No more Entrance Exams – Will it benefit Rural Students?
Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007
“”தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா?”
அ.கி. வேங்கடசுப்ரமணியன்
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை அண்மையில் தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் “”கிராமப்புறத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு சம ஆடுதளம் (கங்ஸ்ங்ப் டப்ஹஹ்ண்ய்ஞ் ஊண்ங்ப்க்) உருவாக்குவதற்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்வது அவசியமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதை எளிதாக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டதாலேயே இது நிறைவேறி விடுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.
மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களிடையே கிராமப்புற நகர்ப்புற வேறுபாட்டைத் தவிர அரசு சார்ந்த பள்ளிகள், அரசு சாராத பள்ளிகள் என்ற வகையில் பெருத்த வேறுபாடு உள்ளது.
அரசு, நகராட்சி, ஆதிதிராவிட நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை, சமூக நலத்துறை, வனத்துறை போன்ற அரசு சார்ந்த பொதுத்துறை பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர அரசு உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவையும் உள்ளன.
கிராமப்புறத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதியவர்கள் சுமார் 1.5 லட்சம்.
தனியார் பள்ளியில் 1.01 லட்சம்.
நகர்ப்புறத்தில் அரசுப் பள்ளியில் தேர்வு எழுதியவர்கள் 0.82 லட்சம்.
தனியார் பள்ளியில் 1.76 லட்சம்.
கிராமம், நகரம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஏறத்தாழ 45 சதவீத மாணவர்கள் அரசு சார்ந்த பொதுப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியுள்ளனர்.
பள்ளியிறுதி வகுப்பில் தேறியவர்களின் சதவீதம், கிராமப்புற, நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இடையில் சிறிதும், அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத பள்ளிகளுக்கு இடையில் பெரிதும் வேறுபடுகிறது.
2006ஆம் ஆண்டு இவ்வகையில் தேர்ச்சி சதவீதம் 2006ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தேர்வில் வெற்றி பெற்றவர் சதவீதம்
கிராமப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 61. 14 சதவீதமும்,
தனியார் பள்ளிகள் 83.71 சதவீதமும்,
நகர்ப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 62.70 சதவீதமும்,
தனியார் பள்ளிகள் 85.76 சதவீதமும் பெற்றுள்ளன.
கிராமமோ, நகரமோ இரண்டிலுமே பொதுத் துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளைவிட பெரிதும் குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பொதுத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏழை எளிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். வசதி உள்ள குடும்பத்தில் தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ படித்திருப்பார்கள். குழந்தைகளின் படிப்பிற்கும் வீட்டுப் பாடத்திற்கும் உதவி செய்வார்கள்.
ஆனால் பொதுத்துறை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே பெற்றோராக இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளும் குறைவு. அதைப் பற்றி சமூகத்தின் ஆர்வமும் அக்கறையும் குறைவு.
பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு தேர்ச்சி மட்டும் போதாது. வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்களும் அவர்களுக்கு என வரையறுக்கப்பட்ட மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறப் பள்ளிகளில் படித்துத் தேறியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
2006ஆம் ஆண்டில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200க்கு 194 மதிப்பெண்கள் பெற்ற 6300 மாணவர்களில், 5600க்கும் மேற்பட்டவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து வந்தவர்கள்தான். இவர்களில் எத்தனை பேர் நகர்ப்புற அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.
மொத்தம் பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் சுமார் 3.84 லட்சம் பேரில் முதல் 10 சதவீதம் அதாவது முதல் 38400 இடங்களில் எத்தனை கிராமப்புற / நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை.
நுழைவுத் தேர்வை ரத்து செய்தாலும் இடங்களை ஒதுக்கினாலும், கிராமப்புற அரசுப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 93 ஆயிரம் மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள அரசு சாரா பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 1.52 லட்சம் மாணவர்களுடன் தர வரிசையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியும். இதற்கு என்ன செய்ய முடியும்?
முதலில் கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகள், நூலகங்களில் தேவையான புத்தகங்கள், ஆய்வுக் கூடத்துக்கு அவசியமான கருவிகள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாநகராட்சியும் தான், வசூலிக்கும் கல்வி வரியை முழுவதுமாக கல்விக்காகச் செலவிட்டால், நிச்சயமாகச் சிறந்த தனியார் பள்ளிக்கு இணையாக பொதுத்துறை பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியும்.
கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அரசே தனிக் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
மேலே கூறியவற்றைத் தவிர, வேறு ஒரு முக்கியப் பிரச்சினையும் உள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் 17 வயது நிரம்பியவர்கள். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 2006-ஆம் ஆண்டு சுமார் 11.91 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மாநில பாடத்திட்ட மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 5.22 லட்சம்தான்.
மைய பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ.) எழுதியவர்கள் சுமார் 4500 பேர். எனவே 17 வயது நிரம்பியவர்களில் பாதிப்பேருக்கு மேல் பள்ளியிறுதித் தேர்வை எழுதவில்லை. இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள்தான்.
