Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Small Business Administration: SSI Financial Analysis

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

யாருக்காக சட்டம்?

கோ. கிருஷ்ணமூர்த்தி

அக்டோபர் 2 – அன்னியர் ஆதிக்கத்திலிருந்து இந்தியத் திருநாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்த அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள். நடப்பாண்டில் அன்றுதான் புதிதாக இயற்றப்பட்ட குறுந்தொழில், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி சட்டம் அமலுக்கு வந்த நாள்.

இதன்மூலம், முதன்முறையாக குறுந்தொழில் மற்றும் சிறுதொழிலுக்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்த வகையில் மகிழ்ச்சியே. ஆனால் சட்டம் முழுமையாக நன்மையைத் தருவதற்குப் பதிலாக ஏமாற்றத்தையும் சேர்த்துத் தந்துள்ளது. இந்தியப் பொருளாதார அரங்கில் புதிதாக உருவான சேவைத் துறை நிறுவனங்களுக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையே முடிச்சுப் போட்டு ஒரே சட்டத்தின் ஆளுகையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் எதிர்காலத்தைக் காலம்தான் கணிக்க வேண்டும்.

மத்திய அரசின் கலால்வரியைப் பொறுத்தமட்டில், மொத்தம் ரூ. 4 கோடிக்கு மிகாத விற்றுவரவு உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே கலால்வரிச் சலுகை உண்டு. ஆனால், இந்தப் புதிய சட்டம், அகில இந்திய அளவில் உள்ள சிறுதொழில் சங்கங்கள் பல கோரிய போதிலும் தொழிலாளர் எண்ணிக்கை, விற்றுவரவு ஆகிய அடிப்படைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு மூலதனத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் நடுத்தரத் தொழில் என இலக்கணம் வகுத்துள்ளது.

இதுவரை குறுந்தொழில் என்பது ரூ. 25 லட்சத்திற்குக் கீழ் இயந்திரங்களின் மூலதன மதிப்பு என்றும், சிறுதொழில் என்பது ரூ. 25 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலும் இருந்து வந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் சிறுதொழில் என்பது ஒரு கோடி அதிகபட்ச எல்லை என்பதை ரூ. 5 கோடியாக உயர்த்தியுள்ளார்கள். இதில் நிலம், கட்டடம், பரிசோதனைக் கூடம் (Laboratory), ஆய்வு உபகரணங்கள் (Inspection Equipments), டூல்ஸ், டை, அலுவலகப் பொருள்கள், மின்உற்பத்தி /மின்மாற்றி உபகரணங்கள், பொருளைக் கையாளும் கருவிகள் (Material Handling Equipments) போன்றவைகளின் மதிப்பு சேராது. அதாவது 5 கோடி ரூபாய் இயந்திரங்கள் மூலதனம் என்றால் மொத்த மதிப்பு ரூ. 10 கோடியையும் தாண்டும்.

இந்தப் புதிய சட்டத்தின் மூலம் நேற்று வரை நடுத்தரத் தொழில்களாக இருந்தவை சிறிய தொழில்களாக மாறிவிட்டன. குறுந்தொழில், சிறுதொழில் முதலியன நடுத்தரத் தொழிலாக உயர்வதற்குப் பதிலாக நடுத்தரத் தொழில் சிறிய தொழிலாகிவிட்டது. அதாவது கல்லூரி மாணவர்களை உயர்நிலைப்பள்ளி மாணவர்களாக்கிவிட்டனர். இது பரிணாம வளர்ச்சி ஆகாது. மாறாக, முரண்பாடுகளைக் கொண்ட மூன்று தொழிற்பிரிவுகளைச் சலுகைகள் அளிப்பதற்காக ஒரு சட்டத்தின்கீழ் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதன் விளைவு என்னவாக இருக்கும்? இந்த மூன்றில் யார் வலியவரோ அவர் மெலிந்தவர்போல வேஷமிட்டு அனைத்து சலுகைகளையும் சுருட்டிக் கொள்வார். இதைத் தவிர்க்கவே, குரங்குகளுக்கு தீனிபோடும் பொழுது மொத்தமாக ஓரிடத்தில் தீனியை வைக்க மாட்டார்கள். தீனியை வைத்தால் வலிமையான பெரிய குரங்குகள் சிறிய குரங்குகளை அண்டவிடாது. அதனால் தீனியை விசிறி எறிவார்கள். இது நமது முன்னோர் பங்கீட்டு நீதி. ஆனால், இப்பொழுது நடைமுறையில் உள்ள குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி சட்டம் நமது முன்னோர்களின் பங்கீட்டு நீதிக்கு முரணாக இருக்கின்றது.

இத்தகைய விநியோக நீதி இட ஒதுக்கீட்டைப் பொறுத்தமட்டில் காலங்காலமாகச் செழுமைப்படுத்தப்பட்டு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. முதலில் ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தொடங்கிய இட ஒதுக்கீடு, பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனியாக வழங்கப்பட்டது. இப்பொழுது சமூகத்தின் முற்பட்ட வகுப்பினருக்கும் சிறுபான்மை வகுப்பினர்களுக்கும் பொருளாதார அடிப்படையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட நலிந்த பிரிவினருக்கு ஒட்டுமொத்தமாக உள்ஒதுக்கீடுகள் இல்லாமல் சலுகைகள் அளிக்கப்பட்டால் வலியவர் கைக்குத்தான் சலுகைகள் போகும் என்பதற்கு இட ஒதுக்கீடு சிறந்த எடுத்துக்காட்டு.

யாருக்கு லாபம்?

இந்தச் சட்டத்தின் காரணமாக யாருக்கு லாபம்? இந்தச் சட்டத்தினால் முதலில் பலன் பெறுபவை. நடுத்தரத் தொழில்கள்தான். வங்கிகளைப் பொறுத்தமட்டில் குறுந்தொழில்களுக்கும், சிறுதொழில்களுக்கும் முக்கி முனகிக் கொண்டே கடன் கொடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. முதலீட்டு அடிப்படையில் நேற்றைய நடுத்தரத் தொழில்கள் இன்றைய சிறுதொழில்களாக சட்டபூர்வமாக மாறி விடுகின்றன. அவற்றுக்குக் கொடுக்கப்படும் வங்கிக்கடனும் முன்னுரிமைக் கடனாக மாறி விடுகிறது. வங்கிகளுக்குப் பிரச்சினை இல்லை. அதனால் அவைகளுக்கும் மறைமுக லாபம்தான்.

சுமார் ரூ. 2 கோடி மூலதன இயந்திரங்களைக் கொண்டு ரூ. 200 கோடி விற்பனையை எட்டும் சிறிய தொழிற்சாலைகள் நடைமுறை மூலதனக் கடனாக ரூ. 40 கோடி வரை வாங்கலாம். இந்த ஒரு கடன் மனுவைப் பரிசீலனை செய்து கடன் வழங்குவதன் மூலம் நூற்றுக்கணக்கான குறுந்தொழில், சிறிய தொழில் மனுக்களை ஏறெடுத்தும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. குறுந்தொழில் மற்றும் சிறுதொழிலுக்கு வழங்கப்படும் முன்னுரிமை வங்கிக்கடன் கடந்த சில ஆண்டுகளில் 18%ல் இருந்து 8% ஆக குறைந்துவிட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் வரும் ஆண்டுகளில் கணிசமான அளவு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தச் சட்டத்தால் குறுந்தொழில், சிறுதொழில்களின் நிதிப் பிரச்சினை தீரப்போவது இல்லை. பழைய நிலையே தொடரும்.

இதற்கெல்லாம் முடிவாக வளர்ந்துவிட்ட அமெரிக்காவிலே நல்ல கொள்கை வகுத்துள்ளார்கள். அங்குள்ள (Small Business Administration) சிறுதொழில்களை வரையறை செய்யும்பொழுது, “”500 தொழிலாளர்கள் அல்லது ஆண்டுக்கு 6 மில்லியன் டாலர்கள் (ரூ. 28 கோடி) விற்பனை, இதில் எது பொருந்துமோ அவைகள்தான் சிறியவை” என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகைய அணுகுமுறையை நாம் பின்பற்றாத காரணத்தால் ரூ. 500 கோடி விற்றுவரவு என்றாலும் அவையும் சிறுதொழில் என்று கூறி அவர்களுக்கும் சலுகைகள் வழங்கத் தயாராகிவிட்டோம்.

வலிமையானவர்கள் மட்டுமே வாழ முடியும் (law of the Jungle) என்பது கொடிய விலங்குகள் வாழ்கின்ற காட்டுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் மக்களாட்சிக்கு ஒத்துவராது. 98% உள்ள குறுந்தொழில், சிறுதொழிலுக்குச் சட்டம் என்ற பெயரால் சுமார் 2000 முதல் 3000 வலுவான தொழிற்சாலைகளுக்குப் பலன் தரும் ஒரு சட்டம் இயற்றப்படுவது வேடிக்கை. நாளடைவில், நடுத்தரத் தொழிலே மிஞ்சும். சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் நசிந்து விடும்.

இந்த நிலைமையை மாற்றுவது எப்படி?

சட்டத்திற்கான விதிகளை வகுக்கும்பொழுது, ஆண்டு விற்பனை குறுந்தொழிலுக்கு ரூ. 3 கோடி என்றும், சிறுதொழிலுக்கு ரூ. 30 கோடி என்றும், நடுத்தரத் தொழிலுக்கு ரூ. 300 கோடி என்றும் வரையறை செய்யலாம். இதன்மூலம் உண்மையான சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவலாம். இல்லையென்றால் இது பெரிய தொழிற்சாலைகள் நாளடைவில் சிறிய தொழிற்சாலைகளாக மாறுவதற்கு வழிவகுக்கும்.

(கட்டுரையாளர்: சிட்கோ மின்னணு வளாக உரிமையாளர்கள் சங்கத் தலைவர்.)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: