Arms smuggling, trafficking, trading – LTTE, Karuna group, Sri Lanka, Eezham
Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007
ஆயுதக் கடத்தல்
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் இனப் பிரச்சினை காரணமாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், போராளிகளுக்காகக் கடத்தப்படவிருந்த 5,000 கிலோ இரும்பு குண்டுகள் சென்னை மற்றும் தூத்துக்குடியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றைக் கொண்டு கையெறிகுண்டு, கண்ணி வெடிகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்க முடியும். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 மாதங்களுக்கு முன் மானாமதுரையில் ஒரு காரிலிருந்து 1500 கிலோ வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போது, மேற்கண்ட கடத்தல் குறித்து தகவல் கிடைத்துள்ளது. முன்னர் ராமேசுவரம் வழியாக இதுபோல் ஆயுதங்களும், உணவுப் பொருள்களும் கடத்தப்பட்டன. ஆனால் அப் பகுதியில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளதை அடுத்து இப்போது கடத்தலுக்கு தூத்துக்குடியைத் தேர்வு செய்துள்ளனர்.
இப்போது கைப்பற்றப்பட்டுள்ள இரும்பு குண்டுகள் மும்பையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் 4 ஆண்டுகளுக்கு முன் அகதிகளோடு அகதிகளாக ராமேசுவரம் வந்துள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறி, கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
இதேபோல், போராளிகளுக்கு பல ஆண்டுகளாக பல்வேறு பொருள்களை சப்ளை செய்து வந்த இலங்கை பிரஜை உள்ளிட்ட 4 பேரை, கடந்த ஜூலையில், ராமேசுவரம் போலீசார் கைது செய்தனர். 2 சக்கர வாகனங்களைத் திருடி, அவற்றில் இருந்த எஞ்சினை மட்டும் தனியே எடுத்து, போராளிகளுக்கு சப்ளை செய்து வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர இலங்கைக்குக் கடத்தவிருந்த பலகோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளும் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், அனைத்து அகதிகள் முகாம்களையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும், இது போன்ற கடத்தல் சம்பவங்கள் நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளிலும், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் நுழையும் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளை வலுப்படுத்த வேண்டும்.
இதற்கிடையே, இலங்கையில் ஸ்திரத்தன்மை குலைய கிழக்குப் பகுதியில் செயல்படும் கருணா கோஷ்டிக்கு முக்கியப் பங்கு உள்ளதாக இலங்கைக்கு உதவும் நாடுகளின் குழு கூறியுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களுக்குச் சென்று வந்த பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சுவீடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதிகள் இதைத் தெரிவித்துள்ளனர். சண்டையில் ஈடுபடுபவர்கள் சாதாரண மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, தாக்குதல் நடத்துகின்றனர். எதிர்த்தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த முறையைக் கையாளுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா கோஷ்டியினர் கிழக்குப் பகுதியில் சிறுவர் மற்றும் இளைஞர்களை பல்வேறு இடங்களிலிருந்து கடத்திச் சென்று, போர்ப் பயிற்சி அளித்து, சண்டையில் ஈடுபடுத்துவதாக நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இதுபோல் 200 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. புலிகள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறி வந்த அரசு, கருணா கோஷ்டி புலிகளுக்கு எதிரானது என்பதால் இப்போது கண்டும் காணததும்போல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை கருணா கோஷ்டியும், அரசும் மறுத்துள்ளபோதிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி உண்மை நிலையை தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்