Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Right to Information Act – Backgrounders, Law details, Implementation Procedure

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

தகவல் உரிமைச் சட்டம் – மக்களின் ஆயுதம்

பி.இசக்கிமுத்து

தகவல் உரிமைச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமான சட்டமாகும்.

அரசு, பொது நிறுவனங்களின் நடவடிக்கைகளில் வெளிப்படையான தன்மை வேண்டும். அனைத்து செயல்பாடுகளும் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற அடிப்படைதான் இச்சட்டத்தின் நோக்கமாகும்.

இந்த சட்டத்தின் மூலம் ஒவ்வொரு பொது நிறுவனமும் அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்களும் அதன் கட்டமைப்பு, செயல்பாடுகள், அலுவலர்கள், அவர்களுக்குரிய பணி, சம்பளம் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். தகவலை பொது மக்களுக்குத் தெரிவிக்க பொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலரை நியமனம் செய்தல் வேண்டும்.

எந்த வடிவத்தில் தகவலைப் பெறுவது: தகவல் உரிமை என்பது ஆவணங்களை, கோப்புகளை, செய்யப்பட்ட வேலைகளை ஆய்வு செய்தல், ஆவணங்கள், கோப்புகளை நகல் எடுத்தல், அவற்றை டேப், கம்ப்யூட்டர் பிளாப்பி, சிடியில் பெறுவது உள்ளிட்டதாகும்.

மேலும் அலுவலர்கள், அதிகாரியின் பொறுப்புகள், சம்பளம், அலுவலக நடைமுறைகள், பணிகளை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்கள், பணிகளை செய்வதற்கான விதிகள், ஒழுங்குமுறை விதிகள், திட்டங்களை உருவாக்குவது அவற்றை அமலாக்குவது, கமிட்டிகள், விவரம், பட்ஜெட் ஒதுக்கீடுகள், திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவது அதன் பயனாளிகள் யார், யார், பொது மக்களைப் பாதிக்கும் கொள்கை குறித்து அலுவலக உத்தரவு மற்றும் நிர்வாக நடவடிக்கைக்கான காரணம் கூறுதல் போன்ற தகவல்களை நாம் கோரிப் பெற உரிமை படைத்தவர்கள் ஆவோம்.

தகவலைப் பெறும் வழிமுறை: எழுத்துபூர்வமாக கடிதம் மூலமும், மின் அஞ்சல் மூலமும் கேட்கலாம். தகவல்களைப் பெற விண்ணப்பத்தில் காரணம் கூற வேண்டியதில்லை.

தகவல் கோரும் விண்ணப்பம் மீது நடவடிக்கை: பொது நிறுவன தகவல் அதிகாரி விண்ணப்பம் பெறப்பட்ட 30 நாள்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும்.

தனி மனிதனின் உயிர், சுதந்திரம், மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தால் 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்.

மேலே கூறப்பட்ட கால எல்லைக்குப் பிறகு பதில் அனுப்பினால் கட்டணம் திரும்ப வழங்கப்பட வேண்டும். பதில் அனுப்பாவிடில் பதில் மறுக்கப்பட்டதாக கருதப்படும்.

தகவல் மறுக்கப்பட்டால் அதற்கான காரணம் கூறப்பட வேண்டும்.

மேல்முறையீடு: 30 நாள்களுக்குள் பதில் அனுப்பப்படாவிட்டால், அல்லது தகவல் மறுக்கப்பட்டால், முழுமையான தகவல் அளிக்கப்படாவிட்டால், தவறான தகவல் அளிக்கப்பட்டால், அப்பொது நிறுவனத்தின் மேல்முறையீட்டு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்தல் வேண்டும். காரணம் கூறி 30 நாள்களுக்குப் பிறகும் மேல் முறையீடு செய்யலாம்.

