Tamil Cinema Reviews – Sivappathigaram : Vishal
Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006
சினிமா – சிவப்பதிகாரம்- விமர்சனம்
மனோஜ்கிருஷ்ணா
நம்மை அதிகாரம் செய்து ஆளும் அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிய ஆதங்கம்தான் “சிவப்பதிகாரம்‘.
அழிந்து வரும் நாட்டுப்புறப் பாடல்களை அடுத்து வரும் தலைமுறையினர் ஆராதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு புத்தகம் எழுத சொந்த கிராமத்துக்கு வருகிறார் பேராசிரியர் ரகுவரன்.
அவருடைய குறிப்பறிந்து குறிப்பெடுக்க உதவிக்கு வருகிறார் அவரிடம் படித்த மாணவர் விஷால். இதற்கிடையில் சட்டப் பேரவைக்குத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்கிறார்கள். குருவின் உபதேசத்தோடும், குறு வாளின் உதவியோடும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என பேதமுமில்லாமல் மூன்று வேட்பாளர்களை பொது இடங்களில் குத்திக் கொல்கிறார் விஷால். உயிர் பயம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெறுகிறார்கள்.
தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது. விஷால் வேட்பாளர்களை ஏன் கொல்கிறார்; இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
விஷால் அமைதியாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அறிமுக நாயகி மம்தா வழக்கமான கதாநாயகிகளைப் போல் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தன்னுடைய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். கஞ்சா கருப்புவின் யதார்த்தமான காமெடியை ரசிக்கலாம். மணிவண்ணன், உபேந்திரா லிமாயே, ஸ்ரீகாந்த் ஆகியோர் யதார்த்தமான நடிப்பையும், சண்முகராஜன் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து படம் நெடுகிலும் வரும் பல புதுமுகங்களின் நடிப்பு கதையோட்டத்துக்கும், காட்சிகளுக்கும் உறுதுணை புரிந்திருக்கிறது.
நடிப்பில் அனைவரையும் முந்துபவர் ரகுவரன்தான். பேராசிரியர் பாத்திரத்தில் நிறைகுடமாய் ஜொலிக்கிறார். தன்னைப் பிடிக்க வரும் போலீசாரிடமும், நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களிடமும் இயல்பாய் பேசும் காட்சிகள் சிறப்பு.
விஷால் வைத்திருக்கும் கத்தி வேட்பாளர்களைக் கொல்கிறது என்றால், கத்தியை விடக் கூர்மையான கரு.பழனியப்பனின் வசனம் ரசிகர்களின் மனங்களை வெல்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளை சொல்ல முயன்றதற்காகப் பாராட்டலாம். படத்தில் இடம்பெறும் கல்லூரிக் காட்சிகளில், ஆசிரிய-மாணவ உரையாடல்களில் யதார்த்தம் மிளிர்கிறது. அனைவரிடமும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். படத்துக்கு இன்னொரு பலம் வித்யாசாகரின் இசை. பாடல்களிலும், பின்னணி இசையிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். கோபிநாத்தின் ஒளிப்பதிவு கிராமங்களை உயிர்ப்போடு படம்பிடித்திருக்கிறது. குறிப்பாக மதுரை சித்திரைத் திருவிழா காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட விதம் மிக அருமை.
படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாகச் செல்கிறது. திரைக்கதையின் வலுக்குறைவால் சில காட்சிகளோடு ரசிகர்கள் ஒன்றமுடியவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. மூன்று வேட்பாளர்கள் கொல்லப்பட்டவுடன் மாநிலத்திலுள்ள பல வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெறுவதும், நாயகன் பொது இடங்களில் வேட்பாளர்களைக் கொன்றுவிட்டு மெதுவாக நடந்து வருவதும் ஏற்புடையதாக இல்லை.
“சிவப்பதிகாரம்’ -சமுதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளை முன் வைத்த படங்களின் பட்டியலில் இடம் பெறும்.
மனோஜ்கிருஷ்ணா
malik said
any message