‘Cauvery’ Ramaiya – Ramanujam : Dinamani Kathir Music Season Special
Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006
ஆவணம்: அம்மாஞ்சியின் அபிப்பிராயங்கள்
“காவேரி’ – 1940 களில் கும்பகோணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகை. சூடும் சுவையுமான கட்டுரைகளுக்கு, குறிப்பாக இசைக் கட்டுரைகளுக்குப் புகழ் பெற்றது இது. இப்பத்திரிகையில் அன்று “அம்மாஞ்சியின் அபிப்பிராயங்கள்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ் இசை, நடனம் தொடர்பான விமர்சனங்கள் அடிக்கடி வந்தன. ராமையா என்ற பெயரில் “காவேரி’யின் ஆசிரியர் ராமானுஜம் எழுதிய கட்டுரைகள் அவை. அவற்றில் ஒன்றை மாதிரிக்கு இங்கே தருகிறோம்.
மற்றொரு நண்பர் பம்பாயிலிருந்து ஆங்கிலத்தில் ஒரு பெரிய கடிதம் எழுதி இருக்கிறார். அதில் முக்கிய கருத்து என்னவென்றால், கர்னாடக சங்கீத வித்வான்கள் பம்பாய்க்குச் சென்று ஏராளமாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏனோதானோவென்று பாடிவிட்டுப் போய்விடுகிறார்களென்றும், டிக்கட்டு கட்டணங்கள் சாமான்ய ஜனங்களுடைய சக்திக்கு அதிகமாய் இருப்பதாகவும், அதையும் கொடுத்து கச்சேரிக்குப் போகும் ரசிகர்களுக்கு ஒரு விதத்திலும் மனசு திருப்தி இல்லாமல் போவதாகவும், ஒவ்வொரு கச்சேரியிலும் அனாவசியமான ஸ்துதிப் பேச்சு ஏற்பட்டு இருப்பதாகவும், இத்தகைய ஒழுக்கங்களால் அந்தப் பட்டணத்தில் நடைபெறும் கச்சேரிகள் சங்கீதக் கொம்மாளங்களாக முடிகின்றனவேயல்லாது கச்சேரிகளாகக் காணப்படவில்லை என்பதே.
நமது பம்பாய் நண்பர் எழுதியதைக் குறித்து அம்மாஞ்சியும் நானும் வருந்துகிறோம். அவருக்கு ஆறுதல் கூறுவதில் நாங்கள் சொல்லுவது ஒரே விஷயம். அதாவது கர்னாடக சங்கீதம் வெகு செழிப்பாக வளரும் சென்னைப் பட்டணத்திலேயே இந்த மாதிரி அசந்தர்ப்பங்கள் குடிகொண்டிருக்கின்றன என்றால், பம்பாயைப் பற்றி அங்கலாய்த்தல் எதற்கு? சென்னையில் சங்கீத அபிமானி ஒருவன் மாதம் ஒன்றில் நான்கு கச்சேரிகள் கேட்க விரும்பினால் அதிகபட்சம் நாற்பது ரூபாய் தனக்கு மட்டும் செலவழிக்க வேண்டும். குடும்ப சகிதமாகச் சென்றால் இந்தத் தொகையைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். நான்கு மணி நேரம் கச்சேரியில் உட்கார்ந்துவிட்டு வந்தால் வீட்டுக்குள் வந்த பிறகு முழங்கால்கள் இரண்டுக்கும் பத்து அரைத்துப் போட வேண்டும். ஏனென்றால் முன் வரிசை நாற்காலிகளில் முழங்கால்கள் உராய்ந்து, சதை வீங்கியோ அல்லது தோல் வழுவுண்டோ போய் இருக்கும். அடுத்த நாள் உடம்பெங்கும் ரத்தக் கட்டிகள் உண்டாகும். இடுப்புச் சுளுக்குத் தீருவதற்கு ஒரு வாரமாகும். கச்சேரியில் கேட்ட அசட்டுப் பேச்சு காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இன்னும் வேறு வினை வேண்டுமா?
இதையெல்லாம் உத்தேசித்துதான் நிஜ சங்கீத அபிமானிகள் சபைகளில் நடக்கும் கச்சேரிகளைக் கேட்காமலும், காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டவிடாமலும், விஷப் பரீட்சை செய்யாமலும், அனாவசியமாகப் பணத்தைச் செலவழிக்காமல், பணத்தையும் அபிமானத்தையும் சேமித்து வைத்து வித்வான்களை வரவழைத்து, பத்துப் பேராகக் கூடி ஏகாந்தமாகவும், ஆத்மார்த்தமாகவும் சங்கீதத்தை அனுபவித்துத் திருப்தி அடைய வேண்டும் என்று அம்மாஞ்சி சொல்லுகிறான். தற்கால விபரீத ஒழுக்கங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு இந்த மார்க்கம் ஒன்றே காணப்படுகிறது.
