Population Explosion – Birth Rates, Demography: Study & Analysis
Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007
மக்கள்தொகைப் பெருக்கம் — ஒரு சவால்!
இராதாகிருஷ்ணன்
எவ்வளவு வலிமை வாய்ந்த அரசாக இருப்பினும், எந்த அளவிற்கு மக்கள் நலம் பேணுவதாக அது அமையினும், அதன் திட்டங்களை, முயற்சிகளைச் சிதைக்கின்ற தனிப்பெரும் காரணியாக இன்று அமைந்திருப்பது, கட்டுப்படுத்த இயலாத “மக்கள்தொகைப் பெருக்கமே’ ஆகும்.
நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த மக்கள்தொகை, அன்றிலிருந்து இன்று வரை பெருகியுள்ள அளவு, அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்ற கணிப்பு என இவை மூன்றையும் கருத்தில்கொண்டால், நமக்கு முன்னர் உள்ள பிரச்சினையின் முழு வடிவம் நன்கு புலப்படும்.
1950-க்கும் பிறகு உலகில் அனேக நாடுகள் சுதந்திரம் பெற்ற காரணத்தால் அவற்றில் தோன்றிய “மக்கள் நல அரசுகள்’ இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கின. அறிவியலில் ஏற்பட்ட உன்னத வளர்ச்சியும் அதற்கு உதவியது.
ஆனால் இவற்றின் மாறுபட்ட விளைவால் மக்கள்தொகைப் பெருக்கம் என்றுமில்லாத உச்சத்தை எட்டியது. 1950-ஆம் ஆண்டில் சுமார் 250 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 2000-ம் ஆண்டில் சுமார் 610 கோடியாக உயர்ந்தது.
அதேசமயம், இந்தப் பெருக்கம் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் பரவலாக மாறுபட்டு, ஒரு சில நாடுகளின் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. (நமது மாநிலங்களுக்கிடையேயும் இதே நிலைதான் நிலவியது). குறிப்பாக 33-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் ரஷியா மற்றும் ஜப்பான் போன்றவற்றில் “நாமிருவர் நமக்கொருவர்’ என்ற கட்டுப்பாடு காக்கப்பட்டது. இதனால் ஆண்டுக்கு சராசரியாக 0.4 சதவீதத்தோடு நிலைபெற்ற மக்கள்தொகை நாடுகளாக வெற்றி பெற்று தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வளத்தையும், அடிப்படைக் கட்டமைப்பையும் அவை உயர்த்திக் கொண்டன.
ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா, தென்அமெரிக்க நாடுகள் ஆகியவை ஆண்டுக்கு 4 சதவீதத்திற்கும் மேலான மக்கள்தொகைப் பெருக்கத்தால் அவதியுற்று வாழ்க்கை ஆதாரங்களுக்கு வழியில்லாமல் இன்னலுறுகின்றன. உலக மக்கள்தொகை வல்லுநர்களின் கூற்றுப்படி, அடுத்த 50 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை சுமார் 940 கோடியாக உயரக்கூடும். இந்தியாவைப் போன்று 150 வளரும் நாடுகளிடையே இவ்வுயர்வு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதையும் எந்த வகையிலாவது அதைக் கட்டுப்படுத்தியே தீரவேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு பக்கம் வசதி படைத்தவர்களின் எண்ணிக்கை வளரும்போது மறுபக்கம் வசதியற்றவர்களின் எண்ணிக்கையும் அதைவிட பன்மடங்கு வளர்ந்து வருகிறது. இதனால் மக்களிடையே முன்னரே உள்ள ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகி, நல்லிணக்கம் குறைகிறது. தீவிரவாதம் தலைதூக்கி வன்முறைகள் உருவாகின்றன.
இன்றுள்ள இந்தியாவின் மக்கள்தொகை 112 கோடி என்பது அடுத்த 50 ஆண்டுகளில் சுமார் 160 கோடியையும் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படப்போகும் நிலைமையை சமாளிக்க இப்போதே திட்டமிடும் அமெரிக்காவை நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
நமது திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும் அளவுக்குக்கு கூட திறன் பெற்றவை அல்ல. தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இன்றைக்கு நாம் பெற்று வருகிற பிரமாண்ட வளர்ச்சியின் காரணமாக எத்தனை சதவீத இந்தியர்கள் அதன் பலனை நேரடியாக நுகர்கின்றனர் என்பதைக் கணக்கிட்டால், நமது பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள சமச்சீரற்ற நிலை மேலும் மோசமடைந்து வருவது எளிதில் உணரப்படும்.
