Hema Malini rubs north Indians the wrong way
Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007
வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்
மும்பை, ஜன. 26: நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி (படம்), வட இந்தியர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.
இதுகுறித்த விவரம்:
மும்பை உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஹேமமாலினியிடம்
“மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன’ என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ஹேமமாலினி
“அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்’
என பதிலளித்திருந்தார். ஹேமமாலினியின் இந்த பதிலால் பல தரப்பிலிருந்தும் அவருக்குக் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஹுசைன் தல்வாய் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:
ஹேமமாலினி முதலில் தான் ஒரு பொறுப்புள்ள எம்.பி. என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர் நடிகை. அவருடைய கணவர் -நடிகரும், எம்.பி.யுமான தர்மேந்திரா வட இந்தியர்தான்; அவருடைய மகள்களும் பாதி வட இந்தியர்கள்தான். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து ஹேமமாலினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரிலிருந்து குடியேறிய வட இந்தியர்கள்தான் மும்பை மக்கள் தொகையில் ஏராளமானோர் என்பதும், ஹேமமாலினி தமிழில் அறிமுகமாகி இந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வட இந்தியர்கள் பற்றி நான் கூறிய கருத்து பத்திரிகைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ளது: ஹேமமாலினி
மும்பை, ஜன. 27: வட இந்தியர்கள் குறித்து தான் கூறியதாக தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி தெரிவித்தார்.
தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், தொலைக்காட்சி நிருபர்கள் சிலர், வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு அவர், அவர்களுக்கு பிரச்சினை என்றால் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்’ என்று பதிலளித்தார். ஆனால் இதற்கு பல தரப்பிலும் பலத்த கண்டனம் எழுந்தது.
இதையடுத்து இந்த சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்து அவர் கையெழுத்திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியானது. அதில் கூறியுள்ளதாவது:
வட இந்தியர்கள் குறித்து நான் தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் தவறாக திரித்துக்கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயம் ஊதி பெரிதாக்கப்பட்டுள்ளது.
நான் ஒரு நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தபோது, சில தொலைக்காட்சி நிருபர்கள் என்னை அணுகி கருத்து கேட்டனர். அப்போது மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு சத்தமாக இருந்ததால் தொலைக்காட்சி நிருபர்கள் கேட்ட கேள்வி எனக்கு சரியாக கேட்கவில்லை. இருப்பினும் அந்த சமயத்தில் நான் சிரித்துக்கொண்டேதான் அவர்களுக்கு பதிலளித்தேன்’ என்றார்.
வட இந்தியர்களை அளவுக்கதிகமான மரியாதையுடன் உயரிய இடத்தில் வைத்துள்ளேன். மும்பையை விட்டு அவர்களை வெளியேற சொல்லவோ அல்லது அவர்களுக்கு ஆலோசனைக் கூறும் அதிகாரமோ எனக்கில்லை.
இதற்குமேலும் அரசியல் கட்சிகள் நான் கூறியதாக தெரிவித்த கருத்தை அரசியலாக்க வேண்டாம் என்றார்.
மறுமொழியொன்றை இடுங்கள்