London Diary – London Eye: Eraa Murugan
Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007
லண்டன் டைரி: “லண்டன் ஐ!’
இரா. முருகன்
தேம்ஸ் நதிக்கரை எம்பாங்க்மெண்ட் படித்துறையில் படகு காத்திருக்கிறது. உள்ளே நுழைந்தபோது, கீழ்த்தட்டில் ஒரு கூட்டம் முந்திய நாள் வெஸ்ட்ஹாம் மைதானத்தில் நடந்த கால்பந்து விளையாட்டைப் பற்றி உரக்க விவாதிக்கும் இரைச்சல். மத்திய வயசு ஆண்கள். எல்லோர் கையிலும் பியர் குவளை. எனக்கு முன்னால் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு கையில் ஜபமாலையோடு நடந்து கொண்டிருந்த கன்னியாஸ்திரிகள் ஒரு வினாடி தயங்கி, கப்பலின் மேல்தட்டுக்குப் படியேறுகிறார்கள். நானும்தான். பெரிய பறவைபோல் இரண்டு தடவை ஒலியெழுப்பிவிட்டுப் படகு நதியில் மெல்ல நகர்கிறது.
கரையில் பிக்பென் கடியாரக் கோபுரத்தைக் கழுத்து வலிக்கப் பார்க்கும் சகபயணிகளைக் கவனிக்கிறேன். ஜெர்மானிய டூரிஸ்ட்டுகள். அவர்கள் மொழியில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வழிகாட்டி. ரொம்பக் கடுமையாகக் காதில் விழுகிற மொழி அது. “”உன்னைக் காதலிக்கிறேன்” என்று காதலியிடம் அன்போடு சொல்வது கூட ஜெர்மன் பாஷையில்,
“”நமூனாவை மூணு காப்பி எடுத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, தாசில்தாரிடம் அட்டஸ்டேஷன் வாங்கி ஒரு வாரத்துக்குள் அனுப்பிவைக்காவிட்டால், அபராதம் செலுத்தவேண்டிவரும்”
என்று அரசாங்க அறிவிப்பைக் கேட்கிறமாதிரி இருக்கும். முன்வரிசை ஜெர்மன் யுவதி காதலன் காதில் ஏதோ சொல்ல அவன் ஆற்றில் குதிப்பதுபோல் போக்குக்காட்டுகிறான். ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கிவரச் சொல்லியிருப்பாள்.
கன்னியாஸ்திரீகளின் கைகள் ஜபமாலையை நிதானமாக உருட்டிக் கொண்டிருக்க, நதிக்கரையில் வலதுபுறம் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடம் கடந்துபோகிறது. பக்கத்தில்தான் அந்தக்கால லண்டன் கார்ப்பரேஷன் என்ற கவுண்டி ஹால் இருந்ததாம். கவுன்சிலர்களின் சத்தம் தாங்காமலோ என்னமோ, அதை இடித்துவிட்டு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்பையும், கீழ்த்தளத்தில் மீன் காட்சி சாலையையும் கட்டிவிட்டார்கள். மீன்கள் சத்தம் எழுப்பாமல் வாயைத் திறந்துகொண்டிருக்க, கவுன்சிலர்கள் வேறு இடத்தில் சண்டையைத் தொடர்கிறார்கள்.
அடுத்து வருவது லண்டன் ஐ. இது “மெட்ராஸ் ஐ’ போல கண் சிவந்து ரெண்டு நாள் காஷுவல் லீவு போட்டுவிட்டு கறுப்புக் கண்ணாடியோடு வீட்டில் உட்கார்ந்து கேபிள் டிவி பார்க்கிற சமாச்சாரமில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆண்டு 2000 பிறந்து, இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கியதைக் கொண்டாட எழுப்பப்பட்டது “லண்டன் ஐ’. பொருட்காட்சி ஜயண்ட் வீலுக்குச் சத்துணவு கொடுத்து இன்னும் முப்பது மடங்கு பெரிதாக்கப்பட்டதுபோல சுழலும் இந்த “லண்டன் கண்’ சக்கரத்தில் ஏறி நின்றால் முழு லண்டனையும் சுற்றுப்புறத்தையும் தெளிவாகப் பார்க்கலாம். எனக்கென்னமோ, இந்தச் சக்கரம் லண்டனின் பாரம்பரியம் மிக்க சரித்திரத்தோடு ஒட்டாமல் தனியாக நிற்பதுபோல் தோன்றுகிறது. யார் கண்டது? இன்னும் இருநூறு வருடத்தில், இதுவும் புராதனப் பெருமையோடு சுழலலாம்.
“”கிளியோபாத்ரா மூக்கு”. ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்த ஒரு கன்னியாஸ்திரி சொல்கிறார். உலகப் பேரழகி கிளியோபாத்ராவும் அவளுடைய மூக்கும் திடீரென்று இவருக்கு நினைவுவரக் காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறேன். அவர் கரையில் நீட்டி நிமிர்ந்து நிற்கும் ஒரு கருங்கல் தூணை மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார். மூவாயிரத்து ஐந்நூறு வருடம் முன்னால் எகிப்தில் உருவாக்கிய இந்த நீளமூக்குத் தூணை, வெறும் இருநூறு வருடம் முன்னால் எகிப்திய மக்கள் இங்கிலாந்துக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்கள். ஈராக் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அந்தக் காலத்திலேயே பிரிட்டனிடம் சூசகமாகச் சொல்லியிருப்பார்களோ என்னமோ.
சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் கன்னியாஸ்திரிகள் நெஞ்சில் சிலுவை வரைந்துகொள்கிறார்கள். நதிக்கரையை ஒட்டி கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது செயின்ட் பால் தேவாலயம். 1666-ம் ஆண்டு லண்டன் மாநகரத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பழைய ஆலயம் சேதமடைய, இரண்டாம் சார்லஸ் மன்னன் கட்டுவித்தது. பக்கத்திலேயே ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்புகளை அரங்கேற்றிய க்ளோப் தியேட்டர். அதுவும் பழைய வனப்பு சேதமடையாமல் புத்தம் புதியதாக எழுந்து நிற்கிறது. வெகு அருகில் டேட் ஓவிய, சிற்பக் கூடம். நவீனப் படைப்புகளுக்கான அரங்கம் இது. புதுமையில் எனக்கு விருப்பம் உண்டுதான். ஆனாலும் இந்த டேட் காலரியில் ரொம்பவே புதுமையாக சில மாதங்கள் முன்னால் இடம் பெற்ற படைப்பு -அழுக்கான அசல் கழிப்பறைப் பீங்கான் , உபயோகித்த சுவட்டோடு சிறுநீர் கழிக்கும் கோப்பை, தகர டப்பாவில் மனிதக் கழிவு, கூடவே, வாடை எல்லாம் போக, எதிரே ஒரு பெரிய மின்விசிறியின் ஓவியம்.
உலகின் பழைய மதுக்கடையைக் கடந்து படகு முன்னே போய்க்கொண்டிருக்கிறது. நங்கூர மது அரங்கம் என்ற இந்த ஆங்கர் டேவர்னில் நங்கூரமிட்டு சுதி ஏற்றிக்கொண்டுதான் ஷேக்ஸ்பியர் சாகாவரம் பெற்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். இங்கே கோப்பையும் கையுமாகக் குடியிருந்துதான் இலக்கிய மேதை சாம்யுவெல் ஜான்சன் ஆங்கிலப் பேரகராதியைத் தொகுத்திருக்கிறார். கொஞ்சம் படகை நிறுத்தினால் நானும் இறங்கிப்போய் ஒரு காப்பியம் எழுத முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் படகு நிற்காமல் விரைகிறது.
டவர் பாலம் பக்கம் பெரிய கப்பல் ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டு நிற்கிறது. எச்.எம்.எஸ். பெல்ஃபாஸ்ட் என்ற போர்க் கப்பல் அது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து கடற்படையில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, ஜெர்மனியை முறியடித்த 1944 ஜூன் மாத இறுதிக்கட்டப் போரில் இந்தக் கப்பலுக்கும் பெரும் பங்கு உண்டு. தற்போது ரிடையராகி தேம்ஸ் நதியில் நங்கூரம் பாய்ச்சி நின்றாலும், இங்கிலாந்து அரசுக்கு இந்தக் கப்பலால் அதிக வருமானமே தவிர ஒரு காசு பென்ஷன் செலவு கிடையாது. கிட்டத்தட்ட ஆயிரம் போர் வீரர்கள் தங்கிப் போரிட்ட கப்பல் தற்போது யுத்தகால அருங்காட்சி சாலையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. “இரண்டாம் உலக யுத்தம் முடிந்தது -இங்கிலாந்து வெற்றி’ என்று இன்றைக்குக் காலையில்தான் பத்திரிகையில் படித்த பரபரப்போடு ஒரு பெரிய கூட்டம் கப்பலுக்குள் விரைந்து ஏறிப் போய்க்கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. “”நெசம்தான்” என்று ஆமோதித்தபடி இன்னொரு கூட்டம் வெளியே வந்துகொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் மூன்று லட்சம் பேர் இப்படிக் காசு கொடுத்து கப்பலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, உள்ளே ஓட்டலில் சூடாக ஒரு காப்பி குடித்துவிட்டு இறங்கியதாகத் தகவல்.
“”இது கக்கோல்ட் முனை”. ஏதோ உலக ரெக்கார்டை ஏற்படுத்தப் போவதுபோல் தொடர்ந்து பியர் குடித்தபடி கீழ்த்தளத்திலிருந்து மேலே வந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல். “”சொல்பேச்சு கேட்காத பெண்டாட்டியை வில்லியம் கக்கோல்ட் இங்கேயிருந்துதான் பிடிச்சுத் தள்ளிவிட்டானாம். திரும்பிப் பார்த்தால், பெரிய கும்பல். என் வீட்டுக்காரியையும் தள்ளி விட்டுடுய்யான்னு அவனவன் க்யூவிலே நின்னு கெஞ்சறான். நோ ப்ராப்ளம்னு ஒருத்தருக்கு ஒரு பென்ஸ் காசு கூலி வாங்கிப் போட்டுக்கிட்டு அப்புறம் அவன் முழுநேரம் இதே உத்தியோகம்தான் பார்த்தானாம்”.
“”தனியாளாக ரொம்பக் கஷ்டப்பட்டு உழைச்சிருப்பான் பாவம்”. கையில் பிடித்த பியர் தரையில் சிந்த, சிரிப்புச் சத்தம் உயர்கிறது. இவர்களைப் பிடித்துத் தேம்ஸ் நதியில் தள்ளிவிட்டால் என்ன என்று யோசித்தபடி டவர் பிரிட்ஜ் படித்துறையில் இறங்குகிறேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்