Russia, India cement nuclear ties with offer of 4 new nuclear reactors
Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007
கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகளை அமைக்க ரஷ்யா உதவும்
தமிழகத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் கூடுதலாக மேலும் நான்கு அணு உலைகளை அமைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக புதுடில்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இது தொடர்பான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.
வியாழக்கிழமை காலை புடின் புதுடில்லி வந்தடைந்தார்.
அதன்பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒன்பது உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
கூடங்குளத்தில் ஏற்கெனவே இரண்டு அணு உலைகள் ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றன. அத்துடன், மேலும் நான்கு அணு உலைகளை அங்கு அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்தியாவில் வேறு இடங்களிலும் புதிய அணுமின் நிலையங்களை ரஷ்ய தொழில்நுட்பத்துடன் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதப்படுகிறது.
ரஷ்யாவின், உலக கடல்வழி தொடர்புடைய செயற்கைக் கோள் மூலம் கடல்வழி சமிக்ஞைகளை, அமைதிப் பணிகளுக்காக இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்களும் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணத் திட்டம் தொடர்பான பணிகளை, தங்கள் நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் இணைந்து மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
புடின் மற்றும் மன்மோகன் சிங், பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். கடந்த பத்து ஆண்டுகளில், உலக அளவில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரை, ரஷ்யாவுக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இந்தியாவுடனான சர்வதேச அணுசக்தி ஒத்துழைப்புத் தடைகளை நீக்கியதற்காக ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்த மன்மோகன் சிங், பல நோக்கு விமானங்கள் மற்றும் நவீன ரக போர் விமானங்கள் உற்பத்தியில் கூட்டாகச் செயல்பட முடிவு செய்திருப்பது, இரு நாட்டு உறவில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
அதே நேரத்தில், பொருளாதார ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லை என்றும் அதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்..
ரஷ்யா – இந்தியா -சீனா இடையிலான முத்தரப்பு ஒத்துழைப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த புடின், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யா – இந்தியா – சீனா – பிரேசில் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பும் வருங்காலத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் புடின்.
வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழா நிகழ்ச்சியில், கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்கிறார் புடின்.
மறுமொழியொன்றை இடுங்கள்