கிராமப்புற மக்கள்தொகை நகர்ப்புற மக்கள்தொகையைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிகம் இருந்தாலும், கிராமப்புறங்களில் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தைவிட குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பள்ளிப் படிப்பை இறுதி வரை தொடராமல் இடையிலே விடுபடுதல்.
எனவே கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், இளைஞர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் இவை அனைத்தும் ஊராட்சியுடன் இணைந்து இந்தப் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் கிராமப்புறத்திலிருந்து மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில் கிராமப்புற மக்கள் இருக்கும் விகிதத்திற்கு இணையாக இருக்க வேண்டும். அதேபோல் அரசுப் பள்ளியில் இருந்து தேர்வு பெறும் மாணவர்களின் சதவீதத்துக்கும், தரவரிசையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர வேண்டும்.
இவை இரண்டையும் செய்யாவிட்டால் நுழைவுத் தேர்வு ரத்து ஆனாலும், இட ஒதுக்கீடு இருந்தாலும், கிராமப்புற ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் “”நுழைவுத் தேர்வு இல்லை. ஆனாலும் நுழைய முடியவில்லை” என்ற நிலையே தொடரும்.
தொலைநோக்குக் கல்வி
கி. இராசா
மக்களுக்குக் கல்வி வழங்குவதில் பல முறைகள் உள்ளன. நேரடியாக வகுப்பறையில் வழங்கப்படும் கல்விமுறை; அஞ்சல் வழியாக வழங்கப்படும் கல்விமுறை. அடிப்படைக் கல்வியை ஓரிரு ஆண்டுகள் தந்து உயர்கல்வி தரும் திறந்தநிலைக் கல்விமுறை.
இக் கல்விமுறைகள் அனைத்தும் “உயர்கல்வியைப் பரவலாக்குவது’ என்ற நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டவை. ஆனால் உயர்கல்வியைப் பெறுவதற்கு முன்பாகவே அதற்கு முந்தைய அடிப்படை மற்றும் உயர்நிலைக் கல்வி பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அடிப்படைக் கல்வி யாருக்கு வழங்கப்படுகிறதோ அந்தப் பயனாளிகளுக்கு அது சரியாகச் சென்று சேர்கிறதா? என்றும், அதனால் அவர்கள் பயன் பெறுகிறார்களா? என்றும் அக்கறையோடு மீள்பார்வை செய்வதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.
இத்தகு மீள்பார்வை முறைகளோ, சுயமதிப்பீட்டு முறைகளோ இல்லையென்றால் “முழு எழுத்தறிவு இயக்கம்’ என்பது “வயலில் நிறுத்திய வைக்கோல் பொம்மை’ போலத்தான் பயன்தரும்!
ஒரு சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி வழங்கப்படுகிறது. ஆண் பெறுகின்ற கல்வி, அவனுக்கும் அவனையொத்த பிறருக்கும் பயன்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இப் பயன்பாடு அவன் வாழும் தலைமுறையால் உணரப்படுகிறது.
பெண் பெறுகிற கல்வியோ, வாழும் தலைமுறைக்கு மட்டுமல்லாது, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. வரலாற்றில் இதற்குப் பல சான்றுகள் உள்ளன. பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி இத்தகு தொலைநோக்குப் பயன்பாடு உடையது என்பதால்தான் இதனைத் “தொலைநோக்குக் கல்வி’ என்கிறோம்.
ஒரு சமுதாயம் வளமான சமுதாயமாகத் திகழ வேண்டுமென்றால் அங்கு பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் பெண்களுக்குக் கல்வி வழங்குவதில் அரசுகள் அக்கறை காட்டுவதில்லை என்பதுவே இப்போதுள்ள குற்றச்சாட்டு.
அனைத்துலக மாணவர்களின் கல்வியறிவு பற்றிய மதிப்பீட்டறிக்கையில் தாய்மார்கள் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கல்லூரிப் படிப்பை முடித்த தாய்மார்களின் பிள்ளைகள், பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட தாய்மார்களின் பிள்ளைகளைவிட அறிவைப் பெறுவதில், பெற்ற அறிவைப் பயன்படுத்துவதிலும் பல நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அதேசமயத்தில் சமுதாயத்திலும் பணியிடத்திலும் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மைக்கு முக்கியக் காரணம் விகிதாசாரக் குறைவாகும்.
1991க்கும் 2001க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில் பெண்களுக்குக் கல்வி தருவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கையின் காரணமாக 15 சதவீதம் மட்டுமே உயர்த்த முடிந்தது. நாடு முழுவதும் இன்னும் 19 கோடி பெண்கள் கல்வியறிவு பெறாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மைநிலை. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 51 சதவீதமாக இருந்த இந்த நிலை 2001ல் 64 சதவீதமாக அதாவது 13 சதவீதம் – கூடுதல் பெற்றுள்ளது. இது தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி ஆகிய நான்கு கட்டக் கல்விகளைப் பெறுகின்ற மொத்தப் பெண்களின் விகிதாசாரமாகும்.
