Land allotted to Freedom fighter gets usurped
Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007
ஊரைவிட்டு ஒதுக்கியதாக தியாகி புகார் ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு மேலூர், ஜன. 12 சுதந்திரப் போராட்ட தியாகியை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்ததாக அளிக்கப்பட்ட புகார் மீது, 30 நாளில் நடவடிக்கை எடுக்க மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், வெள்ளலூர் அருகே உள்ள மேலவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (85). இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்து சிறை சென்றவர். இவருக்கு மத்திய, மாநில அரசுகள் ஓய்வூதியம் வழங்குகின்றன.
அவர் தமக்குச் சொந்தமான வீட்டை, நியாய விலைக் கடைக்கு அளித்தால், அவருக்கு வேறு இடம் வழங்க ஏற்பாடு செய்வதாக, கிராம நிர்வாக அதிகாரி வாய்மொழியாக உறுதி அளித்துள்ளார்.
இந் நிலையில் வீட்டை பெரியகருப்பன் அளித்துள்ளார். ஆனால் அவருக்கு அளிப்பதாகக் கூறப்பட்ட இடத்தை சிலர் ஆக்கிரமித்தனர்.
இதனால் தமது வீட்டைத் திரும்ப ஒப்படைக்கும்படி பெரியகருப்பன் வலியுறுத்தினார்.
இப்பிரச்சினையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக, தியாகி பெரியகருப்பனை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தனராம்.
இதுகுறித்து போலீஸில் பெரியகருப்பன் புகார் செய்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவீந்திரன், புகார் மனு மீது ஒரு மாதத்துக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மேலூர் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.
மறுமொழியொன்றை இடுங்கள்