந்த்சிங் (இலக்கியம்)
- என்.என்.வோரா (சிவில் சர்வீஸ்),
- நரேஷ்சந்திரா (சிவில் சர்வீஸ்),
- நீதிபதி பி.என்.பகவதி,
- ராஜாராவ் (மறைவு),
- ராஜா ஜேசுதாஸ் செல்லையா (பொது விவகாரம்),
- சுதர்சன் சண்டி ஜார்ஜ் (அறிவியல்),
- வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி (சிவில் சர்வீஸ்)
பத்மபூஷன்
பத்மபூஷன் விருதுக்கு தேர்வான 32 பேரில் தமிழ்நாட்டின் பிரபல தொழில் அதிபர்கள்
- பொள்ளாச்சி என்.மகாலிங்கம்,
- ஏ.சிவசைலம் இருவரும் முக்கியமானவர்கள்.
- சூசுகி நிறுவன அதிபர் ஓ.சூசுகி,
- தொழில் அதிபர் சுனில் பாரதி மிட்டல்,
- சமூக சேவகி மோகினி கிரி,
- அறிவியில் துறையின் பிரபலம் வில்லியனூர் ராமச்சந்திரன் ஆகியோரும் பத்மபூஷன் விருது பெறுகின்றனர்.
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான 79 பேரில் 8 பேர் தமிழர்களாவார்கள். அவர்கள் விபரம் வருமாறு:-
1. பல்தேவ்ராஜ்- அறிவியல் (கல்பாக்கம் அனல் மின்நிலையம்)
2. கே.ஆர்.பழனிச்சாமி (மருத்துவம்)
3. டாக்டர் மயில்வாகணன் நடராஜன்
4. பி.ஆர்.திலகம் (கலை)
5. நம்பெருமாள்சாமி (மருத்துவம்)
6. எஸ்.தட்சிணாமூர்த்தி பிள்ளை (கலை)
7. டி.எஸ்.ரங்கராஜன் (கவிஞர் வாலி) (கலை)
8. விளையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியன் (கலை)
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்களில் டாக்டர் மயில் வாகனன் நடராஜன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை துறை தலைவராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தமிழகத்தின் சிறந்த மருத்துவர் விருதை இவர் பெற்றார். இந்தியாவில் முதன் முதலாக சென்னையில் “எலும்பு வங்கி”யை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.
எலும்பு புற்று நோயாளிகளின் உயிரைக் காக்க வேண்டி, பாதிக்கப்பட்ட கையையோ, காலையோ வெட்டி எடுத்து விடுவது வழக்கம். ஆனால் டாக்டர் மயில்வாகனன் குறைந்த செலவில் விஞ்ஞான அடிப்படையில் கண்டுபிடித்துத் தயாரிக்கப்பட்ட உலோக எலும்புப் பொருத்திகளைக் கொண்டு சிகிச்சை செய்து எலும்பு புற்று நோயாளிகள் ஊனமுற்ற நிலையை போக்கி சகஜ வாழ்க்கை வாழ வழி அமைத்துக் கொடுத்து மருத்துவ துறைக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இந்த புரட்சிகரமான சிகிச்சையை இந்தியாவில் 1988 முதல் தொடர்ந்து செய்து வருகிறார். அவ்வாறு இதுவரை 1200 பேருக்கு இவ்வித அறுவை சிகிச்சை செய்து எலும்பு புற்று நோயாளிகள் தங்களது கை அல்லது கால்களை இழந்து விடாமல் காப்பாற்றியிருக்கிறார்.
சமீபத்தில் பேரிடர் மேலாண்மையில் மருத்துவத்துறையின் பங்கு என்ற தலைப்பில் இயற்கை பேரிடர் சம்பவங்களின் போது மருத்துவ துறையின் செயல்பாடுகள் குறித்து வரைவு முன் வடிவை அனைத்து மருத்துவமனைகளிலும் அறிமுகப்படுத்த அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய முடநீக்கு இயல் துறையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு 2000-ம் ஆண்டு தமிழ்நாடு முடநீக்கு இயல் சங்கத்தின் தலைவராகவும் ஆசிய பசிபிக் நாடுகளின் எலும்பு புற்றுநோய் சங்கத்தின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார்.
எலும்பு புற்று நோய் துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் பிஎச்.டி. பட்டமும் மருத்துவ படிப்பில் மிக உயர்ந்த டி.எஸ்சி பட்டமும் பெற்றுள்ளார்.