பெண்கள் அதிக அளவில் கல்வியறிவு பெற முடியாமல் போவதற்குச் சொல்லப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் வயதுக்கு வந்து விடுவதாகும். இந்த இயற்கை நிகழ்வு அவர்களுக்குப் பாதகமாக அமைந்து விடுகிறது. முதல் ஐந்து வகுப்புகளில் தொடக்கக்கல்வி பெறும் சிறுமியர்களில் 38 – 67 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். கிராமப்புறங்களில் இது 10, 11 வயதுகளிலேயே நிகழ்ந்து விடுகிறது. இதையும் மீறி 8ஆம் வகுப்புவரை பயிலும் சிறுமியர்களில் கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் திருமணம் மற்றும் இதர காரணங்களுக்காக பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே முடித்து விடுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
இவ்வாறு சிறுவயதில் பெண்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் போவதற்கு அவர்களின் பெற்றோரே முக்கியக் காரணமாகின்றனர். கல்வியறிவு பெறாத பெற்றோர்கள் அந்த நேரத்திற்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கிறார்களே ஒழிய, தங்கள் மகளைப் பற்றிய நெடுநோக்குப் பார்வை அவர்களுக்கு இல்லை. இதனால் பெண்ணைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கின்ற அவலமும் நிகழ்ந்து விடுகிறது. கல்வி அறிவைப் பெறாத நிலையில் சிறுமியரின் வாழ்வு சீர்கேடாகிறது.
ஒரு நாடு, இன்றைய காலகட்டத்தில் அதிகமாகப் பேசப்படும் அல்லது வளர்ச்சிக்கான அடையாளமாகக் கருதப்படும் அறிவுச்சந்தையில் சவால்களைச் சந்திக்க வேண்டுமென்றால் பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி பெற வேண்டும் என்பதை அறிவு வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் இணைத்துப் பார்க்கும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு உயர்கல்வியில் “பெண்களுக்கு உகந்த படிப்பு இது; ஆண்களுக்கு உகந்த படிப்பு இது’ என்று பிரித்துப் பார்க்கும் “பால் மையக் கல்வி’ போக்கையும் கைவிட வேண்டும் என்று அவர்கள் உறுதிபடச் சொல்கின்றனர்.
இதற்கெல்லாம் இன்றியமையாததாக “பால்வேறுபாடு கூடாது’ என்ற முழக்கம் கல்வி நிலையில் முதன்மைப்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயம் உண்மையான முழுக் கல்வியைப் பெற முடியும்.
இன்றைய நிலையில் கல்வி என்பது வகுப்பறையோடு நின்று விடுவதில்லை. கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகும் அது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இன்றைய கல்வியாளர்களால் வாழ்நாள் கல்வி என்று அழைக்கப்படுகிறது.
வாழ்நாள் கல்வியால் அறிவுப்புரட்சியையும் அதன்வழி, பொருளாதார நிலைபேற்றையும் ஒரு நாடு அடைய முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கான சில செயல்முறைத் திட்டங்களை மேலும் காலம் தாழ்த்தாது இப்போதிருந்தே வகுக்க வேண்டும்.
இதன் முதற்கட்டமாக, வளமான எதிர்காலத்திற்கு ஒரு நாட்டை இட்டுச் செல்வதற்கான ஆற்றல் வாய்ந்த பெண் கல்வியில் தொடக்க நிலையிலிருந்தே குறைபாடுகள் களையப்பட வேண்டும். தொடக்கக் கல்வியில் சிறுமியர்கள் கல்வி “இடைவீழ்ச்சி’ அடைவதற்கான காரணங்கள் என்னவென்று கண்டறிதல் வேண்டும். கண்டறிந்த உண்மைகளின் மீதான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இதற்கான முனைப்பு இயக்கம் ஒன்றை அந்தந்தப் பகுதிப் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்க வேண்டும்.
இது அரசு இயக்கமாக இல்லாமல் மக்களின் விருப்ப இயக்கமாகவும் இருக்க வேண்டும். இரண்டாவது கட்டமாக, கல்வி வழங்குவதில் பால்வேறுபாட்டைக் களைய வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக தாய்மார்களுக்குக் கல்வி வழங்குவதற்கென கல்வியாளர்களைக் கொண்டு ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தொடக்கநிலையில் சிறுமியர்கள் பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிடும் அவலம் தொலையும்.
இவ்வாறு தொலைநோக்குப் பார்வையோடு படிப்படியாகப் பெண்கல்வித்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் 15 ஆண்டுகளில் – அதாவது 2020ல் இந்தியா பொருளாதாரத்தில் நிலைபெற்ற நாடாகவும், அறிவுச்சந்தையில் வளம்பெற்ற நாடாகவும் உருவாகும் சூழல் வெகுதொலைவில் இல்லை.
(கட்டுரையாளர்: பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர்).
மறுமொழியொன்றை இடுங்கள்