சென்ற மாதம் மயிலைச் சங்கீத சபையின் ஆதீனத்தில் ஹீராபாய் பரோடேகர் என்பவர் ஒரு கச்சேரி செய்தார். ரோஷனாராபேகம், பாய் கேசரிபாய் இவ்விருவருடைய சங்கீதத்தையும் கேட்ட பிறகு, ஹீராபாயினுடைய கச்சேரியையும் கேட்டு விடலாமே என்று கருதி அம்மாஞ்சியும் நானும் முண்டியடித்துக் கொண்டு மூலையில் உட்கார்ந்தோம். ஆனால், அன்றைய தினம் எங்களுக்கு ஒன்றும் ரசிக்கவில்லை. கச்சேரியின் துவக்கமே சுமார் ஒரு மணி நேரம் காலதாமதம் ஆயிற்று. ஸ்ரீமதி ஹீராபாய்க்குச் சாரீரம் வெகு இடக்குச் செய்துவிட்டது. ரோஷனாரா பேகம், சேகர்பாய் இவர்களுடைய சங்கீதத்திற்கும், ஹீராபாயினுடைய சங்கீதத்திற்கும் வெகு தூரம் போல் காணப்பட்டது. அன்று ஒரு திருநாளாய் இருக்கும் என்று நாங்கள் எண்ணிச் சென்றோம். ஆனால் வெறு நாளாகவே ஆயிற்று.
ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நாஷனல் பைன் ஆர்ட்ஸ் ஸர்க்கிள் என்ற கூட்டத்தாரின் ஆதீனத்தில் நடைபெற்ற பரதநாட்டியக் கச்சேரிக்கு அம்மாஞ்சி என்னை அழைத்துக் கொண்டு போனான். அதே தினத்தில் மற்றோர் இடத்தில் இரண்டு சிறுமிகள் செய்த பரதநாட்டியக் கச்சேரிக்கு நான் போகலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அம்மாஞ்சி அதற்கு இணங்கவில்லை. இந்த விஷயத்தில் அம்மாஞ்சியினுடைய அபிப்பிராயம்தான் உங்களுக்குத் தெரியுமே! அவன் சொன்னதாவது: “”பரதநாட்டியம் என்பது வயது முதிர்ந்து புத்தி தெரிந்த பெண்கள் காட்டும் கலை. அந்தக் கலைக்கு வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னவென்றால் பூரணமான வளர்ச்சியுள்ள உருவமும் பகுத்தறிவை நன்றாகக் காட்டக்கூடிய முகக் குறிகளும், இவ்விரு அம்சங்களும் பருவம் முற்றின பெண்களுக்கே உள்ளவையாதலால் சிறுகுழந்தைகளிடம் இந்தக் கலை சோபிக்காது.
பகுத்தறிவு இல்லாத சிறுமிகளிடத்தில் நவரஸபாவம் ஊட்டி வைத்தாலும், ஸதசில் அவர்கள் அந்தப் பாவங்களை வெளியிடும்போது, ஸ்வானுபவம் இல்லாமல் இருக்குமே, ஆதலால் அதை எப்படி அனுபவிப்பது? ந்ருத்தியம், அதாவது அலாரிப்பு என்ற முதல் பாகத்தில் அங்கங்கள் அனைத்தும் ஏகோபித்துச் செய்யும் வேலைகளில் சரீர வளர்ச்சி பூரணமாக இல்லாத குழந்தைகள் ஆடினால், கேவலம் பொம்மலாட்டம் போல் காணப்படுமே அல்லாது, பரதநாட்டியம் ஆகாது. ஆதலால் பதினேழு பதினெட்டு வயதிற்குக் குறைந்த பெண் குழந்தைகளை ஸதசில் பரதநாட்டியம் ஆட வைப்பது, பத்து நாள் குழந்தைக்கு இட்லியும் கொழுக்கட்டையும் ஊட்டி வைப்பதுபோல் ஆகும். சிறு குழந்தைகள் என்ன செய்தாலும் தமாஷாகத்தான் இருக்கும். ஆனால், பருவம் முதிரும் முன் அவர்களை ஸதசில் நிற்கவைத்துக் கரகோஷம் செய்து மாலைகள் போட்டுப் பரிசுகளும் கொடுத்துவிட்டால், குழந்தைகள் உற்சாகப்படலாம். அவர்களுடைய தாய் தந்தையர்களுக்கும் அமோகப் பூரிப்பு உண்டாகலாம். ஆனால், அது கலையாகாது; நாகரிகமும் குன்றித்தான் போகும். பரதநாட்டியத்தில் ஊக்கமுள்ள பெண் குழந்தைகள் எல்லாம் சிறுவயது முதல் சிட்சை பயில வேண்டியதுதான். சிட்சை பயிலுங்கால் அவர்களை உற்சாகப்படுத்த அவரவர்களுடைய வீட்டுக்குள்ளேயே கோஷ்டிகளும் சேரலாம். ஆனால் ஸதசில் வந்து ஆடக்கூடிய தருணமும், பருவமும், பகுத்தறிவும், முதிர்ந்த பிறகுதான் வருமே அல்லாது பசும் பிராயத்தில் வாரா. சிறுமிகளுடைய தாய் தந்தையர்களுக்கு அம்மாஞ்சி சொல்லும் எச்சரிக்கை, ஆக்கப் பொறுத்தபின் ஆறப் பொறுக்க வேண்டும்.”
மறுமொழியொன்றை இடுங்கள்