2003-ம் ஆண்டில் இவரது மருத்துவ சேவையினை பாராட்டி மருத்துவ துறையின் உயர்ந்த விருதான டாக்டர் பி.சி.ராய் விருதினை குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் வழங்கினார்.
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி உள்ள டாக்டர் நம்பெருமாள்சாமி மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார்.
டாக்டர் அர்ஜ×ன் ராஜசேகரன் சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றி சேவை செய்தவர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் வாலி `மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
இன்று அதிகாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி என்னுடன் போனில் தொடர்பு கொண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ள தகவலை கூறி வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகுதான் எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது தெரிந்தது.
என்னை முதன் முதலில் வாழ்த்தியது கலைஞர்தான். நிறைய பேர் மகிழ்ச்சி தெரிவித்தனர். எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.
பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.
இவ்வாறு கவிஞர் வாலி கூறினார்.
கவிஞர் வாலி கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சினிமா பாடல்கள் எழுதி வருகிறார். 3 தலைமுறைக்கு ஏற்ப பாடல் எழுதி வரும் ஒரே பாடலாசிரியர் வாலி ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜா செல்லையாவுக்கு பத்மவிபூஷண், நம்பெருமாள்சாமிக்கு பத்மஸ்ரீ விருது
புதுதில்லி, ஜன. 27: இந்த ஆண்டு பத்ம விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
10 பேருக்கு பத்ம விபூஷண், 32 பேருக்கு பத்ம பூஷண், 79 பேருக்கு பத்மஸ்ரீ உள்ளிட்ட 121 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு யார் பெயரும் அறிவிக்கப்படவில்லை.
விருது பெறுவோர் விவரம்:
பத்ம விபூஷண்
சட்ட நிபுணர் ஃபாலி சாம் நாரிமன், எழுத்தாளர் குஷ்வந்த் சிங், முன்னாள் அமைச்சரவை செயலாளர் நரேஷ் சந்திரா, முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி, முன்னாள் உள்துறைச் செயலாளர் என்.என்.வோரா, டாக்டர் பாலு சங்கரன், மறைந்த எழுத்தாளர் ராஜா ராவ், பொருளாதார நிபுணர் ராஜா செல்லையா, முன்னாள் அதிகாரி வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அமெரிக்கா வாழ் சுதர்சன் எரினாக்கல் சாண்டி ஜார்ஜ் ஆகியோரும் பத்ம விபூஷண் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பத்மபூஷண்
அரசியல் அறிஞர் விக்கு பரேக், சமூக சேவகர் எலா காந்தி, கவிஞர் கோபால்தாஸ் நீரஜ், பெப்ஸிகோ நிறுவன தலைவர் இந்திரா நூயி, டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜாம்ஷெட் ஜே.இரானி, இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர், அமெரிக்க வாழ் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி டி சாக்ஸ் மற்றும் ஜப்பான் தொழிலதிபர் ஓ சுசூகி. சமூக சேவகர் மோகினி கிரி, பாரதி டெலிகாம் தலைவர் சுநீல் பாரதி மித்தல், கேரள நாடக ஆசிரியர் நாராயண் பணிக்கர், பாடகர்கள் ராஜன் மிஸ்ரா, சஜன் மிஸ்ரா, ஓவியர்கள் சையத் ஹைதர் ராசா, தயப் மேத்தா மற்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்.
பத்மஸ்ரீ
எழுத்தாளர்கள் அமிதவ கோஷ், விக்ரம் சேத், நடன இயக்குநர் அஸ்தாத் தேவூ, ஆமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி நிறுவன இயக்குநர் வகுள் டோலக்கியா, மலையாள நடிகர் பாலச்சந்திர மேனன், தில்லி நடனக் கலைஞர் கீதா சந்திரன், கோல்ஃப் விளையாட்டு வீரர் ஜீவ் மில்கா சிங், நாஸ்காம் நிறுவன தலைவர் கிரண் கார்னிக், செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி, பாடகர் ரெமோ ஃபெர்னாண்டஸ், கல்வியாளர் முஷீருல் ஹசன், கேரள நெசவு நிபுணர் பி.கோபிநாதன், தமிழக கண் சிகிச்சை நிபுணர் பி.நம்பெருமாள்சாமி, பாடகர் சாந்தி ஹிரானந்த், சமையல் நிபுணர் தர்லா தலால், சமூக சேவகி டீஸ்டா சீதல்வாட், மலையாளர் எழுத்தாளர் சுகுமார் அழிக்கோட் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்