நமது அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் வராத மக்கள்தொகைப் பெருக்கத்தால் எதையெல்லாம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். வேலைவாய்ப்பு, குறைந்தபட்ச ஊதியம், கல்வி வசதி, வீட்டு வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி, போதுமான உணவுப் பொருள்கள் உற்பத்தி, நிலத்தடி எரிபொருள் ஆதாரம், நிலத்தடி நீர், வேளாண் விளைநிலம், சமுதாய நலத்திட்டங்கள், மாசுபடாத சுற்றுச்சூழல்… போன்ற அனைத்திலும் பற்றாக்குறையையும் இல்லாமையையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த முயலும்போது, இருக்கும் இயற்கை வளங்களை மிச்சமில்லாத வகையில் சுரண்டி எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்வைத் தகர்த்து வருகிறோம் என்பதையும் உணர வேண்டும்.
நாம் வாழும் பிரபஞ்சத்தின் அனைத்து அம்சங்களையும் கணிக்க முடிந்த நமக்கு, நமது நாட்டில் உள்ள இயற்கை வள ஆதாரங்களைக் கொண்டு நமது மக்கள்தொகை அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கணிக்க முடியாமல் போவது ஏன்? அல்லது அக் கணிப்பில் நாட்டம் செல்லாதது ஏன்?
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட்டு ஏமாந்து போய்விடக் கூடாது; தனிநபர் சராசரி வருமானத்தின் உயர்வாலும் திசைமாறிவிடக் கூடாது; நம்மிடையே நிலவும் பொருளாதார சமச்சீரின்மையைப் போக்க வேண்டுமெனில், நமது மக்கள்தொகை நிலை பெற வேண்டும்.
அறிவியல் வளர்ச்சியால் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடிந்த நம்மால் பிறப்பு விகிதத்தையும் குறைக்க வலுவான “எண்ணம்’ வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் 0.4 சதவீதம் என்ற நிலையை அடைந்தால்தான் மக்கள்தொகை நிலைபெறும். இதற்கு “நாமிருவர் நமக்கொருவர்’ என்ற சிறு குடும்பத்துக்குத் தயாராக வேண்டும்.
இம் முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டுச் செயல்பட்ட சீனா, 2050-ல் மக்கள்தொகையில் தனக்குள்ள முதலிடத்தை நம்மிடம் இழந்து, அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எத்தனையோ இடர்பாடுகளில் வெற்றி பெற்ற நாம், மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.
(கட்டுரையாளர்: அரசு கல்லூரியில் புள்ளியியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்).
bsubra said
குடும்பக் கட்டுப்பாடு: சீனாவில் 30 கோடி பிறப்புகள் தவிர்ப்பு
பெய்ஜிங், ஜூன் 7: குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் மக்கள் தொகையில் சுமார் 30 கோடி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என சீன அரசு அறிவித்துள்ளது.
மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டதால், ஆண்டுக்கு 120 கோடி டன் கார்பன்-டை-ஆக்ûஸடு வாயுவை வெளியிடுவது குறைந்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சீனா பேருதவி அளித்துள்ளது என்றும் கூறியுள்ளது.
“1970-ம் ஆண்டு முதல் நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, 30 கோடி குழந்தைகளின் பிறப்பு தவிர்க்கப்பட்டுள்ளது’ என சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் நிவாரண கமிஷனின் தலைவர் மாகாய் தெரிவித்தார்.
தட்பவெப்ப நிலை மாறுபாடு குறித்த தேசிய கொள்கையை வெளியிட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வளர்ந்து வரும் நாடு ஒன்று தட்பவெப்ப நிலை மாறுபாடு குறித்து தனியாக கொள்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். மேலும், மாகாய் கூறியது: குடும்பக் கட்டுப்பாட்டு முறையை அமல்படுத்தியதே, ஒரு வகையில் சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு சீனா அளித்துள்ள பங்களிப்பு ஆகும்.