மேல்முறையீட்டு அலுவலர் 30 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

மேல்முறையீடு மீது பதில் இல்லை என்றால், முழுமையான பதில் அளிக்கப்படாவிட்டால் குறைவான, தவறான தகவல் அளிக்கப்பட்டாலும் அதன் மீது மாநில நிறுவனமாக இருப்பின் மாநில தகவல் கமிஷனுக்கும், மத்திய அரசு நிறுவனமாக இருப்பின் மத்திய தகவல் கமிஷனுக்கும் 2-வது மேல்முறையீடு செய்யலாம். மாநில, மத்திய தகவல் கமிஷன் பிறப்பிக்கும் உத்தரவு இறுதியானதாகும்.

காலதாமதமாக தகவல் கிடைத்தமையால் ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடு கோரலாம்.

சட்டத்தின் மேலோங்கும் தன்மை: இதர அனைத்துச் சட்டங்களைவிட தகவல் உரிமைச் சட்டம் தான் மேலோங்கி நிற்கும். அதாவது குறிப்பிட்ட எந்த சட்டத்தின் கீழும் தகவல் அளிக்க, மறுக்க வழி வகை இருந்தால் அந்தச் சட்டம் செயல் இழந்து தகவல் உரிமைச் சட்டம் மேலோங்கி நிற்கும்.

விதிவிலக்கு: இச்சட்டத்துக்கு பிற சட்டங்களை விட மேலோங்கும் தன்மை இருந்தபோதிலும் நீதிமன்ற நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகள் மீது தகவல் கோர இயலாது.

இந்திய நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, வர்த்தக ரகசியம், வியாபார போட்டித் தன்மையைப் பாதிக்கும் தகவல்கள் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட ரகசியத் தகவல்கள் எந்த தனி நபர் உயிருக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும் தகவல்கள், கிரிமினல் வழக்கு விசாரணைக்கு இடையூறான தகவல்கள், அமைச்சரவை கூட்ட முடிவுகள், தனி நபர் தகவல்கள், 20 ஆண்டுக்கு முற்பட்ட தகவல்கள் ஆகியவற்றுக்கு அரசின் பாதுகாப்புத் துறை, ரகசிய புலனாய்வுத் துறை செயல்பாடுகளுக்கும் இந்த சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது.

அதே சமயம் இத்துறையின் மனித உரிமை மீறல், ஊழல் குறித்த விவரங்களைப் பெற முடியும்.

இச்சட்டத்தைப் பயன்படுத்தி விவரம் கேட்பதன் மூலம் ரேஷன் கார்டு, பட்டா கிடைக்காதவர்கள், அவற்றைப் பெற முடியும். அரசிடம் நிலுவையில் உள்ள பல்வேறு மக்கள் நலத் திட்டத்தின் பலன்கள், ஆதரவற்ற விதவைப் பெண்கள், முதியோர் ஓய்வூதியத்தைப் பெற இயலும்.

முடங்கிக் கிடக்கும் பல திட்டங்களை உயிர்ப்பிக்க முடியும். சுகாதாரச் சீர்கேடுகள் மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். அரசிடம் நிலுவையில் உள்ள பல கோப்புகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவும் அதன் தற்போதைய நிலைமையை தெரிந்து கொள்ளவும் விசாரணை அறிக்கைகளைப் பெறவும் இயலும்.

அரசு அதிகாரிகள் நேர்மையாகச் செயல்பட இச் சட்டம் தூண்டுகோலாக இருக்கும். இச்சட்டத்தின் மூலம் நாட்டில் ஊழல், நிர்வாகச் சீர்கேடுகளை முழுமையாக ஒழிக்க இயலும் என்று கருத முடியாது. ஆனால் அதனை அம்பலப்படுத்தி சீர்திருத்த இந்த சட்டம் உதவும்.

அரசுத் துறைகளில் காலம் தாழ்த்தப்படும் மக்கள் தேவைகளை விரைவுபடுத்தி நிவாரணம் பெற இயலும்.

உண்மையில் இச்சட்டம் பயனுள்ள ஒரு சட்டமாகும். இச்சட்டம் மக்களின் ஆயுதமாக மாறவும் உரிய முறையில் பயன்படுத்தவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

(கட்டுரையாளர், தூத்துக்குடி மாவட்டக் குழு சிஐடியு இணைச் செயலர்).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: