Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Importance of Agriculture : Farming Economics & Impact

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

வேளாண்மையின் இறக்கம்

ஆர்.எஸ். நாராயணன்

அன்றைய இந்தியா கிராமங்களில் வாழ்ந்தது. இன்றைய இந்தியா நகரங்களில் மட்டுமே வாழ்கிறது. நெல், கோதுமை, சோளம், கம்பு, வரகு, தினை எல்லாம் ஏகபோகமாக விளைந்தன. உண்டி கொடுத்து மக்களை வாழ வைத்த விவசாயிகளை மன்னன் வாழ வைத்தான். ஆட்சிக்கு வருமானமே நிலவரிதான். இதனால் விவசாயிகளுக்கு மரியாதை இருந்தது. இன்றைய இந்தியாவில் ஆட்சியின் வருமானம் நிலவரி இல்லை. வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி, விற்பனை வரி என்று வேறு தொழில்களிலிருந்து பெறப்படுகிறது. அன்று தேவதானம், பிரம்மதேசம் என்று மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

இன்று மானியங்கள் விவசாயிகளுக்கு இல்லை. விவசாய மானியம் என்ற பெயரில் ரசாயன உரக் கம்பெனிக்கும், பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும், டிராக்டர் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது. அன்று விவசாயம் செய்பவனே வளமாக வாழ்கிறான் என்று நிலம் உள்ளவனுக்குப் பெண் கொடுத்தார்கள். இன்று விவசாயிகளுக்குப் பெண் கொடுப்பாரில்லை. மாதச் சம்பளம் பெறும் கடைநிலை ஊழியராக இருந்தாலும் பரவாயில்லை, விவசாயி மாப்பிள்ளை வேண்டாம் என்று பெண்ணைப் பெற்றவர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். விவசாயம் என்பது அன்று சுகஜீவனம். இன்று துன்பஜீவனம். ஏன் இந்த அவலம்?

பொருளியல் அடிப்படையில் யோசித்தால் உண்மை புரியும். ஒரு விவசாயி எந்த அளவில் ஏமாளியாக வாழ்கிறான் என்பதும் எந்த அளவில் சுரண்டப்படுகிறான் என்பதும் புரியும்.

பொருளாதாரத்திற்கு அடிப்படை ஒரு பண்டத்தின் நிலையான மதிப்பு. அதை நெல் மதிப்பு என்றுகூடச் சொல்லலாம். பணமதிப்பு குறைந்தால் நெல் மதிப்பு அந்த அளவில் உயர வேண்டும். 1960 – 70 விலைவாசியை வைத்து இன்றைய நிலையை அளவிட்டால் வேளாண்மையின் இறக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

அன்று நெல் விலை ரூ. 50. ஒரு மூட்டை 75 கிலோ நெல். 400 மூட்டை நெல் விற்றால் 35 ஏட டிராக்டர் ரூ. 20,000-க்கு வாங்கலாம். 20 மூட்டை நெல் விற்றால் 1 ஜோடி மாடு ரூ. 1000 வாங்கலாம். 7 மூட்டை நெல்லுக்கு 1 பவுன் தங்கம். இன்று நெல்விலை ரூ. 350. டிராக்டர் விலை 5 லட்சம் ஜோடி மாடு 20,000. பவுன் 8,000. 1 டிராக்டர் வாங்க 1000 மூட்டை நெல் விற்க வேண்டும். ஒரு விவசாயி இழப்பது 600 மூட்டை நெல். நெல் விலைக்குக் கட்டுப்பாடு உண்டு. டிராக்டர் விலைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இழந்து வரும் பணமதிப்புக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

கடந்த 30 ஆண்டுகளில் தொழிற்சாலைப் பொருள்கள் விலை 40 மடங்கு உயர்ந்துவிட்டது. அரசு அலுவலர்களின் ஊதியம் 50 மடங்கு உயர்ந்துவிட்டது. ரூ. 250 சம்பளம் வாங்கிய எம்.எல்.ஏ. இன்று லட்ச ரூபாய் வாங்குகிறார். மாத வருமானம் இல்லாத ஒரு விவசாயி தான் விளைவித்த பொருளை விற்று ஜீவனம் செய்கிறார். விலைவாசி ஏறுவதற்கு ஏற்ப அகவிலைப்படி பெற அவர் தகுதியற்றவர். கடந்த 30 ஆண்டுகளில் நெல், கோதுமை விலை 8 மடங்குதான் உயர்ந்துள்ளது.

உணவு உற்பத்தி கூடிய நிலையில் உணவுக் கட்டுப்பாடு ஏன்? இதன் உள்நோக்கம் என்ன? வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு உணவுப்பங்கீட்டால் கிடைக்கும் மானியம் ரூ. 534 என்று புள்ளிவிவரம் கூறுகிறது. உணவுப் பங்கீட்டையும் கட்டுப்பாட்டையும் ரத்து செய்து விட்டு உணவுக்கூப்பன் அட்டை வழங்கி ரூ. 1000 ரொக்கம் வறுமைக்கோட்டு ஏழைகளுக்கு வழங்கலாமே. ஒருவரை வாழவிடாமல் அடித்து ஏழைக்கு வழங்குவது அரசாங்கத்தின் திருட்டுக்குணம் ஆகாதா? ராபின்ஹுட் கூட பணக்காரனிடம் திருடி ஏழைக்கு வழங்கினான். “”தகுதி என வொன்று நன்றே பகுதியார் பாற்பட்டு ஒழுகப்பெறின்” என்ற நடுநிலை தவறுவது ஏன்? அரசுப் பொருளாதாரம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பாமல் விவசாயிகளின் வயிற்றிலடிப்பது மன்னர் காலத்துக் கொடுங்கோன்மையைவிட மோசமானதல்லவா? இதனால் பாதிக்கப்படுபவன் ஒரு விவசாயி என்று யாருக்கும் புரிவதில்லை.

50 ஆண்டுகளில் அரசில் உள்ளவர்கள் ஐந்து ஊதியக்கமிஷன் அமைத்து ஊதியத்தை உயர்த்திவிட்டனர். “”உண்டி கொடுத்தோன் உயிர் கொடுத்தோன்’ இந்த ஊனும் உயிரும் வாழ வழி செய்து வரும் விவசாயிகளுக்கு அகவிலைப்படி கொடுத்தோமா? இல்லை. ஒரு முழக்கயிறு கொடுத்தோம். லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைப் பார்வையிட்ட பாரதப் பிரதமர், விவசாயிகளின் கடனுக்கு உண்டான வட்டியை ரத்து செய்தார்.

மேலும் கடன் பெற வழிசெய்து விட்டார். பேராசைக்கு ஒரு தூண்டுதல். மேலும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் வழி அல்லவா கடன். விவசாயம் ஆசையை நிறைவேற்றும் தொழில் இல்லை. அடிப்படை ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளபோது பேராசையை நிறைவேற்ற முடியுமா?

ஆகவே, விவசாயிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் ஒரு முழக்கயிறு வேண்டாம். பசுமைப்புரட்சி வரும் முன்பு நமது முன்னோர்கள் எந்த விதைகளைக் கொண்டு எந்த முறையில் எந்த நீரைக் கொண்டு யாருக்காக விவசாயம் செய்தார்கள் என்பதை உணர்ந்து வெளியிலிருந்து எந்த இடுபொருளும் கொண்டு வராமல், நிலத்திற்கு ஓய்வும் கொடுத்து உடலுழைப்போடு அத் தொழிலைச் செய்யுங்கள். கிடைப்பதைக் கொண்டு வாழுங்கள். கடன் வாங்காதீர்கள். “”விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்” என்ற பட்டுக்கோட்டையார் பாடல்தான், விவசாயிகளின் வேதம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: